மின்சார பாவை-7

5
(6)

தன்னை கோபமாக பார்த்துக்கொண்டு செல்லும் தீபிகாவை பார்த்ததும் முகமும், அகமும் மலர,” பேபி”என்று சத்தமாக அழைத்தாள் வெண்ணிலா.

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

“ என் பேபிக்கு என்ன ஆச்சு? பாத்தும் பாக்காத மாதிரி போறா?” என்று வெண்ணிலா முணுமுணுக்க.

 சபரீகாவோ, “ உன் பேபி… உன் மேல கோவமா இருக்காங்க போல. அதான் கண்டுக்காமல் போறா.”

“ நான் என்ன பண்ணேன்.” என்று வெண்ணிலா குழம்ப.

“அவங்களுக்கு உன்ன விட அவங்க ப்ரெண்டு தான் ரொம்ப முக்கியம். அதான் கோபமா இருக்காங்க.” என்றாள் சபரீகா.

“ஓ!” என்ற வெண்ணிலாவின் குரல் மெதுவாக ஒலிக்க.

“இப்ப எதுக்கு அந்த தேவையில்லாத விஷயம்? நாம வேறே பேசலாமே?” என்றாள் மஹதி.

“ ஆமாம் மஹி சொல்றது தான் கரெக்ட்.” என்று ஹரிஷும் வர.

“டேய் எருமை! இப்போ நீ குடும்பஸ்தனாகிட்ட. இப்பவாவது நீ மஹிக்கு ஆமாம் சாமி போடுறதை விட்டுட்டு, நீயா ஏதாவது சொல்லேன் டா.” என்று வெண்ணிலா அலுத்துக் கொள்ள .

“நிலா! இப்போ தான் இன்னும் கரெக்டா மனைவி சொல்றதுக்கு தலையாட்டணும். அனுபவஸ்தன் சொல்றேன் கேட்டுக்கோ.” என்று ஹரிஷ் கூற.

மஹதியோ அவனைப் பார்த்து முறைக்க, எல்லோரும் நகைத்தனர்.

“பார்வையாலே மிரட்டுனது எல்லாம் போதும் மஹி! மீதியை வீட்ல போய் வச்சுக்கோ. இப்போ நாம உள்ள போலாமா? இன்னைக்கு என்ன பிளான்?”என்று வெண்ணிலா வினவ.

“ இன்னைக்கு பெருசா ஒன்னும் ப்ரோக்ராம் இல்ல. கரண்ட் ஸ்டூடண்ட்ஸ் நமக்கு வெல்கம் பண்றதுக்காக ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணிருக்காங்க. ரெண்டு நாள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அப்போ தான் எல்லோரோடும் நாம மிங்கிளாக முடியும்.” என்றான் நகுலன்.

“சூப்பர்! ஜாலியா ஃபன் பண்ணலாம். எப்படி காலேஜ் படிக்கும் போது தெறிக்க விட்டோமோ, அதே போல செய்யலாம். ஆமா மதன் சார் வந்துட்டாரா?”

“வெனஸ்டே அன்னைக்குத் தான் சார் வருவார் நிலா. அவருக்கு இப்படி ஒரு பங்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்குறேதே தெரியாது. இது ஒரு பெரிய சர்ப்ரைஸ்.” என்றாள் சபரீகா

“ வெனஸ்டே அன்னைக்குத் தான் வருவாரா?” என்று ஏமாற்றத்துடன் வினவ.

“ரீயூனியன் க்ரூப்ல எல்லா அப்டேட்ஸும் போட்டுருந்தாங்களே. பார்க்கலையா?” என்று அவளது தலையில் தட்டினான் நகுலன்.

“ப்ச்! அதுல நிறைய மேசேஜ் வந்துட்டே இருந்ததா, அதான் கவனிக்கலை. அப்புறம் வேற என்ன ப்ரோக்ராம்?”

“ வெனெஸ்டே அன்னைக்கு ஒவ்வொரு பேச் ஸ்டூடண்ட்ஸஸ் வந்து சாரைப் பத்தி பேசுறது, அப்புறம் கிஃப்ட் கொடுக்குறது, போட்டோ எடுக்குறதுன்னு அன்னைய நாள் போயிடும்.

காலேஜ் சார்பா பேர்வெல் பார்ட்டி, அடுத்த நாள். மதன் சாருக்கு, சென்ட்ஆஃப் கொடுத்துட்டு, இங்க உள்ளவங்களுக்கும் பை, பை சொல்லிட்டு நம்ம ஜாலியா மீதி ரெண்டு நாளை என்ஜாய் பண்ண போறோம்.” என்று சபரீகா கூற.

“அச்சோ! என்ன சொல்றீங்க ? தெர்ஸ்டேவோட காலேஜ்ல வேலை முடிஞ்சிடுமா. இது தெரியாம நான் எங்க மாமாவ வேற வீக்கெண்ட்ல வர சொல்லி இருக்கேன்.” என்று வெண்ணிலா கூறிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வர,

“ஓ காட்!” என்றவாறே வேகமாக எழுந்தாள்.

“ப்ச்! இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டம்? ரிலாக்ஸ் நிலா.” என்று நகுலன், அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“ ஓ மை காட்! உங்கக் கிட்ட பேசிட்டே இருந்ததுல வீட்டுக்கு கால் பண்ண மறந்துட்டேன்.” என்றவள் ஹாண்ட் பேக்கிலிருந்து போனை எடுத்துப் பார்த்தவள், லேசாக தலையை தட்டிக் கொண்டாள்.

கிட்டத்தட்ட இருபது மிஸ்டுகால் வந்திருந்தது.

“மிது காலேஜுக்கு போய் இருப்பா. அத்தை சமையல்ல பிசியா இருப்பாங்க. கடைசியா மாமா கிட்ட தான் மாட்டணும்னு தலையில எழுதி இருக்கு.” என்று புலம்பியவாறே சற்றுத் தள்ளி நின்று தீரனுக்கு அழைத்தாள்.

“ஹலோ! மாமா!” என்று தயக்கத்துடன் அழைக்க.

“ஏன் மா! உன் ஃப்ரெண்ட்ஸ், உனக்கு வேண்டியவங்க எல்லோரையும் பார்த்து முடிச்சாச்சா? இப்போ தான் எங்க ஞாபகம் வந்ததா!” என்று தீரன் கிண்டலாக வினவ.

“மாமா!” என்று இழுத்தாள் வெண்ணிலா.

“கார்ல போன்னு சொன்னாலும் கேட்கலை. போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணுன்னு படிச்சு, படிச்சு சொன்னதையும் கேட்கலை. பண்ண காலையும் அட்டெண்ட் பண்ணல. உன்னை என்ன செய்யிறது.”

“சாரி மாமா! ஃப்ரெண்ட்ஸுங்களோட பேசிட்டு இருந்ததுல மறந்துட்டேன். ஃபோன் வேற சைலண்ட்ல இருந்திருக்கு‌.”

“அதான் சொன்னேனே. நீ உன் ஃப்ரெண்ட்ஸுங்களைப் பார்த்ததும் எங்களை மறந்திருப்ப. இதுல இனியை பார்த்துக்கணும்னு போக மாட்டேன்னு சொன்ன பாரு, அதைத் தான் தாங்க முடியலை‌.”

“மாமா! ஓவரா கிண்டல் பண்ணாதீங்க. என் பட்டுக்க்குட்டியை ரொம்ப மிஸ் பண்றேன். அவ எங்கக் குடுங்க.”

“அவ ஸ்கூலுக்கு போய் இரண்டு மணி நேரமாகுது. ஸ்கூலுக்கு கிளம்பினவ உனக்கு பாய் சொல்லணும்னு ஒரே அடம். நானும் உனக்கு போட்டுட்டே இருக்கேன், நீ அட்டெண்ட் பண்ணவே இல்லை. அவளை சமாளிச்சு ஸ்கூலுக்கு அனுப்புறதுக்குள்ள போதும், போதும்னாச்சு.”

“சாரி மாமா! ஃபோனை சைலண்ட்ல போட்டுட்டேன்.” என்று நெற்றியில் தட்டிக் கொண்டே கூற.

“இட்ஸ் ஓகே! போனை சைலன்ட்ல போடாத நிலா! எமர்ஜென்சினா காண்டாக்ட் பண்ண முடியாது. அப்புறம் இதையே நெனச்சிட்டு என்ஜாய் பண்ணாம இருக்காதே. காலேஜ்ஜை நல்லா சுத்திப் பாத்துட்டு, முஸ்தபா முஸ்தபான்னு பாட்டுப் பாடி என்ஜாய் பண்ணு. அப்புறம் எங்களையும் கொஞ்சம் நியாபகம் வச்சுக்கோ.”

“அதெல்லாம் உங்களை மறக்க மாட்டேன்.” என்றவள்,”அச்சச்சோ மறந்துட்டேன்.”என்றுக் கூற.

அந்த பக்கம் தீரனோ, வாய் விட்டு சிரித்தான்.

“ மாமா சிரிக்காதீங்க. முக்கியமான விஷயம் சொல்லணும்னு தான் கால் பண்ணேன். அதை மறந்துட்டு வேற, எதை எதையோ பேசிட்டு இருக்கேன்.”

“அதைத்தான் நானும் சொல்கிறேன். அங்க போனதும் எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா சுத்துற”

“ஐயோ மாமா! நான் சொல்ல வந்ததை சொல்ல விடுங்க. அப்புறம் மறந்துடப் போறேன்.” என்றவள் கல்லூரியில் உள்ள விழா நிகழ்வுகளைப் பற்றி கூறியவள், வியாழக்கிழமை அன்றே வரணும் என்று அவனுக்கு கட்டளை இட்டு விட்டு போனை வைத்தாள்.

“என்னாச்சு நிலா? காலேஜ் படிக்கும் போது தான் உங்க அம்மாவுக்கு பயந்தேன்னுப் பார்த்தா, உங்க மாமியார் வீட்டுக்கும் இவ்வளவு பயப்படுற.” என்று கவலையாக நகுலன் வினவினான்.

“ச்சேச்சே! பயம்லாம் இல்லை. ஆனால் கொடைக்கானலுக்கு வந்ததும், வீட்டுக்கு போன் பண்ண மறந்துட்டேன். அதான் எங்க மாமா கிண்டல் பண்ணாங்க. மத்தபடி எங்க வீட்ல உள்ள எல்லாரும் ரொம்ப நல்லவங்க.” என்றவளது முகம் விகசித்தது.

அவளைக் கனிவுடன் பார்த்த நகுலனோ, அன்று கல்லூரியின் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்க கடந்த காலத்திற்கே சென்று விட்டான்.

அன்று (காதல் பண்ணியது)

கல்லூரி ஆரம்பித்து, புதிதாக சேரும் மாணவ, மாணவிகளுகளை வரவேற்கும் விதமாக நடக்கும் சீனியர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் ,அறிமுகப்படுத்தி கொள்ளும் விழாவும் ஆரவாரமாக நடந்து முடிந்து வகுப்புகள் நடக்க ஆரம்பித்தது.

வெண்ணிலா எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிப்பில் படு சுட்டி.

வகுப்புகளில் தீவிரமாக பாடங்களை கவனித்து அவளுக்கு ஏற்படும் ஆயிரம் சந்தேகங்களையும் ஆசிரியர்களிடம் உடனுடன் கேட்டு அவர்களை திணறடிப்பவள். அதே போல் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொட்டமடிப்பாள்.

வெண்ணிலா தனக்கருகே அமர்ந்து இருந்த சபரீகா, மஹதி இருவரிடமும் நட்புக்கரம் நீட்ட.

அவர்களுக்கும் வெண்ணிலாவின் குறும்புத்தனம் பிடித்திருந்தது. ஏற்கனவே நகுலன் அவனாகவே வந்து பேச, அவனது நண்பன் ஹரிஷும் அவர்களது அணியில் ஐக்கியமானான்.

இந்த ஐவர் குழு பஞ்சபாண்டவர் க்ரூப் என்றுக் கூறிக் கொண்டு சுற்றி வந்தனர்.

அன்றும் மதியத்திற்கு மேல் வகுப்பு இல்லாமலிருக்க, எப்பொழுதும் போல், என்ட்ரென்ஸில் உள்ள குட்டி சுவரில் அமர்ந்து கலாட்டா செய்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பக்கமாக வந்த தீபிகாவோ இவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றாள்.

“ இந்த அக்கா ஏன் தான் என்னைப் பார்த்து எப்போதும் ரொமாண்டிக் லுக் விட்டுட்டு போறாங்கன்னே தெரியலை.” என்று வெண்ணிலா கூற.

சபரீகா,” ஏன்னா நீ ரொம்ப அழகா இருக்க. அதான்.” என்றுக் கூறி சிரிக்க.

“கடவுளே ! என்னை ஏன் தான் அழகா படைச்சியோ.” என்றுக் கூறி வெண்ணிலா நகைக்க.

அங்கு எல்லார் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

“நிலா! பீ சீரியஸ். நீ பண்ண காரியத்துக்கு தான் அவங்க கோபமா இருக்காங்க.” என்று நகுலன் கண்டிப்புடன் கூற.

“நான் என்ன பண்ணேன் நகுல்.”

“நீ பண்ணதை மறந்துட்டியா? சீனியர் ஜாலிக்காக கலாய்ச்சா, நீ உடனே சார் கிட்ட டைரக்டா போயிடுவியா?” என்று நகுலன் வினவ.

“நீ உங்க அண்ணனோட க்ரூப்புக்குத் தான் சப்போர்ட் பண்ணுவ.” என்று முகத்தை திருப்பினாள் வெண்ணிலா.

“ப்ச்! சும்மா ஃபன்னுக்காக தான் செஞ்சாங்க. அதை நீ சார் வரைக்கும் எடுத்துட்டு போயிட்ட. அதான் இப்போ அவங்க உன் மேல செம கோவத்துல இருக்காங்க. மறுபடியும் உன்கிட்ட வம்புக்கு வருவாங்களோன்னு எனக்கு தான் பயமா இருக்கு.”

“வந்தா வரட்டும். நான் ஒரு கை பாத்துக்குறேன். நீ ஏன் பயப்படுற விடு நகுல்.”

“ப்ச்! நிலா! அவங்க சீனியர்னு கெத்து காண்பிக்க நினைக்குறாங்க. நீ பிரச்சனையை பெருசு பண்ணாம அவங்க சொல்றத செஞ்சுடு. ப்ளீஸ் நிலா!” என்று நகுலன் கெஞ்ச.

“சரி போ! உனக்காக ஒரு தடவை வேணும்னா அவங்க சொல்றதை செய்யுறேன். ஆனால் அடுத்த முறை எல்லாம் பொறுமையா இருக்க மாட்டேன். லூசு பசங்க! ஏதாவது இன்ட்ரஸ்டிங்காக செய்ய சொல்றாங்களா, அது கிடையாது. மொக்கையா எழுது, படின்னு உசுர வாங்குதுங்க.” என்று புலம்பினாள் வெண்ணிலா.

அவளைப் பார்த்து புன்னகைத்தான் நகுலன்.

ஆனால் இருவரும் அறியவில்லை, இந்த முறை ரகுலனின் நண்பர் பட்டாளம் வெண்ணிலாவை வச்சு செய்ய முடிவெடுத்தனர்.

அதற்கு காரணம் யுகித். அவனது பிரியமான மதன் சாரிடம் திட்டு வாங்க வைத்த வெண்ணிலாவை சும்மா விடுவதாக இல்லை.

தினமும் அவளை கவனிக்க ஆரம்பித்தான்‌.

 கல்லூரி முடிந்ததும் கொஞ்ச நேரம் கூட நண்பர்களோடு பேசாமல் முதல் ஆளாக அவள் வீட்டிற்கு கிளம்புவதை கவனித்தவன் ரகுலனிடம், “ரகு! அந்த வெண்ணிலா மட்டும் ஏன் சீக்கிரம் கிளம்புறா?.” என்று வினவ.

“தெரியலை யுகி! நான் வேணும்னா என் தம்பிக் கிட்ட கேட்குறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் கேட்க வேண்டாம். நம்மளே தெரிஞ்சுக்கலாம். மித்து! இன்னைக்கு அந்த வெண்ணிலா வீட்டுக்கு சீக்கிரம் போகக்கூடாது. அவ்வளவு தான்.”

“ என்னடா சொல்ற?” என்று ரகுலன் அதிர்ச்சியாக வினவ.

“ஷாக்கை குறை மச்சி.” என்று மித்ரன் சிரித்தான்.

“நீ ஏன் டா அதிர்ச்சியாகுற. இன்னைக்கு க்ளாஸ்ல நடந்ததை நோட்ல உடனே காஃபி பண்ணி தரச் சொல்லப் போறோம். அதுவும் இங்கே காலேஜ்ல வைச்சு எழுதி முடிச்சுட்டு, போகட்டும் அந்தப் பொண்ணு.” என்றவன், டூவீலர் பார்க்கிங்கில் சென்று வெண்ணிலாவிற்காக காத்திருந்தான்.

வழக்கம் போல காலேஜ் முடிந்து வீட்டிற்கு கிளம்பிய வெண்ணிலாவை மடக்கினர்.

“ என்ன?” என்று பார்த்தவளிடம், நோட்டை நீட்டிய யுகித்தோ, “இதுல இன்னைக்கு க்ளாஸ்ல நடந்ததை ஷார்ட்ஹேண்ட்ல எழுதியிருக்கேன். அதைப் பிராப்பரா இந்த நோட்ல எழுதணும்.” என்று நீட்ட.

“இது தானே! எழுதிட்டா போச்சு.” என்று, ஸ்கூட்டி சாவியை விரலில் சுற்றியபடியே நக்கலாக சிரித்தாள் வெண்ணிலா.

“யெஸ் அதே தான். பட் ஒன் திங். இங்கேயே இப்பவே எழுதணும்.” என்றவாறே அவளது கையிலிருந்த சாவியை பறித்தான் யுகித்.

“ ஹே! என் சாவி.” என்று பதறினாள் வெண்ணிலா.

அதை உயரமாகத் தூக்கிப் பிடித்தான் யுகித்.

சும்மாவே அவன் உயரம். இதில் கையை வேறு தலைக்கு மேல் உயர்த்தி வைத்திருக்க.

அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவோ, ‘ஹே! வளர்ந்துக்கெட்டவேனே.’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே,”விளையாடதீங்க சீனியர்! சாவியை தாங்க. டைமாயிடுச்சு. அம்மா திட்டுவாங்க.” என்றாள்.

“ஹே! என்ன இது? சின்னப்பிள்ளையாட்டம் அம்மா திட்டுவாங்க, ஆட்டுக்குட்டி திட்டுவாங்கன்னு சொல்லிட்டு இருக்க.” என்று மித்ரனும் கேலி செய்ய.

வெண்ணிலாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ரகுலனிடம் திரும்பி,”ரகுண்ணா! சாவியை குடுக்க சொல்லுங்க.” என்று வினவ.

“வெண்ணிலா! கொஞ்சம் தான் எழுதணும். அரைமணி நேரம் கூட ஆகாது. நான் இருக்கேன். பயப்படாதே.” என்று தைரியம் வேற கொடுத்தான் ரகுலன்.

‘அடேய்! நீங்க எல்லாம் காமெடி பீஸுனு தெரியும். நான் எங்கம்மாவை நினைச்சுத் தான் பயப்படுறேன்.’ என்று மனதிற்குள் புலம்பியவளோ, வேறு வழியில்லாமல் அங்கேயே அமர்ந்து எழுத ஆரம்பித்தாள்.

அவளுக்கு இருந்த பதட்டத்தில் கை வியர்க்க, பேனா அடிக்கடி நழுவியது. ஒரு வழியாக சமாளித்து எழுதி முடிக்கும் போது, நகுலன் அந்த இடத்திற்கு வந்தான்.

அங்கு வெண்ணிலாவைப் பார்த்ததும் பதறி, “ ஏய் நிலா அப்பவே வீட்டுக்கு கிளம்புறேன்னு சொன்ன? இன்னும் போகலையா நீ?” என்று வினவ.

அவனுக்கு பதில் சொல்லக் கூட தெம்பு இல்லாத வெண்ணிலா தலையை மட்டும் ஆட்டினாள்‌

“அண்ணா! என்னாச்சுடா?” என்று ரகுலனைப் பார்த்து முறைத்தான் நகுலன்.

“ஒன்னும் இல்லை நகுல்! உன் ப்ரெண்டு சாவியை தொலைச்சிட்டாங்க. தேடி கண்டுப் பிடிச்சிட்டோம்.” என்றவாறே சாவியை நீட்டினான் யுகித்.

வெடுக்கென்று அதைப் பிடுங்கியவள், வேகமாக வண்டியை நோக்கி சென்று ஸ்டார்ட் செய்தாள்.

“நிலா நில்லு…” என்றவாறே நகுலன் செல்ல.

வெற்றி சிரிப்புடன் அவளைப் பார்த்தவாறே அங்கிருந்து நகர்ந்தான் யுகித்.

பதட்டத்தில் அவளால் வண்டியை ஸ்டார்ட் செய்யவே முடியவில்லை.

“ரிலாக்ஸ் நிலா. எதுக்கு இவ்வளவு டென்ஷன்?” என்று நகுலன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“ப்ச்! லேட்டா போனா அம்மா திட்டுவாங்க.”என்றுக் கூறி கொண்டிருக்கும் போதே அவளது ஃபோன் அடிக்க.

வண்டியிலிருந்து கீழே இறங்கியவள், சற்றுத் தள்ளி சென்று தன் அன்னையிடம் பேசினாள்.

இல்லை, இல்லை அவளது அம்மா பேச, பேச கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக அவளது அம்மா ஃபோனை வைத்து விட.

முகம் வாட வந்தாள்.

“என்னாச்சு நிலா? தனியா வர்றதுக்கு எதுவும் சொல்றாங்களா? நான் வேணும்னா உன் கூட வரவா?” என்று நகுலன் வினவ.

“அச்சோ! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். காலேஜ் விட்டா உடனே வீட்டுக்கு வரணும்னு சொல்லியிருக்காங்க. லேட்டானா அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கணுமாம் மறந்துட்டேன்.” என்று இயந்திரத்தனமான குரலில் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் வெண்ணிலா.’

“ஹலோ மிஸ்டர் நகு! என்ன ட்ரீமா?” நகுலன் முன்னே கைகளை ஆட்டினாள் வெண்ணிலா.

“ஹான்!” என்றவாறே பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான் நகுலன்.

“உங்கம்மா எவ்வளவோ உனக்கு கெடுதல் பண்ணியிருந்தாலும், கடைசில உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்துட்டாங்க.” என்று நகுலன் கூற.

அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் வெண்ணிலாவின் முகம் இறுகி, பின் இயல்புக்குத் திரும்பியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!