மின்சார பாவை-2

5
(3)

மின்சார பாவை-2

தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா.

“ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன்.

உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட வேண்டியது.” என்று அவன் பொடி வைத்துப் பேச.

வெண்ணிலாவிற்கு கண்கள் கலங்கியது‌.

“ எதுக்கு இப்போ அழற?”என்று அதற்கும் எகிறினான் தீரன்.

“ டேய்! யார் மேல உள்ள கோவத்தையோ அவக் கிட்ட ஏன் காண்பிக்குற?” என்று அவனை அடக்கப் பார்த்தார் யாழினி.

“அம்மா ! அவ பண்றதுக்கு தான் அவளை பேசுறேன். நிமிஷத்துக்கு ஒரு தடவை முடிவெடுப்பதும்,அப்புறம் உடனே அதை மாத்திட்டு இருக்குறதும் இதெல்லாம் சரியா? அவ இஷ்டத்துக்கெல்லாம் என்னால் ஆட முடியாது.

இப்ப அவ ஏன் ரீயூனியனுக்கு போக மாட்டேங்குறானு தெரியுமா? அத்தை மாமாவை போய் பாருன்னு சொன்னதுக்காகத் தான்.

 அவங்க என்ன பண்ணாங்க இவளை? பாவம் ரெண்டு பேரும்…”

“அவங்க என்ன பண்ணாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா மாமா? என்று வெண்ணிலா வெடுக்கென்று கேட்க.

“அப்போ பழசெல்லாம் இன்னும் மறக்கலை. அப்படி தானே!” என்று அவளை கூர்ந்துப் பார்த்தான் தீரன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்றவள் தலை குனிய.

“என்னைப் பாரு வெண்ணிலா. இப்ப கூட ஒன்னும் பிரச்சினை இல்லை. உன் லைஃப் உன் விருப்பம். நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உனக்கு உறுதுணையாய் இருப்பேன்.” என்று அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே கூற.

“ அப்படியா? அப்போ சரி. அடுத்த வாரம் ரீயூனியனுக்காக கொடைக்கானலுக்குப் போறேன். ஆனா உங்க மாமனாரு வீட்டுக்கு போக மாட்டேன். இது தான் என் விருப்பம். இந்த முடிவுக்கு நீங்க உறுதுணையா இருப்பீங்கன்னு நம்புறேன்.” என்று நக்கலாகக் கூற.

“என்னவோ பண்ணித் தொலை. உனக்கெல்லாம் புரியவைக்க முடியாது.” என்று விட்டு தீரன் கோபமாக அங்கிருந்து நகர முயல.

“ மாமா! சாரி!” என்று அவன் பின்னாடியே செல்ல.

“ம்! உன் சாரியெல்லாம் நீயே வச்சுக்கோ.” என்று விட்டு ஆஃபீசுக்கு கிளம்ப.

“மாமா! சாரி மாமா! நீங்க வேற என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த ஒரு விஷயத்துல மட்டும் ஃபோர்ஸ் பண்ணாதீங்க.”

“ நீ உன் இஷ்டப்படி இரு. நான் ஒன்னும் உன்னைத் தொல்லப் பண்ணலை. நான் ஆஃபீஸுக்கு கிளம்புறேன். நீ வர்றதா இருந்தா அப்பாவோட வா.” என்று விட்டு கார் சாவியை எடுக்க.

“சரி நான் போய் அவங்களை பார்க்குறேன். பட் ஒரு கண்டிஷன்.”

“என்ன கண்டிஷன்?” என்று அவளை சந்தேகமாக பார்த்தான் தீரன்.

“ உங்க மாமனாரு வீட்டுக்கு நீங்களும் வரணும். அப்படியே எங்க காலேஜ் ஈவென்ட்லயும் கலந்துக்கணும்.” என்று கண்கள் மின்ன கூற.

“ அது வந்து, நான் வந்தா உனக்கு தான் டிஸ்டாபன்ஸ்.” என்றான் தீரன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை . நீங்க கண்டிப்பா வரணும்.” என்று வெண்ணிலா பிடிவாதம் பிடிக்க‌.

“ஓகே லாஸ்ட் டே வர்றேன். அப்படியே நம்ம போய் அத்தை மாமாவையும் பார்த்துட்டு வரலாம்.” என்று ஒரு வழியாக தீரன் சம்மதம் சொல்ல.

“சூப்பர் மாமா! நான் இன்னைக்கு ஆஃபிஸூக்கு லீவ்.” என்று துள்ளிக் குதித்து தனதறைக்கு ஓடினாள்.

உற்சாகமாக செல்பவளை, ஆதுரமாகப் பார்த்தபடி அலுவலகத்திற்கு கிளம்பினான் தீரன்.

இன்று துள்ளிக் குதித்து செல்லும் வெண்ணிலா, அன்று ஏன் இவனை வரச் சொன்னோம் என்று எண்ணி துடிக்கப் போவதை அறியவில்லை.

***************

மாலையில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த தீரன், வீடு அமைதியாக இருப்பதை பார்த்து யோசனையுடனே, “அம்மா!” என்று அழைக்க.

 யாழினி கிச்சனிலிருந்து வந்தார்.

“ எங்கம்மா யாரையும் காணோம்?” என்று தீரன் வினவ.

“ உனக்கு யாரு வேணும்?” என்று கிண்டலாக வினவினார் யாழினி.

“மா! உங்க மருமகளோட சேர்ந்து நீங்களும் என்னை கேலி பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? எங்க மிதுவையும் காணோம். குட்டி மேடமையும் காணும். நிலா மேடம் வேற ஆஃபிஸூக்கு வரலை. வீட்டுல இருந்தா வீட்டையே ரெண்டாக்குவாங்களே. அதான் கேட்டேன்.”

“ நிலாவ கேட்குறியா? அவ அவளாவே இல்லை.”

“ என்னம்மா சொல்ற?”

“ நீ போனதும் மாடிக்கு போனவ தான் கீழே வரவே இல்லை. எடுத்த ஃபோனை கீழே வைக்கவும் இல்லை.

சாப்பிடுறதுக்கே வரல. அப்புறம் அந்த ஃபோனை தூக்கி வீசவேன்னு சொல்லவும் தான் வந்தா.”

“யாழு! என்ன மாமியார் கெத்தை காண்பிக்குறியா?” என்றவாறே தோட்டத்திலிருந்து வந்தார் நிரஞ்சன்.

“நான் என்ன என் மருமகளைப் பத்தி குறையா சொன்னேன். அவன் கேட்டதுக்கு பதில் தான் சொன்னேன்.”

“சரி விடுங்க! இதுக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம். ஆமாம் மிதுவும்‍, பட்டுவும் எங்க?” என்று இடையில் நுழைந்தான் தீரன்.

“அவங்க ரெண்டு பேரும் தோட்டத்தில விளையாடிட்டு இருக்காங்க.” என்று நிரஞ்சன் கூறிக் கொண்டிருக்கும்போதே, “டாடி!”என்று வந்துக் கட்டிக் கொண்டாள் அந்த வீட்டின் குட்டி இளவரசி இனியா.

“பட்டு! அத்தையோடசெடிக்கு தண்ணி ஊத்தினீங்களா?” என்று அவளை அள்ளிக் கொண்டு வினவினான் தீரன்.

“ மா! நிலாமா! இல்லை. அத்தையும், நானும் ஜாலியா விளையாண்டோம்.” என்றுக் கூற.

“அம்மா இன்னைக்கு கொஞ்சம் பிஸி. நாளைக்கு அம்மாவோட விளையாடலாம். இப்போ போய் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வருவோமா?”என்று குழந்தையை சமாதானப்படுத்தி மாடிக்கு அழைத்துச் சென்றான்.

மாடிக்குச் சென்ற இனியா வேகமாக நிலாவைத் தேடிச் சென்றாள்.

இனியா வந்ததைக் கூட கவனிக்காத வெண்ணிலா, ஃபோனில் டைப் பண்ணிக் கொண்டிருந்தாள்.

இனியா முகத்தை சுருக்கி தந்தையைப் பார்க்க.

அவளது செயலில் சிரிப்பு வர,”ப்ராடு! அம்மா மாதிரியே முகத்தை வச்சுக்கிட்டு ஏமாத்த வேண்டியது.” என்று அவளது மூக்கை திருகியவன், “நிலா!” என்று சத்தமாக அழைத்தான்.

திடீரென்று ஒலித்த அவனது குரலில் பதறிய வெண்ணிலாவோ, ஃபோனை தூக்கிப் போட்டு, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு திரும்பினாள்.

“எதுக்கு மாமா இப்படி கத்துறீங்க? நான் பயந்துட்டேன்.”

“அடிப்பாவி! நான் கத்துறேனா. எத்தனை தடவை கூப்பிட்டேன் திரும்பாமல் போன்லயே தலையைக் குடுத்துட்டு கோபம் வேற படுறியா? காலையிலிருந்து பாப்பாவை நீ கவனிக்கலையாம். வந்தவுடனே கம்ப்ளைண்ட் பண்ணிட்டாங்க மேடம்.”

“அச்சோ சாரி பட்டுக் குட்டி. “ என்று அவளை தூக்க முயல.

“மண்ணுல விளையாடிட்டு வந்திருக்கா. நான் அவளை ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றேன். நீ கீழே போ.” என்று அவளை அனுப்பி வைத்தான்.

‘ஐயோ! கீழே போனா எல்லோரும் ஓட்டுவாங்களே! சும்மா முகத்தை சோகமா வச்சுப்போம். அப்போ தான் மிது சும்மா இருப்பா.’ என்று எண்ணிய வெண்ணிலா, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

“ஏன் டா! நிலா? என்னாச்சு தீரன் திட்டிட்டானா? புதுத் தொடப்பம் நல்லா தான் பெருக்கும். இதுத் தெரியாதா அவனுக்கு?” என்று யாழினி புலம்ப.

“அம்மா! அண்ணன் திட்டினதுக்கும் புது தொடப்பத்துக்கும் என்னமா சம்மந்தம்? இன்னைக்கு கமலாக்கா வரலைங்குறதுக்காக நீ வேலை செஞ்சிட்டு, தத்துவமா பொழியற?” என்று அதி முக்கியமான சந்தேகத்தை எழுப்பினாள் மிதுனா.

“என்னது கமலா அக்கா வரலையா? அத்தை! என்னை ஹெஃல்ப்புக்கு கூப்பிட்டிருக்கலாம்ல அத்தை.” என்று படபடத்தாள் வெண்ணிலா.

‘நீ ஹெல்ஃபுக்கு வராமல் இருப்பது தான் எனக்கு பெரிய ஹெல்ஃபே. இதை எப்படி நான் உன் கிட்ட சொல்றது.’ என்று மனதிற்குள் எண்ணிய யாழினி, “பரவால்லைடா! நீயே என்னைக்கோ ஒரு நாள் தான் வீட்ல இருக்க. அதான் தொந்தரவு பண்ணல.” என.

“அம்மா அதை விடுங்க! எதுக்கு இப்போ அந்த தத்துவம் சொன்னீங்க. அதை சொல்லுங்க.” என்று மிதுனா விடாமல் தொணத்தொணக்க.

வெண்ணிலாவும், “ ஆமாம் அத்தை! எதுக்கு அந்த தத்துவம்?” என்று ஆர்வமாக வினவினாள்.

“அதுவா…சாப்பிட கூட வராமல் போனே கதியா இருக்கேன்னு சொன்னேன். அதுக்காக திட்டுவானா? சும்மா புதுசா குரூப் ஓப்பன் பண்ணா ஒரு ரெண்டு நாள் அப்படித்தான் ஃபோனும்‍, கையுமா திரிவாங்க. அப்புறம் அந்த க்ருப் காத்து தான் வாங்கும். எங்க ஸ்கூல் க்ரூப், காலேஜ் க்ருப் அப்படித்தான் காத்து வாங்குது.” என்ற யாழினியைப் பார்த்து, “ அத்தை! உங்க பையன் என்னைத் திட்டுனாக் கூட பரவாயில்லை. ஆனால் நீங்க இப்படி எங்க க்ருப்பை டேமேஜ் பண்ணியிருக்க வேண்டாம்.” என்று அழுவது போல் கூறினாள் வெண்ணிலா.

அதைக் கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான் தீரன்.

மிதுவோ, “ அண்ணி க்ரூப்பும், புதுத்தொடப்பமும் ‌… இந்த டைட்டில் நல்லா இருக்கா?” என்று கேட்டு சிரிக்க.

“அத்தை! மிதுவை பாருங்க.” என்று யாழினியிடம் கம்ப்ளைண்ட் பண்ண.

அவரோ சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க.

அதைப் பார்த்தவள், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள்.

“ப்ச்! நிலா பேபி! நீ என்ன பட்டுக்குட்டியா கோபமா முகத்தை தூக்கி வச்சுக்குற. சும்மா எல்லாரும் உன்னை கலாய்க்கிறாங்க. நீ டென்ஷனாகாம இரு. நான் உனக்குப் பிடிச்ச புதினா டீ போட்டுட்டு வர்றேன்.” என்று கிச்சனுக்கு செல்ல.

யாழினியோ,” சாரி வெண்ணிலா! அத்தை சும்மா விளையாண்டேன். நீ எப்பவும் சிரிச்ச மாதிரி இருடா…” என்று மருமகளை கொஞ்ச.

“ பார்த்து! பார்த்து! உங்க பாச வெள்ளத்துல இந்த வீடு மிதக்கப் போகுது.” என்று மிது கிண்டல் பண்ண.

வெண்ணிலா, மிதுனாவைப் பார்த்து நாக்கை துருத்தி கிண்டல் செய்தாள்.

தீரன் டீ ட்ரேயுடன் வர.

சிரிப்பும், கேலியுமாக அந்த டீ டைம் சென்றது.

“ சரி! எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு.” என்று தீரன் எழுந்துக் கொள்ள.

“மாமா! மாமா! ஒரே ஒரு ஃபோட்டோ. காலையிலிருந்து ஃபேமிலி போட்டோ போட சொல்லி, மெசேஜ் மேல மேசேஜ் வந்துட்டே இருக்கு‌.” என்றவாறே எல்லோரையும் அழைத்தாள் செல்ஃபி எடுக்க.

“ஏற்கனவே எடுத்த போட்டோவை அனுப்பு நிலா.” என்று அலுப்பாகக் கூறினான் தீரன்.

முகம் வாடிய வெண்ணிலாவோ, “கரெண்ட் ஃபோட்டோ தான் வேணும்னு சொன்னாங்க.” என்றுக் கூற.

“டேய்! ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு போறதுக்கு ரொம்ப தான் பிகு பண்ற.” என்று நிரஞ்சன் மருமகளுக்காக சப்போர்ட்டுக்கு வர.

“நீங்க ரெண்டு பேரும் கொடுக்குற செல்லத்தால தான் அவ வளரவே மாட்டேங்குறா.”என்று வெண்ணிலாவின் தலையில் கொட்டியவன், ஃபோனை அவளிடமிருந்து வாங்கி செஃல்பி எடுத்தான்.

எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்திருக்க.

அந்த ஃபோட்டோவை க்ருப்பில் அப்லோட் செய்தாள்.

யுகித் இந்த குரூப்பில் இல்லை என்பதை ஏற்கனவே கேட்டுத் தெரிந்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த ஃபோட்டோவை பதிவு செய்ய எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் இந்த ஃபோட்டோ க்ரூப்பில் போட்ட அடுத்த செகண்ட், அவனுக்கு பார்வேட் செய்யப்பட்டது.

லண்டனிலிருந்த யுகித்தோ, மகிழ்வுடன் சிரித்துக் கொண்டிருக்கும் வெண்ணிலாவை பார்த்து, “ வாவ்! என் சிரிப்பை அழிச்சிட்டு, சந்தோஷமா இருக்கியா? ரைட்! நேர்ல என்னப் பார்த்ததும் அந்த சிரிப்பு எப்படி இருக்குன்னு பார்க்குறேன்டி.” என்று முணுமுணுத்தவன், யாருக்கோ ஃபோனில் அழைத்து இந்தியாவிற்கு டிக்கெட் போட சொன்னான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!