Home Novelsமதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 02

மதுரனின் மதிமயக்கும் மங்கையவள் : 02

by Thivya Sathurshi
4.7
(23)

அத்தியாயம் : 02

வீரேந்திர ப்ரசாத்தின் ஸ்டேஷனின் முன்னால் வெள்ளை நிற சுமோக்கள் அணிவகுத்து நின்றன. அதில் நடுவில் வந்த கருப்பு நிற காரில் இருந்து இறங்கினார் அமைச்சர் கன்னியப்பன். அவரைத் தொடர்ந்து அவரது தொண்டர்களும் அந்த காவல் நிலையத்தில் நுழைந்தார்கள். கன்னியப்பன் உள்ளே வருவதை பார்த்த வீரேந்திர ப்ரசாத் எதுவும் பேசாமல் கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முன்னால் வந்த கன்னியப்பன் இருமினார். 

“ஏட்டையா தண்ணீ குடிங்க ரொம்ப இருமுறீங்க…” என்றான். அதற்கு ஏட்டையாவும், “சார் நான் இல்ல சார்… அமைச்சர் ஐயா வந்துருக்காங்க…” என்றார். 

“ஏன் மினிஸ்டருக்கு பேச்சு வராதா இருமல் மட்டும்தான் வருமா…? அவங்க வந்திருக்கிறதை நீங்கதான் சொல்லனுமா….?” என்ற வீரேந்திர ப்ரசாத் நிமிர்ந்து கன்னியப்பனை பார்த்தான்.

“என்ன போலீசு அமைச்சரு வந்தா எழுந்து நின்னு சலூட் அடிக்கத் தெரியாதா….? உங்க ட்ரெய்னிங்ல சொல்லிக் கொடுக்கலயா…?”

“ரொம்ப நல்லாத் தெரியுமே… எனக்கு ட்ரெய்னிங்கில் நல்லா சலூட் அடிக்கிறதுக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க…. குறி பார்த்து துப்பாக்கி சுடவும் சொல்லிக் கொடுத்திருக்காங்க.. 

நேர்மையானவளுக்கு மட்டும் தான் என்னோட கை சலூட் அடிக்கும்… இப்ப எதுக்காக நீங்க இங்க வந்து இருக்கீங்க…. கட்சி ஆபீஸை இங்க மாத்திட்டாங்களா என்ன இவ்வளவு பெரிய கூட்டமா வந்திருக்கீங்க…?”

“என்ன போலீஸ் சத்தம் ஓவரா இருக்கு…”

“இது என்னோட ஸ்டேஷன் இங்கே நான் சத்தம் போடுவேன்…. முதல்ல உங்க பின்னாடி இருக்கிற இந்த கூட்டத்தை வெளில போக சொல்லுங்க…. இங்க எனக்கு டிஸ்டர்ப்சன்ஸா இருக்கு…” என்றான். 

“ஏய் என்ன எங்களை வெளியே போக சொல்ற…. நான் யார் தெரியுமா ஐயாவோட தொண்டன் ஐயாவுக்கோ ஐயாவோட குடும்பத்துக்கோ ஒன்னுன்னா நான் இங்கேயே தீ குளிக்கவும் தயார்…” என்றான் ஒருவன். 

“அப்படியா சரி அப்ப நீ தீ குளிச்சிடு….” என்று சர்வசாதாரணமாக சொன்னான் வீரவேந்திர ப்ரசாத். 

“இங்க பாரு போலீசு என் பையன மறுவாதியா வெளில விட்டுரு… இல்ல அதோட பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்….”

“என்ன பண்ணுவ வழக்கம் போல சினிமாவில் வர மாதிரி தண்ணியில்லாத காட்டுக்கு மாத்த போறியா…. எனக்கு அது ஒன்னும் பிரச்சனை இல்ல… ஆனா உன் பேர சொல்ல உனக்கு பையன் இருக்க மாட்டான்….. எவ்வளவு தைரியம் இருந்தா காலேஜ் படிக்கிற பசங்களுக்கு போதை பொருள் வித்திருப்பான்…. அவன் வாழ்க்கை ஃபுல்லா உள்ளே இருக்கிற மாதிரி தண்டனை வாங்கிக் கொடுக்கல நான் வீரேந்திர ப்ரசாத் இல்லை…” என்றான். 

இதைக் கேட்ட கன்னியப்பன் சிரிக்க ஆரம்பித்தார். “என்ன போலீசு தமாஷ் பண்ற…? என்னைப் பற்றி தெரிஞ்சும் நீ இப்பிடி பேசலாமா…? நீ மட்டும் இப்போ என் பையனை வெளியில விடலனு வையேன் அப்புறம் நான் உன்னை விட பெரிய இடம்… அதுதான்பா ஐஜிக்கிட்ட போவேன்… அப்புறம் உனக்கு சஸ்பெண்ட் கிடைக்கும் ஏன் வேல கூட போக வாய்ப்பு இருக்கு… எப்பிடி வசதி…?” என்று கூற, வீரேந்திர ப்ரசாத் தனது சேரில் இருந்து எழுந்து வந்தவன், 

“அய்யோ சார் அப்படி மட்டும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ் சார் ஐஜி ரொம்ப மோசமானவரு சார் என்னை சஸ்பெண்ட் பண்ண காத்திட்டு இருக்கிறாரு… ப்ளீஸ் அவர்க்கிட்ட சொல்லுடாதீங்க சார்…” என்று கெஞ்சினான். 

அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த கன்னியப்பன், “ஏதோ நீ இவ்வளவு கெஞ்சுறதனால உன்னை மன்னிச்சு விடுறன்….” என்று சொல்லும் போது, சிரிக்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத். “ஆஆஆ ஐயோ முடியல… ஆஆஆஆ.. அம்மா….” என்று வயிற்றில் கைவைத்து சிரித்தவனை புரியாத பார்வை பார்த்தார் கன்னியப்பன். 

“என்ன மினிஸ்டரே நான் உங்கிட்ட இப்படி எல்லாம் கெஞ்சுவன்னு நீ எதிர்பார்த்திருப்ப… அதுதான் உன்னோட ஆசையை கெடுக்க வேணாம்னு நான் அப்படி செஞ்சேன்… ஏய் நீ சொல்ற ஐஜி இல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் உன் பையனை வெளியில விட முடியாது… உன்னால முடிஞ்சதைப் பண்ணு….” என்றான். 

இதைக் கேட்ட கன்னியப்பனுக்கு வீரேந்திர ப்ரசாத் மீது கோபம் வர அதை அடக்கிக் கொண்டவர், “இருடா உனக்கு நான் யார்னு காட்டுறன்…” என்றவர், லாக்கபில் இருந்த மகனிடம் சென்றார். “சர்வேஷ் கவலைப்படாத உன்னை நான் எப்டியாவது வெளியில கொண்டு வந்திடுறன்….. நீ தைரியமா இரு….” என்றவர் ஆட்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்றதும் தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் வீரேந்திர ப்ரசாத். 

வீராவின் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த கன்னியப்பன் நேரே சென்றது ஐஜி ஆபீஸ்க்குத்தான். அங்கே வந்து யாரிடமும் அனுமதிகூட கேட்காமல் அவரது அறைக்குள் நுழைந்தார். அமைச்சரைப் பார்த்தும் எழுந்து நின்று சல்யூட் அடித்தார் ஐஜி விநாயக். 

அவர் சல்யூட் அடிப்பதைப் பார்த்த கன்னியப்பன், “அமைச்சர் வந்தா சல்யூட் அடிக்கணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு ஆனா உனக்கு கீழ வேல பாக்குறவனுக்கு அந்த மரியாதை கூட தெரியலை…”

“சார் என்னாச்சி…? அமைச்சரான உங்களுக்கு ஒரு சல்யூட் கூட அடிக்காதவன் யாருனு சொல்லுங்க சார்… அவன் மேல உடனே நான் ஆக்ஷன் எடுக்கிறன்…”

“அவன் பேரு வீரேந்திர ப்ரசாத்…”

‘அட பாவிப் பயலே…’ என மனதிற்குள் நினைத்தவர், “அவனை என்ன பண்ணலாம் சார்…? சொல்லுங்க சார் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்டியே பண்ணுடலாம்….”

“பரவாயில்ல அத விட்டுடலாம்…. உன்னால எனக்கு ஒரு வேல நடக்கணும்…”

“சார் முதல்ல உக்காருங்க… சொல்லுங்க உங்களுக்கு என்ன பண்ணணும்…?”

“என் பையன் சர்வேஷை அந்த வீரேந்திர ப்ரசாத் அரெஸ்ட் பண்ணி லாக்கப்ல வச்சிருக்கான்… அவன்கிட்ட என் பையனை ரிலீஸ் பண்ணச் சொல்லு…”

“சார் உங்க பையன்னு தெரிஞ்சுமா அரெஸ்ட் பண்ணியிருக்கிறான்…?”

“அட ஆமாய்யா… நான் வெளியில விடச் சொல்லியும் அவன் என் பையனை வெளியில விடல…”

“சார் அவன்கிட்ட மனுஷன் பேசுவானா…? ரொம்ப திமிர் பிடிச்சவன் அவன்… அவனை யாராலும் கன்ரோல் பண்ண முடியாதே சார்… நான் சொன்னாக் கூட அவன் விடமாட்டான்… நீங்க லீகலா என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுங்க…”

“நீ என்னையா சொல்ற…? அங்க உள்ள இருக்கிறது என்னோட பையன் நீ சர்வசாதாரணமா சொல்ற லீகலா போங்கனு…” 

“சார் உங்க பையனை எதுக்கா அரெஸ்ட் பண்ணியிருக்கிறான்…?”

“அது காலேஜ்ல போதைப்பொருள் வித்தானாம்னு பிடிச்சிருக்கான்…”

“சார் இது ரொம்ப பெரிய கேஸ் சாதாரண கேஸையே அவன் விடமாட்டான்… இது போதைப் பொருள் கேஸ்… எனக்குத் தெரிஞ்சி உங்க பையன் திரும்ப வீட்டுக்கு வர்றது ரொம்ப கஷ்டம்…”

“என்ன விளையாடுறியா…?”

“சார் நான் விளையாட நீங்க என்ன பிளே கிரவுண்டா…? நான் உண்மையா சொல்றன் அவனுக்கு நீங்க ப்ரெஷர் குடுத்தீங்க அப்புறம் உங்க பையனை என்கவுண்டர்ல போட்டுடுவான்… நீங்க முதல்ல நல்ல லாயரை பாத்துப் பேசுங்க…”

“என்ன எல்லா போலீஸூம் சேர்ந்து ஆட்டம் காட்டுறீங்களோ… என் பையனை வெளியில எடுத்திட்டு அப்புறம் உங்களை பாத்துக்கிறன்…”

“ஓகே சார் நாங்க வெயிட் பண்றோம்… முடிஞ்சா உங்க பையனை வெளியில எடுங்க…” என்றார் ஐஜி. இதைக் கேட்ட கன்னியப்பன் கோபமாக சென்று விட்டார் லாயரைப் பார்க்க. அவர் சென்றதும் ஐஜி, ‘அவன், நான் சொல்றதையே கேக்க மாட்டான்…. இவன் சொல்றதையா கேக்கப் போறான்…? என்ன ஆட்டம் ஆடுறீங்கடா… உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்கத்தான் அவன் வந்திருக்கான்… ஒருத்தனையும் விட மாட்டான்…’ என்று சொல்லிக் கொண்டார் ஐஜி. 

………….…………………….………….……

சுதர்ஷினி ஆபிஸ் அறைக்குள் சென்று அங்கிருந்த ப்ரின்சிப்பாலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அப்பாயின்மென்ட் லெட்டரைக் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த ப்ரின்சிப்பால், “கோல்ட் மெடல்ல பாஸ் பண்ணியிருக்கிறீங்க சூப்பர் மேம்…”

“தாங்க்யூ சார்…”

“மேம் உங்களோட டியூட்டியை நீங்க சரியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன் வாழ்த்துகள்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்.. இங்க இருக்கிற எல்லா டீச்சர்ஸையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி பண்ணி வைக்கிறன்…”

“உங்களோட வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்… கண்டிப்பா என்னோட வேலையை நான் கரெக்ட்டா பண்ணுவன்…” என்றாள். 

ப்ரின்சிப்பால் எல்லா டீச்சர்ஸையும் அங்கே அழைத்து சுதர்ஷினியை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களையும் சுதர்ஷினிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களைப் பார்த்து சுதர்ஷினி சிநேகப் புன்னகை செய்தாள். பின்னர் சுதர்ஷினிக்கு நாளை டைம் டேபிள் தருவதாகவும் இன்று மட்டும் டீச்சர்ஸ் இல்லாத வகுப்பில் இருக்குமாறு கூறினார். அவளும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தாள். 

வெளியே வந்த சுதர்ஷினி அங்கே அவள் வரும்போது ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடித்தவனைத் தேடினாள். ஆனால் அவனைக் காணவில்லை. ‘சரி எங்க போயிடப் போறான்… எப்பவாவது கையில மாட்டுவான்ல அப்போ பாத்துக்கலாம்… முதல்ல போய் காலேஜை பாக்கலாம்…’ என்றவள் காலேஜை சுத்திப் பார்த்துக் கொண்டு வந்தாள். அழகிய மலர்களாலும், சுவற்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த வாசகங்களாலும் அந்த காலேஜ் மிகவும் அழகாக இருந்தது. 

சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்த சுதர்ஷினி ஒரு வகுப்பில் இருந்து அதிக சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டவள் அந்த வகுப்பினுள் சென்றாள். காலேஜ்க்கு புதிய அவளைப் பார்த்தும் மாணவர்களின் சத்தம் நின்றது. அமைதியாக அவளைப் பார்த்தனர். 

“ஹாய் என்ன எல்லோரும் என்னை ஏலியனைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க…? பயப்படாதீங்க நான் ஒண்ணும் ஏலியன் கெடயாது… உங்க காலேஜ்க்கு புதுசா ஜாயின் பண்ணிக்கிற தமிழ் மிஸ்…” என்றாள். 

அந்த வகுப்பில் இருந்த ஒரு மாணவன் சட்டென்று எழுந்து, “என்ன புது மேமா…? நான் எங்க க்ளாஸ்கு புதுசா ஜாயின் பண்ண பொண்ணுனுல நெனச்சேன்….” என்றதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர். 

“அப்டியா… எல்லாரும் அப்டித்தான் நெனச்சீங்களா… நான் பாக்க ரொம்ப குட்டியாக இருக்கேன்ல… பரவால்ல இப்போதான் நான் மிஸ்னு தெரிஞ்சிடுச்சுல…”

“மேம் நான் இப்டி சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரலையா…?”

“ம்கூ.. கோபம் வரலை… எதுக்கு கோபம் வரணும் என்னைப் பத்தி தெரியாமதானே நீ என்னை அப்டி நெனச்ச…? அதனால எனக்கு கோபம் வரல…”

“மேம் நீங்க ரொம்ப ஸ்வீட்டா இருக்கிறீங்க…”

“அச்சச்சோ அப்போ என்னை எறும்பு கடிச்சிடுமோ….?”

“என்ன மேம் சொல்றீங்க…?”

“ஆமா ஸ்வீட்னா எறும்பு வந்துடும்ல அதுதான் என்னை எறும்பு கடிக்குமானு கேட்டேன்…” என்றதும் மாணவர்கள், “மேம் நீங்க ரொம்ப ஜாலியா பேசுறீங்க… உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றனர். 

அவளும், “எனக்கும் உங்க க்ளாஸை ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றாள். இப்படியாக ஒரு சில வகுப்பிற்குச் சென்று மாணவர்களுடன் பேசி அவர்களைப் பற்றி அறிந்து கொண்டாள். காலேஜ்க்கு வந்த அன்றே மாணவர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டாள் சுதர்ஷினி. அந்த நிறைவோடு காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!