2.3K
விடியல் – 18
கொய்யாப் பழத்தைக் கையில் வைத்து கொறித்துக் கொண்டிருந்த நந்தினியை கவலையோடு பார்த்தார் நிர்மலா.
அவருடைய மனமோ நந்தினியை நினைத்து பதறிக் கொண்டிருந்தது.
பின்னே திருமணம் முடித்துக் கொடுத்த சில நாட்களிலேயே கணவனுடன் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்தால் எந்தத் தாய்தான் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்..?
தன்னுடைய பெண்ணின் வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என அந்தத் தாயின் உள்ளம் தவித்தது.
நிர்மலாவின் மனநிலைக்கு எதிராக இருந்தார் ராமகிருஷ்ணன்.
அவரைப் பொறுத்தவரை மகளின் மகிழ்ச்சி மட்டுமே பிரதானம்.
அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் சிறிதும் யோசிக்காமல் இந்த வாழ்க்கையிலிருந்து முழுதாக அவளை அழைத்து வந்துவிடும் மனநிலையே அவருக்கு.
ராமகிருஷ்ணனைப் பற்றி தெரிந்ததாலேயே நிர்மலாவின் மனதின் அச்சம் இன்னும் அதிகரித்தது.
சிறிய பிரச்சனையை பெரிதாக எண்ணி கோபித்துக் கொண்டு வந்த மகளுக்கு புத்தி சொல்லி மீண்டும் அவளுடைய வீட்டிற்கு அவளை அனுப்பி வைக்காமல் மகளுடன் சேர்ந்து மருமகனைத் திட்டிக் கொண்டிருந்தால் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்..?
தன் மகளிடமாவது பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையோடு அவளை நெருங்கினார் நிர்மலா.
“நந்து..”
“என்னம்மா..” என்றவள் கொய்யாப் பழத்தைக் கடித்து விட்டு தன்னுடைய அன்னையின் முகத்தை என்னவென்பது போலப் பார்க்க, அவளை நெருங்கி அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் அவர்.
“நீ இங்க வந்து முழுசா ஒரு நாள் முடிஞ்சிடுச்சு..”
“என்னம்மா.. என்னை துரத்தி விட பாக்கறீங்களா..”
“புரியாம பேசாதடி.. வாழ்க்கைல சின்னச் சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாமே..”
“அம்மா.. எனக்கு அவரை சுத்தமா பிடிக்கல.. கல்யாணத்தன்னைக்கே அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்.. ஆனா இப்போ வரைக்கும் அவர் பண்ணது சரிதான்னு நினைச்சுக்கிட்டு இருக்காரு.. அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு திரும்பி வந்தவரு என்கிட்ட எதுக்கு போனேன்னு காரணத்தைக் கூட சொல்லல..”
“அடியே.. மா�ப்பிள்ளையோட வேலை அந்த மாதிரிடி..”
“எனக்கும் புரியுது.. அன்னைக்கு அவர் போனதாலதான் சைக்கோகிட்ட மாட்டிருந்த பசங்களைக் காப்பாத்த முடிஞ்சுது.. அவர நான் போக வேணாம்னு எல்லாம் சொல்லலம்மா.. ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்னன்னுதான் கேட்கிறேன்.. எப்பவுமே தான் பண்றது மட்டும்தான் சரின்னு நடந்துக்கிறாரு..” என்றாள் நந்தினி.
“அம்மாடி நந்து.. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது.. உன் மேலயும் தப்பு இல்ல.. அவர் மேலயும் தப்பு இல்ல.. அவரோட டியூட்டியைப் பண்ணத்தானே போயிருக்காரு.. அதை நாம தப்பு சொல்ல முடியாது..”
“அம்மா.. நீங்களும் அப்பாவும் கூட என்னை அடிச்சதே இல்லை.. தப்பு பண்ணாம அடி வாங்கியிருக்கேன்..” அவள் குரல் நடுங்கியது.
“உன்னை அடிச்சதுல எனக்கும் வருத்தம்தான்.. எதுவா இருந்தாலும் பேசி புரிய வச்சிருக்கலாம்.. சரி விடு.. நீ எல்லா விஷயத்துலயும் தைரியமா இருக்கணும்னு அவர் எதிர்பார்க்கிறார்போல.. அதனாலதான் இப்படி பண்ணிட்டாரு..”
“என்னம்மா.. நீங்களும் இப்படி பேசுறீங்களே..” என்றாள் நந்தினி.
“அடியேய் அவர் என்ன குடிச்சிட்டு வந்து அடிச்சு கொடுமைப்படுத்துறாரா.. இல்ல வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினாரா.. இல்ல வேற எந்த பொண்ணு கூடவும் தப்பான உறவுல இருக்காரா.? எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனுஷன்டி.. எங்க தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்காது..” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க தான் மெச்சுக்கணும்..” என முணுமுணுத்தாள்.
“என்னடி.. என்னை திட்றியா..”
“சே சே இல்லம்மா.. அவரைத்தான் திட்டுவேன்..” என்றாள் நந்தினி.
“அப்படிலாம் திட்டக் கூடாது நந்து… இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்திச்சது கூட இல்ல.. இப்பதான் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. ஒரு வாரம் கூட ஆகல.. நீங்க ரெண்டு பேரும் பேசி பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உங்களுக்கு டைம் தேவை.. அவருக்கான டைமை நீ கொடுமா.. எல்லாம் சரியாயிடும் நந்து..”
“இப்போ என்னம்மா சொல்ல வர்றீங்க.. என்னை மறுபடியும் அந்த வீட்டுக்கு போகச் சொல்றீங்களா..”
“இனி அதுதான் உன்னோட வீடு.. உங்க அப்பாவும்தான் நிறைய பிரச்சனை பண்ணுவாரு.. அதுக்காக நான் என்ன கோவிச்சுக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு போறேனா.. இல்லைல்ல.. புரிஞ்சுக்கோடி.. இதுதான் உன்னோட வாழ்க்கை.. இனி இத மாத்த முடியாது..”
“சரிம்மா.. கொஞ்ச நாள் இருந்துட்டு நானே போயிடுறேன்..” எனக் கூறிவிட்டு எழுந்தவள் கையில் இருந்த கொய்யாப் பழத்தை அப்படியே அங்கிருந்த மேசை மீது வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் வந்து விட்டாள்.
என்னதான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் அவளுடைய மனதிலும் வேதனை இருக்கத்தான் செய்தது.
அன்றைய நாள் இரவு தன்னுடைய சம்மதம் இல்லாமல் அவன் தன்னை எடுத்துக் கொண்டதை அவளால் இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதைப் பற்றி எல்லாம் தன் அன்னையிடமோ தந்தையிடமோ சொல்லிவிட முடியாது.
விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கினாள்.
இந்தத் திருமண வாழ்க்கையை முறித்துவிடும் எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.
வர்மாவின் மீது கோபத்தில் இருந்தவள் தந்தையைக் கண்டதும் கிளம்பி வந்துவிட்டாள்.
ஆனால் இப்போது மீண்டும் அங்கே செல்வதற்கு சங்கடமாக இருந்தது.
அதுவும் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவில் வந்ததும் அவள் முகம் சிவந்து போனது.
அதே கணம் தன் மீது கோபமும் வந்தது.
எப்படி அவனுடைய முத்தத்திற்கு ஒத்துழைத்தோம்..?
அவனைத் தள்ளி அல்லவா விட்டிருக்க வேண்டும்..
தன்னை அடித்துவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்காமல் முத்தமிட்டவனின் முத்தத்தில் உருகி குழைந்திருக்கின்றோமே என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
“ஓ மை காட்.. இந்த போலீஸ்காரனோட போராடணும்னுதான் என் தலைல எழுதியிருக்கு போல.. இவன் மாறுவானா என்னனு கூட தெரியலையே..” என புலம்பியவாறு தன் நெற்றியை அழுத்தமாக வருடினாள் அவள்.
****
மூன்று நாட்களுக்குப் பிறகு..
நந்தினி வீட்டை விட்டுச் சென்று மூன்று நாட்கள் முழுதாக முடிந்திருந்தன.
வர்மா அவளுடைய வீட்டிற்கு சென்று அவளை அழைக்கவும் இல்லை.
அவளும் அவனுடைய வீட்டிற்கு கிளம்பி வரவும் இல்லை.
இவர்களுடைய பெற்றோர்கள்தான் அவர்களை எண்ணி தவித்துக் கொண்டிருந்தனர்.
அன்று காலையில் பிரதான சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலரின் உயிர் பறிபோயிருந்தது.
ஒன்று கூடிய மக்களை விலக்கி நிறுத்தி உயிருக்கு போராடியவர்களைக் காப்பாற்றி அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளை அங்கே நின்று மேற்பார்வையிட்டு வழங்குவதற்கே வர்மாவிற்கு நேரம் சரியாக இருந்தது.
முடிந்த அளவிற்கு பலரின் உயிரைக் காப்பாற்றியிருந்தார்கள்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து போயினர்.
சிலர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டிராஃபிக் போலீஸின் உதவியுடன் வாகன நெரிசல்களைக் கட்டுப்படுத்தி அந்த வீதியைக் கிளியர் செய்து தனக்குக் கீழே இருந்த காவல் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியது.
மதிய நேரம் தொடங்கிய பணி அன்று மாலை வரை நீடித்தது.
வர்மாவோ தண்ணீர் கூட அருந்தவில்லை.
இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அதிகாரி அல்ல அவன்.
“சார்.. நீங்க போங்க.. இனி நாங்க பார்த்துக்குறோம்..” என்றார் கான்ஸ்டபிள்.
“இல்ல கணேசன்.. இப்போ வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு எல்லாம் டைம் இல்லை.. சம்டைம் பிரச்சனை வேற மாதிரி கூட போகலாம்.. லாரி டிரைவர் மேல நிறைய பேர் செம கோவத்துல இருக்காங்க.. முதல்ல அவருக்கு பாதுகாப்பு கொடுங்க..” என்றான் யுகேஷ் வர்மா.
சற்று நேரத்தில் மருத்துவமனையில் இருந்த அவனுடைய டீம் மெம்பர்களான ரகு சரவணன் மதன் மூவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.
“எத்தனை பேர் பிழைச்சிருக்காங்க..?”
“பிழைச்சவங்களை விட இறந்தவங்கதான் அதிகம் சார்..” என சற்று கவலையுடன் கூறினான் சரவணன்.
வர்மாவிடமோ பெருமூச்சு.
“இது ரொம்ப பெரிய இழப்பு சார்..” என்றான் மதன்.
“யாரோ ஒருத்தரோட கவனக் குறைவால எத்தனையோ உயிர் இப்படி பரிதாபமா போகுது.. ஷிட்.. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என் தன் தலையை அழுத்தமாக வருடினான் அவன்.
“சார்.. நாங்களாவது இருபது நிமிஷம் பிரேக் எடுத்தோம்.. நீங்க மதியத்துல இருந்து இப்போ வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சார்.. நாங்க பார்த்துக்க மாட்டோமா..?” எனக் கேட்டான் ரகு.
“வீட்டுக்கு போயிட்டு வரவே ரெண்டு மணி நேரம் ஆகும் டா..”
“அப்போ ஏதாவது ஹோட்டல்ல ஃபிரஷ் ஆகலாமே..”
“பாக்கலாம்..” என்றவன் தனக்கு அருகே வந்து நின்ற காரைப் பார்த்ததும் புருவம் உயர்த்தினான்.
காரிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் நந்தினியின் தந்தை ராமகிருஷ்ணன்.
“மாப்பிள்ளை..” என அழைக்க வந்தவர் அவன் யூனிஃபார்மில் இருப்பதைப் பார்த்து “சார்..” என்று தொடங்கினார்.
“வாங்க..” என்றான் வர்மா சோர்வான குரலில்.
அவனுடைய கம்பீரமான குரல் இப்படி சோர்ந்து ஒலிப்பதைக் கண்டதும் அவருக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் இவ்வளவு நேரமும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் நேரலை செய்தி மூலம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் அவருடைய வீடும் இருந்தது.
ஏதாவது தன்னாலான உதவியைச் செய்து கொடுக்கலாம் என தன்னுடைய கம்பனியில் இருந்து தன் காரை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கே வந்துவிட்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
“ரொம்ப நேரமா இங்கேயே நிற்கிறீங்க.. நியூஸ்ல பார்த்தேன்.. அதுதான் ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க வந்தேன்..”
“நான் கொஞ்சம் பிரெஷ் ஆகணும்.. இங்க பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச ஹோட்டல் ஏதாவது இருக்கா..?”
“நம்ம வீடு இருக்கே மாப்பிள்ளை.. ஹோட்டல் எதுக்கு..?”
உணர்ச்சிவசப் பட்டு மாப்பிள்ளையென அழைத்து விட்டார் அவர்.
சரவணன் ரகு மதன் மூவருக்கும் அதிர்ச்சி.
“சார்.. உங்க மாமனாரா இவரு..?” சிரித்தபடி கேட்டான் சரவணன்.
சரவணனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் ஆம் என்று தலையசைத்தான்.
“அப்புறம் என்ன.. பக்கத்திலேயே வீடு இருக்கு.. நீங்க அங்க போய் பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டு வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் ரகு.
“வாங்க மாப்பிள்ளை.. போகலாம்..” என்றவாறு ராமகிருஷ்ணன் கார் கதவையே திறந்து விட,
“இட்ஸ் ஓகே.. நானே ஓப்பன் பண்றேன்..” என்றவன் முன்புற கார்க் கதவைத் திறந்தவாறு சட்டென நின்றான்.
“எல்லார் மேலயும் ஒரு கண் வச்சிருங்க.. ரகு, சரவணன் நீங்க ரெண்டு பேரும் இந்த ஸ்பாட்லையே நில்லுங்க.. மதன் நீ கணேசனைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுறேன்..” எனக் கூறி விட்டு காருக்குள் அமர்ந்தான் வர்மா.
ராமகிருஷ்ணனோ தானும் முன்புறம் அமர்ந்தவர் காரைச் செலுத்தத் தொடங்கினார்.
காரினுள் இருந்த ஏசி வர்மாவை சற்றே ஆசுவாசப்படுத்தியது.
“உங்களால வீட்டுக்கு வர முடியலன்னாக் கூட ஒரு கால் பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை.. குடிக்கிறதுக்கு ஜூஸ் ஆவது கொண்டு வந்து கொடுத்திருப்பேனே..” என்ற தன்னுடைய மாமனாரை வியந்து பார்த்தான் அவன்.
இதுவரை அவன் அவருடன் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசியது இல்லை.
வீட்டிற்கு வந்தவரை வரவேற்றது கூட இல்லை.
ஆனால் தனக்காக இவ்வளவு தூரம் சிந்திக்கின்றாரே என நினைத்தவன் “டென்ஷன்ல எனக்கு எதுவுமே தோணல..” என்றான்.
சற்று நேரத்தில் நந்தினியின் வீடு வந்திருந்தது.
“உள்ளே வாங்க மாப்பிள்ளை..”
முதல் முறையாக அவர்களுடைய வீட்டுக்குள் செல்கிறான்.
அவனுடைய தோற்றமோ படுமோசமாக இருந்தது.
உடல் முழுவதும் வியர்வை.
யூனிஃபார்மில் ஆங்காங்கே ரத்தக்கறை வேறு அப்பியிருந்தது.
பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தவன் வரவேற்பறையின் சோபாவில் எக்குத்தப்பாக அமர்ந்திருந்த நந்தினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து விட்டான்.
1 comment
Super super super super super super super super super super super