சம்யுக்தா வேதனையோடு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது வேதனையை அதிகமாக்கும் பொருட்டு மேலும் ஒரு சம்பவம் நடந்தது. வீட்டிற்குள் வர முயன்றவளை வாசலிலே தடுத்து நிறுத்தினார் கீதா. வாசலில் நிற்பவளை கண்டுகொள்ளாமல். “அம்மா…” என்ற சம்யுக்தாவை முறைத்துப் பார்த்தார் கீதா.
“இங்க எதுக்காக வந்த…?”
“என்ன அம்மா இப்படி கேட்கிறீங்க…? நான் நம்மளோட வீட்டிற்கு வரக்கூடாதா…?”
“என்ன நம்ம வீடா…? இது ஒண்ணும் உன் வீடு கிடையாது… எப்போ கல்யாணம் பண்ணி வேற வீட்டிற்கு போயிட்டேயோ அப்பவே இந்த வீட்டில உனக்கு இடம் கிடையாது…”
“அதெப்படி அம்மா… ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிப் போயிட்டா… அவளுக்கும் பொறந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதா அம்மா…. இத்தனை நாள் வாழ்ந்த வீட்டில எப்படிமா உரிமை இல்லைனு சொல்றீங்க… அந்த வீட்டில இருக்க முடியாமல்தானே நான் இங்க வந்தேன்…. இப்படி ஆறுதல் தேடி வந்தவளை வீட்டிற்குள்ளேயே வர விடாமல் வாசல்லயே நிற்க வச்சிப் பேசிட்டு இருக்கிறீங்களே அம்மா….”
“இதோ பாரு கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டிற்கு போனால் வாழ்வோ சாவோ அங்கதான்… உனக்கு இந்த வீட்டில உரிமை இல்லை… கலகல்யாணமாகி ஒரு வருஷமாச்சு இன்னும் பிள்ளை இல்லைன்னு உன்னோட மாமியாரு இன்னைக்கு லேடிஸ் கிளப்ல வச்சி என்கிட்ட சத்தம் போடுறா… இத்தனை நாள் என்கிட்ட பணிவாக பேசிட்டு இருந்தவ இப்போ என் முன்னாடியே எதிர்த்து பேசிட்டு இருக்கிறா… இதுக்கு காரணம் நீதான்…. மரியாதையா டாக்டர்ஸ்கிட்ட செக் பண்ணி ட்ரீட்மென்ட்க்கு போ… இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வராத….” என்றார்.
இதைக் கேட்ட சம்யுக்தாவின் மனம் உடைந்து விட்டது. அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை கல்லையும் கரைக்கும். ஆனால் கீதாவை கரைக்கவில்லை. அமைதியாக நின்றார். சம்யுக்தா அவரிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டாள். அவள் சென்றதும் வாட்ச்மேனை அழைத்த கீதா, “இங்க பாரு இனிமேல் சம்யுக்தா வந்தால் வீட்டிற்குள்ள அனுப்ப வேண்டாம்… மீறி அனுப்பின உனக்கு இங்க வேலை…” என்று அவனை எச்சரித்து அனுப்பினார். வாட்ச்மேனும் எதுவும் பேசாமல், “சரிங்க மேடம்…” என்று சொல்லிவிட்டு அவர் இடத்திற்குச் சென்றுவிட்டார். சம்யுக்தா வீட்டை விட்டு வெளிய வந்தவள் ஆட்டோவில் கூட ஏறப் பிடிக்காமல் கால்நடையாக நடந்து சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளைப் பார்த்த அவள் தோழி ஒருத்தி தனது பைக்கை நிறுத்தி விட்டு அவளிடம் வந்தாள். “சம்யுக்தா…” என்று வந்து அவள் தோளைத் தொட்டாள்.
திரும்பிப் பார்த்த சம்யுக்தாவை, “சம்யு எப்படி இருக்க… நல்லா இருக்கிறயா…?” என்று கேட்டாள். அதற்கு சம்யுக்தா, “சாரு… இருக்கிறேன்டி… ஏதோ இருக்கிறேன்… நீ எப்படி இருக்க சாருற….?”
“நான் நல்லா இருக்கிறேன்…. என்ன ஆச்சுடி உன் முகமும் சரியில்லை… ஏதாவது பிரச்சனையா…?”
“ஒன்னும் இல்லடி…. கொஞ்சம் உடம்பு சரியில்லை…”
“அப்படியா சரி வா உன்னை நான் உன் வீட்டுல டிராப் பண்றேன்…”
“இல்லடி இங்கே தானே நான் போய்ட்டுவேன்…”
“பரவாயில்ல சம்யு… அவ்வளோ தூரம் உடம்பு சரியில்லைனு சொல்ற… நடந்தேவா போவ வாடி…” என்று தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு சம்யுக்தாவை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு சென்றாள். வீடு வரைக்கும் வந்து விட்டு விட்டு சென்ற அவளை உள்ளே கூட அழைக்காமல் பொம்மை போல அந்த சிறைக்குள் மீண்டும் சென்றாள் சம்யுக்தா. என்ன செய்வது அவளுக்கும் செல்வதற்கு வேறு போக்கிடம் வேண்டுமே. உள்ளே சென்றவளை கண்டதும் லீலாவதி தனது ஆட்டத்தை ஆட தொடங்கினார்.
“ஏய் நில்லு இவ்வளவு நேரம் எங்கடி போயிட்டு வர….?” என்று அவளிடம் கேட்டார்.
“ஒன்னும் இல்லை அத்தை… அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரேன்…”
“யாரைக் கேட்டு நீ எங்க போன…?”
“இல்லை அத்தை… அம்மாவைப் பார்க்கணும் போல இருந்துச்சு அதுதான் அத்தை போனேன்….”
“உன் இஷ்டத்துக்கு என் கிட்ட கேட்க்காமல் நீ எதுக்கு அங்க போன….? இனிமேல் எங்கிட்ட கேட்காமல் நீ எங்கேயும் போகக்கூடாது…. ஒழுங்கு மரியாதையா ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கற வழியை பாரு… உனக்கு கொஞ்ச நாள் தான் டைம் அதுக்குள்ள இந்த வீட்டுக்கு ஒரு வாரிசைப் பெத்துக் கொடுக்கலை அதுக்கப்புறம் உன்னை இந்த வீட்டிலே வைக்க மாட்டேன்…. அதை நல்லா ஞாபகம் வச்சிக்கோ… போ இங்க இருந்து…” என்றதும் அங்கிருந்து தனது அறைக்குள் சென்று விட்டாள் சம்யுக்தா.
மலைகளில் மேகங்கள் தவழ்ந்து விளையாடி மகிழும் ஊட்டியில் இருந்த பெரிய ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களைப் பார்த்தாலே போதும் அது எப்படிப்பட்ட பார்ட்டி என்று. உயர்தர வர்க்க பிஸ்னஸ் மேன்கள் மட்டுமே அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். ஒரு பக்கம் மதுக் கிண்ணங்களும், ஒரு பக்கம் பழரசக் கோப்பைகளும் அங்கே நிரம்பி வழிந்தன. அதற்கேற்ற இசையும் அங்கே ஒலித்துக் கொண்டு இருந்தன. அதற்கேற்ற வகையில் ஆடலும் நிகழ்ந்து கொண்டு இருந்தன.
அங்கே ஒரு மேசையில் அமர்ந்து கையில் மதுக் கோப்பையுடன் அங்கே நடந்து கொண்டிருப்பவைகளை பார்த்துக் கொண்டு இருந்தான் தீஷிதன். அவன் விழிகள் யாரையோ எடை போட்டுக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் அவன் அருகில் நவநாகரீக உடையில் உடை என்று சொல்லும்படி எதுவும் இல்லை இல்லை… உடலை அப்பட்டமாக வெளிக்காட்டியவாறு ஒரு மெல்லிய துணியை அணிந்திருந்த ஒரு யுவதி வந்து தீஷிதன் அருகில் அவன் அமர்ந்து இருந்த சேரின் கைபிடியில் வந்து அமர்ந்தாள். தீஷிதன் அமைதியாக இருந்தான். அவள் மேலும் முன்னேறினார் அவனது கையைத் தொட்டாள். அப்படியே மெல்ல மெல்ல அவன் தோள் வரை தடவிக் கொண்டு அவனை மெல்ல மெல்ல நெருங்கினாள். அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே தீஷிதன் தனது கையில் இருந்த மதுக் கோப்பையை உடைத்திருந்தான். அதே நேரத்தில் அவனது கை அவனை தடவிக் கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தை பிடித்திருந்தது. அவள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டு இருப்பதைப் உணர்ந்தவள், தனது கையால் அவன் கையில் அடித்தாள். அதை எறும்பு கடிப்பதைப் போல தட்டி விட்டான் தீஷிதன். அவனின் அருகில் செல்ல பயந்து எல்லோரும் நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். அப்போது வேகமாக ஓடி வந்த ஒருவர் அவனது கையைப் பிடித்தான்.
“தீஷி… கையை எடுடா…”
“விடு புகழ்… இவளை கொல்லாமல் விட மாட்டேன்…”
“சொன்னால் கேளுடா… அவ செத்திடப்போறாடா… கையை எடுடா… ப்ளீஸ் தீஷி விட்டுடு…” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான். அதன் பிறகே தீஷிதன் அவள் கழுத்தில் இருந்து கையை எடுக்க, மயங்கி விழுந்தாள். கீழே விழுந்த பெண்ணிற்கு மூச்சு இருப்பதை பார்த்த புகழ், அவர்கள் ஆட்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு தீஷிதனை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தான்.
“என்னை விடு புகழ்…. எனக்கு வர்ற கோபத்துக்கு அவளை கொல்லாமல் விட மாட்டேன்….”
“அவளை கொன்னா எல்லாம் சரியாகிடுமா தீஷி…”
“டேய் அதுக்காக என்னை அமைதியா இருக்க சொல்றியா…? என்ன தைரியம் இருந்தால் அவ என்மேல கையை வைப்பா… ச்சே ஏன் இப்படி அலையுதுகளோ தெரியாது…”
“விடுடா விடுடா… வா போகலாம் டைமாச்சு…” என்றவன் ஒருவாறு தீஷிதனை சமாளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊