
Monthly Archives
May 2025
குறிஞ்சி மலர்.. 46
மனைவியின் வெட்கப் பார்வையில் உல்லாசமாக வலம் வந்த ஜேம்ஸ், அவளை தனியே எங்கேயும் அனுப்புவதேயில்லை.
“பேபீ..”
“என்னங்கோ..”
“நான் ரூம்ல இல்லாத நேரம்.. ஊரை சுத்திப் பாக்கிறேனு கிளம்பிடாதே..”
“நீங்கள் சுத்தி காட்டினா நான் ஏன் கிளம்பிப் போக போறேன்..”
“அப்போ இதுவரை நாளும் நடந்தது என்னடி..”
“அது வேறை இது வேறை..”
“என்னடீ..”
“சும்மா எவ்வளவு நேரம் தான் இந்த அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறது சொல்லுங்கோ..”
“உன்னை யாரு அடைஞ்சு கிடக்க சொன்னது.. நீ கேசப்பா கூட போய் பேசிட்டு இரேன்..”
“பாவம் அப்பா.. என்ரை அலம்பலை கேட்டு கேட்டு காதால ரத்தம் வடியாத குறையா கிடக்கிறாரு.. நான் அப்பானு கூப்பிட்டுக் கொண்டு போனாலே அலறியடிச்சு ஓடுறாரு.. வஞ்சியண்ணாச்சியைப் பத்தி சொல்லவே தேவையில்லை.. எனக்கு வேறை கதைக்காமலே இருக்க முடியேல்லை..”
“நான் வேலை விசியமா வெளிய போயிட்டு வர்ர வரைக்கும் தானேடி..”
“அது வரைக்கும் நான் என்ன செய்ய.. எங்க போறதா இருந்தாலும் என்னைய கூட்டிக் கொண்டு போங்கோ.. இல்லாட்டிக்கு இங்கினையே நான் கதைக்கிறதை கேட்டுக் கொண்டு இருங்கோ..”
“பேபி.. அவசர வேலை ஒண்ணுடி.. போறதும் வாரதும் தான்..”
“போறதும் வாரதும் எண்டால் ஏன் போறீங்களாம்..”
“தாயே கொஞ்சம் கருணை காட்ட கூடாதா..”
“போய்த் துலையுங்கோ.. பிஸிநெஸ் பாக்க வாரவரு என்னைய எதுக்கு இங்கினை கூட்டி வருவானாம்..”
என முணுமுணுத்துக் கொண்டு கோதை படுக்கையில் விழ, இனியும் நின்றால் அவள் தன்னை போகவே விட மாட்டாள் என்பதை புரிந்து கொண்ட ஜேம்ஸ் வேகமாக வெளியேறி விட்டான்.
அவன் போன திக்கையே பார்த்தபடி படுத்துக் கிடந்தவளுக்கு, எப்போதடா தாய் நாட்டுக்கு கிளம்புவோம் என்றிருந்தது. ஜேம்ஸ் இங்கே வந்ததில் இருந்து இப்படி தான் அடிக்கடி எங்கோ வெளியே போய் விட்டு வருகிறான். அதைப் பற்றி கேட்டாலும் ஒழுங்கான பதில் கிடைப்பதில்லை. சரி அவன் வேலை அவன் பார்க்கிறான் என கோதையும் அமைதியாகிப் போனாலும் மனதோடு ஏதோ ஒரு சலனம் அவளுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.
அதோடு என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை ஒரு மாத காலம் மட்டுமே அவுஸ்திரேலியாவில் இருப்பது என வந்திருந்த ஜேம்ஸ், சட்டென்று அதை மூன்று மாத காலம் ஆக்கி விட, முதலில் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்ட கோதைக்கு பிறகு அதுவும் பிடிக்கவில்லை. காரணம் கணவன் மனைவி இருவரையும் அங்கே விட்டு மற்றவர்கள் நாட்டுக்கு திரும்ப ஆயத்தமாகி இருந்தார்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் புறப்பட இருந்தார்கள். இப்போதெல்லாம் தேவாவை போலவே ரகுமானும் கோதையோடு சுமுகமாகவும் சகஜமாகவும் பேசத் தொடங்கி விட்டிருந்தான்.
அவர்கள் இருவரும் கோதைக்கு பின்னால் தங்கச்சி தங்கச்சி என்று சுத்தி வருவதைப் பார்த்த வியாகேசும் வஞ்சியும் மூக்கில் விரலை வைத்தார்கள். போதாக்குறைக்கு அவர்களுக்கும் தேவா மற்றும் ரகுமானின் இசையில் வந்த பாடல்களை அவள் அறிமுகப் படுத்தி வைத்து விட, இருவருமே இசைப் போதைக்கு அடிமையாகி எப்போதும் ஏதாவது ஒரு பாடலை கம்மிங் செய்தபடியே வலம் வந்தார்கள்.
சில மணி நேரங்கள் அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தவள், போரடிக்கவே வியாகேசை தேடிக் கொண்டு போனாள்.
“அப்பா..”
“என்ன பிள்ளை..”
“கட்டாயம் நீங்கள் போய் தான் ஆகோணுமோ..”
“பிள்ளை.. எத்தினை தடவை நானும் உனக்கு இதுக்கு பதில் சொல்லீட்டன்..”
“பதிலில ஏதும் மாற்றம் வந்திருக்குமோ எண்டுற நப்பாசை தான் அப்பா..”
“எத்தினை நாள் தான் பீட்டரிந்தை அம்மாவையும் அப்பம்மாவையும் அங்க தனியா விடுறது.. என்ன தான் தெரிஞ்சவையிட்டை விட்டிட்டு வந்தாலும் அங்க இருக்கிற கிருமினல்களால இங்க நிம்மதியா இருக்க முடியேல்லை பிள்ளை.. அதோட மற்றவைக்கும் நிறைய வேலையள் இருக்குது பிள்ளை.. உன்ரை அம்மாவும் பாவம் தானே அவாக்கு இந்த இடம் சுத்தமா ஆகேல்லை..”
“ம்ம்.. புரியுதுப்பா..”
“உன்ரை புருஷனோட நீ சந்தோஷமா நேரத்தை செலவழி..”
“எங்கயப்பா.. அந்த மனுஷன் திடீர் திடீரெண்டு எங்கயோ போயிடுறாரு..”
“ஒரு நாளில ஒரு மணி நேரம் தானே பிள்ளை அவன் வெளியால போட்டு வாரான்..”
“என்னண்டே தெரியேல்லையப்பா.. அவரோடயே இருக்கோணும் போல கிடக்குது.. அவர் இல்லாத நேரம் கடுப்பா கிடக்குது கோபம் வருது.. சில நேரங்களில அழுகை கூட வருது..”
“கடைசியில உனக்கும் அந்த வியாதி தொத்தீட்டு எண்டு சொல்லு பிள்ளை..”
“என்ன வியாதியப்பா..”
“அது தான் மேனியா.. காதல்மேனியா..”
“போங்கோப்பா..”
என்று வெட்கப் பட்டபடி கோதை தன்னறைக்குள் ஓடி விட்டாள்.
மெல்லிய புன்னகையோடு அவள் போன திக்கையே பார்த்த வியாகேசு
“நீயும் பீட்டரும் எப்பவுமே நிம்மதியா இருக்கோணும்.. சீக்கிரமாவே எங்கடை ஜீவோதயத்துக்கு ஒரு வாரிசு வரோணும்..”
என்று வேண்டியபடி தன் வேலைகளைக் கவனிக்க போய் விட்டார்.
…………
அந்த விடுதியின் வாசலில் நின்று அனைவருக்கும் கையசைத்து விடை கொடுத்த கோதை, அறையினுள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.
விமான நிலையம் வரை சென்று அவர்களை வழியனுப்பி வைக்கும் அளவுக்கு அவளுக்கு பிடிப்பு இருக்கவில்லை.
எங்கே அங்கே வைத்து அழுது ஒப்பாரி வைத்து, கணவனிடம் வேண்டிக் கட்டிக் கொள்ள வேண்டி வருமோ என்கிற பயத்தில் அறையினுள்ளேயே இருந்து கொண்டு விட்டாள்.
ஜேம்ஸும் கோதையும் தங்கி இருந்த அறையை ஒட்டி ஒரு பால்கனி ஒன்று இருந்தது. மாலை நேரம் மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்ததனால் மாலைச் சூரியனை ரசிக்கும் பொருட்டு பால்கனியில் போய் நின்று கொண்டாள் கோதை.
எல்லோரையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு தன்னறைக்கு வந்த ஜேம்ஸை, லாரன்ஸ் ரோமியோவின் ஃபோன் அழைப்பு டிஸ்டொப் செய்யவே, அவன் புயல் வேகத்தில் அறையை பூட்டிவிட்டு கிளம்பி போய் விட்டான். வெளியே போகும் அவசரத்தில் அறைக் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அவன் போய் விட, இது தெரியாமல் கணவனின் வரவுக்காக பால்கனியில் காத்திருந்தாள் கோதை.
நேரம் அதுபாட்டில் நகர்ந்து செல்ல, வெளியே போனவன் வந்தபாடேயில்லை. மெல்ல மெல்ல மாலை மயங்கி இருள் பரவ, இயல்பாகவே இருளென்றால் பயம் கொள்ளும் கோதை, அறையினுள் போய் மின்குமிழை ஒளிரவிட்டு, ஏதாவது சுவாமிப் பாடல்களை கேட்கலாம் என உள்ளே போனாள்.
உள்ளே நுழைந்தவளுக்கு இருளில் ஒன்றுமே தெரியவில்லை. உள்ளே நுழைந்து சுவிட்ச் போர்ட் எங்கே இருக்கிறது என்பதை தடவிப் பார்த்து, அதைப் போடக் கூட அவளுக்கு பயமாக இருந்தது. அறையினுள் கிடந்த பொருட்கள் படு பயங்கரமாக காட்சி கொடுக்கவே, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடிப் போய்ப் பால்கனியிலேயே நின்று கொண்டு விட்டாள்.
வெளியே நகரமே ஒளிர்ந்து அத்தனை வண்ணமயமாக இருந்தது. ஆனால் பாவம் அவளுக்கு தான் அதை இரசிக்கும் மனநிலை சுத்தமாக இருக்கவில்லை.
“ஐயோ காளியாத்தா.. இதென்ன சோதினை.. உடம்பெல்லாம் நடுங்குதே போன மனுஷனை இன்னும் காணேல்லையே.. ஃபோன் வேறை எடுத்துப் பாப்பம் எண்டால்.. அது வேறை அறைக்குள்ள கிடக்குது.. எங்க வைச்சன் எண்டே தெரியேல்லையே.. மனுஷன் வர்ரதுக்குள்ள பயத்துலயே செத்ருவன் போலயே.. முருகா.. விநாயகா.. என்னைய காப்பாத்துங்கோ..”
என அவள் கைகூப்பி கண்களை இறுகமூடி வேண்டிக் கொண்டிருக்கும் போதே, பால்கனியை அடுத்து இருந்த பக்கத்தில் இருந்து யாரோ பயங்கரமாக அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருளில் அது தெளிவாக தெரியாது போனாலும், ஏற்கனவே பயத்தில் இருந்தவளை அவர்களது பயங்கரமான சண்டை இன்னும் பாதிக்கவே, அப்படியே மயங்கிச் சரிந்தாள் கோதை.
வெளியே போன ஜேம்ஸ் நள்ளிரவை தாண்டியே அறையினுள் வந்தான். அவனுக்கு இருந்த ஆக்ரோஷமான மனநிலையில், மனைவியென்று ஒருத்தி அங்கே தனக்காக எதிர்பார்த்து தனியாக இருப்பாள் என்பதே மறந்து போய் விட்டிருந்தது.
அந்தளவுக்கு அவன் கோபத்தில் இருந்தான். ஜேம்ஸ்பீட்டரும் லோரன்ஸ்ரோமியோவும் தான் இப்போது போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் நின்றார்கள். இப்போது கூட இங்கே வைத்தும் இருவருக்கும் இடையில் ஒரு தொழில்முறை ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்தது. அதற்காக வெவ்வேறு நாடுகளில் இருந்து நிறைய தொழில் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அதில் ஜேம்ஸுக்கு ஒரு பகுதி சப்போர்ட், லாரன்ஸுக்கு ஒரு பகுதி சப்போர்ட்.
அதில் ஜேம்ஸுக்கு சாதகமாக இருந்த ஒருவன் சட்டென்று லாரன்ஸின் பக்கம் போய் விட, அதே இடத்தில் அவனை பின்னியெடுத்து விட்டு வந்து விட்டான் ஜேம்ஸ். அவனை எதிர்க்கும் சக்தி இல்லாமல் எல்லோரும் கைகட்டி நிற்க, அடி வாங்கியவன் சாகாத குறையாகிப் போனான்.
ஜேம்ஸ் எதிரியை கூட மன்னித்து விடுவான். ஆனால் நம்பிக்கை துரோகியை என்றுமே மன்னிக்க மாட்டான். பொதுவாகவே இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு குணம் தான். நம்பிக்கை துரோகியை யாராலும் மன்னிக்க முடியாது. ஜேம்ஸ் ஒருபடி மேலே போய் அவனை தண்டித்து விட்டே ஓய்வான். அப்படியே அவனை நம்பியதற்காக தன்னையும் தண்டித்து கொள்ளுவான்.
அறையினுள் நுழைந்தவன், கோபம் தீர சுவற்றிலே ஓங்கிக் குத்தி விட்டு, பால்கனிக்கு வந்து நின்று கொண்டான். இந்த மாதிரியான நேரங்களில் அவனுக்கு நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் இல்லாது போனால் ஆக்ரோஷம் கொஞ்சம் கூட குறையாது.
சில ஆழமான மூச்சுகளை எடுத்து தன்னை நிதானப் படுத்த முயன்றவனுக்கு அது முடியாமல் போகவே, ஆ என்று கத்தியபடி சுவற்றில் ஓங்கி குத்தினான். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் போகவே, அங்கிருந்த கண்ணாடிப் பொருட்களை தூக்கியடிக்க போக, அவனது கரம் அந்தரத்தில் தொங்கியது.
பொருட்களை போட்டு உடைத்தால் தன் பேபிக்கு பிடிக்காது என்பது அவனுக்கு அத்தனை ஆக்ரோஷத்திலும் சட்டென்று தோன்றவே, கையில் வைத்திருந்த கண்ணாடி ஜாடியை அப்படியே வைத்தவன், அப்போது தான் மனைவியை தேடினான்.
அறையில் எங்குமே அவளைக் காணவில்லை. குளியலறை தவிர அங்கே வேறு அறைகளும் இல்லை. வேகமாக பால்கனியை போய் பார்த்தவன் அப்படியே விக்கித்து போய் நின்று விட்டான்.
துவண்டு போன கொடி போல, கீழே விழுந்து கிடந்தவளைப் பார்க்கையில், ஒருவேளை தூங்கி விட்டாளோ என நினைத்த ஜேம்ஸ், உடனேயே அவளை மெல்ல எழுப்பினான். அவளோ மூச்சுப் பேச்சில்லாமல் அப்படியே கிடக்கவும், ஜேம்ஸுக்கு உள்ளே ஏதோ செய்தது.
மனைவியின் கன்னம் தட்டி
“பேபீ.. பேபீ.. என்னடி ஆச்சு.. எந்திரிடி..”
என்றவனுக்கு, அவள் அசையாமல் கிடக்கவும் மீண்டும் கோபமாகிப் போனது.
“இப்போ எந்திரிக்க போறியா இல்லையா..”
என்று கொண்டு பக்கத்தில் கிடந்த தண்ணீர் போத்தலை எடுத்து, அவளது முகத்தில் ஊற்ற, அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த கோதை, அவனது கன்னத்தில் விட்டாள் ஒரு அடி. அவனது ஆசை மனைவியின் இரண்டாவது அடி இது.
கன்னத்தை பொத்திக் கொண்டு
“ஏன்டி..”
எனக் கேட்டவனை, ஒரு நொடி பார்த்தவள் மறுநொடியே இறுக அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். சில நொடிகள் அழுதவள், அவனைத் தள்ளி விட்டு அவனிடம் இருந்து விலகி அமர்ந்து கொண்டாள்.
“என்னைய விட்டிட்டு இவ்வளவு நேரமும் எங்க போனனியள்.. எனக்கு இருட்டு எண்டால் பயங்கரம் ஒரே பயமா இருந்தது.. பக்கத்துல வேறை ஆரவோ சண்டை போடுறாங்கள்.. என்னைய பாத்துக் கொள்ளுறதை தவிர அப்புடி என்ன உங்களுக்கு வெட்டி பிடுங்குற வேலை..”
“தப்பு தான் சாரிடி பேபீ..”
“ஆ ஊவெண்டால் சாரி பூரி எண்டு கொண்டு வாங்கோ..”
“நீ தைரியமான பொண்ணு.. தனியா இருந்துக்குவேனு நினைச்சேன்டி..”
“உங்களை ஆரு அப்புடி எல்லாம் தப்பு தப்பா யோசிக்க சொன்னது..”
“சரி சரி என்மேல தப்பு தான் சாரி.. அழாத..”
“இப்பவும் சொல்லுறன்.. என்னைய அழ வைக்கிறதே நீங்கள்..”
என அவள் சொல்லி முடிப்பதற்குள், அவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டு
“இப்போ றொம்மியை கூப்பிடணுமா பேபி..”
என்ற ஜேம்ஸை பார்த்து முறைத்த கோதை, அவனை முறைக்க முடியாமல் வந்த வெட்கத்தில் அவனது நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
அவளது வெட்கத்தின் காரணம், இருவரது ரொமான்ஸுமே அந்த றொம்மியை வைத்து தான் ஓடிக் கொண்டிருந்தது. இவள் ஒதுங்கி நிற்க, அவன் றொம்மியை அழைக்க, இவள் அவனைக் கட்டிக் கொள்ள என இருவரையும் சேர்த்து வைத்த பெருமை றொம்மியையே சாரும்.
குறிஞ்சி மலர்.. 45
அந்தப் பெரிய அறையில், ஜேம்ஸ் போகின்ற பக்கமெல்லாம் தானும் போய்க் கொண்டேயிருந்தாள் கோதை.
“என்ன பேபீ.. எம் மேல அம்புட்டு காதலோ..”
“ஏனாம்..”
“நான் போற பக்கம் எல்லாம் வாரியே.. ஒருவேளை காதல் கூடி பாசத்துல வாரியோனு..”
“நினைப்பு தான்..”
“நினைப்புக்கு என்னடி குறைச்சல்..”
“வெட்டிக் கதையை விட்டிட்டு சீக்கிரமா குளிச்சிட்டு விடுங்கோ.. நானும் குளிக்கோணும்..”
“வாயேன் ரெண்டு பேரும் சேர்ந்தே குளிக்கலாம்..”
“என்னது..”
“இல்லடி.. நேரம் மிச்சமாகுமேனு தான் கேட்டேன்..”
“ஒண்டும் தேவையில்லை.. சீக்கிரமா போய் குளியுங்கோ.. அவையள் எல்லாரும் குளிச்சு முடிச்சிட்டு எங்களுக்காக வெயிட்டிங்..”
“அப்போ நீயும் போக வேண்டியது தானே..”
“குளிக்காமல் எப்புடி போக.. அதோட குளிச்சு முடிச்சாலும் போக ஏலாது போலயே..”
“ஏன் பேபீ..”
“ஏன் எண்டு உங்களுக்கு தெரியாது..”
என அவனைப் பார்த்து முறைத்து விட்டு, அறை வாசலைப் பாவமாகப் பார்த்தாள் கோதை.
ஜேம்ஸுக்கும் கோதைக்கும் கொடுக்கப் பட்டிருந்த அறை உள் பக்கமாக பூட்டியிருக்க, அறை வாசலோடு றொம்மி படுத்துக் கிடந்தது.
ஜேம்ஸுக்கு பக்கத்தில் கோதை நிற்கும் போது, நல்ல பிள்ளை போல பேசாமல் படுத்துக் கொள்ளும் றொம்மி, அவள் அவனை விட்டு ஒரு இஞ்ச் அப்படி இப்படி அசைந்தாலும் உடனே உறுமிக் கொண்டே பாய வந்து விடுமா. அதனால் கோதை கணவனையே பிடித்து தொங்கிக் கொண்டு அலைந்தாள்.
கள்வன் அதற்கென்றே தன் செல்ல நாய்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து வைத்திருந்தான்.
“என்ன பேபி.. இப்ப நான் குளிக்க போகவோ வேண்டாமோ..”
“இன்னும் போகலையோ நீங்கள்..”
“நீ விட்டாத் தானடி போக..”
என்றபடி ஜேம்ஸ் கோதையை பார்க்க, அசடு வழிந்து கொண்டே, அவனைப் பிடித்திருந்த கையை விட்டாள் கோதை.
ஜேம்ஸ் அவளைக் கடந்து குளியலறை வாசலுக்கு போகவும், சொல்லி வைத்தது போல றொம்மி உறுமவும் சரியாக இருந்தது. ஐயோவென்று கத்திக் கொண்டே மீண்டும் கணவனுக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டாள் கோதை.
“என்னங்கோ.. உதுக்கு இப்ப என்ன வேணுமாம்.. கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க சொல்ல மாட்டியளே..”
என்று கொண்டு தனக்கு பின்னால் நின்று நெளிந்த மனைவியை, முன் பக்கமாக இழுத்து அணைத்தபடி
“சரி நீ சொல்லுறதை நான் செய்றன்.. பதிலுக்கு நான் சொல்றதை நீ செய்வியா..”
என டீல் பேசினான் ஜேம்ஸ்பீட்டர்.
“செய்யிறன் செய்யிறன்..”
“பேச்சு மாற மாட்டியே..”
“மாற மாட்டன்..”
“சரி ஓகே.. என்னைய இப்ப இந்த நிமிஷத்துல இருந்து அத்தான்னு கூப்பிடணும்..”
“போங்கோ மாட்டன்..”
“அப்ப சரி நானும் மாட்டன்..”
“நீங்கள் என்ன மாட்டியள்..”
“றொம்மியை போகச் சொல்ல மாட்டன்..”
“அச்சச்சோ போகச் சொல்லுங்கோ..”
“அப்போ கூப்பிடுறியா..”
“அது மாட்டன்..”
“ஏன்டி..”
“எனக்கு..”
“உனக்கு..”
“ஒரே..”
“ஒரே..”
“வெக்கம் வெக்கமா வருகுது போங்கோ..”
என்று கொண்டு கணவனின் தோளில் முகத்தை மறைத்துக் கொண்டாள் கோதை.
உல்லாசமாகச் சிரித்தபடி அவளது கூந்தலை வருடி, முகத்தை மெல்ல நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன்
“என்ன பேபீ.. வெக்கப் படுறியோ.. அத்தான்னு தானேடி கூப்பிட சொன்னேன்..”
என குறும்பு மின்ன கேட்டான்.
“அது.. எனக்கு தானா வரணும்..”
“ஓ..”
“ம்ம்..”
“எப்போ வரும்..”
“தெரியல்லையே..”
“அப்போ நீ கூப்பிட மாட்டாய்.. அப்புடி தானே..”
“இப்ப கூப்பிட மாட்டன்..”
“சரி அப்ப நானும்..”
என தொடங்கியவனது நாடியைப் பிடித்து
“என்ரை செல்லக்குட்டியெல்லே.. அதை போகச் சொல்லுங்கோ.. நான் பிறகு கூப்பிடுவன் தானே..”
கிட்டத்தட்ட கெஞ்சியவளை இமைக்காமல் பார்த்திருந்தவன், அடுத்த நிமிடமே றொம்மியை ரகுமானுடன் அனுப்பி விட்டு, குளிக்க போய் விட்டான்.
அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தானும் வெளியே போவதற்கு ஆயத்தமானாள் கோதை.
இருவருள்ளும் ஒருவர் மீது ஒருவர் காதலும் நேசமும் இருந்தாலும், தன் காதலையும் நேசத்தையும் ஜேம்ஸ் அவளிடம் வார்த்தையில் சொல்லவில்லை என்றாலும் தன் செயலில் அதனை தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தான். கோதையால் தான் தன் காதலை சொல்லவும் முடியவில்லை. செயலிலும் காட்ட முடியவில்லை.
என்ன இருந்தாலும் ரூபாவை தானே திருமணம் செய்ய விருப்பப் பட்டார், இடையில் நடந்த பிசகால் மட்டுமே தன்னை திருமணம் செய்து, இப்போது இது தான் விதி என்பது போல அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் போல என்று தான் அவள் இப்போது வரை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
…………………………
சிட்னி துறைமுகத்தின் குறுக்காக, உருக்கினால் வடிவமைக்கப்பட்ட வளைவுப் பாலத்தில் நின்றிருந்தார்கள் ஜேம்ஸும் கோதையும். மற்றவர்களும் அதே பாலத்தில் புது தம்பதியினருக்கு தனிமை கொடுத்து விலகி நின்று அந்த நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பாலத்தில் நின்று பார்க்கும் போது, பென்னலோங் முனையில் அமைக்கப் பட்டிருந்த சிட்னி ஒப்பேரா மாளிகை அத்தனை அழகாகத் தெரிந்தது.
கன்னங்களில் கை வைத்து அதைப் பார்த்தபடி நின்ற மனைவியின் தோளில் கை போட்டு, அவளை தன் பக்கமாக அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ்.
“என்ன பேபீ.. அப்புடி பாக்கிறே..”
“ரொம்ப அழகா இருக்குங்கோ..”
“உன்னை விடவா..”
“என்ன உன்னை விடவா..”
“உன்னை விடவோ அழகா இருக்குனு கேட்டன்..”
“என்ன கிண்டலா..”
“இப்போ என்ன கிண்டல் பண்ணீட்டன்..”
“நான் என்ன அழகாவோ இருக்கிறன்..”
“இல்லையா பின்னே..”
“அப்புடி என்ன அழகை கண்டுட்டியள் நீங்கள்..”
“ஒன்றா ரெண்டா.. எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா..”
“ஓஹோ.. அப்புடியோ எங்க சொல்லுங்கோ..”
“ஒரு மனுஷனா சொல்லவா.. இல்லை உன் புருஷனா சொல்லவா..”
“மனுஷனாவே சொல்லுங்கோ..”
“நோ புருஷனா தான் பேபி சொல்ல முடியும்..”
“சரி எப்புடியோ சொல்லுங்கோ..”
“எனக்கு எப்பவுமே உன் கண்ணு தான்டி கொள்ளையழகு..”
“நிசமாவா..”
“நிமிஷத்துக்கு நிமிஷம் உன்னோட கண்ணுல வந்து போற அந்த இது இருக்கே..”
“எந்த எது..”
“அது உனக்கு சொன்னாப் புரியாதுடி..”
“உங்களுக்கு புரியற போல சொல்லத் தெரியேல்லை எண்டு சொல்லுங்கோ..”
“சரி அப்புடியே வைச்சுக்கோ..”
“என்ன அப்புடியே வைச்சுக்கிறது.. அது தான் உண்மை.. சரி வேறை சொல்லுங்கோ..”
“வேறை உன்னோட இந்த கூந்தல் ஒரு அழகுடி..”
“எது இந்த கூந்தலா..”
“யா பேபி..”
“சும்மா காமெடி செய்யாமல் அந்த பக்கம் போங்கோ..”
“இப்ப நான் என்ன காமெடி செய்தனாம்..”
“இந்த அரையடி முடியை போய் அழகெண்டு சொல்றீங்களே..”
“ஆறடியோ அரையடியோ அது அழகு தான்டி..”
“அப்புறம் வேறை சொல்லுங்கோ..”
“நிறைய சொல்லுவன்.. பிறகு நீ முட்டைக் கண்ணை போட்டு உருட்டுவாய்.. எதுக்கு எனக்கு வம்பு.. வா சுத்தி பார்ப்போம்..”
“ஓ..அப்போ உங்களுக்கு நான் எண்டால் பயம் அப்புடி தானே..”
“அப்புடியே வைச்சுக்கோ..”
“என்னால நம்பவே முடியேலையுங்கோ..”
“எதை..”
“உங்களை தான்..”
“ஏன்..”
“இல்லை.. உங்கடை வீட்டை நான் முதல் வரேக்குள்ள இருந்த உங்களுக்கும்.. இப்ப இருக்கிற உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்..”
“எவ்வளவு..”
“முன்ன எண்டால் உங்களுக்கு கிட்ட வரவே பயமாக் கிடக்கும்..”
“இப்போ..”
“அதெல்லாம் இல்லை..”
“ஓ..”
“என்ன ஓ..”
“ஒண்ணுல்லை.. அடுத்து எங்க உன்னை கூட்டிட்டு போலாம்னு யோசிக்கிறன்..”
“நான் சொல்லுற இடத்துக்கு கூட்டிக் கொண்டு போறியளோ..”
“ம்ம்.. எங்க..”
“மெல்போர்ன்ல ஏதவோ பூத் தோட்டம் இருக்காமே.. அங்க கூட்டிக் கொண்டு போறியளோ..”
“போயிட்டா போச்சு..”
என்றவனை சந்தோஷமாக கட்டிக் கொண்டாள் கோதை.
அவுஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் அத்தனை இடங்களையும் ஜேம்ஸ் தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் சுற்றிக் காட்ட, இதுவரை பார்த்து அறியாத அதிசய பிறவி ஜேம்ஸை அனைவருமே பார்த்தார்கள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருபது தினங்கள் இறக்கை கட்டிக் கொண்டு ஓடி மறைந்தது.
இருபது தினங்களுக்கு பிறகு, பெரியவர்களான நீலரூபியும் வியாகேசும் இணைந்து, நாள் நட்சத்திரம் பார்த்து ஜேம்ஸ் கோதை ஜோடியின் முதலிரவுக்கு நாள் குறிக்க, அதற்கான அறை அலங்காரங்கள் தடல்புடலாகியது.
“என்னம்மா இதெல்லாம்..”
“உங்களை இங்க போகச் சொன்னதே தேன் நிலவு கொண்டாட தான்.. நீ என்னடா எண்டால் எங்களையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்திட்டாய்..”
“உங்களோட இருக்கேக்குள்ள எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமோ நீலும்மா.. இதெல்லாம் நானும் அவரும் தனியா வந்தா கிடைக்குமோ சொல்லுங்கோ..”
“அதெல்லாம் சரி தான்.. இனியாச்சும் உங்கடை வாழ்க்கையை ஆரம்பிக்கிற வழியை பாருடி பிள்ளை..”
“என்னம்மா நான் இப்பவும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறன்..”
“அறைஞ்சன் எண்டால் கன்னம் பிய்யும்..”
“ஆத்தி ஏனம்மா இவ்வளவு கோபம்..”
“நான் சொல்லுறதை புரிஞ்சு கொண்டு.. புருஷனோட ஒழுங்கா குடும்பம் நடத்தி எனக்கு பேரப் பிள்ளையளை பெத்துக் குடுக்கிற வழியைப் பாரு..”
“ஓ..”
“என்ன ஓ..”
“போங்கோம்மா எனக்கு வெக்கம் வெக்கமா வருகுது..”
“அதுக்கு ஏன்டி.. என்ரை சீலையைப் பிய்க்கிறாய்..”
“ஓ இது உங்கடையோ.. நான் என்ரை எண்டு நினைச்சன்..”
“நல்லா நினைச்சாய்.. போ போய் இந்த சீலையை கட்டிக் கொண்டு வா.. உன்ரை புருஷன் தான் எடுத்தவன்..”
என்று கொண்டு கையில் வைத்திருந்த மஞ்சள் நிற புடவையை மகளிடம் கொடுத்து விட்டார் நீலரூபி.
அவர் கொடுத்து விட்ட புடவையை உடுத்திக் கொண்டு வந்த கோதையின், தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, அவளுக்கு திருஷ்டி சுத்தினார்.
“என்னம்மா என்னத்துக்கு இதெல்லாம்..”
“வந்த இடத்துல ரெண்டு பேரும் விதம் விதமா ஃபோட்டோ எடுத்து வைக்க வேண்டாமோ..”
“அது சரி.. என்ரை நிறத்துக்கும் இந்த சீலைக்கும் என்ன பொருத்தம் பாக்கவே சகிக்கேல்லை..”
“வாயில போடுவன் உனக்கு.. போ போய் வாய் காட்டாமல்.. நல்ல பிள்ளையா புருஷன் சொல்லுறதை கேட்டு ஒழுங்கா வாழுற வழியை பாரு..”
“ஏன் அவரு நாங்க சொல்லுறதை கேக்க மாட்டாராமோ..”
“உதை படுவாய்..”
என்று கொண்டு வந்த தாயின் கன்னத்தை கிள்ளி விட்டு, தங்கள் அறைக்குள் ஓடியவள், அறையின் அலங்காரத்திலும் பட்டு வேஷ்டியில் நின்ற கணவனது தோற்றத்திலும் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.
அவளைப் பார்த்ததும் அருகில் வந்தவன், அவளது கை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே ஒரு விதமான மோன நிலை குடியேறியது.
அறையின் பின்னணியில்
“மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத் தானே
பூவோடு தேனாட தேனோடு
நீயாடு..”
பாட்டு ஒலிக்க, கோதையோ அவனது முகம் பார்க்க முடியாமல் நெளிந்தாள்.
சில நொடிகள் மனைவியையே பார்த்திருந்தவன், சட்டென்று அந்த பாடலை நிறுத்தினான்.
“பேபி..”
“ம்ம்..”
“என்ன அமைதியா இருக்காய்..”
“அது.. அம்மா உங்க கிட்ட வாய் காட்ட கூடாது எண்டு சொன்னவா..”
“சரி.. நான் கேட்கிற பாட்டு பாடுறியோ..”
“ம்ம்.. என்ன பாட்டு..”
“அன்பே அன்பே நீ என் பிள்ளை..”
“சரி..”
எனச் சொன்ன கோதை, தன் கரத்தை பிடித்திருந்த அவனது கரத்தை பார்த்தபடி அந்த பாடலை தனது இனிய குரலில் பாடத் தொடங்கினாள்.
“அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
பூமியில் நாம் வாழும் காலம்
தோறும் உண்மையில் உன்
ஜீவன் என்னைச் சேரும்..
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை..
கண்ணா என் கூந்தலில்
சூடும் பொன் பூக்களும்
உன்னை உன்னை அழைக்க..
கண்ணே உன் கைவளை
மீட்டும் சங்கீதங்கள் என்னை
என்னை உரைக்க..
கண்களைத் திறந்து கொண்டு
நான் கனவுகள் காணுகிறேன்..
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்..
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்..
பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்..
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை..
யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க..
யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க..
உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி..
மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி..
உன் வாசத்தை சுவாசிக்கிறேன்
என் ஆயுள் நீளும்படி..
பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்..”
கோதை பாடி முடித்ததும், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஜேம்ஸ். அங்கே வேறு பேச்சுக்கு இடமின்றி போனது.
இத்தனை நாட்களில் ஜேம்ஸின் அதீத அக்கறை, அதீத அன்பு எல்லாம் கோதையை அவன் மீது பைத்தியம் கொள்ள வைக்கவே, புதிய சூழலும் கணவனின் அருகாமையும் அவளுக்கு கணவனோடு மனதாற தன் இல்லற வாழ்வை ஆரம்பிக்க ஏதுவாக அமைந்து போனது.
அதோடு ரூபா தான் வேறு ஒருவனை விரும்பி போய் விட்டாளே, இனி நீ உன் கணவனோடு வாழும் வழியை பார் என நீலரூபி கூட சொல்லி விட, அது தான் சரி என கோதையின் மனமும் அவளுக்கு சொன்னது.
ஜேம்ஸோடு நகர்ந்த ஒவ்வொரு நாளையும் தன் வாழ்வின் பொற்காலமாகவே கோதை தன் மனதில் பதித்து கொண்டாள்.
குறிஞ்சி மலர்.. 44
தன் கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, ஊரில் இருக்கும் அத்தனை தெய்வங்களின் பெயர்களையும் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தாள் கோதை.
கண்களில் சிறு சிரிப்போடு அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்து இரசித்தபடி, கண்டுங் காணாததும் போல அமர்ந்திருந்தான் ஜேம்ஸ்.
திருமண ஜோடிகள் இருவரும் தங்களின் தேன்நிலவை கொண்டாட அவுஸ்திரேலியாவுக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இது தான் கோதையின் முதல் விமான பயணம். பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க எவ்வளவு முயன்றும் அவளால் முடியவேயில்லை.
“ஊரிக்காட்டு காளியாத்தாளே.. தீருவில் ஒழுங்கை கண்ணகியம்மாளே.. செல்வச் சந்நிதியானே.. நல்லூர் முருகனே.. கதிர்காமக் கந்தனே.. வல்லிபுர ஆழ்வாரே.. பெரியதம்பிரானே.. வன்னிச்சியம்மா.. மாதானாச்சி.. கோணேச்சரத்தானே.. நாகபூசணியம்மாளே.. நெற்கொழு வைரவா.. உடுப்பிட்டி வீரபத்திரா.. என்னைய கூடவே இருந்து காப்பாத்தி விடுங்கோ..”
என கோதை புலம்பிப் புலம்பி வேண்டிக் கொள்ள, பின்னால் இருந்து அவளைச் சுரண்டி
“இவ்வளவும் தானோ இன்னும் ஏதாவது பேருகள் இருக்கோ..”
என சிறு சிரிப்போடு வியாகேசு கேட்க, பக்கத்தில் இருந்த வஞ்சி விழுந்து விழுந்து சிரிக்க, தன் வேண்டுதலை பாதியில் நிறுத்தி அவர்களை முறைத்தாள் கோதை.
தேன்நிலவுக்கு கணவன் மனைவி இருவரும் மட்டும் கிளம்பி போகவில்லை. கொசுறுகளாக வியாகேசு, வஞ்சி, நீலரூபி, தேவா, ரகுமான் என ஒரு படையே திரண்டு தான் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
தம்பதியினருக்கான தேன்நிலவு பற்றி யோசனை செய்து, அவர்களை எங்கே அனுப்பி வைக்கலாம் என்பது பற்றி பெரிய பட்டிமன்றமே நடத்தி, கடைசியில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற முடிவுக்கு வியாகேசும் வஞ்சியும் வந்திருந்தனர்.
அதிலும் வியாகேசு கனடா என்று சொல்ல, வஞ்சி அவுஸ்திரேலியா என்று சொல்ல, அநேகமான ஓட்டு அவுஸ்திரேலியாவுக்கே விழுந்திருந்தது.
வியாகேசை விடவும் ஒரு ஓட்டு அதிகமாக வஞ்சிக்கு விழுந்தது. மொத்தமாக ஓட்டு போட்டவர்கள் மூன்றே மூன்று நபர்கள் தான். வியாகேசு கனடா என்று சொல்லி தனக்கு தானே ஓட்டு போட, வஞ்சியும் அவுஸ்திரேலியா என்று சொல்லி தனக்கு தானே ஓட்டு போட, கடைசியில் நீலரூபி அவுஸ்திரேலியா என்று சொல்லி தன் ஓட்டை வஞ்சிக்கு போட, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வஞ்சியின் பக்கம் ஜெயித்து அவுஸ்திரேலியா தேன்நிலவுக்கு போகும் இடமாக மாறியது.
ஜேம்ஸ் தன் மனைவியுடனான தேன்நிலவுக்கான சகல ஆயத்தங்களையும் செய்ய, அவனது மனைவியோ தன் அம்மா நீலு, அப்பா வியாகேசு, அண்ணன் வஞ்சி, துணைக்கு பாதுகாவலர்கள் தேவா மற்றும் ரகுமான் வந்தால் தான் நான் வருவேன் என்று விட, மனைவியின் விருப்பமே தன் விருப்பம் என எப்போதோ மாறி விட்டிருந்த ஜேம்ஸும், உடனடியாகவே அதற்கு ஆமாம் என்று சொல்லி விட்டான்.
தாங்கள் எதற்கு என மறுத்துப் பேசியவர்கள் ஜேம்ஸின் ஒற்றைப் பார்வையில், மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு இதோ விமானத்தில் ஏறியமர்ந்து விட்டார்கள்.
எலிசபெத்தையும், செபமாலையையும் தாங்கள் பயணம் முடிந்து வரும் வரை, தன்னுடைய மருத்துவ நண்பனின் கீழ் இயங்கும் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்திருந்தான் ஜேம்ஸ். இல்லாது போனால் அவனின் மனைவி அவனை நிம்மதியாக இருக்க விடமாட்டாளே அதனால் தான் இந்த முன்னாயத்தம்.
கோதை விமானப் பயணத்திற்கு பயப் படுகிறாள் என்பதை புரிந்து கொண்ட வியாகேசு, ஊர்க் கதையெல்லாம் சொல்லி அவளைச் சிரிக்க வைத்துக் கொண்டே வந்தார்.
அவரது நகைச்சுவை பேச்சில் சுற்றுப் புறம் மறந்து, கோதை தானும் நகைச்சுவையாகப் பேசத் தொடங்க, ஜேம்ஸ் வழமை போல தன் மனைவியை இரசிக்க, நீலரூபி தன் மகளோடு சேர்ந்து சிரிக்க, அந்தப் பயணம் கலகலப்பாகிப் போனது.
எப்போதும் போல ரகுமான் உர்ரென்றே முகத்தை வைத்து கொண்டு வர, சந்தோஷமாக இருக்கவும் முடியாமல் முறைப்பாக இருக்கவும் முடியாமல் தேவா வழமை போல இருதலைக் கொள்ளி எறும்பாக வந்து கொண்டிருந்தான். அவர்களது முகத்தையும் பாவனையையும் பார்த்த வஞ்சிக்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனானப் பட்ட எங்களின் பாஸையே நிற்க வைத்து கேள்வி கேட்கும் என் தங்கை கோதைக்கு, நீங்கள் இருவரும் எம் மாத்திரம் என உள்ளூர எண்ணிக் கொண்டவன், அந்த பயணத்தை சந்தோஷமாக அனுபவிக்க தொடங்கினான்.
கோதைக்கு எல்லாமே புதிதாக இருந்தது. எல்லாவற்றையும் நின்று நிதானமாக இரசிக்கும் குணம் அவளுக்கு. அதனால் அவளது கவனம் முழுவதும் புதிதாக நுழைந்த நாட்டில் இருந்த இடங்களில் குவிய, மற்றவர்களுக்கு எப்படியோ ஒருவனுக்கு கடுப்பாகி போனது.
என் மனைவி என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்கிற சுயநலவாதி ஆகிப் போனான் ஜேம்ஸ். அதனால் அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, புது இடத்தை பார்த்த குஷியில் இருந்த கோதைக்கு அவனை நிமிர்ந்து பார்க்க கூட நேரங் கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய தலைநகரமான சிட்னியில் அவர்கள் காலையிலேயே வந்து சேர்ந்ததும், பெரிய விடுதி ஒன்றில் அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டதால் எல்லோரும் பயணக் களைப்பு தீர ஓய்வெடுக்க செல்ல, கோதை மட்டும் வெளியிலேயே நின்றிருந்தாள்.
“பேபி..”
“ம்ம்..”
“பேபீஈ..”
“ஆ..”
“எனக்கு தூக்கம் வருதுடி..”
“நித்திரை வந்தா போய்க் கொள்ளுங்கோவன்..”
“ப்ச்.. நீ வர்ரியா இல்லையா..”
“நீங்கள் நித்திரை கொள்ள நான் ஏனுங்கோ.. அங்க பாருங்கோவன் கடல் எவ்வளவு அழகா இருக்கு.. இந்தக் கடல் தானோ.. அப்புடியே நீண்டு திருகோணமலைப் பக்கமாவும் வருகுது.. என்னா நீலம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..”
“பேபீ.. அழகாத் தான்டி இருக்கு.. அதை அப்புறமா வந்து ரசிக்கலாம்.. இப்போ நீ வா..”
“எனக்கு இப்பவே ரசிக்கோணும்.. நான் வேணுமெண்டால் அப்பாவை உங்களோட வந்து தங்க சொல்லட்டுக்கோ..”
“ஒண்டும் வேண்டாம்.. நீ வர்ரியா இல்லையா இப்போ..”
“என்ன நீங்கள்..”
“இப்ப நீ உள்ள வரலை..”
“வரேல்லை எண்டால் என்ன செய்வியளாம்.. என்ன நாயை அவுத்து விடுவியளோ.. ஹா ஹா ஹா.. அந்த வேலையெல்லாம் இங்கினை ஆகாதப்பூ.. உங்கடை செல்லக்கட்டியள் அங்க சிறிலங்காவுல.. நாங்கள் நிக்கிறது ஆஸ்திரேலியாவுல.. சரி நாயைத் தான் காட்டி மிரட்ட ஏலாதெண்டுட்டு.. எதையாவது தூக்கி அடிக்கலாம் எண்டு யோசிச்சியளோ அதுவும் நடக்காது.. அங்க சுத்தி பாருங்கோ எல்லாம் சுவத்தோட பிற் செஞ்சு விட்டிருக்காங்கள்.. சுத்தியல் கொண்டாந்து தான் உடைக்கோணும்..
சோ உந்த மிரட்டுற வேலையை விட்டிட்டு.. போய் இழுத்து மூடிக் கொண்டு நித்திரை கொள்ளுற வேலையை பாருங்கோ..”
என்று கொண்டு அவனைப் பார்த்து பழிப்பு காட்டிய கோதை
“ஆ ஊவெண்டால் நாயை அவுத்து விட்ருவன் நரியை அவுத்து விட்ருவன் எண்டு வந்திடுவாரு சீமைத்துரை.. இங்கினை இவருந்தை பாஷா ஒண்டும் பலிக்காதில்லே..”
என்றபடி திரும்பவும், அவளுக்கு சொடக்கிட்டு தன் பக்கம் திரும்ப வைத்தான் ஜேம்ஸ்.
“இப்ப என்ன சொல்லப் போறியள்..”
என அவனின் பக்கம் திரும்பியவளை, இடுப்பில் கை வைத்து கொண்டு, அவளையே பார்த்திருந்தவனது தோரணையில் கோதைக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
“என்ன.. ஏன் இப்புடியே உறைஞ்சு போய் நிக்கிறியள்.. உங்கடை செல்லக்கட்டியளை ரொம்ப மிஸ் செய்றியளோ.. போங்கோ போய்ப் படுங்கோ..”
என்று கோதை சிறு சிரிப்போடு சொல்ல, உணர்ச்சி துடைத்த முகத்தோடு, அவளை நோக்கி நிதானமாக வந்தான் ஜேம்ஸ்பீட்டர்.
அவனது முக பாவனையிலும், அவனது நடையின் தோரணையிலும், தன்னை அறியாமலேயே ஓரடி பின்னால் போன கோதைக்கு, லேசாக உதறியது. என்ன தான் தெனாவெட்டு கதை கதைத்தாலும், அதெல்லாம் அவன் தள்ளி சற்றே தூரமாக நிற்கும் வரையில் தான். அவன் நெருங்கி வந்தாலோ அல்லது ஒரு பார்வை பார்த்தாலோ போதும் உடனே கோதைக்கு குளிர் காய்ச்சல் வந்தது போல கைகால் உதறத் தொடங்கி விடும். அந்தக் கதை தான் இப்போதும் நடந்து கொண்டிருந்தது.
“இந்தா பாருங்கோ.. என்னைய அடிக்க மாட்டன் எண்டு சொன்னியளே..”
என்று கொண்டு தன் இரண்டு கன்னங்களையும் இரண்டு கைகளால் கோதை மூட, அவளுக்கு மிக அருகில் வந்து, அவளது இரண்டு தோள்களிலும் தன் கரங்களை மாலை போல கோர்த்து தன் பக்கமாக இழுத்த கணவனை இமைக்க மறந்து கோதை பார்க்க, அவனது விழிகளும் அவளது விழிகளைத் தான் ஊடுருவியது.
“என்ன பேபி நீ.. என்னைய புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா..”
என்று கொண்டு ஜேம்ஸ் கண் சிமிட்டி கேட்க, அந்த நீல விழிகளுக்குள் கோதை தொபுக்கடீரென தலை குப்புற விழுந்து தொலைத்தாள்.
நீங்கள் நேர் கொண்டு பார்த்தாலே வார்த்தைக்கு பஞ்சமாகிப் போய் விடும் நேரத்தில், இந்த நெருக்கத்தில் மட்டும் எனக்கு பேச்சு வந்து விடுமோ என்பது போல நின்றிருந்தாள் கோதை.
கோதை பேச்சின்றி தன்னையே வெறித்தபடி நிற்க, குனிந்து அவளது காதோரம் கிடந்த முடிச் சுருளை ஊதி விட்டவன், அவளது காதுக்குள்
“பேபீ.. பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி..”
என அழுத்திச் சொன்னவனது ஸ்பரிசத்தில் கூசிச் சிலிர்த்தவள், வேகமாக அவனைத் தள்ளி விட்டு விலகி நின்றாள்.
“இந்தா.. இந்த தொட்டு தொட்டு கதைக்கிற வேலையெல்லாம் வைச்சுக் கொள்ளாதேங்கோ..”
“இதே வார்த்தையை அப்போ சொன்னே ஓகே.. பட் இப்பவும் இதே வார்த்தை தானா..”
“எப்பவுமே அதே வார்த்தை தான்.. நான் பேச்சு மாறுறவளில்லை..”
“சரிங்க மேடம்.. இப்போ ரூமுக்கு தூங்க வாறியளா இல்லையா..”
“வர முடியாது..”
“அப்போ சரி..”
“என்ன அப்போ சரி..”
“என்னோட பெட்ஸை கூப்பிட்ர வேண்டியது தான்..”
“கூப்பிடுங்கோ கூப்பிடுங்கோ.. நல்லா கத்தி சத்தம்மா கூப்பிடுங்கோ..”
“கூப்பிடத் தான்டி போறன்..”
என்று கொண்டு அவளையே பார்த்திருந்தவன், அவளுக்கு பின் பக்கமாக சொடக்கிட்டு
“றொம்மீ.. ச்சூ..”
என்க, அவன் அப்படி அழைத்ததும் பின்னால் இருந்து ஒரு பெரிய உறுமல் சத்தமே கேட்டது.
திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்த கோதைக்கு, பயத்தில் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.
அவளுக்கு பின்னால் றொம்மியை பிடித்தபடி ரகுமான் நின்றிருந்தான்.
றொம்மியும் அவளைப் பார்த்து தான் உறுமிக் கொண்டிருந்தது.
“ஆத்தி.. இதை எப்படா கூட்டிட்டு வந்தான்.. இது தெரியாமல் பெரிசா வாயைக் காட்டித் தொலைச்சிட்டனே.. அது வேறை என்னையவே முறைக்குதே.. உடம்பெல்லாம் நடுங்குதே..”
என கோதை முணுமுணுத்துக் கொண்டு ஓரடி பின்னால் எடுத்து வைக்க, கோதையின் பின்னால் நின்றிருந்த ஜேம்ஸைப் பார்த்த றொம்மி அவனை நோக்கி பாய எத்தனித்தது.
அவ்வளவு தான் கோதை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து ஜேம்ஸின் இடுப்பில் ஏறியிருந்து கொண்டு, அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அவளது அந்த செயலை ஜேம்ஸும் எதிர்பார்க்கவில்லை என்பது, திகைத்து நின்ற அவனது முகமே எடுத்து சொல்ல, சில நொடிகளில் அவனது திகைப்பு சுவாரஷ்யத்தை தத்தெடுத்துக் கொண்டது.
தன் நெஞ்சோடு முகத்தை மறைத்துக் கொண்டு
“முருகா முருகா..”
என முணுமுணுத்தபடி இருந்தவளையே சில கணங்கள் பார்த்தவன், ரகுமானை நோக்கி கண்ணசைக்க, வழமை போல இவனது கண்ணசைவில் பணிவிடை செய்யும் அவனும் நாயை அப்படியே விட்டு விலகிச் சென்று விட்டான்.
கோதையின் காதோரம் குனிந்து
“இப்போ தூங்க போலாமா பேபீ..”
என ஜேம்ஸ் கேட்க,
மண்டையை எல்லாப் பக்கமும் ஆட்டி வைத்தாள் ஜேம்ஸின் அன்புத் துணைவி.
குறிஞ்சி மலர்.. 43
ஜேம்ஸ், கோதை ஜோடியின் திருமண வரவேற்பிற்காக அழைக்கப் பட்டிருந்த அத்தனை பிரமுகர்களும், தொழில் ரீதியான நண்பர்களும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட்ட நிலையில், தில்லையம்பலம் திரிலோகநாயகி இருந்த திசையை திரும்பிப் பார்த்தார்.
சாப்பாடு அனைத்தையும் ஒரு பிடி பிடித்த பின்னர், இறுதியாக வெற்றிலையை மடித்து தாம்பூலத்தை வாய்க்குள் போட்டு அதக்கிக் கொண்டிருந்தார் திரிலோகநாயகி.
அவரையும் அவரது செய்கையையும் பார்க்க பார்க்க தில்லையம்பலத்திற்கு கடுப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும் அவர் ஏதாவது செய்வார் என்கின்ற நம்பிக்கையில் கொஞ்சமே கொஞ்சம் அமைதி காத்துக் கொண்டிருந்தார்.
அதேபோல திரிலோகநாயகியும் கழுவிய கையை தன் முந்தானை சேலையில் அழுந்த துடைத்தபடி மண்டபம் நோக்கி வேகமாக போனார்.
ஜேம்ஸின் அருகாமையில் புதுப் பொலிவோடு சிரித்த முகமாக நின்றிருந்த கோதையின் பார்வையில், அப்போதுதான் தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த திரிலோகநாயகி விழுந்தார்.
“இவாவை இப்ப ஆரு இங்க கூப்பிட்டது.. இவாந்தை குணந் தெரியும் எண்டுறதாலே நீலும்மா கண்டிப்பா கூப்பிட்டு இருக்க மாட்டா.. அப்ப ஆரு கூப்பிட்டிருப்பினம்.. அரிசி வாங்க பக்கத்துல இருக்கிற கடைக்கே போகப் பஞ்சிப் படுற மனுஷி.. அங்க யாழ்ப்பாணத்துல இருந்து இங்க திருகோணமலைக்கு வந்திருக்குது எண்டால் என்ன அர்த்தம்.. என்னுல அம்புட்டு பாசம் போல.. இப்ப இங்க வந்து என்ன ஏழரையைக் கூட்டப் போகுதோ தெரியேல்லையே..”
என கோதை தனக்குத் தானே முணுமுணுக்க, அவள் பக்கம் எப்போதும் ஒரு பார்வை வைத்திருக்கும் ஜேம்ஸ், அவளின் பார்வை போன திக்கில், மேடை நோக்கி வந்து கொண்டிருந்த பெண்மணியை தன் நீல விழிகளால் ஊடுருவினான்.
முதல் பார்வையிலேயே அவர் யாரென்று அவனுக்கு புரிந்து போய் விட்டது. நாய்களை துரத்த விட்டு, போதாக் குறைக்கு சூடு வைத்து என விதம் விதமான தண்டனைகளைக் கொடுத்தவனுக்கு அவரை அத்தனை சீக்கிரம் மறந்து போய் விடுமா. சரி இங்கே எதற்கு வருகிறார் என்பதை பார்க்கலாம் என்பது போல பொறுமையாக நின்றிருந்தான்.
அந்த பொறுமை கூட, அவனின் பேபிக்காக மட்டும் தான். அந்த பொறுமையை பொறுமை இழக்க செய்து பொட்டலம் கட்டி அனுப்புவதற்கு என்றே வந்த திரிலோகநாயகி, நேராக போய் கோதையின் முன்னால் நின்றார்.
வந்தவர் தான் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தப் போவதில்லை என்பது கோதைக்கு நன்றே தெரியும். இருந்தாலும் ஒரு வேளை தான் இத்தனை நாள் பக்கத்தில் இல்லாததில் தன் அருமை புரிந்து, தனக்கு வாழ்த்து சொல்ல தான் வந்திருக்கிறார் என்கின்ற நப்பாசையில் அவரது முகத்தை ஏறெடுத்து பார்த்தாள் கோதை.
திரிலோகநாயகியின் முகத்தில் மருந்துக்கு கூட பாசமோ நேசமோ இருக்கவேயில்லை. மாறாக தன் வீட்டில் பொங்கிப் போட்டு, தனக்கு அடிமை வேலை செய்ய வேண்டிய இவளுக்கு எப்படி இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கலாம் என்கின்ற பொறாமையும் எரிச்சலும் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது. அதற்கு ஏற்றார் போல அவரது வார்த்தைகளும் சாக்கடை போல நாற்றம் வீசிக் கொண்டு வந்து விழுந்தது.
“என்னடீ.. குடும்ப கௌரவத்தை குழி தோண்டி புதைக்கவெண்டே திரியிறியோ.. என்ரை பிள்ளையை உன்ரை கேடு கெட்ட ராசியால அநியாயமா சாகக் குடுத்திட்டு நான் பரிதவிச்சுக் கொண்டு கிடக்கிறன்.. நீ என்னடா எண்டால் கொஞ்சங் கூட வெக்கம் மானம் எதுகுமே இல்லாமல் இன்னொருத்தனோட உரசிக் கொண்டு நிக்கிறாய்.. அப்புடி என்னடி உனக்கு இருக்கப் படாத வருத்தம்.. எனக்கு தெரியும் நீ உப்புடி தான் கண்டமேனிக்கு ஆட்டம் போடுவாய் எண்டு..”
என கோதையை திரிலோகநாயகி கண்டமேனிக்கு வார்த்தைகளால் அபிஷேகம் செய்ய, தன் உணர்வுகளை அடக்க கோதை படாதபாடு பட்டுப் போனாள்.
கோதை தைரியமான பெண் என்றாலும் கூட, இத்தனை நேரம் இருந்த நிம்மதியும் சந்தோஷமும் திரிலோகநாயகியின் வரவாலும் பேச்சாலும் கொஞ்சம் அடிபட்டு போய் விட்டிருந்தது.
லேசாக கண்கள் கலங்குவது போல இருக்க, அது கண்ணீராய் கன்னம் தொடும் முதல் அதை உள்ளிழுத்து தன்னை சமன் செய்ய சரியாக திணறிப் போனாள் கோதை.
இதற்கெல்லாம் ஒரே காரணம், பக்கத்தில் கை முஷ்டி இறுக நின்றிருந்த அவளின் அசுரன்.
அவளின் அசுரனுக்கு அவள் அழுதால் பிடிக்காது, அவளை யாரேனும் ஒற்றை வார்த்தை தப்பாக பேசினால் பிடிக்காது.
ஆனால் இந்தம்மா அவனுக்கு பிடிக்காத விசயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்க, பதறிய நெஞ்சோடு ஓரக் கண்ணால் கணவனை நோட்டம் விட்டாள் கோதை. அவள் பயந்தது போலவே உடல் இறுக நின்றிருந்தவனது இடக் கரம் பக்கத்தில் கிடந்த பூச்சாடியை இறுகப் பிடித்திருந்தது.
கண்களை இறுக மூடி நின்றிருந்தவன் தன்னையும் தன் கோபத்தையும் கட்டுப் படுத்த பெரும் பாடு படுகிறான் என்பது கோதைக்கு புரிந்து விட்டது.
“ஆத்தீ.. ஒரு மனுஷனை நல்லா இருக்க விடுதுகளா இதுகள்.. இப்ப தான் கொஞ்ச நாளா அதை இதை உடைக்கிறது குறைஞ்சு போய் கிடக்கு.. அதுக்கும் உலை வைக்கவெண்டே வந்திட்டாவே.. இந்த மனுஷிக்கு வாயில வாஸ்து சரியில்லை.. இண்டைக்கு மண்டை பிளந்து கொண்டு தான் போகப் போறா.. இந்த மனுஷன் வேறை ரொம்ப நேரமா கண்ணை இறுக்க மூடிட்டு நிக்கிறாரே.. ஐயோ என்ன நடக்கப் போதோ..”
என தன்னுள் புலம்பிய கோதை, தன் வியாகேசப்பாவை கண்களால் தேடினாள்.
வியாகேசும், வஞ்சியும் அப்போதே திரிலோகநாயகியும் அவரது மகன்களும் மண்டபத்திற்குள் வரும் போது கவனித்து விட்டார்கள். இது சரி இல்லையே சந்தோசமாக இருக்கும் இடத்தை ஏதோ கலவர பூமியாக மாற்றத்தான் இவர்கள் வருகிறார்கள் என்பது அவர்களுக்கு தில்லையம்பலத்தின் நடவடிக்கையை பார்த்த உடனேயே புரிந்து விட்டிருந்தது.
அதனால் திரிலோகநாயகியின் ஒவ்வொரு செய்கையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருந்திருந்தார்கள். இப்போதும் அவர் மேடையில் ஏறி கோதையுடன் கண்டமேனிக்கு பேசவும், கீழே இருந்த அத்தனை விருந்தாளிகளையும் இரண்டு பக்கமாக பிரித்து உணவு உண்ணும் அடுத்த பெரிய அறைக்கு அவர்கள் அனுப்பி கொண்டிருந்தார்கள்.
மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த இனிமையான பாடல்களின் சத்தத்துக்குள் நாயகியின் பேச்சு அடங்கிப் போயிருக்க, மேடையில் ஏறி அவர் பேசியது அங்கிருந்த யாருக்குமே கேட்கவில்லை.
உணவு பரிமாறுவது எல்லாம் சரியாக இருக்கிறதா என கவனித்து விட்டு, மேடைக்கு வந்த நீலரூபி அப்போது தான் நாயகியையே பார்த்தார்.
“இந்தம்மா இங்கினை என்ன செய்யுது.. முகம் வேறை விடியாமக் கிடக்குது.. அச்சோ என்ரை பிள்ளையிட்டை அபசகுனமா என்னத்தை சொல்லி வைச்சாளோ..”
என பதறிக் கொண்டே மேடையில் ஏறிய நீலரூபி, நாயகியை பிடித்து ஒரு ஓரமாக இழுத்துக் கொண்டு போனார்.
“இந்தா நாயகியம்மா.. உன்னைய ஆரு இங்க வரச் சொன்னது.. அப்புடியே வந்தாலும் சாப்பிட்டு போக வேண்டியது தானே.. அதை விட்டிட்டு அவளோட என்னத்தை கதைச்சு அவளிந்தை மனசை கலைக்கிறியள்..”
“ஏய்.. அவ என்ரை மருமகடீ.. என்ரை மருமகளை எவனோ ஒருத்தன் கலியாணம் கட்டுவானாம் அதை நான் கைகட்டி பாக்கோணுமோ..”
“ஓ அவ உங்கடை மருமகளோ.. அந்த எண்ணம் இருக்கிறவங்கள் அவளை வீட்டுல வைச்சு அடிமை மாதிரி வேலை வாங்கியிருப்பியளோ..”
“அது அவளுந்தை கடமை..”
“எது உங்கடை மகன்மாரிந்தை பொஞ்சாதியளுக்கும் வடிச்சுக் கொட்டுறதோ..”
“அதெல்லாம் செய்ய தானே வேணும்.. அது போகட்டும் உவள் எப்புடி ரெண்டாங் கலியாணம் கட்டலாம்..”
“அவளுக்கு இஷ்டம் அவள் கட்டினாள்.. உங்களுக்கு இஷ்டம் எண்டால் நீங்களும் கட்டுங்கோவன் ஆர் வேண்டாம் எண்டது..”
“ஐயோ கடவுளே என்ன பேச்சு.. உப்புடி கேவலமா கதைக்கிறியே..”
“உங்கள் அளவுக்கு ஒண்டும் நான் கேவலமா கதைக்கேல்லையே..”
“நான் பொலிசில கம்ளைண்ட் குடுப்பன்..”
“என்னெண்டு பாயாசத்துல கச்சான் இல்லை எண்டோ..”
“ஏய்..”
“இந்த ஏய் ஓய் எண்டால் வாயை இழுத்து வைச்சு தைச்சிருவன்.. என்ரை பேர் நீலரூபி..”
“ஆட்டம் போடுறீங்கடி ஆத்தாளும் மகளும் சேர்ந்து..”
“எங்களுக்கு ஆடத் தெரியுது நாங்கள் ஆடுறம்.. நீங்கள் வயிறு எரிஞ்சது காணும் நடையைக் கட்டுங்கோ.. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கினை நிண்டியளோ.. வரவேற்புல கலவரம் செஞ்சு எங்கடை மகளை மன உளைச்சலுக்கு ஆளாக்க பாக்கினம் எண்டு பொலிசில கம்ளைண்ட் குடுத்திருவன்.. பிறகு கலியாண சோறு திண்ட வாயால களி தின்ன வேண்டி வரும்..”
என நீலரூபி மிரட்ட, நாயகி உண்மையில் பயந்து தான் போனார்.
அதற்குள் ஜேம்ஸின் பாடிகார்ட்ஸ் வேகமாக வந்து அவரையும் அவரது மகன்களையும் பிடித்து கொண்டு போய் வெளியே விட்டு மண்டப வாசலை மூடினார்கள்.
நாயகியின் இளைய மகன்
“அம்மாய்.. அந்த தொல்லையம்பலம் வேணும் எண்டே எங்களை அவமானப் படுத்த தான் இங்கினை கூப்பிட்டு இருக்கிறான்.. அது தெரயாமல் நாங்களும் வந்து நல்லா வாங்கி கட்டி இருக்கிறம்..”
என ஆதங்கப் பட
“ஓமடா.. அவன் அங்க ஊர்ப் பக்கம் வரட்டும் நாயை கழட்டி துரத்த விடுறன்..”
என புலம்பிக் கொண்டே நாயகி பேருந்து நிலையம் நோக்கி நடக்க, மகன்களும் அவரைத் தொடர்ந்தார்கள்.
உள்ளே ஜேம்ஸ் இறுகப் பிடித்த பிடியில் பூச்சாடி உடையாத குறையாக கிடக்க, அவனது கையில் கிடந்த சாடியை மெதுவாக பற்றி ஓரமாக வைத்த கோதை, அவனது கரத்தோடு தன் கரத்தை சேர்த்து இறுகப் பற்றிக் கொண்டாள்.
அவள் தன் கரம் தொட்டதும் தான் கண்களைத் திறந்து கொண்டான் ஜேம்ஸ். நொடியில் மாறும் அவனது விழிகளை அருகில் நின்று பார்த்தவளுக்கு அவளை அறியாமலேயே உள்ளூர லேசாக உதறல் எடுத்தது.
அவனோடு லேசாக ஒட்டி நின்று கொண்டு அவனது முகத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளை, என்னவென்பது போல குனிந்து பார்த்தான் ஜேம்ஸ்.
“கோபமா இருக்கியளோ.. எனக்கு உங்களை பாக்க பயமா கிடக்கு..”
என கோதை உள்ளே போய் விட்ட குரலில் சொல்லவும், கண்களை மூடித் திறந்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டு
“என்கிட்டே என்ன பேபி உனக்கு பயம்..”
என அவளை லேசாக அணைத்து, அவளது உச்சியில் நாடி பதித்து கேட்டவனது அணைப்பில் கொஞ்சம் நிம்மதியானாள் கோதை.
“அதில்லைங்கோ.. உங்கடை கண்ணு இருக்குதே.. அது நீங்கள் கோபமா இருக்கிற நேரம் வேறை கலருக்கு மாறுது.. அந்த நேரத்தில உங்களுக்கு பக்கத்துல வர பயமாக் கிடக்கு.. அது கூட பரவாயில்லை உங்களை பாக்கவே பயமாக் கிடக்கு..”
“அது இயல்பாவே அப்புடி தான்டீ.. கோபம் வந்தா அப்புடி ஆயிடுறன்.. அதுக்காக பக்கத்துலயே வரமாட்டியோ..”
“கோபத்துல என்னையும் அடிப்பீங்களோ..”
“லூசா பேபீ நீ..”
“சொல்லுங்கோ..”
“அடிக்க மாட்டன்டீ..”
“நிசமாவா..”
“இங்க பாரு பேபீ.. எவ்வளவு கோபத்துலயும் நான் நிதானமா நடந்துக்கிறது உங்கிட்ட மட்டும் தான்..”
“ஏன் அப்புடி..”
“ஏன் அப்புடி என்றது உனக்கு அதுவா தெரியணும்..”
“அப்போ என்னைய அடிக்க மாட்டீங்கள் அப்புடி தானே..”
“இப்ப உனக்கு என்னடீ பிரச்சினை..”
“உங்க கண்ணு தான்..”
“அதுக்கு நான் என்னடீ பண்றது..”
“எனக்காக ஒண்டு செய்யிறியளா..”
“சொல்லு..”
“எப்பவுமே கூலிங் கிளாஸ் போடுங்கோ.. அப்ப உங்கடை கண்ணு கலர் மாறுறது எனக்கு தெரியாது..”
“எல்லாம் என்ரை நேரம்..”
“என்னங்கோ..”
“நேரமாச்சு.. நாமளும் சாப்பிடுவமானு கேட்டன்..”
“ஆ ஓம் ஓம்.. பசிக்குது பசிக்குது.. வாங்கோ சாப்பிடுவம்..”
என பரபரத்த மனைவியின் கையை பிடித்துக் கொண்டு உணவு மேசை நோக்கி நடந்தான் ஜேம்ஸ்.
குறிஞ்சி மலர்..42
மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் ஸ்பரிசத்தில் உடல் இறுக நின்றிருந்தான் ஜேம்ஸ்.
அவனது முக பாவனையில் அவனது உள்ளத்தை படித்த கோதை, அவனது கன்னம் தொட, அவளது கரத்தை வேகமாக தட்டி விட்டான்.
“என்னங்கோ கோபமோ..”
“……………..”
“இப்ப என்ன.. என்னத்துக்கு இப்புடி முறுக்கிக் கொண்டு நிக்கிறியள்..”
“…………….”
“சரி தப்புதான் சாமி.. தெரியாம அழுதிட்டன் போதுமோ.. இனி அழேல்லை..”
“……………..”
“அது தான் அழேல்லை எண்டு சொல்லுறன் எல்லே..”
என்று சொன்னவளின் கன்னத்தையே ஜேம்ஸ் பார்த்திருக்க, மெல்ல கன்னத்தை தொட்டு பார்த்தவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது.
சட்டென்று முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள், அவனைப் பார்த்து சிரிக்க, அவனோ அவளை விலக்கி நிறுத்தி விட்டு குளியலறையினுள் புகுந்து கொண்டான்.
அவன் போனதும் மெத்தையில் தொப்பென்று விழுந்தவள், தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“அடக் கிறுக்குப் பயலே.. அழக் கூடக் கூடாதாடா.. இப்போல்லாம் கோபப் படுறவன் இல்லைத்தானே எண்டு நம்பி கதைச்சால் டக்கு டக்கெண்டு சேஞ்ச் ஆகிறானே.. எதையாவது எடுத்து மண்டையை உடைக்காம விட்டால் சரி தான்..”
என கோதை தன்னுள் புலம்பிக் கொண்டே இருக்க, அவளைத் தேடி நீலரூபி வந்து விட்டார்.
அதன் பிறகு கோதை தன் உடையை அணிந்து தயாராகும் வரை அவரே கூட இருந்தார். கோதையை அலங்காரம் செய்வதற்கு பியூட்டி பார்லரில் இருந்து ஒரு பெண் வந்திருந்தாள்.
கோதையின் நிறத்துக்கு ஏற்றது போல, அழகாக அவள் டச்சப் கொடுத்து, அவளது முடியை கொண்டை போட்டு, மெரூண் நிறத்துக்கு தோதாக வெள்ளி நகை அணிவித்து என அவளை அழகாக அலங்கரித்து விட, கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்த கோதைக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது.
மேக்கப் செய்கிறேன் பேர்வழி என்று அந்த பெண் அவளுக்கு அள்ளி அப்பி விடாமல் மிதமான ஒப்பனையே செய்து விட்டிருந்தாள்.
அந்த மெரூண் நிற ஃபிரொக்கில் மிதமான ஒப்பனையோடு வந்த மனைவியை ஜேம்ஸின் நீல விழிகள் இரசனையோடு தொடர்ந்தாலும், அவள் அழுத கடுப்பில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
அதன் பின்னர் ஜீவோதயம் பங்களாவின் முன் முகப்பு பக்கத்தில் ஜேம்ஸ் கோதை இருவரையும் இணையாக நிற்க வைத்து விதம் விதமாக ஃபோட்டோ எடுத்தார்கள். அப்போதும் உர்ரென்றே இருந்தவனது இடுப்பில் யாருக்கும் தெரியாமல் கிள்ளி விட்டாள் கோதை.
சட்டென்று துள்ளிக் குதித்தவன் பக்கத்தில் என்னவென்பது போல வியாகேசு ஓடி வர, ஜேம்ஸ் கோதையை முறைத்தான்.
“இப்புடியே முறைச்சியள் எண்டால்.. திரும்பவும் கிள்ளுவன்..”
என்று கொண்டு மீண்டும் அவனைக் கிள்ளப் போனவளது கையை ஜேம்ஸ் இறுகப் பிடிக்க, அருகில் வந்த வியாகேசுக்கு விசயம் விளங்கி விட அவர் சிறு சிரிப்போடு தள்ளி நின்று விட்டார்.
எல்லோருமே வரவேற்பு மண்டபத்துக்கு கிளம்பி விட, எல்லோருமே விழாவில் கலந்து கொள்ளும் அந்த சந்தோஷ மனநிலைக்குள் புகுந்து கொள்ள, கோதையும் கலகலப்பாகவே வலம் வந்தாள்.
எப்படி முயன்றும் தில்லையம்பலத்தால் கோதையின் அந்த சந்தோஷமான முகத்தை பார்க்கவே முடியவில்லை. தன் மகள் இருக்க வேண்டிய இடமல்லவா. போயும் போயும் இவளுக்கா இந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என மனம் வெந்து கொண்டிருந்தார் அவர்.
அவளது சந்தோஷத்தை எப்படியும் கலைத்தே ஆக வேண்டும் என்ற அவரது வக்கிரமான புத்தி வேகமாக வேலை செய்ய, அதன் விளைவாக திரிலோகநாயகியும் அவரது மகன்களும் அந்த வரவேற்பில் கலவரம் செய்யவென்றே கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள்.
இது எதுவும் தெரியாத கோதை அந்த பிரமாண்டமான மண்டபத்தையும், அதன் அலங்காரத்தையும் ஒன்பதாவது அதிசயத்தை பார்ப்பது போல பார்த்திருந்தாள்.
கோதையை பொறுத்தவரை இந்த மாதிரியான ஒரு பிரம்மாண்டமான மண்டபத்திற்கு, அவள் இதுவரை ஒரு திருமண வரவேற்பிற்கு கூட சென்றது கிடையாது. அப்படி இருக்கையில் இத்தனை அழகான பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் அவளுக்கே திருமண வரவேற்பு நடைபெறும் என்பது எத்தகையதொரு விஷயம்.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது சாதாரணமாக இருக்கலாம் ஆனால் கோதையை பொருத்தமட்டில் அதை அவளால் சாதாரணமாக கடக்க முடியவில்லை. அவளுடைய நினைவுகள் அவளிடம் அனுமதி கேளாமல் மெல்ல அவளுடைய முதல் கல்யாணத்தில் போய் அமர்ந்து கொண்டது. அவளுக்கு நடந்த அந்த திருமணம் போல ஒரு அடிமட்ட ஏழை மகளுக்கு கூட நடந்திருக்காது.
ஒரு அநாதை போல கோவிலில் வைத்து அவளுக்கு தாலி கட்டப்பட்டது. அதன் போது நீலரூபி மட்டும் ஒரு ஓரமாக வந்து நின்று யாருக்கும் தெரியாமல் அர்ச்சனை தூவிச் சென்று போக, தில்லையம்பலம் அவளது திருமணத்தை எட்டி கூட பார்க்கவில்லை. அந்த நேரத்தில் வெளியூரில் தனக்கு வேலை என்று பசப்பி விட்டு வீட்டிலேயே இருந்து விட்டார்.
இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட தலையெழுத்து என கோதை அதை சாதாரணமாகவே கடந்து விட்டாள். ஆனால் அவளுக்கும் உள்ளூர தன்னுடைய திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாமல் இருக்குமா.
சாதாரணமான விஷயங்கள் கூட அவளுக்கு கிட்டாத கனியாக போன அந்த மோசமான சூழலில் இருந்து, இப்பொழுதுதான் அவளுடைய வாழ்க்கையில் வசந்தம் மெல்ல மெல்ல வீச தொடங்கியிருந்தது.
ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து கடந்து செல்ல தொடங்கியிருந்தாள் கோதை.
மண்டபத்தையே தன்னுடைய முட்டை கண்ணால் முழித்து முழித்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் தோளில் உரிமையோடு கை போட்ட ஜேம்ஸ், மண்டபத்தின் மேடையை கையால் காட்டி அவளை அங்கே அழைத்து சென்றான்.
அதன் பிறகு வந்த அத்தனை தொழிலதிபர்கள், தொழில் நண்பர்கள் என அனைவரிடமும் தன் மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்த தில்லையம்பலத்திற்கு கண்ணால் ரத்தக்கண்ணீர் வழியாத குறையாகிவிட்டது.
அவர் அடிக்கொரு தடவை மண்டப வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அந்த லோக்கல்நாயகி எப்ப வந்து.. இங்கினை பிரச்சினை செஞ்சு.. அதை நான் எப்ப பாத்து ரசிக்கிறது.. அந்த பொம்பிளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. விழா நடக்க முதல் வாரன் எண்டு சொல்லிட்டு இன்னும் ஆளையே காணேல்லை.. குடும்பமா சேந்து எந்த ரெஸ்ட்ரோரண்ட்ல விழுங்கிக் கொண்டு இருக்குதுகளோ தெரியேல்லையே.. சோத்தை கண்டா காணும் அதுகளுக்கு.. ஆக்களை கையிலயே பிடிக்க ஏலாது.. அதுகள் வர முந்தி விழா தொடங்கீரும் போலயே..”
என தில்லையம்பலம் தனக்குத் தானே புலம்பிக் கொண்டு இருக்க, விழா தொடங்கிய பின்னரே அந்தப் புலம்பலுக்கு காரணமான திரிலோகநாயகி, தன் மகன்களோடு அங்கே ஆஜராகி இருந்தார்.
மேடையில் நின்றிருந்த மணமக்கள் இருவருக்கும் வந்த பிரமுகர்கள் கைகுலுக்கி பரிசளித்து செல்ல, தன் பக்கத்தில் நின்றிருந்த தன் கணவனை மெல்ல ஏறெடுத்து பார்த்தாள் கோதை.
இவனுக்கு நான் எந்த விதத்தில் பொருத்தம் என அவளால் நினையாமல் இருக்க முடியவில்லை. கோதை நிறம் எல்லாம் பார்ப்பவள் அல்ல என்றாலும், அவனது அந்த வெளிர் வெள்ளை நிறத்துக்கும் தனது சொக்லேட் நிறத்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.
அதிலும் அங்கு வருகை தந்திருந்த சில தொழிலதிபர்கள் அவளை திரும்பத் திரும்ப பார்த்ததில் அவள் சற்று சங்கடமானாள்.
அவளது சங்கடத்தை உணர்ந்தோ உணராமலோ அவளுக்கு ஆறுதல் சொல்லுவது போல, தன் கைவளைவிலேயே மனைவியை வைத்திருந்தான் ஜேம்ஸ்.
இந்த நேரத்தில் தான் திரிலோகநாயகியும் அவளது மகன்கள் இருவரும் மண்டபத்து வாசலில் வந்து இறங்கினார்கள்.
அவர்களைக் கண்ணால் கண்டவுடன் தான் தில்லையம்பலத்திற்கு உள்ளூர திருப்தியாக இருந்தது. கோதையை அவரது வீட்டுக்கு மணமுடித்து வைத்த போது கூட சிறிதளவும் மரியாதை கொடுக்காத தில்லையம்பலம், இப்போது திரிலோகநாயகியை வாசலில் பார்த்ததும் வாசல் வரை ஓடோடிச் சென்று வரவேற்றுக் கொண்டு வந்தார்.
திரிலோகநாயகிக்குமே என்னடா எப்பொழுதுமே தன்னை கண்டு கொள்ளாத, தனக்கு மரியாதை கொடுக்காத, இவ்வளவு ஏன் தன்னை ஒரு மனிசியாகவே மதிக்காத இந்த மனுஷன் இப்பொழுது மட்டும் எதற்காக விழுந்து விழுந்து கவனிக்கிறார் என்று தோன்றத் தான் செய்தது.
சரி ஏதோ பரவாயில்லை வந்த வரைக்கும் மூக்கு பிடிக்க உண்டு விட்டு, அந்த மானங்கெட்டவளை இங்கே இருந்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் விட வேண்டியது தான் அதனால் வந்த வேலையை கவனிப்போம் என பெரிய தோரணையோடு தில்லையம்பலத்துக்கு வணக்கம் வைத்தார்.
நாயகியின் வணக்கத்தை ஏற்று அதற்கு பதில் வணக்கம் வைக்கும் அளவுக்கு கூட தில்லையம்பலத்திற்கு பொறுமை இருக்கவில்லை.
“ஏய் உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா..”
“ஏன் ஐயா.. ஏன் இப்புடி எரிஞ்சு விழுறியள்.. இப்ப அப்படி என்ன நடந்து போச்சுது..”
“இதுக்கு மேல வேற என்ன நடக்கோணும் எண்டு கேக்கிறன்.. உன்ரை மருமகள் மேடையில ஏறுறதுக்கு முதல் நீ வந்து இதை குழப்பி விடுவாய் எண்டு நான் கனவு கண்டு கொண்டு நிற்க.. அவள் மேடையில ஏறி எல்லாரும் அவளுக்கு கை குலுக்கி பரிசு குடுத்து அரைவாசி நேரம் போன பிறகு இப்ப வந்து நிக்கிறாய்..”
“ஐயா.. உங்களுக்கு என்னைய பத்தி இன்னும் சரியா விளங்கேல்லை..”
“ஓம் ஓம் உன்னைய பத்தி சரியா விளங்கிக் கொள்ளாமல் கூப்பிட்டு தொலைச்சிட்டன்.. பேசாமல் நானே வேறை ஐடியா ஏதாச்சும் போட்டு இருக்கலாம்..”
“பொறுங்கோ ஐயா.. நான் சொல்ல வாரதை கொஞ்சம் கேளுங்கோ..”
“என்ன சொல்லி தொலை..”
“இப்ப ஆக்கள் வாரதுக்கு முதல்.. அந்த எடுபட்டவளை அவமானப் படுத்தி இழுத்துக் கொண்டு போறதால என்ன லாபம் சொல்லுங்கோ.. அவள் அவமானப் பட்டு கூனிக் குறுகி நிக்கிறதை இங்க வந்தவை பாக்க வேண்டாமோ.. அப்ப தானே நல்லா இருக்கும்..”
“ம்ம்.. நீ சொல்லுறதும் சரி தான்..”
“சரி தான் இல்லை.. சரி..”
“சரி.. இப்ப என்ன செய்ய போறாய்..”
“அட இருங்கோ ஐயா.. வந்து சேர வேண்டிய எல்லாரும் வந்து சேரட்டும்.. அதுவரை நான் சூஸ் ஏதாவது குடிச்சு எனக்கு கொஞ்சம் எனேர்ஜி ஏத்திக் கொள்ளுறன்..”
எனச் சொல்லிக் கொண்டே உணவு பரிமாறப் படும் இடத்திற்கு போன திரிலோகநாயகியை அவரது வாரிசுகளும் தொடர்ந்தனர்.
இவள் சொன்னது போல செய்து விடுவாளா அல்லது எதையாவது சொதப்பி வைத்து விடுவாளா என்பது போல தில்லையம்பலம் நிற்க, திரிலோகநாயகி அங்கே உள்ளே பூந்திலட்டு, மஞ்சள் பணியாரம், கச்சான் அல்வா, தொதல், சொக்லேட் கேக், தட்டைவடை, பால்கோவா, பால் பாயாசம் என வகை வகையாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.
சாப்பாடு தான் முதல் மற்றது எல்லாம் அதற்கு பிறகு தான் என்கின்ற ரகம் திரிலோகநாயகி. அதனால் அவர் தன் வேலையை குறைவின்றி செய்து கொண்டிருந்தார்.
குறிஞ்சி மலர்.. 41
ஜேம்ஸ் தன் நாய்களை அவிழ்த்து விடுவேன் என்று சொன்னதும், எப்படித் தான் அழுகையை நிறுத்தினாளோ தெரியவில்லை. சட்டென்று கோதையின் அழுகை நின்று போனது.
“குட் பேபீ..”
“என்ன மிரட்டுறியளோ..”
“இல்லையே பேபீ..”
“அப்போ இதுக்கு என்ன பேரு..”
“எதுக்கு..”
என சாதாரணமாகக் கேட்டவனின் தொனியில் கடுப்பாகி
“ஆ..”
எனக் கண்களை மூடிக் கத்திய கோதை, வேகமாக உள்ளே போக திரும்ப, மீண்டும் மனைவியைத் தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ்.
“என்ன நீங்கள்..”
“என்ன நான்..”
“இப்புடி பொசுக்கு பொசுக்கெண்டு தூக்கினால் நான் என்ன செய்ய.. கொஞ்ச நேரமாவது கோபமா இருக்க விடுறியளோ.. முதல்ல கீழ இறக்கி விடுங்கோ..”
“அது என்னோட டிபார்ட்மெண்ட்..”
“எது..”
“கோபம்..”
“ஓஹோ..”
“என்ன ஓஹோ..”
“இனிமேல் வெளியே போகும் போது சொல்லீட்டு போவியள் தானே..”
“இல்லை..”
“என்னது..”
“இல்லைடி.. உன்னையும் கூட்டிட்டு போவன்னு சொல்ல வந்தன்..”
“நம்பலாமோ..”
“அப்போ நீ இன்னும் என்னைய நம்பலையோ..”
“நம்புறன் தான்.. அப்புறம் இன்னொரு விசியம்..”
“என்ன..”
“சும்மா சும்மா.. நாயை அவுத்து விடுறேனு இனி பயங் காட்டக் கூடாது..”
“ம்ம்.. அது நீ நடந்துக்கிற விதத்தை பொறுத்து..”
“என்ன நீங்கள்..”
என தொடங்கியவளின், நெற்றியோடு தன் நெற்றியை முட்டி
“பேபீ.. கண்டிப்பா இப்போ சண்டை போட்டு தான் ஆகணுமா.. தூக்கம் வருதுடி..”
என சொன்ன கணவனை இமைக்காமல் பார்த்த கோதை
“சாரிப்பா.. இனி சண்டை போட மாட்டன்.. வாங்க தூங்கலாம்..”
என்று சொல்ல, மனைவியை கையில் ஏந்தியபடி தன் வீட்டினுள் நுழைந்தான் ஜேம்ஸ்.
நல்லவேளை நடு இரவு தாண்டி விட்டிருந்ததால், வரவேற்பு கூடத்தில் யாரும் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவளுக்கு தான் சங்கடமாகிப் போயிருக்கும்.
மாடிப் படிகளில் ஏறி, ஜேம்ஸ் தன்னறை நோக்கி நடக்கவும், மீண்டும் அவனோடு சண்டை போடப் போனாள் கோதை.
“இனியாச்சும் என்னைய இறக்கி விடுங்கோவன்..”
“ஏன்..”
“நான் என்ரை அறைக்கு போக..”
“உன்ரை அறையோ..”
“ஓம்..”
“அங்க போய் என்னடீ பண்ண போறாய்..”
“என்னவோ செய்யிறன் உங்களுக்கு என்ன இப்ப..”
“பேபீ.. திரும்ப ஆரம்பிக்காதடி..”
“நான் என்ன ஆரம்பிச்சன்..”
“இப்ப இந்த அறைக்குள்ள தூங்குறதுக்கு உனக்கு என்ன பிரச்சினை..”
“பிரச்சினை இல்லை ஆனா..”
“பிளீஸ் பேபீ.. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..”
என்று கொண்டு தன் அறையினுள் நுழைந்தவன், தனது பெரிய படுக்கையில் அவளை அமர வைத்து விட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டு விட்டான்.
மெத்தையில் அமர்ந்து கொண்டு அவனது அறையை நோட்டம் விட்டவள், பேசாமல் கீழே படுத்து தூங்கலாமோ என யோசனை செய்தாள்.
“இல்லை வேண்டாம்.. பிறகு அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவாரு.. தூக்கம் வேறை வருது.. பேசாமல் கண்ணை மூடிட்டு படுத்திற வேண்டியது தான்..”
என தனக்கு தானே சொல்லிக் கொண்ட கோதை, அந்த பெரிய கட்டிலின் ஓரமாக திரும்பி படுத்துக் கொண்டாள்.
குளித்து முடித்து விட்டு உள்ளே வந்த ஜேம்ஸுக்கு, கட்டிலின் ஓரமாக கீழே விழுந்து விடுவது போல படுத்துக் கிடந்தவளை பார்க்க, லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. முடிந்தவரை அந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, மெத்தையில் படுத்துக் கொண்டவன், அடுத்த நொடியே அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அவனது திடீர் செயலில் முதலில் பதறித் திமிறியவள், சில நொடிகளில் அவனது நெஞ்சோடு தன் முகத்தை பதித்து கண்களை இறுக மூடி விட்டாள்.
கோதைக்கு ஜேம்ஸ் போன்ற கணவனும், அவனுடனான இந்த வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக கிடைத்த பொக்கிஷம். அவன் தன்னை தான் உயிராக நேசிக்கிறான் என்பது தெரியாமலேயே, அவனை தன் கணவனாக அவள் நேசிக்க தொடங்கி விட்டிருந்தாள்.
மனதில் வரித்துக் கொண்டவனின் தொடுகை அவளுக்குள் இருந்த சங்கடங்களையும், சஞ்சலங்களையும், தயக்கங்களையும் மெல்ல மெல்ல தூரமாக்கி விடுவதால், அவளின் மனதினுள் அவன் இன்னும் இன்னும் நெருக்கமாகிப் போனான்.
தன் கணவன் தானே என்கிற உரிமையில், கோதை அவன் நெஞ்சில் சுகமாக துயில, இவள் எனக்கு மட்டும் சொந்தமான தேவதை என்ற எண்ணத்தில் நெடுநாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ஜேம்ஸ்.
அதிகாலையில் எல்லோருக்கும் முன்பாக விழித்துக் கொண்ட வியாகேசும், வஞ்சியும் அந்த பங்களாவையே ஒருவழி செய்து கொண்டிருந்தார்கள்.
காலை ஐந்து மணிக்கே, கோதைக்கு பிடித்தமான ‘பிள்ளையாரு சுழி போட்டு நல்லதெல்லாம் தொடங்கு.. வெள்ளவத்தை ஐங்கரனை வேண்டி வந்து வணங்கு..’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்க, அந்தப் பாடலை இரசித்துக் கொண்டே கோதை புரண்டு படுக்க, அந்த சத்தத்தில் எழுந்து உட்கார்ந்த ஜேம்ஸுக்கு முகமே சரியில்லை.
தூக்க கலக்கத்தில் கண்களை தேய்த்தபடி, உர்ரென்ற முகத்தோடு அமர்ந்திருந்த கணவனின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள் கோதை.
“என்னங்கோ.. என்ன நடந்த.. உடம்புக்கு ஏதும் சரியில்லையோ..”
“இல்லைடி..”
“ஏன் ஏன் என்ன சரியில்லை..”
“அது இல்லைடீ..”
“அப்ப வேறை என்ன..”
“காலங் காத்தால யாருடி இப்புடி சவுண்டு வைச்சது.. கடுப்பா இருக்கு..”
“கடுப்பா இருக்குதா.. அப்போ இடுப்பை கிள்ளிட வேண்டியது தான்..”
“ஏய் என்னடீ நீ..”
“நீங்கள் தானே சொன்னியள்.. கடுப்பா இருந்தா இடுப்பை கிள்ளினா சரியாயிடும் எண்டு..”
“ஓ ஹோட்..”
“காலையில இந்த மாதிரி பாட்டு கேக்கிறது ரொம்ப நல்லதுங்கோ..”
“யாருக்கு..”
“எல்லாருக்கும் தான்.. மனசு லேசாயிடும் தெரியுமா.. நீங்கள் என்னடா எண்டு பாத்தால் கடுப்பா இருக்கு எண்டு சொல்லுறியள்..”
“உண்மையை தானேடி சொல்லுறன்..”
“சரி கண்ணை மூடுங்கோ..”
“எதுக்குடி..”
“அட மூடுங்கோ..”
என ஜேம்ஸின் கண்களை தன் கரங் கொண்டு மூடிய கோதை, அவனுக்கு அருகில் அமர்ந்து அவன் கரங்களை மென்மையாக பற்றி
“எதைப் பத்தியுமே யோசிக்காமல்.. அந்த பாட்டை மட்டும் கேளுங்கோ.. அந்த இசையை மட்டும் ரசியுங்கோ..”
என்று அவனது காதுக்குள் மெல்ல சொன்னாள்.
மனைவியின் அருகாமையும் அந்த இசையின் இனிமையும், ஜேம்ஸின் எரிச்சலை விரட்டி அங்கே புத்துணர்வை குடியமர்த்தியது.
இருவருமே கண்களை மூடி அந்த பாடலை கேட்க, அந்த பாடலை தொடர்ந்து மெல்லிய அழகான காதல் பாடல்களும் அவர்களது செவி தீண்டிச் செல்ல, இருவருமே நான்கு பாடல்களுக்கும் மேலாக அப்படியே இருந்து இரசித்துக் கொண்டிருக்க அவர்களின் அறைக் கதவு தட்டப் பட்டது.
வேகமாக எழப் போன கோதையின் கையை பிடித்து
“பேபீ.. எல்லா சோங்ஸுமே சூப்பர்டி.. கொஞ்சம் இரேன் கேப்போம்..”
என ஜேம்ஸ் இரசனையோடு சொல்ல
“அதெல்லாம் கேட்டுக்கலாம்.. இருங்கோ ஆரவோ கூப்பிடுகினம்..”
என்று கொண்டு போய் விட்டாள் கோதை.
கேட்ட பாட்டில் ஒன்றை கம்மிங் செய்தபடி சென்ற மனைவியை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவேயில்லை.
தனது வாழ்விலும் இது போன்ற அழகான விஷயங்கள் அரங்கேறும் என ஜேம்ஸ் கனவிலும் நினைத்ததில்லை. இறுக்கமாகவும் ஆக்ரோஷத்தோடும் வலம் வரும் அவனை தன் பேச்சாலும் செயலாலும் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் அவனின் கோதை.
அங்கே அறை வாசலில் வியாகேசு தான் நின்றிருந்தார். கையில் பெட்டியொன்றை வைத்துக் கொண்டு கோதையைப் பார்த்து புன்னகைத்தவர்,
அந்த பெட்டியை அவளிடம் நீட்டினார்.
“என்னப்பா இது..”
“வரவேற்புக்கு போட வேண்டிய உடுப்பு பிள்ளை..”
“என்ன வரவேற்பு..என்ன உடுப்பு..”
“சரியா போச்சு போ.. இண்டைக்கு உனக்கும் உன்ரை புருஷனுக்கும் திருமண வரவேற்பு.. அதை மறந்திட்டியே..”
“ஓம் ஓம்.. டக்கெண்டு ஒண்டுமே மனசுக்குள்ள வரேல்லையப்பா..”
“அது எப்புடி வரும்.. அது தான் அவன் வந்திட்டானே..”
“என்னப்பா.. ஆர் வந்த..”
“இல்லை பிள்ளை.. இதை நீயே திறந்து பாரு..”
“உடுப்பு அளவா இருக்குமோப்பா..”
“அதெல்லாம் சரியா தான் இருக்கும்.. உன்ரை புருஷன் தான் உனக்காண்டி உதை தைக்க சொன்னவன்.. நான் காவல் இருந்து வாங்கியாறன்.. போட்டு பாத்திட்டு சொல்லு..”
“ம்ம்.. நன்றியப்பா..”
“ஏன் பிள்ளை..”
“எனக்காண்டி எவ்வளவு மினக்கெடுறியள்..”
“இதெல்லாம் ஒரு வேலையே இல்லை பிள்ளை.. நீ சந்தோஷமா இருந்தால் போதும்.. அதுக்காண்டி நான் எவ்வளவு வேலையும் செய்வன்..”
“தெரியுமப்பா..”
“சரி போங்கோ போய் வெளுக்கிடுங்கோ.. பீட்டரிந்தை உடுப்பும் இதுக்குள்ள தான் கிடக்கு..”
“இப்பவே வெளுக்கிடவோ.. நேரம் ஆறரை தானே ஆகுது.. வரவேற்பு பத்துக்கு தானேப்பா..”
“ஓம் பிள்ளை வரவேற்பு பத்துக்கு தான்.. ஆனால் உங்களை ஃபோட்டோ சூட் செய்யோணுமாம்.. நீங்கள் ஜோடியா படம் ஒண்டும் பெரிசா எடுக்கேல்லை தானே..”
“ஓ..”
“என்ன ஓ எண்டு கொண்டு அப்புடியே நிக்கிறாய்.. போ போய் வெளுக்கிடு..”
“போறனப்பா.. ஒண்டு சொல்லட்டே.. ஓவர் நைட்ல ஒபாமா ஆன கணக்கா இருக்கு என்ரை நிலமை..”
“ஹா ஹா.. அப்போ பீட்டர் தான் அமெரிக்காவோ..”
என்று சிரித்துக் கொண்டே வியாகேசு போய் விட, தானும் சிரித்துக் கொண்டே உள்ளே வந்த கோதை
மெத்தையில் பெட்டியை வைத்து விட்டு நாடியில் கை வைத்தபடி அமர, தானும் நாடியில் கை வைத்தபடி அவளைப் பார்த்தான் ஜேம்ஸ்.
சில நொடிகள் அப்படியே அமர்ந்து இருந்த கோதை, அந்த பெட்டியை திறக்க மெரூண் நிற ரோஜாக்களை கொட்டி செய்தது போல அவளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது அந்த ஃபிரொக்.
இமை கொட்டாமல் அந்த ஃபிரொக்கையே பார்த்திருந்த கோதை, அதை மெல்ல வருடிக் கொடுத்தாள்.
ஃபிரொக்கின் கீழே முழுவதும் குட்டி குட்டி ரோஜாக்கள் ஒட்டப் பட்டிருக்க, இடுப்புக்கு மேலே மெரூண் முத்துக்கள் வைத்து தைக்கப்பட்டு இருந்தன.
அதை மெல்ல எடுக்க முயலும் போது தான், அந்த உடையின் கனமே அவளுக்கு புரிந்தது. அந்த உடையின் கீழே ஜேம்ஸுக்கான மெல்லிய சாம்பல் வண்ண கோட் சூட் கிடந்தது. அதையெடுத்து அவனிடம் நீட்டியவள், அங்கிருந்து போக எத்தனிக்க, அவளது கையைப் பிடித்துக் கொண்டான் ஜேம்ஸ்.
“எங்க போறாய்..”
“…………”
“பேபீ.. உங்கிட்ட தான் கேக்கிறன்..”
“…………”
“ஏய் என்னடி ஆச்சு..”
என தலைகுனிந்து நின்றிருந்தவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தவனுக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.
கோதையின் கண்கள் கலங்கிப் போயிருந்தது. அவளுக்கு அந்த உடையைப் பார்த்த உடனேயே வெடித்து அழ வேண்டும் போல ஒரு வேகம் வந்து விட்டது. இந்த மாதிரி உடைக்காக அவள் ஒரு நாளும் ஆசைப் பட்டது இல்லை என்றாலும் கூட, அவளுக்காக இந்த மாதிரியான உடைகளை எவர் வாங்கிக் கொடுக்க முன் வருவார்கள். தன் வாழ்வில் திடீர் திடீரென அழகான விஷயங்கள் அரங்கேற பாவம் அவள் திணறித் தான் போனாள்.
இவனுக்கு முன்னால் அப்படி அழ முடியாதே. உடனே நாயை அவிழ்த்து விடுவேன் நரியை அவிழ்த்து விடுவேன் என அவளை ஒருவழி செய்து விடுவான். அதனால் தான் தனக்கென கொடுக்கப் பட்ட அறைக்குப் போய் ஒரு மூச்சு அழுது விட்டு வரலாம் என அவள் அங்கிருந்து போகப் பார்க்க, அவளது அசைவுகள் அவனது கழுகுப் பார்வைக்கு தப்புமா என்ன?
அது தான் உடனே அவளை இடைமறித்து விட்டான்.
ஜேம்ஸை பொறுத்தவரை அவனது தேவதை அழக் கூடாது. அவளை அழ வைப்பது யாராக இருந்தாலும் அவர்களை தூக்கி பந்தாடாமல் விட மாட்டான். ஆனால் தன் தேவதை அழுவதற்கான காரணமே தான் மட்டும் தான் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.
வழமை போல அவளின் கன்னம் தொட்ட கண்ணீரில் முகம் இறுகி நின்றவனை சமாதானம் செய்ய தெரியாமல் விழித்தவள், அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.
என் காதல் முகவரி நீயே
written by Competition writers
இது ஒரு மென்மையான காதல் கதை
நாயகன் : சூர்யாதேவ்
நாயகி : ஒளிர்மதி
இவர்களுக்கிடையேயான ஊடலும் காதலும் தான் கதை.. இனி டீஸர்
“சீனியர் ஐ யம் சாரி” என்றவளை..
கோபமாக பார்த்தவன், “இதையே நான் பண்ணிட்டு சாரி கேட்டா நீ அக்சப்ட் பண்ணுவியா.. படிக்கதான வந்த குடிச்சிட்டு கூத்தடிக்கிற ஒருவேளை என்னோட இடத்தில வேற யாராவது இருந்தா உன்னோட நிலைமை என்ன..?” என்றவனிடம்..
“நான் உங்களை லவ் பண்றேன் சீனியர்” என்று வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு குரல் நடுங்க கூறினாள் ஒளிர்மதி..
“ஓ” என்ற நக்கல் பார்வையோடு.. “நேற்று என்னை மயக்கதான் முத்தம் கொடுத்தியா பணக்காரன கல்யாணம் பண்ணினா வாழ்க்கைல செட்டிலாகிடலாம்னு நினைச்சுதான் என்ன லவ் பண்றேன்னு சொல்றியா.. இந்த பணத்துக்காகதான என்னை லவ் பண்றேண்ணு” சொல்ற என்றவன், தன் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து அதனை அவள் முகத்தில் விட்டெறிந்தவாறே “இது நேற்று எனக்கு தந்த முத்ததிற்கு” என்று அவளின் கண்ணீரையும் கண்டுகொள்ளாது அங்கிருந்து சென்றவனின் வார்த்தைகளின் வீரியத்தை தாங்க இயலாது மயங்கி சரிந்தாள்..