Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 34 (On Going Story)

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 34 (On Going Story)

by Thivya Sathurshi
4.7
(22)

வாழ்வு : 34

அறைக்குள் சென்ற சம்யுக்தாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. அந்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க தீஷிதன்தான் அழைத்திருந்தான். “ஹலோ யுக்தா.”

“சொல்லுங்க.”

“யுக்தா என்ன பண்ணிட்டு இருக்க?”

“படுத்திருக்கேன்.. நீங்க என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க?”

“யுக்தா கொஞ்சம் மொட்டை மாடிக்கு வர்றியா?”

“இப்பவா?”

“ஆமா, நான் அங்கதான் இருக்கேன் நீயும் வா”

“ம்ம்ம் சரி” என்றவள் எழுந்து சென்றாள். 

அங்கே நிலவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன். சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்டதும் திரும்பினான். சம்யுக்தா புன்னகையுடன் வந்திருந்தாள். ஆனால் அந்த புன்னகையில் உண்மைத் தன்மை இல்லாததைப் பார்த்தவன் அவளது கையைப் பிடித்தான். 

“யுக்தா, என்ன மனசு ரொம்ப குழப்பமா இருக்கா?” என்றான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “ம்ம்ம்.. மனசு ஒரு மாதிரி இருக்குங்க. நாளைக்கு என் வாழ்க்கையில நடக்குற ஒரு சந்தோஷமான நாள், ஆனால் என்னோட அம்மா அப்பா யாருமே இல்லையேங்க.. அவங்களை கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்க.”

“இப்போ உனக்கு என்ன யுக்தா? உன்னோட அம்மா அப்பா முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தணும் அவ்ளோதானே. அதுக்காகத்தானே வித்யாவோட அம்மாவையும் அப்பாவையும் வரவழைச்சிருக்கேன். அவங்க கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி, அவங்க வந்திடுவாங்க.” என்றான். 

அவன் சொன்னதை கேட்ட சம்யுக்தா, எதுவும் பேசவில்லை. 

“உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன். அதை தர்றதுக்குத்தான் இங்க கூப்டேன்.”

“எதுக்குங்க கிப்ட்?”

“இன்னைக்குத்தான் நாம லவ்வர்ஸ்.. நாளையில இருந்து நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். நான் என்னோட காதலிக்கு தர்ற கிப்ட் இது.” என்றான். அதை வாங்கிப் பார்த்த சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள். 

“என்னங்க இது? எதுக்காக இந்த வேலை பார்த்தீங்க?”

“யுக்தா உன்னை கொடுமைப்படுத்தின பிரகாஷை விட மோசமானவங்க வித்யாவோட அம்மாவும் அப்பாவும். நிற்க இடமில்லாம இருந்த உன்னை, நடுரத்திரியில நாயை விடக் கேவலமா உன்னை அடிச்சு விரட்டினாங்க. அதுக்கு பதிலடி கொடுக்காம நான் விடமாட்டேன் யுக்தா.”

“ஏங்க அதுக்காக அவங்க பேர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் என்னோட பேர்ல மாத்தணுமாங்க? இது எப்படி நடந்திச்சு?”

“அவங்க பணம் வாங்கிருந்த விக்டர், அவனோட பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி எடுத்திருந்தான். அவன்கிட்ட பணத்தை கொடுத்திட்டு நான் உன்னோட பேர்ல வாங்கிட்டேன்.”

“இப்போ இது தேவையாங்க?”

“தேவைதான் யுக்தா கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் சென்னை போறோம். நீ அங்க இருக்கிற கம்பனியை டேக்ஓவர் பண்ற.”

“நான் எப்பிடீங்க?”

“யுக்தா நீ கண்டிப்பா இதை பண்ணியேயாகணும். சரி ரொம்ப லேட்டாச்சு. நீ போய் தூங்கு காலையில மண்டபத்துல பார்க்கலாம்” என்றான்.

………………..………………..………………

மணிகண்டனும் லீலாவதியும் தீக்ஷிதன் அனுப்பிய காரில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். விடியும் போது ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திய ட்ரைவர்,“இந்த ஹோட்டல்ல போய் ரெடியாகிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்றான். அவர்களும் சரி என்று சொல்லி உள்ளே சென்று ரெடியாகினார்கள். 

பிரகாஷ் மற்றும் சீமாவும் அதே ஹோட்டலில்தான் இருந்தார்கள். 

“இந்த கல்யாணத்துக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமே இல்லை” என்றாள் சீமா. 

“எனக்கு மட்டும் விருப்பமா என்ன? போய் தானேயாகணும்” என்று சிடுசிடுத்தவாறு ரெடியாகினான் பிரகாஷ். 

………………..………………..………………

புகழும் நேரத்திற்கு எழுந்து ரெடியாகி விட்டு துர்க்காவை அழைக்க, அவரும் கிருபாகரனும் ரெடியாகி வந்தனர். 

“வாவ் அம்மா, அப்பா நீங்கதான் புது ஜோடி மாதிரி அழகா இருக்கிறீங்க. அதுவும் அம்மா அப்படியே மகாலக்ஷ்மி மாதிரி இருக்காங்க” என்றான். 

“டேய் என்னோட பொண்டாட்டி மேல கண்ணு வைக்காத” என்று அவனுடன் சண்டைக்கு வந்தார் கிருபாகரன். 

“ஐயோ அப்பா என்னை விட்டுடுங்க, நான் எதுவும் சொல்லலை.”

“உங்களுக்கு பொறாமைங்க.” என்றவர் “நீ ரொம்ப அழகா இருக்க புகழ்” என்று புகழுக்கு திருஷ்டி கழித்தார். 

“சரி சரி அவனை புகழ்ந்தது போதும் கல்யாணத்துக்கு போகலாமா?”

“பாருங்க அம்மா அப்பாவை நீங்க எதுவும் சொல்லலைனு கடுப்பாகிட்டாங்க.”

“என்னோட புருஷன் எப்பவும் அழகுதான் புகழ்.” என்றார் துர்க்கா. 

“ஐயோ உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரவேயில்லை. போகலாம்” என்றான். மூவரும் மகிழ்ச்சியுடன் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். 

………………..………………..………………

கல்யாண மண்டபம் அலங்காரங்களால் கண்களை கவரும் வண்ணம் இருந்தது. பெரிய பெரிய விஐபிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியான ஒரு இடம் மண்டபத்தின் கீழே ஒதுக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் உள்ளே அனைவரும் அழகாக அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் ஐயர் அக்கினி குண்டத்தின் முன்னே அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். 

மணமகன் அறையில் தீஷிதன் ஆணழகனாக ரெடியாகிக் கொண்டிருந்தான். அவனை அழகுபடுத்திக் கொண்டிருந்தான் விக்ராந்த். 

“அத்தான் சும்மா சொல்லக்கூடாது நீங்க பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸமா மேன்லியா இருக்கீங்க.”

“டேய் சும்மா கலாய்க்காத”

“நெஜமாத்தான் அத்தான். நீங்க வேணும்னா பாருங்க இன்னைக்கு சம்மு அக்கா உங்களை வைச்ச கண் வாங்காம பார்த்திட்டு இருப்பாங்க.” என்றதைக் கேட்ட தீக்ஷிதனின் முகம் வெட்கத்தில் சிவந்தது. 

“அத்தான் பொண்ணுங்க வெட்கப்பட்டா அழகுன்னு தெரியும். உங்களைப் பார்த்த பிறகுதான் ஆண்கள் கூட வெட்கப்பட்டா அழகுன்னு தெரியுது.” என்று அவனை மேலும் வெட்கப்பட வைத்தான் விக்ராந்த். 

“டேய் போதும்டா,ரொம்ப ஓட்டாத.” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது புகழிடமிருந்து தீஷிதனுக்கு கால் வந்தது. அதே நேரத்தில் அமரேந்திரன் ஒரு வேலையாக விக்ராந்தை அழைக்க, “இதோ வந்திடுறன் அத்தான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் போனை எடுத்த தீஷிதன், “சொல்லு புகழ், எங்க இருக்க? அத்தையும் மாமாவும் எங்க?”

“தீஷி நாங்க மண்டபத்துக்கு வந்திட்டோம். இப்போ எங்க வர?”

“நீ யார் கண்லேயும் படாம நாலாம் நம்பர் அறைக்கு கூட்டிட்டு போ, கல்யாணத்துல கைப்பிடித்துக் கொடுக்க தயாராகும் போது அவங்களை கூட்டிட்டு வா” என்றான். 

“சரி” என்றவன் அவர்களை யாரும் அறியாமல் மெல்ல தீஷிதன் சொன்ன அறைக்கு அழைத்து வந்தான். 

“அம்மா, அப்பா நீங்க இங்கேயே இருங்க, நான் வந்து கூப்பிடுற வரைக்கும் வெளியே வராதீங்க”

“சரி புகழ்” என்றனர். 

பின்னர் புகழ் தீஷிதன் அறைக்கு வந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான். 

மணமகள் அறையில் ப்யூட்டிஸனின் கைவண்ணத்தில் தேவதை போல தயாராகினாள் சம்யுக்தா. அவளை கேலி செய்து கொண்டிருந்தனர் வித்யாவும் மதுராவும். 

“அக்கா உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே உன் வாழ்க்கையில எல்லாமே நல்லதுதான் அக்கா நடக்கும்.”

“ஆமா வித்து, அண்ணிக்கு இனிமே கஷ்டமே இல்லை. என் அண்ணா அண்ணியை உள்ளங்கைல வைச்சித் தாங்குவாங்க” என்றாள் மதுரா. இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தமயந்தி, “என் பொண்ணு என்ன அழகு.” என்று சம்யுக்தாக்கு திருஷ்டி கழித்தார். 

“சம்மு ஐயர் உங்களை அழைச்சிட்டு வரச் சொல்றாரு.. மதுரா வித்யா ரெண்டு பேரும் சேர்ந்து சம்முவை கூட்டிட்டு வாங்க”

“சரி” என்றனர் இருவரும். 

மணமகன் அறையில் இருந்த தீஷிதனை விக்ராந்த் மற்றும் புகழ் அழைத்து வந்தனர். மணமேடைக்கு வந்த தீக்ஷிதன் பரந்தாமன் காலிலும், துர்க்கா அமரேந்திரன் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவர்களும் அவனை மனதார ஆசிர்வதித்தனர். 

மணமேடையில் அமர்ந்தவன் சபைக்கு வணக்கம் சொல்லும்போது, அங்கே மணிகண்டன் லீலாவதி ஒரு பக்கமும், பிரகாஷ் சீமா ஒரு பக்கமும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் இதழ்களிலே ஒரு கேலிப் புன்னகை தோன்றியது. 

பின்னர் ஐயர் கூறும் மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். பின் ஐயர் வழமை போல, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று சொன்னதும், சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு மதுராவும் வித்யாவும் அங்கே வந்தனர். சம்யுக்தாவுடன் வரும் வித்யாவைப் பார்த்த மணிகண்டனுக்கு அவளை கொல்லும் வெறி வர எழுந்தார். லீலாவதிதான், “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க. இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 

தேவதை போல அலங்கரிக்கப்பட்டு வரும் சம்யுக்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீஷிதன். அவனைப் பார்த்த புகழ் சற்றுக் குனிந்து, “தீஷி ஹேண்ட்சீஃப் வேணுமா?” என்றான் 

அவனை திரும்பிப் பார்க்காமல், “இருடா உனக்கு கல்யாணம் நடக்கும் போது பார்த்துக்கிறன்” என்றான். 

மேடைக்கு வந்த சம்யுக்தா அங்கிருந்த பரந்தாமன் தமயந்தி அமரேந்திரன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தீஷிதன் அருகில் அமர்ந்தாள். 

அவள் தனக்கு அருகில் அமர்ந்ததும் தீஷிதன் அவள் புறம் சாய்ந்து, “யுக்தா ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் வெட்கத்தில் குனிந்து கொண்டான். 

சபைக்கு வணக்கம் சொன்னவள் கண்களில் பட்டனர் மணிகண்டன் மற்றும் லீலாவதி. அவர்களைப் பார்த்ததும் பாசத்தில் கண்கள் கலங்கின. பின்னர் ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் சேர்ந்து சொல்லி, அவர் கூறும் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஐயர், “கன்னிகாதானம் பண்ணணும் பொண்ணோட அப்பா அம்மா வாங்க” என்றார். அப்போது தீஷிதன் புகழைப் பார்க்க அவன் துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வரச் சென்றான். பரந்தாமன் ஐயரிடம், “ஐயரே சம்யுக்தாவோட அம்மா அப்பாக்கு பதிலா என்னோட தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் செய்யலாமா?” என்றார். 

இதைக் கேட்டதும் லீலாவதி அங்கிருந்து எழுந்து, “அதெப்டி சம்முவோட அம்மா அப்பா நாங்க இருக்கும் போது இவங்க செய்யணும்?” என்றார். அப்போதுதான் வித்யா அவர்களைப் பார்த்தாள். 

‘ஐயோ என்ன அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறாங்க. இவங்களுக்கு எப்படி அக்காவோட கல்யாணம் தெரிஞ்சது?’ என்று யோசித்தாள். 

அப்போது வாய் திறந்தான் தீஷிதன், “நீங்க ஒண்ணும் யுக்தாவோட சொந்த அம்மா அப்பா இல்லையே.. அதுமட்டுமல்ல நீங்க அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு இப்போ எந்த உரிமைல கன்னிகாதானம் பண்ண வர்றீங்க?” என்று கேட்டதும், லீலாவதிக்கு கோபம் வர, “அவளுக்கு எங்களை விட்டா யாரும் இல்லை.. அம்மா அப்பா இல்லாத அநாதைக்கு போனா போகுதுன்னு இந்த சடங்கை பண்ணி வைக்கலாம்னா நீங்க இப்படி சொல்றீங்க?” என்றார். 

“ஹலோ மேடம் ஒரு நிமிஷம். நீங்க சொல்ற மாதிரி சம்யுக்தா ஒண்ணும் அநாதை இல்லை. அவளுக்கு பெரிய குடும்பமே இருக்கு. அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமானு எல்லா சொந்தமும் இருக்கு.” என்று தீஷிதன் சொல்லும் போதே மேடைக்கு துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வந்தான் புகழ். 

“அத்தை மாமா முன்னாடி வாங்க.” என்றுதும் அவர்கள் முன்னாடி வர, அப்போதுதான் பரந்தாமன், தமயந்தி, கிருபாகரன் எல்லோரும் துர்க்காவைப் பார்த்தனர். 

“துர்க்கா…”

“அக்கா..”

“துர்க்கா நீ எப்படிமா இங்க?”

“தீஷிதான் அண்ணா எங்களை கூட்டிட்டு வந்தான்.”

“அத்தை உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல.. அன்னைக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்க தொலைச்ச உங்க பிள்ளை இதோ இவதான், பேரு சம்யுக்தா” என்றான். இதைக் கேட்டதும் சபையே அமைதியானது. 

“தீஷி நீ… நீ சொல்றது?”

“நெஜம்தான் அத்தை. யுக்தா இவங்கதான் உன்னோட அப்பா அம்மா.. இனிமே உன்னை அநாதைனு யாரும் சொல்ல முடியாது. நீ என்னோட சொந்த அத்தை பொண்ணு..”என்றான். துர்க்கா பாய்ந்து அணைத்துக் கொண்டார் சம்யுக்தாவை. அவளும் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். 

சில நிமிடங்களில் பரந்தாமன், “துர்க்கா முதல்ல நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடக்கட்டும். மற்றதை அப்புறமா பேசிக்கலாம்” என்றார். 

“சரிங்க அண்ணா” என்றார் துர்க்கா. 

பின்னர் துர்க்காவும் கிருபாகரனும் சேர்ந்து சம்யுக்தாவை தீஷிதனுக்கு கன்னிகாதானம் பண்ணி வைத்தனர். அனைவரின் ஆசிர்வாதத்துடன் தீஷிதன் சம்யுக்தா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. 

திருமணம் நடந்து முடிந்ததும், வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் மணிகண்டன், லீலாவதி, பிரகாஷ் மற்றும் சீமாவை அங்கே அழைத்தான். 

“மிஸ்டர் பிரகாஷ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க வேணாம்னு சொன்னதாலதான் எனக்கு இப்பிடி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சிருக்காங்க.. அதே போல மிஸ்டர் மணிகண்டன் அண்ட் மிஸஸ் மணிகண்டன் உங்களுக்கு என்னோட நன்றி, நீங்க மட்டும் அன்னைக்கு நடுராத்திரி இவளை வீட்டை விட்டு அனுப்பலனா எனக்கு சம்யுக்தா கிடைச்சிருக்கமாட்டா, அவளுக்கும் அவளோட குடும்பம் கிடைச்சிருக்கமாட்டோம்” என்றான். 

“ரொம்ப பேசாதீங்க மிஸ்டர். இவளை கல்யாணம் பண்ணினதே வேஸ்ட். இவளால உங்களுக்கு ஒரு குழந்தை பெத்ததுக் குடுக்க முடியாது. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் லீலாவதி. 

இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அழுகை வந்தது. அவளது கையை இறுக்கிப் பிடித்த தீஷிதன் புகழைப் பார்க்க, அவன் ஒரு ரிப்போர்ட்டை தீஷிதனிடம் கொடுத்தான். அதை வாங்கியவன், “பிரகாஷ் நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. உனக்கு சீமாவைத்தான் பிடிச்சிருக்குனா அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. இவளை எதுக்கு கல்யாணம் பண்ணி இவளோட வாழ்க்கையை அழிச்ச? என்ன சொன்ன சம்யுக்தாவால குழந்தை பெத்துக்க முடியாதுனுதானே டைவர்ஸ் பண்ண? நீ சொல்றத யுக்தா நம்பலாம் மற்றவங்க யாரு வேணும்னாலும் நம்பலாம். ஆனால் நான் நம்ம மாட்டேன். இதோ இந்த ரிப்போர்ட்ல என்ன இருக்கு தெரியுமா? யுக்தாக்கு தாயாகுற அத்தனை தகுதியும் இருக்குனு சொல்றாங்க” என்றான். 

இதை எதிர்பார்க்காத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தாலும், “ என்ன சார் இவளை மற்றவங்க திட்டுறதுல இருந்து காப்பாத்த பொய் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கிறீங்களா?”

“வெல்டன் பிரகாஷ். நல்லா சொன்னீங்க போங்க, பொய் ரிப்போர்ட்தான் நீங்க சம்யுக்தா மேல போட்ட குற்றத்துக்கு உங்களோட டாக்டர் குடுத்தது. இதோ என்னோட கைல இருக்கிற ரிப்போர்ட் ஒரிஜினல்னு டாக்டர் குடுத்த ரிப்போர்ட். அதுமட்டுமல்ல நீங்க சொல்லி, பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு பொய் ரிப்போர்ட் குடுத்த அந்த டாக்டரும் தன்னோட தப்பை ஒத்தக்கிட்டாங்க.” என்றவன் அவர் பேசிய வீடியோவை எல்லோருக்கும் காட்டினான். 

“மிஸ்டர் பிரகாஷ் இதுக்கு மேல எங்க வழியில குறுக்க வந்தீங்க.. அப்புறம் இந்த தீஷிதனோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க.. பொறக்க போற இந்த குழந்தைக்காவது நல்ல அப்பாவா இருங்க” என்றான். 

தீஷிதன் சொன்னதை கேட்ட சம்யுக்தா தனது கண்களை துடைத்து விட்டு பிரகாஷ் முன்னால் வந்தவள், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வேறு எதுவும் பேசாமல் தீஷிதன் அருகில் வந்து நின்று கொண்டாள். பிரகாஷிற்கோ சீமாவுக்கோ எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். 

“இதுக்கு மேல நீங்க இங்க இருக்கவே கூடாது.. கெட் லாஸ்ட்” என்றான் தீஷிதன். அவர்களும் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல, தீஷிதன் அடுத்து மணிகண்டன், லீலாவதி பக்கம் வந்தான். 

“தாய்னா யாருனு தெரியுமா? பிள்ளை ஒரு கஷ்டம்னா தன்னோட உயிரைக் கூட கொடுப்பாங்க. ஆனால் நீங்க எல்லாம் தாயா இல்லை ஒரு மனுஷனா இருக்கவும் தகுதி இல்லாதவங்க. ஒரு பொண்ணு மனசு உடைஞ்சி உங்ககிட்ட வரும்போது அவளுக்கு ஆதரவா இல்லைன்னாலும் மேலும் கஷ்டப்படுத்தாம இருந்திருக்கலாம்.. நீங்க என்ன பண்ணீங்க அவளை நடுரத்திரியில போட்டிருக்க ட்ரெஸ்ஸோட வீட்டை விட்டு அனுப்பியிருக்கிறீங்க.. அதனாலதான் இப்போ நீங்க இருக்க இடம் இல்லாம கஷ்டப்படுறீங்க. இதுதான் நான் உங்களுக்கு குடுக்கிற தண்டனை” என்றான். 

“ஏய் நீ எங்களை பற்றி பேசுறியா? நீ இவகூட குடும்பம் நடத்து இல்லை கும்மியடி எங்களுக்கு என்ன வந்துது. என் பொண்ணு வித்யாவை கூட்டிட்டு நாங்க இங்க இருந்து போயிடுறம்” என்ற லீலாவதி வித்யா அருகதை வர, வித்யா விக்ராந்த் கையை பிடித்துக் கொண்டு அவருடன் வர மறுத்தாள். 

“இல்லை நான் உங்ககூட வர மாட்டேன்.”

“ஏய் யாருடி இவன். இவன் கையை பிடிச்சிட்டு நிற்கிற வா போகலாம். உன்னால்தான் இப்போ சொத்து எல்லாம் இழந்திட்டு நடுரோட்டில நிற்கிறம். வா போலாம்” என்றார் லீலாவதி. 

“நான் வரமாட்டேன்.” என்றவளை அடிக்க கை ஓங்கினார் லீலாவதி. ஓங்கிய அவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் விக்ராந்த். 

“ஹலோ மேடம், அதுதான் அவ வரலனு சொல்றால்ல அப்புறம் என்ன, அவளை விட்டுட்டு நீங்க இங்க இருந்து கிளம்பலாம்.”

“அதை சொல்ல நீ யாருடா?”

“நான் யாரா.. மை டியர் அத்தை நான்தான் உங்க பொண்ணு வித்யாவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை. இன்னைக்கு நைட் அத்தானோட ரிஷப்ஷன் மட்டுமல்ல எங்களோட என்கேஜ்மென்டும் இருக்கு.”

“என்ன என்கேஜ்மென்டா? யாருக்கு யாரு மாப்ள? உனக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர முடியாது”

“அதை நீங்க சொல்ல முடியாது அத்தை. என்னோட கல்யாணம் வேணாம்னு வித்யாதான் சொல்லணும்”

“வித்யா சொல்லு இவன் உனக்கு வேணாம்.. நாங்க நல்ல மாப்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன் வா என்கூட” என்றார். 

“போதும் நிறுத்துங்க.. எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? இப்போ உங்கிட்ட ஒரு சொத்தும் இல்லை. உங்களுக்கு பணம் வேணும்னா என்னை யாருக்கும் விக்ககக் கூட நீங்க தயங்க மாட்டீங்க.. உங்களோட வர்றது எனக்கு பாதுகாப்பில்ல” என்றவள் தீஷிதனிடம் வந்து, “மாமா என்னை அவங்க கூட அனுப்பாதீங்க, சொத்துக்காக அந்த கேடுகெட்ட விக்டர்க்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தவங்க, இப்போ பணத்துக்காக என்னை யாருக்கும் வித்தாலும் விப்பாங்க.. நான் அவங்க கூட போகல மாமா” என்றாள். அவளது தலையை வருடிக் கொடுத்த தீஷிதன். 

“எந்த பிள்ளையும் பாதுகாப்பை உணர்வது பெத்தவங்ககிட்டதான். ஆனால் எப்போ அந்த பெத்தவங்ககிட்டேயே பாதுகாப்பு இல்லைனு இவ சொன்னாளோ அப்பவே நீங்க தரம் குறைஞ்சி போயிட்டீங்க.. இதுக்கு அப்புறம் உங்களுக்கு இங்க இடம் இல்லை. நீங்க கிளம்பலாம்” என்றான். 

அவனை எதிர்த்து பேச முடியாமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியது ஒரு குரல். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana October 5, 2025 - 8:09 pm

Superb divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!