Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 31

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 31

by Thivya Sathurshi
5
(24)

வாழ்வு : 31

பரந்தாமன் மிகவும் யோசனையில் இருந்தார். அவரிடம் வந்த தமயந்தி, “அண்ணா என்ன காலையிலிருந்து உங்களோட முகம் நல்லா இல்ல, ஏதாவது பிரச்சனையா அண்ணா?”

“இல்ல தமயந்தி, தீஷிதன் நைட் வேலை இருக்குனு போனான். இன்னும் வந்து சேரல அதுதான் எங்க போனான்? என்ன பண்றானு புரியல. பயமா இருக்கு” என்றார். 

அதற்கு உடனே தமயந்தி, “அண்ணா நீங்க எதுக்கு பயப்படுறீங்க? தீஷி பத்திரமா வந்துடுவான். அது மட்டும் இல்ல அவன் தனியா போகல துணைக்கு புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கிறான்.”

“அப்படியா? இதை யாரு உன் கிட்ட சொன்னது?”

“இல்ல அண்ணா, சம்மு அவனுக்கு கால் பண்ணினா, அப்போ தான் அவன் சொல்லி இருக்கிறான். புகழையும் கூட்டிட்டு தான் போயிருக்கேன் சீக்கிரம் வந்துடுவேன்னு. அவன் வந்ததுக்கப்புறம் எங்க போனானு கேட்டுக்கலாம் அண்ணா.”

“சரிமா நீ நலங்கு வைக்கிறதுக்கான வேலையை ஆரம்பி.”

“ஓகே அண்ணா, நீங்க கவலைப்படாதீங்க. அந்த வேலையை நான் இப்பவே ஆரம்பிக்கிறேன்.”

“ஆமா விக்கி எங்க ஆளையே காணோம்.”

“அவனா, அவன் வீட்டுக்குள்ள இருக்கே போரடிக்குதுனு வெளியே போயிட்டு வரேன்னு போனான்.”

“சரிம்மா.” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் சம்யுக்தா. 

“சம்மு நான்தான் உன்கிட்ட நீ எந்த வேலையும் செய்ய வேணான்னு சொன்னேன்ல. இப்ப எதுக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்த?”

“ஐயோ அம்மா இதெல்லாம் ஒரு வேலையா?”

“சரி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு, கொஞ்ச நேரத்தில நலங்கு வைக்கிறதுக்கு ஆளுங்க எல்லாம் வந்துருவாங்க, அப்புறம் உன்னால ரெஸ்ட் எடுக்க முடியாது.”

“சரிங்க அம்மா.” என்ற சம்யுக்தாவிடம், “வித்யாவையும் மதுவையும் காலையிலிருந்து காணோமே சம்மு.” என்றார் தமயந்தி. 

“அதை ஏன் அம்மா கேக்குறீங்க? நைட்டுக்கு மெஹந்தி பங்க்ஷன் இருக்குல, அதனால அதுக்கு டான்ஸ் பாட்டு எல்லாம் செய்யணும்னு பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.”

“நல்ல பொண்ணுங்கமா, அது பரவால்ல சம்மு, அதுங்க ரெண்டும் பேரும் பாட்டு, ஆட்டம்னு இருக்கத்தான் வீடே கலகலனு இருக்கு.”

“சரி சம்மு நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சு ரெடியாகு.”

“சரிங்க அம்மா.” என்று அங்கிருந்து சென்றாள். 

அவள் சென்றதும் பரந்தாமனிடம் திரும்பிய தமயந்தி, “ஏன் அண்ணா சம்முக்கு உண்மை தெரிஞ்சா, அவளுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல.”

“உண்மைதான் தமயந்தி, ஆனா அவங்க இருக்கும் நிலைமைக்கு, அவங்களை பற்றி சம்முக்கு தெரியாமல் இருக்கிறதே நல்லது. அவங்கள நினைச்சு தினம் தினம் வேதனைப்படுறன். அந்த வேதனை என்கூடையே போயிடட்டும்.”

“அண்ணா அப்படி இல்லை. யாரும் இல்லைனு அவ ரொம்ப கஷ்டப்படுறால்ல, அதுக்காகவாவது சொல்லலாமே.”

“தமயந்தி நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா? இருக்கிறாங்க என்பதைவிட இருந்தும் இல்லைன்றது எவ்வளவு வலிக்கும் தெரியுமா? அந்த வலியை நான் தினமும் அனுபவிச்சிட்டு இருக்கிறேன். அதை சம்முக்கு கொடுக்க நான் விரும்பலாமா. இதுக்கெல்லாம் அந்த காலம் தான் பதில் சொல்லணும்.”

“அண்ணா நானும் அதுக்காக தான் காத்திருக்கேன். சரிங்க அண்ணா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஆளுங்க வந்த உடனே அப்புறம் செய்ய முடியாமல் போய்விடும் நான் போய் வேலையை பார்க்கிறேன்.”

“சரிமா நீ போய் பாரு” என்று சொல்ல சம்யுக்தா அங்கிருந்து சென்றுவிட, பரந்தாமன் தனது அறைக்குள் சென்றார். 

………………………………………………….

ஜெகன் ஆபீஸ் அறைக்குள் வேகமாக வந்தான் விக்டர். அவனை அங்கே பார்த்த ஜெகன், “என்னாச்சு விக்டர் எதுக்கு இவ்வளவு வேகமா வர?”

“டாடி அந்த மணிகண்டனும் அவன் பொண்டாட்டியும் நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்க டாடி.”

“என்ன சொல்ற விக்டர், அப்பிடி என்னாச்சு?”

“என்ன ஆகணும் டாடி? அந்த வித்யா வந்து வீட்டை விட்டு காணாமல் போயிட்டா. இவங்க அதை நம்ம கிட்ட சொல்லாம டூர் போயிட்டா, அங்க போயிட்டா, இங்க போயிட்டானு நம்ம தலையில மொளகா அரைச்சுட்டாங்க.”

இதைக் கேட்ட ஜெகனுக்கோ கோவம் எல்லை கடந்தது. “இப்போ என்ன பண்றது விக்டர்? அவங்கள சும்மாவே விடக்கூடாது.”

“ஆமா டாடி, நம்மகிட்ட அவங்களே பணம் வாங்கிட்டு, அந்த பணத்தையும் தராமல், அவங்க பொண்ணையும் தராமல் நம்மளை ஏமாத்த பார்க்கிறாங்க. இப்படி ஓடிப்போன பொண்ணு எனக்கு தேவையில்லை டாடி, அவங்ககிட்ட இருக்கிற சொத்தை நம்ம பேர்ல மாத்தி எடுத்துக்குவோம்.”

“நம்ம அந்த வித்யாவை தேடி கண்டுபிடிக்கலாம். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கலாமே.”

“டாடி இது என்ன சினிமாவா ஓடிப்போன பொண்ணை தேடி கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து பழிவாங்க? எனக்கு வேற வேலை இல்ல பாருங்க, டாடி நம்ம கம்பெனியோட புதுசா ஒருத்தர் பார்ட்னர்ஷிப் வச்சிருக்கிறாரு மிஸ்டர் ரத்தன்லால். அவரோட பொண்ணு ஹேமா, கொஞ்சம் என்கிட்ட நெருக்கமா பேசுறா. இவங்களை விட அவரு ரொம்ப வசதி. அதனால நான் இந்த ஓடிப்போனவளை தேடாம அப்பிடியே விட்டுட்டு, நான் ஹேமா பக்கம் தூண்டில் போட்டு பார்க்கலாம்னு நினைக்கிறேன்.”

“அதுதானே நான் பார்த்தேன். சோழியன் குடும்பி எப்படி சும்மா ஆடும்?”

“ஆனால் டாடி நம்மளை ஏமாத்தினவர்களை மட்டும் சும்மா விடவே கூடாது. இப்பவே கிளம்புங்க டாடி, அவங்க கிட்ட இருக்குற சொத்தை எல்லாம் நமக்கு மாத்தி எழுதுவோம்”

“இதோ, இப்பவே போலாம்.” என்ற ஜெகன் தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்துவிட்டு விக்டருடன் சென்றார்.

மணிகண்டன் தனது கம்பெனியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஜெகனும் விக்டரும் வந்தனர். மணிகண்டனின் பிஏ வந்து, “சார் உங்கள பாக்க ஜெகன் சாரும் விக்டர் சாரும் வந்திருக்காங்க” என்று சொல்லும் போதே அந்த கேபின் கதவை திறந்து கொண்டு வந்தான் விக்டர். அவன் பின்னாலயே ஜெகனும் வந்தார்.  

இவர்கள் இப்படி திடீரென்று வருவார்கள் என்று நினைக்காத மணிகண்டன், சேரில் இருந்து எழுந்து நின்றார்.  

“வாங்க மாப்ள… வாங்க ஜெகன்..” என்றார். 

“யோவ் நிறுத்தியா, யாரு யாருக்கு மாப்பிள்ளை?” என்றான் விக்டர். 

“மாப்பிள்ளை என்னாச்சு? எதுக்கு இப்படி பேசுறீங்க?”

“என்னாச்சா? உன் ஓடுகாலிப் பொண்ணு ஓடிப் போயிடுச்சாம் நீ இன்னும் தேடிக்கிட்டு இருக்கிறதா எனக்கு தகவல் வந்துச்சு. நீ எங்ககிட்ட டூர் போயிருக்கானு பொய் சொல்லியிருக்க.”

‘ஐயோ கடவுளே இந்த விஷயம் இவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’ என்று நினைத்த மணிகண்டன் வெளியே, “இல்ல மாப்ள, உங்க கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்காங்க.”

“யோவ் நிறுத்து. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதான் என் பையன் வந்திருக்கிறான். உனக்கு வெட்கமா இல்ல, எங்ககிட்ட கடனை வாங்கிட்டு கடனை கொடு, இல்லன்னா பொண்ண கல்யாணம் பண்ணி வைனு சொன்னப்போ நீயே வந்து என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர்றேன், சொத்து தான் எனக்கு முக்கியம்னு சொல்லிட்டு இருந்த, இப்ப எங்களுக்கு என்ன பதில்? இங்க பாரு இப்படி ஓடிப்போன பொண்ணு எங்களுக்கு தேவை இல்லை. உன் சொத்தை எல்லாம் மரியாதையா இப்பவே எங்க பேர்ல எழுதி குடு. இல்ல பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.”

“ஜெகன் எதுவா இருந்தாலும் நாம கொஞ்சம் பேசிக்கலாம்.”

“உன்கிட்ட மனுஷன் பேசுவேனா? உங்கிட்ட இனிமே எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. மரியாதையா இந்த டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டு இப்பவே இந்த நிமிஷமே, இங்க இருந்து கிளம்பு” என்றான் விக்டர். 

“எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க, அதுக்குள்ள நான் என்னோட பொண்ணை எப்படியாவது கண்டுபிடிச்சிடுவேன்.”

“உனக்கு புரியுதா இல்லையா? எனக்கு தான் உன்னோட பொண்ணு வேணாம்னு சொல்றேன்ல, நீ ரெண்டு நாள் தேடுகிறாயோ இல்ல ரெண்டு மாசம் தேடுறியோ அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. என்கிட்ட நீங்க வாங்கின அந்தப் பணத்துக்கு பதில் சொல்லணும்.”

“என்னால பணத்தை எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல பணத்தை கொடுத்திடுறேன்.”

“உனக்கு அவ்ளோதான் மரியாதை. ஒழுங்கு மரியாதையா உன் சொத்து எல்லாத்தையும் என் பேர்ல மாத்தி எழுதியிருக்கிற இந்த டாக்குமெண்ட்டில கையெழுத்து போட்டுட்டு அமைதியா போயிடு, உயிராவது மிச்சமாகும்.” என்றான் விக்டர். 

விக்டரிடம் தனது பேச்சு எடுபடாது என்பதை உணர்ந்த மணிகண்டன் வந்து ஜெகனிடம், “நீங்களாவது விக்டர்கிட்ட சொல்லுங்களேன்.”

“இங்க பாரு மணிகண்டா, அவனை விட உன் மேல செம கோபத்துல இருக்கிறது நான். இப்படி எங்களை நம்ப வைத்து ஏமாத்திட்ட இல்ல, உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல, நீ மரியாதையா சைன் போடு” என்று இருவரும் அவரை கட்டாயப்படுத்தினர். வேறு வழியில்லாத மணிகண்டன் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டார். 

“சரி இனிமே இந்த சொத்தை எல்லாம் என் சொத்து, சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு” என்றான். 

“டாடி இவரை பார்த்தாலும் ரொம்ப பாவமா இருக்குல்ல, இங்க பாரு உன் வீட்டில் இருந்து நீ வெளியே போகணும், அதுக்காக நான் உனக்கு ஒரே ஒரு நாள் டைம் தரேன். அந்த ஒரு நாள்ல நீ வீட்டை காலி பண்ணிட்டு போய்கிட்டே இருக்கணும். இல்ல ஏதாவது பிரச்சனை பண்ணுவேன்னு எங்கேயாவது போனேன்னு வை, அப்புறம் சத்தமே இல்லாம உங்க ரெண்டு பேரோட சங்கையும் அறுத்துப் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்றான் விக்டர். 

“மணிகண்டன், உன்கூட பழகின பாவத்திற்காக சொல்றேன், என் பையன் என் பேச்சை கேட்க மாட்டான். அவனை கோபப்படுத்தாம, நீ ஒரே நாள்ல வீட்டை காலி பண்ணிட்டு போயிடு. உன்னோட உயிரையாவது பத்திரப்படுத்திக.” என்று ஜெகன் விக்டருடன் அங்கிருந்து செல்ல, தான் இத்தனை நாள் உழைத்து சேர்த்த தனது கம்பெனியை கொடுத்துவிட்டு, கையாலாகாதவராக அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்றார் மணிகண்டன். 

………………………………………………….

புகழின் வீட்டில் முன்னால் வந்து இறங்கினார்கள் அனைவரும். 

“அத்தை, மாமா இது தான் புகழோட வீடு, அது மட்டும் இல்ல என் தங்கச்சி மதுரா..”

“என்ன சொல்ற தீஷி உனக்கு தங்கச்சி வேற இருக்கா?”

“ஆமா அத்தை பேரு மதுரா. அவளும் நம்ம புகழும் லவ் பண்ணாங்க, அப்புறம் ரெண்டு பேருக்கும் சரி போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்து இருக்கோம்.”

“ஏன் புகழுக்கு என்ன அவனும் நல்ல பையன் தானே. பார்த்த கொஞ்ச நேரத்திலேயே அவனைப் பத்தி புரிஞ்சுகிட்டேன்” என்று அவனுக்கு சப்போர்ட் பண்ணினார் துர்கா. 

“அத்தை உங்களை இத்தனை நேரம் தீஷி போல அத்தைனு கூப்டேன். இனிமே அம்மானு கூப்பிடட்டுமா?”

“அதுக்கென்ன புகழ் நீயும் என் பையன் மாதிரித்தான் நீ தாராளமா என்னை அம்மானு சொல்லலாம்.”

“ரொம்ப சந்தோஷம் அம்மா, எனக்கும் இந்த வீட்ல சப்போர்ட் பண்ண ஒரு ஜீவன் கிடைச்சது. சரி வீட்டுக்கு வெளியே நின்னு பேசிட்டு இருக்காமல் வாங்க உள்ள போகலாம்” என்று அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் புகழ். 

அவர்களுடன் வந்த தீக்ஷிதன், “மாமா நீங்களும் அத்தையும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். நாளைக்கு ஒரு நாள் மட்டும் எனக்காக பொறுத்துக்கோங்க. நாளைக்கு உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு.”

“சர்ப்ரைஸா? அதுறஎன்ன தீஷி?”

“இருக்க மாமா, அதான் சொன்னேன்ல சர்ப்ரைஸ்னு சொல்லிட்டேனே. அதுக்கப்புறம் எப்படி இப்போ சொல்றது?”

“சரி சரி உன் சர்ப்ரைஸ் என்னனு தெரிஞ்சிக்க வெயிட் பண்றேன்.”

“சரி மாமா, அப்புறம் நான் கிளம்புறேன். நான் நைட்டு வந்தேன். அப்பா என்னை இன்னும் காணவே இல்லைனு பயந்துட்டு இருப்பாரு.”

“சரி தீஷி, ஆனா நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட போட்டோவை இதுவரைக்கும் எங்ககிட்ட காட்டலையே.”

“அத்தை போட்டோல என்ன நாளைக்கு வந்து நேரிலேயே பாருங்க” என்றான் தீஷிதன். 

“அதுவும் சரிதான்.”என்றார் துர்க்கா. 

“புகழ் அத்தையையும் மாமாவையும் பாத்துக்கோ.”

“நீ கவலையேபடாத நான் அவங்களை பத்திரமா பாத்துக்கிறேன்” என்றான்.

“சரி நான் போயிட்டு வரேன்.” என்றவன் அங்கிருந்து நேராக வீட்டிக்கு செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு சென்றான்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

You may also like

1 comment

babuvana September 25, 2025 - 5:07 pm

Wow super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!