மகேஸ்வரனாலும் நாகராஜிடம் எதையும் அதட்டி கேட்க முடியாது.. இப்போது அவர் ஐஜி வேறு… அதனால்தான் இந்த அமைதி.. அவருக்கு நன்றாக தெரியும் நளனை யார் இந்த விவாகத்திற்கு அழைத்து இருப்பார்கள் என்று யோசித்தவருக்கு நாகராஜன் தான் கண்ணுக்கு வந்து சென்றார்…ஏனென்றால் அந்த வீட்டில் அவர் ஒருவரே நளனை பற்றி அதிகம் யோசிப்பவர்.. ஏன் அவனிடம் பேசுபவர்கள் கூட அவர் ஒருவரே… ஆனால் மகேஸ்வரனுக்கு தன்னுடைய மாப்பிள்ளையை அதும் ஐஜி மாப்பிள்ளையை அதட்டி கேள்வி கேட்பது சரி என்று படவில்லை… அதனால் தான் அமைதியாக விட்டுவிட்டார்.
இங்கு தமையாவோ தன்னுடைய அறைக்கு சென்று புகுந்துக்கொண்டவள் தன்னுடைய முகத்தி போட்டிருக்கும் மேக்கப்களை களைந்து விட்டு தன் இலகுவான இரவு உடைக்கு மாறியவள் அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிக்க பார்த்தவளுக்கு இப்போது வரை இடை குறுகுறுவென்று தான் இருந்தது..
அதனை கண்டு யோசனையானவள்.. “எதுக்காக நம்மளுக்கு இங்க கூசிட்டே இருக்கு…” என்று தன்னுடைய இடையே வருடியவளுக்கோ அப்போதுதான் நளனின் ஞாபகமே அவளுக்கு வந்தது.. நளன் நியாபகம் வந்த வேகத்திற்கு அவள் உடல் ஜிவ்வென்று சிலிர்க்க.. அவள் சதைப்பற்றான கீழ் உதடுகளோ அவளின் வெண்மையான பால்பற்களிடையே மாட்டிக்கொள்ள, அவள் முகமோ அவளுக்கு மிகவும் பிடித்த ரோஸ்மில்க் போல சிவந்து போனது.
“அட ஆமால்ல நம்ம மாமாஜி தானே நம்ம இடுப்ப தொட்டாரு.. அதனால தான் குறுகுறுன்னு இருக்கு போல…” என்று தன் இடையையே வருடிக் கொண்டே இருந்தவளுக்கு ஏனோ அவன் வருடியது இப்போது கூச்சமாக இருந்தது… “ஆஆ ஐயோ மாமாஜி நம்மள மொத மொதல்ல இன்னைக்கு தான் தொட்டு இருக்காரு…” என்று நினைத்தவளுக்கு மனம் குதுகலமாக இருந்தது..
“அட லூசே அவர பல வருஷத்துக்கு அப்புறம் இன்னிக்கி தான்டி பாக்குற… அவரும் இன்னிக்கி தான் பல வருஷத்துக்கு அப்புறம் உன்ன பாக்குறாரு.. இதுல மொத மொதலா தொட்டுருக்காறாம்…”என்று அவள் மனம் கேலி செய்ய…
“அட வாய மூடு வனக்குரங்கே…கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா நோக்கு பிடிக்காதே…”என்று தன் மனதை அதட்டியவளோ.. தன்னுடைய இடையை வருடியவாறே… “ஆமா இந்த மாமாஜிய கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் போலையே என்ன செய்யலாம்…” என்று கன்னத்தில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்க
அந்நேரம் பார்த்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது… “அய்யோ நானே காலங்காத்தால எழுந்ததுல டயர்டா இருந்தா… எந்த கடங்காரன் கூப்டுறான்னு தெரிலையே…”என்றவள் போனை எடுத்தவள் யார் என்று பார்க்க அதுவோ அவளுடைய உயிர் தோழன் சலீம் என்று காட்ட…
“அட பாய் இவன் எதுக்கு இப்ப கால் பண்றானோ…”என்று யோசனையுடன் போனை எடுத்து காதில் வைக்க…
“ம்ம் என்னடி மாமி கல்யாணம் பேஷா முடிஞ்சிருச்சா…” என்று கேட்க
“சொல்லுடா பாய்…அதெல்லாம் நன்னாவே முடிஞ்சிருச்சு… ஆமா நீ ஏண்டா வரல..” என்று கேட்க
“கேடி மாமி..நான்தான் சொன்னேனே எங்க அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்னு…”என்று கூற
அதில் நாக்கை கடித்துக்கொண்டவளோ… “அட ஆமால்ல நான் மறதி கேஸ்ஸுன்னு நோக்கு தெரியும்ன்னோ… மறந்து போயிட்டேன் டா நாளைக்கு அம்மாவ பாக்குறதுக்கு ஹாஸ்பிடல் வாரேன் சரியா…”என்று கூற
“அட மாமி அதெல்லாம் ஒன்னும் வேணாம்… இப்ப தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க… ரொம்ப பிசியா இருப்ப நீ வீட்டை பாரு அப்புறம் கூட அம்மாவ வீட்ல வந்து பார்த்துக்கோ…” என்று கூற
அதுவும் அவளுக்கு சரியாகவே பட்டது.. நாளை என்ன என்ன வேலைகளை தன் தாயாரும், தந்தையும் வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை.. இந்த லட்சணத்தில் தான் பாட்டிற்கு ஏதோ ப்ளானை போடுவது சரியாக படவில்லை…
“சரி நேக்கு தெரியும்…“என்றவள் “ஆமா இப்ப அம்மா எப்டி டா இருக்காங்க… ஆல் குட் தானே…”என்று கேட்க
“ம்ம் அதெல்லாம் நன்னபடியா முடிஞ்சிருச்சு… இதுல என்ன சந்தோஷம்னா என் அக்கா அவ மாமியார் வீட்டுக்கு ஓடிட்டா…இனிமே நான் இங்க தனியா சந்தோஷமா இருப்பேன் …”என்று கூற
அவள் குணம் தெரிந்தவனாயிற்றே அவள் நண்பன்… ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட பத்து வருட ப்ரண்ஷிப் இருவரதும்… கிட்டதட்ட இருவரின் நட்பும் அவர்களின் ஆறாம் வகுப்பில் இருந்து ஆரம்பித்தது.
சலீம் தன்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை தன் தந்தையுடன் சவுதியில் படித்தான். அதன் பின் அவன் அன்னை அவனை இந்தியாவிற்கு கூட்டி வந்துவிட.. அவனோ தமையா படித்த பள்ளியில் தான் தன்னுடைய படிப்பை தொடங்கினான். அவனுக்கு கொஞ்சம் தமிழ் குளறுபடிதான். அப்போதெல்லாம் தமையா தான் அவனுக்கு உதவி செய்வாள்.. அப்போது ஆரம்பித்தது அதன் பின் இப்போது இருவரும் சேர்ந்து தான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படிக்கின்றனர்.
இதிலும் இருவருக்குமே பொருத்தம் தான்.. சலீமிற்கும் சமையல்கலையில் நல்ல ஆர்வம்.. அதே போல தமையாவிற்கும் சிறுவயதில் இருந்து அமிர்தம் ஹோட்டலை பார்த்தாலே தானும் அது போல சமையல்கலையில் சேர வேண்டும் என்ற விருப்பத்துடனே சேர்ந்தாள்.அவளின் ஆசையை கேட்ட மகேஸ்வரனுக்கோ அவ்வளவு சந்தோஷம்.. அவரின் செல்ல பேத்தி அவள் அவளாக எதை கேட்டாலும் படிக்க வைத்திருப்பார் தான்… ஆனால் அவரின் குடும்ப தொழிலை பற்றியே படிக்க போவதாக கூற அவருக்கோ இரட்டை சந்தோஷம் தான்.
“தாராளமா செல்லம்… போய் படி.. படிச்சி பெரிய செஃப் ஆகி நம்ம ஹோட்டல நீதான் பாத்துக்கனும்..”என்று மலர்ந்த முகத்துடன் கூற… அவளோ தன் தாத்தனை கட்டிக்கொண்டாள்.
“ஏன்டி நாங்க தான் இதுல மாட்டிக்கிட்டோம்னா நீயாச்சும் வேற எதாவது எடுத்து படிக்கலாம்ல… நீயும் இப்டி வந்து மாட்டிக்கிறியே…”என்று அபிநிதி கேட்க
அதற்கோ புன்னகைத்தவாறே… “நேக்கு இதான் மன்னி பிடிச்சிருக்கு… நேக்கு சாப்ட கொள்ள விருப்பம்னு நோக்கு தெரிம்னோ… அதான் இந்த ஃபீல்டுக்குள்ள போய்ட்டா நன்னா சாப்டலாம்ல்ல..”என்று மழலையாக கூற…
அதனை கேட்ட விபி, மகி, அபி,ஈஸ்வர் என்று அனைவரும் புன்னகைத்து கொண்டார்கள்… “அடிப்பாவி சாப்டவா இந்த ஃபீல்ட சூஸ் பண்ணுன…”என்று அபிநிதிதான் வாயில் கை வைக்க வேண்டியதாகி போனது.
அந்த வீட்டிலையே சித்ராவின் மகன் அஸ்வினுக்கு முன் சிறியவள் என்றாள் அது தமையா தான். அதனால் அவளின் சேட்டை அங்கு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும்.. அபிநிதியை விட தமையா கிட்டதட்ட மூன்று வயது சிறியவள்.
“அட உன் அக்காவுக்கு தானேடி தமையா கல்யாணம் ஆகிருக்கு… அவங்கள தவிர இன்னும் ஒரு கும்பலே உங்க வீட்ல இருக்குமே… அப்புறம் எப்டி நீ சந்தோஷமா இருப்ப..”என்றான் சலீம்…
அதில் முகத்தை சுருக்கியவளா… “நன்னா இருக்கு பாய் உன்னோட கத… நானே ஏதோ சொல்லி மனச தேத்தின்டு இருக்கேன்… அது உனக்கு பொருக்கலையாக்கும்… ” என்று சோகமாக பேச…
தன் தோழியின் பேச்சினை கண்டுக்கொண்டவனோ… “என்னாச்சி உன் அந்த மாமாஜீய பாத்தியாக்கும்…”என்றான் சலீம்
அவனுக்கு தெரியாதது அவளிடத்தில் எதுவும் இல்லை… அனைத்தையும் இருவரும் பகிர்ந்துக்கொள்வார்கள். முதலில் அவளுக்கு வந்த லவ் லெட்டர் தொடங்கி அவனுக்கு வந்த ப்ரோஃபோஷல் வரை அனைத்தும் இருவருக்கும் அத்துப்படி…
“ம்ம்ம் ஆமா வந்தா.. அவருக்கு என்ன நன்னா பெருமாள் கணக்கா கம்பீரமா காட்சி தந்தார்… என்னை பாத்தார் ஆனா கண்டுக்க கூட இல்ல தெரியுமோ…ஆனா நான் தான் அவர பாத்து ஃப்ளாட் ஆகிட்டேன்…”என்றாள் தமையா…
அதனை கேட்ட சலீமோ… “உங்க ஆத்துல இருக்கறவா கொஞ்ச நஞ்சமா அவருக்கு பண்ணிருக்கா… அதுக்கலாம் அவா எல்லாம் அனுபவிக்க வேண்டாமோ… அதுக்கு அப்புறம் பாரு உங்கிட்ட நல்லா பேசுவார்…”என்றான் அவனும் அவளை போல அய்யர் பாஷை பேசிக்கொண்டே…
இவளோ “போன்ல பேசுறேன்னு மரியாதையா பேசுறேன்… இல்லைன்னு வை..” என்று அவள் ஆரம்பிக்க..
“ம்ம் சரி ரைட்டு விடு…”என்று சமாதானம் ஆகியவன்… “ம்ம் ஆமா இன்னைக்கு அந்த சரத் இருக்கானே அவன் போன் பண்ணான்டி…காலேஜ்ல நம்மளுக்கு தேர்ட் இயர் ஃபுல்லா இன்டர்ன்ஷிப் தானாம்… அதுக்கு ஏதாவது ரிஜிஸ்டர்ட் ரெஸ்டாரன்ட்ல தானே பண்ணனும்… அதுக்கு ஏதும் ஹோட்டல் பாத்துட்டீங்களான்னு கேட்டுட்டு இருந்தான்…” என்று சலீம் கூற
“அட ஆமாண்டா நான் கூட தான் அதே யோசனைலயே இருக்கேன்…” என்றவளை இடைமறித்தவனாக…
“ஆமா நாம ஏன் உங்க ஹோட்டல்லையே ஜாயின் பண்ண கூடாது… அங்கையே சைனிஸ், இட்டாலியன்னு நிறைய பண்றாங்களே…”என்று சலீம் ஐடியா குடுக்க…
அதில் முகம் சூடாகியவள்…“அடேய் பாய்… உன்ன வெளுக்க போறேன்ட்டா…எங்க ஹோட்டல்ல ஜாயின் பண்ண நான் ஏன்டா உங்கிட்ட ஐடியா கேட்க போறேன்… எங்க ஹோட்டல்லாம் வேணாம்,.. அது ட்ரெஸ்பாஸ் ஏரியா தொட்டம்ன்னு வையி கரென்ட் ஷாக் தான்… தாத்தா வேற நொய்ய நொய்யன்னு உயிர வாங்கிடுவாரு… அது செட் ஆகாது…நீ பேசாம ஹோட்டல் ஏதாவது கிடைக்குமான்னு பாரேன்..” என்று அந்த வேலையை சலீம் தலையில் கட்ட பார்க்க…
“அத மட்டும் ஏன் என் தலையில கட்டுற… பேசாம நீயே இடத்த கண்டுபிடி நானும் உன் கூடவே ஒட்டிப்பேன்…” என்று சலீம் நக்கலாக கூற…
“ஆஆ நீ சரியான ஒட்டுண்ணி பாய்ன்னு தெரியாம சொல்லிட்டேன்டா…”என்றவளோ… “சரி நா பாக்குறேன்… நாளைக்கி நாம காலேஜ்ல மீட் பண்ணுவோம்…”என்றவளோ அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தவளுக்கு அப்போதுதான் அவள் மூளையில் ஒரு எண்ணம் உதயமாகியது…
“ஐ மாமாஜி உங்கள கரெக்ட் பண்றதுக்கு சரியான ஒரு வழி கிடைச்சிருக்கு… எனக்கு இன்டர்ன் பண்ணனும் வழி கிடச்சிடுச்சி…”என்று குதுக்கலித்தவளோஅவனை மயக்க வழி கிடைத்ததை எண்ணி மனம் இறக்கை விரித்து பறந்தது..அப்படியே அவனை நினைத்தவாறு இருந்தவளுக்கு அவனின் மூச்சுக்காற்று இன்னும் தன் கழுத்தடியில் படுவது போல ஒரு எண்ணம் தோன்ற ஏதோ இம்சையான உணர்வை உணர்த்தவாறே அப்படியே கண்களை மூடி படுத்திருந்தவள்… அப்படியே அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்…
இங்கு இவள் உறங்க அங்கோ ஒருவன் உறங்காமல் தன்னுடைய அருகில் இருக்கும் பால்கனி வழியாக நிலாவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்…இத்தனை வருடமாக தோன்றாத ஏதோ ஒரு இம்சையான உணர்வு அவனுக்கு தோன்ற… அந்த உணர்வும் அவனுக்கு பிடித்தே போனது…
“ம்ச் இதெல்லாம் அந்த ராபிட்டால வந்தது…” என்றவாறே தன்னுடைய கேசத்தை கோதிக்கொண்டவனோ அப்படியே தன் அறையில் இருக்கும் கட்டிலில் அப்படியே படுத்துக்கொண்டான்…
ஆனால் அவனுக்கு உறக்கம் தான் எட்டாக்கனி ஆகிப்போனது.. ஏனோ இன்று பருவக்காய்ச்சல் வந்தது போல மனம் அடித்துக்கொண்டது.. அவன் உடல் சிலிர்க்க… அவனின் கையோ ஏதோ மென்மையை உணர்த்தியவாறே குறுக்குறுத்தது…
“ம்ச் ஏன் எனக்கு இப்டிலாம் வித்தியாசமா தோணுது…”என்று யோசனை செய்தவாறே இருந்தவனுக்கு அது கண்டிப்பாக அவனுடைய ராபிட்டினால் தூண்டப்பட்ட உணர்வுகளால் தான் என்று ஆணித்தரமாக நம்பினான்.
“நோ நோ நளா… இந்த மாதிரி உணர்வுகளுக்கு எப்போதும் இடம் கொடுக்காத… ஏற்கனவே இது மாதிரியான உணர்வுகளால தான் உன் வாழ்க்கையே இப்டி மாறி போச்சி.. திரும்ப இதே தப்ப பண்ணாத… அதும் இல்லாம உங்கிட்ட எந்த உணர்வுகளும் இல்ல… எல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னால மரிச்சி போன உணர்வுகள் தான்…“என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவனோ தன் கண்களை போல தன் மனக்கதவுகளையும் இறுக்கமாக மூடிக்கொண்டான்.