Episode – 08
அவனின் உள்ளம் வன்மத்தில் திளைக்க, அவளின் உள்ளம் பயத்தில் தத்தளிக்க, மீட்டிங்கும் ஆரம்பம் ஆனது.
அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னவன்,
“இனி மேல் இந்தக் கம்பெனி மொத்தமும் என்னோட கண்ட்ரோலுக்கு கீழ வருது. என்னோட ரூல்ஸ் கொஞ்சம் வித்தியாசம் தான். எல்லாம் பேர் பெக்ட்டா இருக்கணும். இல்லன்னா…. நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டன். டிரக்ட் டெர்மினேஷன் தான். சோ, எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நான் வைக்கிறது தான் இங்க சட்டம். என்ன மீறியோ, எதிர்த்தோ இங்க யாரும் எதுவும் செய்ய முடியாது.”
“அப்படி, ஏதும் நடந்தா…. அதுக்கு பிறகு அவங்க என்னோட இன்னொரு கொடூர முகத்தை பார்க்க வேண்டி இருக்கும். எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறன். நீங்க எல்லாரும் சரியா வேலை செய்தா…. அதற்கு உரிய பாராட்டும், சன்மானமும் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும். ஆனா…. அதற்கு எதிர் மாறா நடந்தா…. அதற்கு உரிய பலன் தான் உங்களுக்கு கிடைக்கும். சோ, என்னோட நடத்தை உங்களோட செயல்கள்ல தான் தங்கி இருக்கு.” என சொர்ணாவை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு கூறியவன்,
ஒரு நிமிடம் பேச்சை நிறுத்த, அங்கு உள்ளவர்கள் அனைவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பேய் அறைந்தது போன்ற முகத்துடன் அமர்ந்து இருந்தனர்.
அவர்களுக்குள், “என்னடா இது நமக்கு வந்த சோதனை?” என்கிற எண்ணம் தான் வியாபித்து இருந்தது.
வந்த முதல் நாளே இப்படி எல்லாம் சொன்னால் யாருக்கு தான் பயம் வராது.
ஆரண்யனுக்கும் அது தானே வேண்டும். ஆரம்பத்திலேயே மிரட்டி வைத்து இருந்தால் தானே, யாரும் அவனை மீறி ஒரு விரலைக் கூட உயர்த்த மாட்டார்கள்.
அந்த ஒரு காரணத்துக்காகவே, அவன் அனைவரையும் மிரட்டி வைத்திருக்க எண்ணினான்.
அவனது எண்ணப்படி தான் அங்கு அனைத்தும் நடந்தது.
“யாரும் ஏதும் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.” என ஆரண்யன் கூற,
அங்கு உள்ளோர், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தனரே தவிர, வாய் திறக்கவில்லை.
ஐந்து நிமிடங்கள் அமைதியாக நின்று இருந்தவன், அனைவரும் அப்படியே அமர்ந்து இருக்கவும்,
“ஓகே…. உங்க டைம் ஓவர். உங்களோட தளங்களுக்கு நீங்க போகலாம். நான் ஒவ்வொரு நாளும் கண்டிப்பா எல்லா தளத்திற்கும் விசிட் பண்ணுவன். அப்போ எனக்கு யாரும் தப்பு பண்ற மாதிரி தெரிஞ்சுதுன்னா அந்த நிமிஷமே வேலைய விட்டு தூக்கிடுவன். என்ன ஓகே தானே?” என கேட்க,
எல்லோரும் எல்லாப் பக்கமும் தலையை ஆட்டினர்.
சொர்ணாக்கோ, நெருப்பு வளையத்திற்குள் நிற்கும் உணர்வு.
வேலை செய்யும் நார்மல் ஆட்களையே இப்படி மிரட்டிக் கொண்டு இருப்பவன், தன்னை எப்படி எல்லாம் கொடுமை பண்ணப் போகிறான் என கலங்கிப் போனவளுக்கு, தொண்டைக்குள் இதயம் துடித்தது.
சற்று நேரத்தில் மீட்டிங்கும் முடிய,
முதல் ஆளாய், அருணாவை இழுத்துக் கொண்டு வெளி யேறி, தனது தளத்திற்கு வந்து சேர்ந்தாள் பெண்ணவள்.
அடுத்த கணம் மேசையில் இருந்த நீரை எடுத்து அவசரமாக அருந்தி விட்டு, தன்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு நிமிர,
அவளையே பார்த்து முறைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தாள் அருணா.
சொர்ணாவோ, “இப்போ எதுக்கு என்னைப் பார்த்து முறைக்கிறாய் அருணா?” என பாவமாக கேட்க,
“முறைக்காம என்னடி பண்ண சொல்றாய்?, எதுக்குடி இப்படி ஓட்டப் பந்தயத்தில ஓடுற மாதிரி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடி வந்தாய்?, கொஞ்ச நேரம் அங்கயே நின்னு இருக்கலாம் தானே. நம்ம ஹீரோவை நான் கொஞ்சம் ரசிச்சு இருப்பன்.”
“டெரரா இருந்தாலும் மனுஷன் வேற லெவல் அழகா இருக்கார் இல்ல…. நீ ரசிக்கலன்னா…. என்னயாச்சும் ரசிக்க விடுடி.” என கத்த,
ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு இன்னும் எரிச்சல் வர,
“கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இரு அருணா. நானே கடுப்பில இருக்கன். நீ வேற சும்மா வள வளன்னு ஏதாச்சும் சொல்லிக்கிட்டு…. அவன் அழகா இருக்கிறது தான் இப்போ முக்கியமா…. ராட்சசன் மாதிரி ரூல்ஸ் போடுறான். ஒர்க்கர்ஸ்னா என்ன அவ்வளவு கேவலமா…. சும்மா சும்மா இஷ்டத்துக்கு மிரட்டிக்கிட்டு. எப்படி தான் உங்களுக்கு எல்லாம் அவன் அழகா தெரியுறானோ….” என பொரிந்து தள்ள,
“ஹே…. ரிலாக்ஸ்…. ரிலாக்ஸ்…. ஏன் இப்போ இவ்வளவு கோபம் வருது உனக்கு?, நீ இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டீயே. ஏதும் பிரச்சனையா?, லஞ்ச் அவர்ல ஓகேவா தானே இருந்தாய். அதுக்குள்ள என்னச்சு?” என கேட்க,
ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவள்,
“சாரிடி…. ஏதோ ஒரு கோபத்துல….” என ஆரம்பித்தவள், அதற்கு மேலே பேச முடியாது கண் கலங்கி நிற்க,
“என்னாச்சு உனக்கு நீயா கோபப் படுறாய்?, அப்புறம் கண் கலங்குறாய்?,மாறி மாறி சொல்றாய்?” என அவளின் தோளில் மென்மையாக தட்டியபடி அருணா கேட்க,
“ஒண்ணும் இல்ல….. என்னவோ மனசு சரி இல்லை அது தான்.” என கூறியவளை,
மென்மையாக அணைத்துக்கொண்ட அருணா,
“ஓகே ரிலாக்ஸ். சில நேரம் அப்படி இருக்கும் தான். போய் ரிலாக்ஸா வேலையப் பாரு.” என கூறி அனுப்பி விட,
“சாரிடி.” என மீண்டும் குற்ற உணர்ச்சி தாங்காது மன்னிப்பு கேட்டாள்.
“ஏய்…. என்னது இது சொர்ணா மாமி?, இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்கப்படாது. அப்புறம் ஜான் என்ன செய்யும்? நானும் உன்ன என்ன பாடு படுத்தி இருக்கேன் அதுக்கெல்லாம் நான் காலுல விழட்டுமா?” என கேட்டு குனிய,
அவளின் எல்லா ஸ்லாங்கும் கலந்த பேச்சிலும், செய்கையிலும் சொர்ணாவும் சிரித்துக் கொண்டே,
“சரியான அரட்டை நீ.” என கூறிய படி, அங்கிருந்து விலகி சென்றாள்.
அவள் போய் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், அந்த தளமே, பரபரப்பாக மாற, தளத்திற்குள் நுழைந்து, அங்குள்ள மேனேஜர் கேபினிற்குள் புகுந்து கொண்டான் ஆரண்யன்.
அவனுடன், அங்கு வேலை செய்த மேனேஜிங் டைரக்டர்களும் கூடவே வந்து இருந்தனர்.
சொர்ணாவைக் கடந்து போகும் போது மட்டும் அவனது கால்கள் ஒரு நொடி நின்று அவளின் புறம் அவனது கடைக் கண் பார்வை சென்று மீண்டது.
சொர்ணாவோ, நிமிர்ந்தும் கூட யாரையும் பார்க்காது தனது வேலையைக் கருமமே கண்ணாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அவன் அவளது கேபினைத் தாண்டிச் செல்லும் அந்த ஒரு நொடியில் அவளின் மனம் பட்ட பாடு அவள் மாத்திரமே அறிவாள்.
அப்படி ஒரு படபடப்பு நெஞ்சுக்குள் உண்டானது.
அவன் கேபினுக்குள் நுழைந்து சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து மற்ற மேனேஜிங் டைரக்டர்கள் யாவரும் வெளியே செல்ல இறுதியாக வெளியில் வந்த ஒருவர்,
அவளது கேபின் அருகே நின்று,
“சொர்ணா, சார் உங்கள கூப்பிடுறார். அவருக்கு கொஞ்சம் அசிஸ்ட் பண்ணுங்க. சார் கேட்கிற டீடெயில்ஸ் எல்லாம் கரெக்டா கொடுத்துடுங்க.” என கூறிவிட்டுச் சென்றார்.
“ஆஹா வந்ததும் ஆரம்பிச்சிட்டானே. சொன்னது போல இன்னைக்கு நானாவே அவனுக்கு முன்னால போய் நிக்கிற மாதிரி பண்ணிட்டான். சரியான காட்டு மிராண்டி. பார்க்க தான் பந்தாவா இருக்கான். ஆனா இப்படி ஒருத்தர பழி வாங்க இப்படி இறங்கி வேலை செய்றான். என்ன ஆள் தான் இவன்….” என மனதிற்குள் திட்டிக் கொண்டு எழுந்து அவனது கேபினிற்குள் அனுமதி கேட்டுக் கொண்டு சென்றாள் சொர்ணா.
அவளை உள்ளே அழைத்தவன்,
“வெல்கம் டு ஹெல்ட் மிஸ் சொர்ணாம்பிகை…. என்ன நான் சொன்ன மாதிரி பண்ணிட்டனா?” என அவளைப் பார்த்து கேலிப் பார்வையுடன் வினவ,
வாயை அழுத்தமாக மூடிக் கொண்டு நின்றவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவள் தன்னை நிமிர்ந்து பார்க்காதது ஆணவத்தின் உச்சம் என தனக்குத் தானே எண்ணிக் கொண்டவன்,
அங்கிருந்து பேனையை எடுத்து மேசையில் சத்தமாக தட்டி,
“ஒரு சுப்பிரியர் ஆபிசர் இப்படி கேள்வி கேட்டா…. உங்களோட ரிப்ளை பண்ற பழக்கம் இது தானா மிஸ் சொர்ணாம்பிகை?” என அழுத்தமாக கேட்க,
அவனை பட்டென நிமிர்ந்து பார்த்தவள்,
“சாரி சார்.” என மெதுவாக கூற,
“இப்படித்தான் மன்னிப்பு கேட்பீங்களோ…. சத்தமே காணலயே, இன்னும் சத்தமா….” என்று சொல்லி மேலும் அவளை வெறுப்பேற்றியவன்,
அவள், “சாரி சார்…. சாரி சார்….” என பத்துத் தரம் சத்தமாக சொல்லும் வரையும் அவளை விடவில்லை.
ஒரு ஐந்து நிமிஷத்துக்குள்ளாகவே அவளுக்கு,
“ஏன்டா இவனுக்கு கீழ வேலை செய்யத் தான் வேணுமா?” எனும் அளவிற்கு படுத்தி எடுத்து விட்டான் அவன்.
“சாரி…. சாரி….” என பல தடவை சொல்லி முடித்தவள்,
“சார் எதுக்காக என்ன இப்போ கூப்பிட்டீங்க?, என்ன டீடெயில்ஸ் உங்களுக்கு வேணும்?, என்னோட சைட்ல இருந்து அசிஸ்ட் பண்ண நான் ரெடி சார்.” என கூறிவிட்டு அவனைப் பார்க்க,
அவனோ, லேப்டாப்பை திறந்து வேலை செய்து கொண்டு போனை எடுத்து அடுத்தடுத்த ஆர்டர்களை மற்றவர்களுக்கு பிறப்பித்துக் கொண்டிருந்தானே தவிர அவள் பேசுவதையோ அவள் நிற்பதையோ கண்டு கொள்ளவில்லை.
ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் அவள் அதே பொசிஷனில் நின்று கொண்டிருக்க அவன் அதனைக் கவனிக்காதது போல தனது வேலைகளில் கவனம் செலுத்தினான்.
சொர்ணாக்கு, அவனது செய்கைகள் ஒவ்வொன்றும் பழிவாங்கும் படலத்தின் ஒரு அங்கம் எனப் புரிந்த போதும், கை நீட்டி பேச முடியாது அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.
“அன்னைக்கும் இத தான் பண்ணினான். இன்னைக்கும் அதையே பண்றான் சரியான சாடிஸ்ட் போல. இவனை எல்லாம் போய் அழகுன்னு புகழுறவங்கள சொல்லணும்.” என உள்ளுக்குள் அவளை கண்டபடி திட்டித் தீர்த்தாள் சொர்ணா.
அவனோ, “நில்…. நில்…. நல்லா கால் வலிக்க நில்லுடி. அப்போ தான் உனக்கு கொஞ்சம் கொழுப்பு குறையும்.” என மனதிற்குள் எண்ணிக் கறுவிக் கொண்டான்.
சொர்ணாக்கு ஒரு அளவுக்கு மேல் இயலாது போக, கால்கள் நடுங்க ஆரம்பித்தது.
ஆனாலும் பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தவளுக்கு, அதற்கு மேலும் முடியாது போக,
கால்கள் துவள விழ ஆரம்பித்தாள்.
அவள் சரியவும், அதுவரையும் வேலைகளில் கவனமாக இருந்தவன்,
பட்டென பாய்ந்து அவளைத் தாங்கிக் கொண்டான்.
அவளும் ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்.
அவளது பார்வையில் ஒரு கணம் புருவம் சுருக்கி விரித்தவன்,
அடுத்த கணம்,
“என்ன இப்படியே இருக்கிற எண்ணமா உனக்கு?, சும்மா சீன் போட்டுக் கிட்டு. முடியலன்னா சொல்லணும். அதுக்கும் பிடிவாதம் பண்ணினா…. இப்படித் தான் ஆகும். என்னோட கேபினுக்குள்ள நீ மயங்கி விழுந்தா அது எனக்கு தான் கெட்ட பெயரைக் கொண்டு வரும். நீ விழுறதுல எனக்கு பிரச்சனையே இல்லை. என்னோட கேபினுக்குள்ள விழாமல் நீ ஜன்னலுக்கு மேலால குதிச்சாலும் எனக்கு கவலை இல்ல.” என கூறி அவளைக் கதிரையில் அமரும் வண்ணம் தள்ளி விட்டான்.
பேலன்ஸ் தடுமாறினாலும் சமாளித்து அமர்ந்தவள் அவனது கதையில் நொந்து போய் அடுத்து என்ன என்பது போல் பார்க்க,
மேசையில் இருந்த நீரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவளோ, தர்க்கம் பண்ணாது வாங்கி அருந்த, அவள் குடிக்கும் வரையும் பொறுமையாக கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தவன்,
அவள், குடித்து முடிக்கவும், அவளது கதிரையின் இரு புறமும் கையை வைத்துக் கொண்டு அவளை நோக்கி குனிந்து ஆழ்ந்து பார்த்தான்.
சொர்ணாவோ, தலையை பின்னே சாய்த்து அவனைப் பயந்து போய் பார்க்க,
“என்ன நான் சொன்ன படி செய்து முடிச்சனா?” என சற்று உறுமலுடன் கேட்டான் ஆரண்யன்.
அவனது கோபம் மாறுமா?
இனி சொர்ணா அவனது கைகளில் பொம்மையாக மாறுவாளா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.
திரும்ப வந்தாச்சு மக்காஸ்…வேலைகள் கொஞ்சம் அதிகமா இருந்துது.. அதனால தான் இந்தப் பக்கம் வர முடியல…இனி முடிந்த அளவு வேகமாக எபிகள் வரும்.
அடுத்த எபி சனிக்கிழமை வரும்…😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….