“யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா.
“ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித்.
‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி இருக்குற இடம் தெரியாம வந்து நான் பேசுறதை ஒட்டு கேட்டுட்டு வந்து ஓட ஓட என்னை விரட்டுறீயே .’ என்று மனதிற்குள் புலம்பியவள், “அது வந்து சீனியர்…” என்று ஏதோ கூற வர.
“சீனியர்! பரவாயில்லை… அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா?” நக்கலாக வினவினான் யுகித்.
“நான் எதையும் மறக்கல.” அழுத்தமாகக் கூறினாள் வெண்ணிலா.
“ நல்லது! அப்ப நான் மட்டும் மறப்பேன்னு நினைச்சியா? ஈசியா என்ன பத்தி பேசுற?”
‘ஜயோ! விட மாட்டேன் போலயே இந்த நெட்டைக்கொக்கு.’ என்றவாறே அவனை, பார்த்தவள்,”சாரி சீனியர்! “ என்றாள்.
“சாரி எல்லாம் எனக்கு தேவை இல்லை. உன்னோட சாரிக்கு வேல்யூவே கிடையாது. நீ தப்பிக்கிறதுக்காக சொல்ற ஒரு வெப்பன்.” என்று அவளை இளக்காரமாக பார்த்துக் கொண்டே கூற.
“ப்ச்! ஆமா… ஆனால் உங்கக் கிட்ட உணர்ந்து தான் சொல்றேன். பேபி என்னமோ நான் தான் உங்களை தொரத்தி, தொரத்தி லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதுல டென்ஷாகி, வாய்க்கு வந்ததை உளறிட்டேன்.”என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். தான் தான் இப்பொழுது உளறிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய அவனை தயக்கத்துடன் பார்க்க.
அவனது முகம் கருத்துப் போனது. நொடியில் அதை மறைத்த யுகித்தோ, “ நான் தான் உன்னை தொரத்தித் தொரத்தி லவ் பண்ணேன். அதனால தானே ஈசியா என்னை விட்டுட்டு போயிட்ட… இப்ப நான் தனியா கிடந்து தவிக்கிறேன். ஆனா மேடம் நீங்க சந்தோஷமா குழந்தைக் குட்டின்னு இருக்கீங்க.”
“அதுக்கு நான் காரணமில்லை.” என்று குரல் கம்ம கூறினாள் வெண்ணிலா.
“அப்போ நான் காரணம்னு சொல்றியா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் யுகித் வினவ.
“ப்ச்! எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம்? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.” என்று வெட்டுவது போல வெண்ணிலா கூற.
“முடிஞ்சு போன கதையை கூட கமா போட்டு தொடரலாம்.” என்றவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
“யெஸ் தங்கம்.” என்றவன் மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தான்.
“அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறதே!”
என்றவாறு நெஞ்சை தட்டினான்.
அவனது மயக்கும் குரலில் இளகிய மனதை முயன்று கடிவாளம் இட்டவள், “ நீங்க பாடவும் மயங்கி போறதுக்கு பழைய வெண்ணிலான்னு நெனச்சீங்களா சீனியர்?” என்று கிண்டலாக வினவினாள்.
“இல்லையே! அப்போ நீ மிஸ் வெண்ணிலா! இப்போ நீ மிஸஸ் வெண்ணிலா.”என்று யுகித் கூறிக் கொண்டிருக்கும் போதே,
“வெண்ணிலா!” என்று அருகே ரகுலனின் குரல் ஒலித்தது.
மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டவள், என்ன என்பது போல் திரும்பி ரகுலனை பார்த்தாள்.
“உன்னை நகுல் தேடுகிறான் நிலா.”என்றுக் கூற.
விட்டால் போதும் என்பது போல் அங்கிருந்து ஓடிய வெண்ணிலாவோ, கேன்டினுக்கு செல்வதற்கு முன்பு, ஒரிடத்தில் அமர்ந்து தன்னை நிதானப்படுத்த முயன்றாள்.
இப்பொழுதுக் கூட யுகித்தின் குரல் காதருகே கேட்டது போலிருக்க. அவளது உடல் சிலிர்த்தது. அவனது நிழல் கூட அவளருகே நெருங்கவில்லை. ஆனால் அவன் தந்திரக்காரன். அவளுக்கு பழைய நினைவுகளை, ஒரு நொடியில் நினைவுப்படுத்தி விட்டானே. அவளது மனதோ மீண்டும் ஒருமுறை படபடத்தது.
‘நோ! நிலா பீ ஸ்டெடி. பட்டுவை நினைச்சு பாரு. பட்டுவோட லைப் தான் உனக்கு முக்கியம்.”என்று தனக்குள்ளே மந்திரம் போல ஜபித்தவள், மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டாள்.
‘அவனைப் பார்த்தா என்னையே மறந்துடுறேன். அது நல்லதுக்கில்லை. முடிஞ்ச வரை அவனது கண்ணில் படாமல் இங்கிருந்து செல்ல வேண்டும். அது தான் எனக்கும், என் பட்டுவுக்கும் நல்லது. என்று எண்ணியவள், அங்கிருந்து எழுந்து நண்பர்களை தேடிச் சென்றாள்.
அதற்கு மாறாக யுகித்தோ, ‘ வர்றே வா! நிலா மேடத்துக்கு இன்னும் என் மேல கொஞ்சம் காதல் இருக்கு. ஒரு நானோ செகண்ட்ல காண்ப்பிச்சிட்டா. இது போதும். இங்கிருந்து போறதுக்குள்ள, நான் அவளுக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்ல வைக்குறேன்.’ என்று மனதிற்குள் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தான்.
அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த ரகுலனோ, “யுகா!” என்று அழைக்க.
அவனோ வெண்ணிலாவைப் பற்றி கனவு கண்டுக் கொண்டிருந்தான்.
“டேய் மச்சி!”என்று யுகித்தின் தோளில் கை வைத்து உலுக்க.
“அதான்! உன் தம்பியோட ஃப்ரெண்டை என் கிட்ட இருந்து பொய் சொல்லி காப்பாத்தியாச்சுல. அப்புறம் ஏன் டா இங்கே இருந்து என் உயிரை வாங்குற?” என்று அவனது இனிய கனவை கலைத்த எரிச்சலில் ரகுலனிடம் பாய்ந்தான் யுகித்.
“அது வந்து… சாரி மச்சி! நல்ல நண்பனுக்கு அழகு, அவன் தவறு செய்யாமல் பார்த்துக்குறது தான். சரி வா! ஆடிட்டோரியம் போகலாம்.”
“ப்ச்! நீ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.” என்றவன், அங்கிருந்த திட்டில் உட்கார்ந்தவாறே கண்களை மூடினான்.
“டேய் பிரகாஷ் உன்னைத் தேடிட்டு இருக்கான் டா.”
“நான் பிரகாஷுக்கு ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ண சொல்லி மெசேஜ் போட்டுட்டேன். நீ கூட இருந்து கைட் பண்ணு. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும்.” என்றவனை கவலையாக பார்த்தவாறே அங்கிருந்து கிளம்பினான் ரகுலன்.
உண்மையிலே அந்த ஆடிட்டோரியத்தை போய் பார்க்கும் மனநிலையில் யுகித் இல்லை. ஒரு காலத்தில் அந்த இடத்தில் ஒருத்தியை பார்வையாலே பாடாய் படுத்திய நினைவுகள், இனிமையாக மனதில் வந்துப் போனது.
அன்று(காதல் பண்ணியது)
யுகித்தின் மன்னிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக பேசிய வெண்ணிலா, திரும்பிப் பார்க்க. அங்கோ அவன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து திடுக்கிட்டதெல்லாம் ஒரு நொடி தான்.
பிறகு தோளைக் குலுக்கிக் கொண்டு, அவனைக் கடந்துச் செல்ல முயன்றாள்.
ஆனால் அவள் முன்னே கைகளை நீட்டி தடுத்த யுகித்தோ, “ லுக் வெண்ணிலா! உனக்கு வேணும்னா சாரிங்குறது ஜஸ்ட் ஒரு வார்த்தையா இருக்கலாம். பட் நான் உணர்ந்து தான் சொன்னேன்.” என்றான்.
“உனர்ந்து சொன்னீங்களோ, உணராமல் சொன்னீங்களோ அது மேட்டர் இல்லை. தினமும் நான் காலேஜ் விட்டதும் உடனே வீட்டுக்கு போறத நீங்க நோட் பண்ணியிருக்கீங்க இல்லையா?. கொஞ்சம் லேட்டானாலும் நான் பதறுறதையும் நோட் பண்ணியிருக்கீங்க தானே. சோ தெரிஞ்சுச்சு தான் நீங்க என் கிட்ட வம்பு பண்ணியிருக்கீங்க. அப்புறம் எதுக்கு மன்னிப்பு கேட்கற பாவ்லா?”
என்றவள் அவனைச் சுற்றிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“ என்ன யுகா? இன்னும் என்ன ப்ராப்ளம்? எதுக்கு அந்தப் பொண்ணையே பார்த்துட்டு இருக்க?” என்று தீபிகா வினவ.
“ப்ச்! பாவம்டா அந்த பொண்ணு. ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு போல. நான் இந்த விசயம் இவ்வளவு சீரியஸாகும்னு நினைக்கலை.” என்று சற்று வருத்தமாக யுகித் கூற.
“சரி விடு யுகா! அதான் சாரி கேட்டுட்டியே.” என்று நண்பனை சமாதானம் செய்ய முயன்றாள் தீபிகா.
“ம்! நான் சாரி கேட்டா போதுமா? அந்த பொண்ணு என்னோட சாரியை அக்சப்ட் பண்ணலை.”
“விடு மச்சி! நீயே யாரையும் ரேகிங் பண்ண மாட்ட. உனக்கே கோபம் வர மாதிரி அந்த பொண்ணு தான் நடந்துக்குச்சு. அதான் நீ வச்சு செஞ்சுட்ட. அந்த வெண்ணிலா பண்ணதுக்கும், நீ பண்ணதுக்கும் சரியா போயிடுச்சு. அப்புறம் அந்தப் பொண்ணுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை விட்டுத் தள்ளு.” என்று மித்ரன் கூற.
“மித்து சொல்றது சரி தான்டா. இனி நம்ம வேலையை நம்ம பார்க்கலாம்.” என்று ரகுலன் கூற.
“சரி!”என்று தலையாட்டிய யுகித்தின் முகம் தெளியவில்லை.
இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டே சென்றார் அவர்களது ப்ரபஸர் மதன்.
நண்பனின் முகத்தைப் பார்த்த தீபிகாவோ, அவனுக்காக வெண்ணிலாவிடம் பேச சென்றாள்.
“ஹாய் வெண்ணிலா!” என்றாள் தீபிகா.
‘ஓ காட்! யப்பா இந்த பிரச்சனைக்கு ஒரு என்டு கார்டே இல்லையா. இவங்க வேற எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியலையே.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே, “சொல்லுங்க அக்கா.” என்றாள் வெண்ணிலா.
“என்னது அக்காவா? என்னையப் பார்த்தா அக்கா மாதிரி தெரியுதா?” என்று படபடத்தாள் தீபிகா.
“ஓ! இதைக் கேட்க தான் வந்தீங்களாக்கா.” என்று நமட்டு சிரிப்புடன் வினவினாள் வெண்ணிலா.
“ப்ச்! மறுபடியும் அக்கானு சொல்ற. கால் மீ சீனியர்.”
“சீனியர்னா கொஞ்சம் கெத்தா இருக்கணும். உங்களைப் பார்த்தா க்யூட்டா பேபி மாதிரி இருக்கீங்க. பேபின்னு வேணும்னா கூப்பிடவா?” என்று பெரிய ஐஸ்பாரை தீபிகாவின் தலையில் வைக்க.
முகமெல்லாம் புன்னகை மலர, “உன் விருப்பம் வெண்ணிலா. நான் வந்ததே உன் கிட்ட மன்னிப்பு கேட்குறதுக்காகத் தான்.” என்ற தீபிகாவை அயர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.
‘இன்னும் இந்த மன்னிப்பு கேட்கும் படலம் எவ்வளவு நாள்தான் தொடருமோ? ‘ என்று எண்ணியவாறு நீங்க என்ன பண்ணீங்க பேபி.” என்று வினவினாள் வெண்ணிலா.
“சீரியஸ்லி அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு நான் தான் காரணம். நான் தான் அவசரப்பட்டு அந்த நோட்ஸை யுகி கிட்ட இருந்து வாங்கிக் கொடுத்தேன்.
எங்க யுகிக்கு மதன் சார்னா அவ்வளோ பிடிக்கும். நீ பாட்டுக்கும் எழுதி அவகிட்டே போய் கொடுத்துட்ட. அவர் யுகி கிட்ட உன்னால செய்ய முடியலன்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானேன்னு சொல்லிட்டாரு. அதை அவனால டாலரேட் பண்ணிக்கவே முடியலை. அந்த கோவத்துல தான் உன்னை மறுபடியும் காலேஜ்லேயே நோட்ஸை எழுத வச்சான். இப்போ ரொம்ப ஃபீல் பண்றான்.”
“அதுக்கு நான் என்ன பண்றது?” என்று தீபிகாவை பார்க்க.
“அது வந்து யுகியை பார்க்குறதை அவாய்ட் பண்ணிடு. உன்னைப் பார்த்தாலே கில்டியா ஃபீல் பண்றான்.” என்ற தீபிகாவை ஆச்சரியமாக பார்த்தாள்.
‘ஓ காட்! இப்படியும் ஒருத்தி நண்பனுக்காக யோசிப்பாளா?’ என்பது போல் பார்த்தவள்,” ஓகே பேபி! உங்க ஃப்ரெண்ட் பக்கமே நான் வரல போதுமா!” என்றாள் வெண்ணிலா.
“தேங்க்ஸ் வெண்ணிலா!”என்றவள் சிட்டாக பறந்தாள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் எதற்கு? இவர்கள் மட்டும் நினைத்தால் போதுமா? விதி வலியது.
ஏற்கனவே யுகித் அவனது நண்பர்களுடன் பேசியதைக் கேட்டுச் சென்ற மதனோ, அன்றைய வகுப்பில் பாடம் நடத்தி முடித்ததும் யுகித்தை அழைத்தார்.
தலையை கோதியவாறே அவரைத் தொடர்ந்து சென்றான்.
ஆஃபிஸ் ரூமுக்கு செனாறவர், அவனை கூர்மையாக பார்த்தவாறே,” உன் கிட்ட இதை எதிர்பார்க்கல யுகித்.” என்றார்.
“என்ன சார் சொல்றீங்க?” என்று புரியாமல் வினவினான் யுகித்.
“நம்ம காலேஜ்ல சில ஸ்டூடன்ட் தெரிஞ்சும் தெரியாமல் நியூ ஸ்டுடென்டை ரேகிங் பண்றாங்கன்னு தெரியும். ஆனா என்னோட ஸ்டூடெண்டா இருந்து நீ பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கலை.”
“ சார்!” என்று அதிர்ச்சியாக மதனை பார்க்க.
“லுக் யுகித்! நம்ம காலேஜ்ல நீ தான் ரோல் மாடல். படிப்பு, விளையாட்டு, எக்ஸ்ட்ராகரிகுலர்னு எல்லாத்துலையும் டாப்ல இருக்க. இந்த சின்ன விஷயத்தால உன் நேமை ஸ்பாயில் பணாணிக்காதே. உன்னோட வெல்விஷரா உனக்கு அட்வைஸ் பண்றேன்.”
“சாரி சார்! இனிமேல் இப்படி நடக்காது” என்று கூறியவன், முகம் கருக்க வெளியே வந்தான்.
அங்கு நண்பர்களுடன் சேர்த்து பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவை பார்த்ததும் கோபம் பெருகியது.
‘இந்த சின்ன விஷயத்தை சார் வரைக்கும் எடுத்துட்டு போகணுமா?’ என்று அவளிடம் நேருக்கு நேராக கேட்க எண்ணி செல்ல.
அவளோ, ‘இவனைப் பார்த்ததும் எதுக்கு வம்பு.’ என்று நினைத்து அங்கிருந்து நழுவினாள்.
தன்னைப் பார்த்து தான் ஓடுகிறாள் என்று புரிய, கோபத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான்.
ஆஃபிஸ் ரூமிலிருந்து, லைஃப்ரரிக்கு செல்லும் வழியில் வரிசையாக மரங்கள் இருக்க.
அங்கே அவளுக்கு முன்பு நின்று கைகளை நீட்டி தடுத்தான்.
திடீரென்று தன் முன்னே நீண்ட கரத்தைப் பார்த்து பயந்த வெண்ணிலா, அங்கு யுகித்தைப் பார்த்ததும், “ நீங்களா சீனியர்? பயந்தே போயிட்டான்.”
“கொஞ்சாமாவது சீனியர்னு பயம் இருக்கா, இருந்திருந்தா என்னைப் பத்தி சார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருப்ப?” என்று கோபத்துடன் அவளை நோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தான்.
பயத்துடன் பின்னே நகர்ந்தாள் வெண்ணிலா.
அவளது கண்களில் பயத்தைப் பார்த்ததும், “ப்ச்!” என்று அப்படியே நின்றான் யுகித்
அதற்குள் அவள் மரத்தில் இடித்து கீழே விழ முயன்றாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்து விழாமல் தடுத்தணைத்தான் யுகித்.
அவளது இதயத்துடிப்பை உணர, பதறி விலகினான் யுகித்.’
அதே உணர்வு இப்பொழுதும் உடல் முழுவதும் வியாபிக்க, பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த யுகித்தின் கண் முன்னே சாட்சியாய் அந்த மரம் காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது.