சாலையோர கடையில், வெயிலுக்கு இதமான குளுகுளு மேங்கோ குல்பீயை வாங்கிக் கொண்டு காருக்கு விரைந்து கொண்டிருந்த சாந்தனாவை நோக்கி கைகளை அசைத்து வேகமாக வருமாறு செய்கை செய்தாள் மைதிலி.
கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்த குல்பீயை பார்க்கும் போது நாவில் எச்சிலூறியது அவளுக்கு.
“சீக்கிரம் வாடி..” எனக் கூறி வாய் மூடுவதற்குள் கார் கண்ணாடி வழியாக குல்பியை நீட்டியிருந்த சாந்தனா, மறுபக்க கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறி அமர்ந்தாள்.
“நீ பண்றது நல்லாவா இருக்கு? ரோட்டோரமா பஸ்க்காக நின்னுட்டு இருக்காதனு உன் அத்தான் சொன்னதுக்காக காரை எடுத்துட்டு வந்து, தினமும் இப்படி நடு சாலைல நிறுத்தி வைக்கிறியேடி..” என குறைப்பட்டுக் கொண்டாள்.
“அவர் சொல்றதை எப்படி நான் கேட்காம இருப்பேனாம்? ஆனா அதுக்குனு ரோட்டோரமா சாப்பிடற குல்பி.. பீச் சைடு பட்டாணி சுண்டல் மசாலா.. பாய் கடை பிரியாணி.. இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?” கண் சிமிட்டிக் கேட்ட மைதிலி குல்பி ருசிப்பதில் கவனமானாள்.
“ஆனாலும் பஸ் பயணத்தை ரொம்ப மிஸ் பண்ணுறேன்டி. ஹெட்செட்டுல புடிச்ச பாடலை ஓடவிட்டு, ஜன்னலோர சீட்டுல சாய்ஞ்சு இயற்கையை ரசிச்சுட்டே போற நிமிஷங்கள் எல்லாம் ரொம்ப அழகானது சாந்து! அதுவும் நைட்டுலன்னா சொல்லவே வேணாம், ப்பா! எங்களையே பின் தொடர்ந்துட்டு வர நிலாவைப் பார்க்கும் போது ஒரே எக்ஸைடட்டா இருக்கும். ஐ மிஸ் தோஸ் டேஸ்..” என்றவள் ஐஸ் தீர்ந்து போனது கூடத் தெரியாமல் குச்சியை கடித்து துப்ப ஆரம்பித்து இருந்தாள்.
அவளது தலையில் நங்கென்று கொட்டிய சாந்தனா, “அந்த குச்சி என்ன பாவம் பண்ணுச்சு?” என்று கேட்டாள், அவளின் பற்களுக்கு இடையே சிக்கி பாடாய்பட்டுக் கொண்டிருந்த குச்சியைக் கை காட்டி.
அசடு வழிய குச்சியை கண்ணாடிக்கு வெளியே தூக்கி எறிந்தவள், “லிப்ட் கொடுக்குறீங்களா ப்ளீஸ்..” என பளீர் பற்களைக் காட்டியபடி திடீரென தன்முன் பிரசன்னமானவனிடம்,
“ஏன் ரோட்டுல வேற வண்டியே கிடைக்கலையா உனக்கு?” என மேலிருந்து கீழாக ஒரு லுக்கு விட்டாள் மைதிலி.
சித்விக் ராஜன். அவர்கள் இருவருக்கும் நன்கு பரிச்சயமானவன். ஏனோ அவனைக் கண்டாலே கடுப்பேற்றி கடுகடுக்க வைப்பதில் அலாதி இன்பம் மைதிலிக்கு.
“இல்ல அர்ஜென்ட்! அதான் உன் வண்டியை பார்த்ததும் ஓடி வந்துட்டேன்..” என்றவனின் பார்வை வேறெதையோ கூற வந்தது மைதிலியிடம். அவள் எங்கே அதையெல்லாம் கவனித்தாள்?
“அர்ஜென்ட்ன்னா பப்ளிக் டாய்லெட்ஸ் இருக்கு. அதை யூஸ் பண்ணிக்க. இப்போ தள்ளு, நான் போயாகனும்..” என்றவளை கண்கள் சுருக்கி முறைத்தவன்,
“போற வழியில என்னை இறக்கி விடு..” என்றான் கெஞ்சலாய்!
இத்தனைக்கும் அவனது பைக், சற்று தொலைவிலிருந்த ஒரு மரநிழலில் அனாதரவாய் நின்று அவனைப் பாவமாய் பார்த்திருந்தது.
ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்தபடி, பாடலுக்கேற்றாற்போல் பைக் சீட்டில் விரல்களால் தாளமிட்டுக் கொண்டே அண்ணன் பல்பு வாங்குவதை ரசித்துக் கொண்டிருந்தான் ரித்விக். அவனின் உடன்பிறப்பு!
“ரொம்ப கெஞ்சுறாருல்ல? ஏறிக்கட்டுமே!” என்ற சாந்தனா மைதிலி பதில் கூற முன்பே, “வந்து ஏறுங்க..” என்றாள் சித்விக்கிடம். காரணமின்றி அடிக்கடி அவளது கன்னங்கள் குங்கும நிறமாய் மாறிக் கொண்டிருந்தது.
கடைக்கண்ணால் அவளை ஏறிட்ட மைதிலி, அவளது கன்னச் சிவப்பை கண்டு விட்டு லேசாக இதழ் விரித்தாள்.
சித்விக்கைக் காணும் நேரங்களில் மாத்திரம் அவளது முகம் செந்தாமரையாய் மலர்ந்து போவதை இன்று நேற்றல்ல, சில மாதங்களாகவே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் விடயம் என்னவென அவளே கூறட்டுமென வாய்மூடி அமைதி காத்து வருகிறாள்.
மரத்தடியில் நின்றிருந்த தம்பிக்கு கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன் காரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொள்ள,
“ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்குற வண்டியில உனக்கு என்னடா வேலைனு கேட்பான்னு நினைச்சேன் உன் தம்பி. ஆனா பாரேன், அவனும் கூட உனக்கு கட்டை விரல் காட்டி சப்போர்ட் கொடுக்குறான். கடத்தல் பார்ட்டியா நீ?” என காரை ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டாள் மைதிலி.
‘அதையும் பார்த்துட்டாளா?’ என நினைத்தவன் பற்களை பாரபட்சமின்றி வாடகைக்கு விட்டாள்.
அசடு வழிந்த சித்விக்கை மேல் கண்ணாடி வழியாகப் பார்த்து, “சகிக்கல. மூடு!” என கேலி செய்தவள்,
“ஆமா சாந்து, இந்த காதலைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று கேட்டாளே பார்க்கலாம்! சட்டென்று இரத்தவோட்டமின்றி வெளிறிப் போய் விட்டது சாந்தனாவின் முகம்.
தெறித்து விழவிருந்த கண்மணிகளை இமை சிமிட்டி பாதுகாத்து, நொடியில் வரண்டு போன தொண்டையை எச்சில் விழுங்கி ஈரப்படுத்தினாள் சாந்தனா. ஆனால் தோழியின் கேள்விக்கு பதில் மட்டும் கூறவில்லை.
“காதல் ஒரு அழகான உணர்வு!” என கன்னத்தில் கை குற்றி ரசனையாய் கூறியவனைப் பார்த்து “ஆஹான்!” என புருவம் தூக்கிய மைதிலி,
“நீ என்ன நினைக்கிற?” என ஆர்வமாக கேள்வி எழுப்பியவனைப் பார்த்து,
“அது ஒரு பைத்தியகாரத் தனமான ஃபீலிங்! மனுஷனை வாழ விடாது, நிம்மதியா சாகவும் விடாது. மனசை உசுரோட கொழுத்திட்டே இருக்கும்..” என்றாள் சலிப்பாக!
வேறெதையோ எதிர்பார்த்திருந்த சித்விக்கின் முகம் இருள் சூழ்ந்து சடேரென்று தொங்கிப் போனது தான் பரிதாபம்.
ஆனால் அதை சாமர்த்தியமாய் மறைத்து புன்னகையை நிலைக்க விட்டவன், “ஏன் அப்படி சொல்லுற?” என்று கேட்டான். காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் குரல் சோர்ந்து விட்டிருந்தது.
“ப்ச்! அந்த லவ்வு யாரையும் நிம்மதியா இருக்க விடாது சித்து. என்னைப் பொறுத்த வரை சுயம் தொலையாத மட்டுக்கும் காதல்ங்குறது ஒரு அழகான விஷயம்.
நம்ம லைஃப், அதை நம்ம இஷ்டப்படி நிம்மதியா வாழணும். அவ என் காதலை ஏத்துக்கல, அவன் என்னை திரும்பியும் பார்க்கலனு கவலைப்படறதுலயே பாதி வாழ்நாள் வீணா போய்டுது இங்க.. தேவையா இதுலாம்?” என்றவளின் கண்கள் தெரிந்த எரிச்சல் சித்விக்கை யோசனை கொள்ளச் செய்தது.
அவள் மான்ஷியை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்ட சாந்தனா, கண்ணாடி வழியாக பார்வையை வெளியே செலுத்தினாள்.
மைதிலி கூறும் போதெல்லாம் மான்ஷியின் காதலை நினைத்து உடல் சிலிர்க்கும் அவளுக்கு. ‘இப்படியும் காதலிக்க முடியுமா ஒரு பெண்ணால்?’ என தினமும் புதிதாய் வியக்கிறாள்.
மற்றவர்களுக்கு எப்படியோ, அவளுக்கு மான்ஷியை மிகவும் பிடிக்கும். அவளின் காதலைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களின் நேசம் கைக் கூட வேண்டும் என பிரார்த்திக்கவும் நிரம்பப் பிடித்திருந்தது.
கார் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதும் யோசனையிலிருந்து மீண்டவள் காரிலிருந்து இறங்கி கையாட்டிய சித்விக்கிற்கு தலையசைத்து விடை கொடுத்தாள்.
“வரேன், நாளைக்கு மீட் பண்ணலாம்..” என இருவரிடமும் பொதுப்படையாக கூறிவிட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை வேகமாக வந்து வழி மறித்து நின்ற ரித்விக்,
“அண்ணா..” என்றழைத்தான் ராகமாய்!
“டேய், அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டியா?” என திகைப்பாய் வினவினான் அண்ணன்காரன்.
சட்டை கோலரை தூக்கி ஸ்டைலாய் தலை கோதிய ரித்விக், “இன்னைக்கு என்னண்ணா ஆச்சு.. ஊத்திக்கிச்சா.. பத்திக்கிச்சா?” என ஆர்வமாகக் கேட்க,
“ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஓ கண்ணே..” என பாடலாக பாடி, தம்பியிடமிருந்து முதுகில் ஒரு அடியையும் பெற்றுக் கொண்டான் சித்விக்.
*******
“திஸ் ஈஸ் மை லாஸ்ட் வார்னிங் மான்ஷி! இந்த லவ் உனக்கு வேணாம். அவனை இந்த நிமிஷத்தோடயே நீ மறந்தாகனும்..” என சிவந்த கண்களும், கோபத்தில் துடிக்கும் மீசையுமாய் உறுமிக் கொண்டிருந்தார் சிவதர்ஷன்.
அறைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்த பொருட்களும், அறை மூலையில் தன் உயிர் நீத்து சில்லுசில்லாக நொறுங்கியிருந்த கண்ணாடித் துண்டுகளும், அலங்கோலமாகப் பல்லிளித்துக் கொண்டிருந்தன.
செவிப்பறையில் வந்து மோதிய சிம்மக்குரல் அதீத எரிச்சலை ஏற்படுத்த, சலிப்புடன் காதில் சுண்டு விரலிட்டுக் குடைந்து விட்டவள், “முடியாதுனா என்ன பண்ண போறீங்க டேட்?” எனக் குரலில் கேலி தொனிக்க வினவினாள்.
சிவதர்ஷனின் முகம் கோபத்தில் செந்தனலென சிவந்தது.
மகள் இரவோடு இரவாக வீட்டுக்கு வந்த தோற்றத்தைக் கண்டதும் பதறி விட்டார். எவ்வளவு தான் விறைப்பாய் திரிந்தாலும் அவள் மேல் அவர் வைத்த அன்பு கணக்கிட முடியாதது தான்!
மகளைக் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அவனின் எடுபிடி வேலைகளில் உதவி செய்யும் இந்தருடன் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறானே என உள்ளுக்குள் பொறுமியவருக்கு யுகனைக் கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
அவர் அறியாத விடயம், இந்தரின் உதவியைக் கூட இரவில் தனியாக வீட்டுக்கு வரப் பயந்து மகளாகவே சென்று பெற்றுக் கொண்டது தான் என்பது!
மகளின் பைத்தியகாரத் தனமான காதலை பார்க்கும் போது இரத்தம் கொதித்தது பெரியவருக்கு.
இரவு பூராகவும் சிந்தனையின் பிடியில் தூக்கம் தொலைத்தவர் காலையிலே தாண்டியா ஆட ஆரம்பித்து விட்டிருந்தார். யுகனையும் திட்டினார்; அவளையும் திட்டினார்.
தன்னைத் திட்டும் போது ரோஷம் கெட்டு வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருப்பவள் யுகனை திட்டும் போது மாத்திரம் பொங்கி எழுவது அவரது கோபத்தை மென்மேலும் மேலும் கூட்டியது.
“லிஸின்’ப்பா.. நானும் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன். நீங்க என்ன சொன்னாலும் என்னால அவனை மறக்க முடியாது. அவனை ரொம்ப காதலிக்கிறேன் டேட்! அவனைத் தவிர வேற யாரையும் கனவுல கூட என்னால நினைச்சுப் பார்க்க முடியாது.
அவனை விட்டு என்னைக்கும் தூரமாக மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கேன். இட்ஸ் அ ப்ரோமிஸ் டேட்! ஹவ் கேன் ஐ பிரேக் இட்?” என அவளிடமிருந்து வெகு நிதானமாக வெளி வந்த குரல் இறுதியில் கரகரத்தது.
“நோ! நீ அந்த சத்தியத்தைப் பத்தி பேசாதே! உன்கூட எப்போவும் இருப்பேன்ங்குற நம்பிக்கையை அவன் தான் முதல்ல உனக்கு ஊட்டினான். ஆனா இப்போ அவனே தான் உன்னை இந்தளவுக்கு அவொய்ட் பண்ணுறான் மான்ஷி. கொடுத்த நம்பிக்கையை அவனே உடைச்சி தகர்க்கும் போது, உன் சத்தியமெல்லாம் தேவையில்லாத ஆணி இல்லையா?”
அவரது கூற்றிலிருந்த உண்மைத் தன்மை மான்ஷியின் மனதைத் தீயென சுட்டது.
கட்டுப்பாடின்றி கண்களில் வழிந்த நாயகராவைப் புறங்கையால் துடைத்து விட்டவள், “பட் ஐ லவ் ஹிம் டேட்!” என்ற நொடியில், மகளையே அழுத்தமாகப் பார்த்திருந்தவரின் இறுகிய கைமுஷ்டி மெல்லத் தளர்ந்து,
“பளார்” என்ற சத்தத்தோடு அவளின் கன்னத்தில் பதிந்து மீண்டது.
எதிர்பாராத அறையில் தலைக்கு மேல் பூச்சிகள் பறந்து, உலகம் சுற்றி நின்றது பாவைக்கு!
“ஐயோ என்னங்க! பாவம் என் புள்ளைய அடிக்காதிங்க..” என சேலை நுனியால் வாய் பொத்தி அழுது கொண்டிருந்த சகுந்தலா நொடியில் பதறித் துடித்தாள்.
அவளைப் பார்வையாலே அடக்கி தூர நிறுத்தியவர், “காதலிக்கலாம், தப்பில்ல. ஆனா நீ வர வர பைத்தியமா மாறிட்டு வர்றியோனு தோணுது மான்ஷி. என் புள்ள கண்டவன் பின்னாடி அலையிறதை நான் எப்படி பார்த்துட்டு சும்மா இருப்பேன்?” என சோர்ந்த குரலில் அங்கலாய்த்தார்.
“அதுசரி! அந்த கண்டவனைப் பத்தின ஆசையையும், அவன் தான் உனக்கு புருஷன்ங்குற எண்ணத்தையும் என் மனசுல விதைச்சது நீங்க தானே டேட்?”
சட்டென பொங்கி, மீண்டும் அவளை அறையவென ஓங்கிய கையை, மனைவியின் பரிதாப முகத்தைப் பார்த்துக் கீழிறக்கியவர்,
“உன்னை இந்த கோலத்துல பார்க்க ரொம்ப வருத்தமா இருக்குடாம்மா. பாரு, கழுத்து எப்படி செவந்து போயிருக்கு.. பத்தாதுனு கால்ல வேற கட்டு! இவ்ளோ காயப்படுத்துறவன் உனக்கு தேவை தானா?” என குரலைத் தாழ்த்தி அன்புருகக் கேட்டார்.
“மொத்த தப்பும் என்மேல தான் டேட்! நான் பைத்தியக்காரி போல நடந்துக்க போனதால தான் இவ்ளோவும் ஆச்சு.. என்னை திட்டி அடிக்க அவனுக்கு இல்லாத உரிமையா என்ன?”
சட்டென கண் கலங்கி, “மான்ஷி, கல்மனசுமா அவனுக்கு. அவன் வேணாம்டா உனக்கு..” என்று குரல் தளரக் கூறியவருக்கு தன் வரிசைப் பற்களைக் காட்டியவள்
இவளிடம் மேற்கொண்டு பேசினால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் பிபி எகிறி மருத்துவமனைக் கட்டிலில் படுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனப் புரிந்து கொண்டவரின் பார்வை, அவளில் நிலைத்தது.
அழுது வீங்கிய தாமரை வதனம், விரல்கள் அழுத்தமாய் பதிந்து சிவந்து போயிருந்த சங்குக் கழுத்து, கலைந்து காற்றில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த சுருண்ட கூந்தல், சுறுசுறுப்பில்லாத உடல்மொழி, கட்டுப் போடப்பட்ட கால் என.. மொத்தமாய் மாறிப் போயிருந்த மகளை பார்க்கும் போது கோபமும், வேதனையும் சரிசமமாய் வந்தது அவருக்கு.
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாளே என்ற வேதனை. யாவற்றுக்கும் காரணகர்த்தா தான் என்பதை எண்ணி எழுந்த கோபம். இரண்டும் அவரை வருத்தின; வேதனைப்படுத்தின.
தீவிர சிந்தனைக்குப் பிறகு, “சரி! உனக்கு ரெண்டு சாய்ஸ்..” என பீடிகை போட்டு நிறுத்தியவரை ஏறிட்டுப் பார்த்தவள், “வாட் டேட்?” என்றாள் சலிப்புடன்.
“ஒன்னு, அவனை மறந்துட்டு நான் பார்க்கிறவனை கட்டிக்கோ! இந்த பேமிலி என்னைக்கும் உன் கூடவே இருக்கும். மத்தது, இந்த பேமிலியை மொத்தமா மறந்திட்டு அவன் கிட்டயே போய்டு! அப்பறம் கொடுமை படுத்தறான்னு சொல்லி இந்த வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்க கூடாது..” என்ற சிவதர்ஷனின் குரல் அறை எங்கிலும் எதிரொலித்தது.
மான்ஷியின் முகமதில் அதிர்ச்சியின் சாயல்!
“வாட்!” என முணுமுணுத்தவளைப் பார்த்து மனம் பிசைந்தாலும், வேறு வழியில்லை. அவளை வழிக்கு கொண்டு வர வேண்டுமெனில் இதை அன்றி செய்வதற்கு எதுவுமில்லை என்ற எண்ணத்தில்,
“யூ ஹேவ் நோ அதர் சாய்ஸஸ்!” என தாடை இறுக முழங்கினார்.
அவளின் உறைநிலை எல்லாம் வெறும் இரண்டு நிமிடங்கள் தான்!
சட்டென சுதாகரித்து இயல்புக்கு மீண்டவள், தன் அதிர்வை மறைத்துக் கொண்டு கட்டிலடியில் உறங்கிக் கொண்டிருந்த சூட்கேஸை இழுத்து, கபோர்டிலிருந்த உடைகளை அடுக்க ஆரம்பித்தாள்.
“உனக்காக எதையும் செய்ய நான் தயாரா இருக்கேன் யுகன்!” – அவள் கண்ணீருடன் முணுமுணுத்த வரிகள் இவை!
உடைகள் அடங்கிய சூட்கேஸை இழுத்து மூடியவள் தடுக்க முயன்ற தாயையும், விறைப்பாய் நின்றிருந்த தந்தையையும் தாண்டி வெளியே நடந்தாள்.
“மான்ஷி, உங்கப்பா ஏதோ கோபத்துல பேசுறாரும்மா.. அம்மாவுக்காகவாவது கொஞ்சம் பொறுமையா இருடாம்மா..” என்ற சகுந்தலாவின் கெஞ்சல் அவளுக்குக் கேட்டதாக தெரியவில்லை. வழிந்த கண்ணீரைப் புறங்கைகளால் துடைத்து விட்டுக் கொண்டாள்.
“அவளைப் போக விடு சகு! எங்களை விட அவன் முக்கியமாம்ல.. போகட்டும். அனுபவிச்சு, தாங்க முடியாத கட்டத்துல இங்கே தான் வருவா..” என சிவதர்ஷன் விறைப்பாக கூற,
“செத்தாலும் வர மாட்டேன். போதுமா?” என கேலியாய் கேட்டாள் மான்ஷி.
‘ரோஷக்காரி இவ’ என கலங்கி, அவளைத் தடுக்கும் வழியறியாமல் ஓரமாய் ஒதுங்கினாள் சகுந்தலா.
கார் கீயை தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்தபடி அப்போது தான் வீட்டினுள் நுழைந்த மைதிலி, சூட்கேஸுடன் நின்றிருந்த மான்ஷியையும், மற்ற இருவரையும் பார்த்துக் கண்களை உருட்டினாள்.
“எங்கே கிளம்பிட்டே மான்ஷி?” என தோளில் தொங்கிய கைப்பையை தூக்கி சோபாவில் எறிந்து விட்டு கேட்டாள்.
“யுகன் வீட்டுக்கு..”
வெளிப்படையாகவே நெற்றியில் அறைந்து கொண்ட மைதிலி, “ஒன்னுமில்ல, இவ்ளோநாள் அவரை விட்டுவிட்டுக் கொன்னே.. இப்போ ஒரேயடியா கொல்ல போற.. ரைட்டுல?” என எரிச்சலாக கேட்டாள்.
ஏற்கனவே சோகத்தின் பிடியில் உழன்று கொண்டிருந்த சகுந்தலா இளையவளின் பேச்சில் சினந்து, பாய்ந்து சென்று அவளின் தொடையில் நறுக்கென கிள்ளினாள்.