அகமித்ரா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த ப்யூன், “மிஸ் ஸ்டாப் எல்லோரையும் மெயின் ஹாலுக்கு வரச் சொன்னாங்க கரஸ்பாண்டன்ட் சார்…” என்றார். அவளும், “சரி நான் வர்றேன்…” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு பிள்ளைகள் பக்கம் திரும்பினாள்.
“தங்கங்களா… கரஸ்பாண்டன்ட் சார் வரச் சொல்லியிருக்கிறாங்க… அதனால நான் போகணும்… நீங்க இப்போ நான் சொல்லிக் குடுத்த பாடத்தை படிச்சிட்டு இருங்க வந்திடுறன்…. யாரும் சத்தம் போடக் கூடாது… என்ன நான் சொன்ன மாதிரி செய்வீங்களா….?”
“ஆமா மிஸ்….” என்றனர் மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில். அவர்களிடம் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு மெயின் ஹாலுக்குச் சென்றாள். அங்கே அனைத்து ஆசிரியர்களும் வந்திருந்தனர். அகமித்ரா வருவதைப் பார்த்து அமிர்தா, “மித்து இங்க வா…” என்றாள். அகமித்ராவும் சிரித்துக் கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தாள். எல்லோரும் வந்துவிட்டனரா என்று பார்த்து விட்டு ப்யூன் சென்று கரஸ்பாண்டன்ட் சாரிடம் சொன்னார். அவரும் சில நிமிடங்களில் மெயின் ஹாலுக்கு வந்தார்.
அறுபது வயதிலும் திடகாத்திரமான உடலுடன், கோர்ட் ஷர்ட்டில் கம்பீரமாக நடந்து வந்தார் அந்த கான்வென்ட்டின் கரஸ்பாண்டன்ட் வேதாசலம். அவர் வந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரையும் பார்த்து புன்சிரிப்பை பரிசளித்து விட்டு அங்கிருந்த அவரது நாற்காலியில் அமர்ந்தார். “எல்லோருக்கும் வணக்கம்… உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்…. அதுக்காகத்தான் இந்த திடீர் மீட்டிங்…” என்றார். அங்கிருந்த அனைத்து ஸ்டாப் எல்லோரும் என்னவாக இருக்கும் என்று அவரது முகத்தையே பார்த்தனர். வேதாசலமே தனது பேச்சைத் தொடர்ந்தார்.
“நீங்க எல்லோரும் என்ன விஷயம்னு தெரிஞ்சிக்க விரும்புறது, உங்களோட முகத்திலேயே தெரியுது… சரி நான் விஷயத்துக்கு வர்றேன்… என்னோட பொண்ணு தாரதி கல்யாணம் பண்ணி அமெரிக்கால இருக்கிறது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறன்… அவளுக்கு இப்போ ஆண் குழந்தை பிறந்திருக்கு… யெஸ் நான் தாத்தாவாகிட்டேன்….” என்றார். எல்லோரும் கை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
“உங்களோட வாழ்த்துக்கு நன்றி… என்னோட மனைவி பொண்ணு கூட இருக்கணும்னு ஆசைப்படுறா… எனக்கும் பேரக் குழந்தையை பார்க்க ஆசையாக இருக்கு… அதனால ரெண்டு நாள்ல நாங்க அமெரிக்கா போறோம்… எனக்கு அப்புறம் இந்த ஸ்கூலை பார்த்துக்க என்னோட பையன் ரித்தேஷ் வர்றான்… எனக்கு எப்படி உங்களோட சப்போர்ட்டைக் குடுத்தீங்களோ, அதுபோல என்னோட பையனுக்கும் நீங்க உங்களோட சப்போர்ட்டை குடுப்பீங்கனு நம்புறேன்… இந்த ஸ்கூல் நான் இருக்கும் போது எப்படி நல்ல விதமா இருந்திச்சோ… அப்படி தொடர்ந்து நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்…. என்னோட மகன் ரித்தேஷ் நாளைக்கு ஸ்கூல் பொறுப்பை ஏற்றுக் கொள்வான்…” என்றார். பின்னர் ஒரு சில ஆசிரியர்கள் எழுந்து வேதாசலத்திற்கு நன்றி கூறினார்கள்.
தேவசூரன் தனது கோட்டையில் இருக்கும் போது அவனை சந்திக்க சிலர் வந்திருந்தனர். அவர்களை ஹாலில் இருக்க வைத்து விட்டு, தேவசூரனிடம் விஷயத்தை சொல்ல, அவனும் அவர்களிடம் வந்தான். அவனைப் பார்த்தும் எழுந்து நின்றனர். அவன் அமர்ந்த பின்னரே அவர்கள் அமர்ந்தனர்.
“சொல்லுங்க என்ன விஷயம்….?”
“சார் நாங்க வேதாசலம் ஐயாவோட ஸ்கூல் பக்கத்தில இருக்கிறவங்க… அந்த ஸ்கூலுக்கு பக்கத்தில வைன் ஷாப் இருக்கு… பிள்ளைகள் ஸ்கூலுக்கு போகும் போதும் வரும் போதும் பெரிய பிரச்சினையாக இருக்கு சார்…”
“இதுக்கு ஸ்கூல்ல இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கலயா…?”
“சார் ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் வேதாசலம் சார் அந்த வைன் ஷாப் ஓனர் மேல கம்ப்ளைன்ட் பண்ண போனாங்க… ஆனால் அவனுங்க அதைக் கேட்டகல… போலீஸ்கு போனால் ஸ்கூலுக்கு போற பிள்ளைகள் திரும்பி வீட்டிற்கு வராதுனு மிரட்டிட்டு இருக்கிறானுங்க… இதுக்கு நீங்கதான் ஏதாவது செய்வீங்கனு நம்பி உங்ககிட்ட வந்திருக்கிறோம் சார்…”
“சரி நீங்க போங்க நான் அதைப் பார்த்துக்கிறன்….”
“ரொம்ப நன்றிங்க சார்…” என்று சொல்லிவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தேவசூரனும் தனது ஆட்களோடு அந்த வைன் ஷாப்பிற்குச் சென்றான். ஸ்கூல் விடும் வேளை.. வைன் ஷாப்பிற்கு வெளியே நின்று குடித்துக் கொண்டு இருந்தனர். சிலர் வீதியில் விழுந்து கிடந்தனர்.
ஸ்கூல் விட்டுச் செல்லும் பிள்ளைகள் பயத்துடன் அங்கிருந்து சென்றனர். தேவசூரனின் ஜீப் வந்து அந்த வைன் ஷாப் முன்னால் நின்றது. தேவசூரனின் ஜீப்பை பார்த்த வைன் ஷாப் ஓனர் வாசலுக்கு ஓடி வந்தார்.
“சார் வாங்க சார்… என்ன சார் இந்தப் பக்கம்…?” என்றார். ஜீப்பில் இருந்து இறங்கிய தேவசூரன் எதுவும் பேசாமல் ஓங்கி ஒரு அறை வைத்தான் அந்த ஓனரின் கன்னத்தில். ஸ்கூல் விட்டு வெளியே வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் இதைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
“சார் எதுக்கு இப்போ என்னை அடிச்சீங்க….?” என்று கேட்கும் போது மறுபடியும் அறை விழுந்தது.
“ஏய் ஸ்கூல் பக்கத்தில வைன் ஷாப் இருக்கிறது தப்புன்னு உனக்குத் தெரியாதா….?” என்று கேட்டான்.
“சார் நான் மினிஸ்டர் ஆளு… சும்மா என்மேல கை வைக்காதீங்க…”
“ ஓ… இந்த தேவசூரன்கிட்டேயே பயம் இல்லாம பேசுறளவுக்கு வந்தாச்சா…?” என்றவன் அவனை அடிக்க முயன்றான். தேவசூரனின் கையை தட்டி விட்டு அவன் ஓடினான். தேவசூரனும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான்.
தேவசூரனுடன் வந்தவர்கள் வைன் ஷாபில் இருந்த எல்லாவற்றையும் போட்டு உடைத்தனர். அந்த வைன் ஷாப் ஓனர் ஸ்கூலுக்குள் ஓடினார். தேவசூரன் அவன் முதுகில் ஓங்கி உதைக்க, எதிரில் வந்து கொண்டிருந்த அகமித்ராவின் காலில் வந்து விழுந்தான் வைன் ஷாப் ஓனர். அகமித்ரா அதிர்ச்சியில் நிற்க, தேவசூரனோ கீழே கிடந்தவனை போட்டு மிதித்தான். அவன் அழுத சத்தத்தில் நினைவுக்கு வந்த அகமித்ரா, “ஏய் நிறுத்து….. நிறுத்து…. ஸ்டாப்ஸ்டாப் இட்….” என்று கத்தினாள். அவளின் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த தேவசூரன், ‘கடவுளே மறுபடியும் இவளா….?’ என்று நினைத்தவன் கீழே கிடந்தவனை தூக்கி நிறுத்தினான்.
“ஏய் உனக்கு அறிவில்லை… இது ஒண்ணும் நடுரோடு இல்லை ஸ்கூல்… பிள்ளைகள் படிக்கிற இடத்தில வந்து உன்னோட ரவுடித்தனத்தை காட்டிட்டு இருக்க… உனக்கு அறிவில்லை…?” என்று சத்தம் போட்டாள்.
“உன்னோட வேலை என்னவோ அதை பார்த்திட்டு போ… சும்மா இங்க இருந்து நொய்யி…. நொய்யினு கத்திட்டு இருக்காத….” என்றான்.
“இது நான் வேலை பார்க்கிற ஸ்கூல்… இங்க இருந்து என்னை போகச் சொல்ல உனக்கு அதிகாரம் இல்லை… பொறுக்கித்தனம் பண்ற நீதான் இந்த புனிதமான இடத்தில நிற்க கூடாது… வெளியே போடா ரவுடி….” என்று சொல்ல, தேவசூரனுக்கு கோபம் வர அகமித்ராவின் கழுத்தைப் பிடித்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊😊