Home Novelsவிடிய மறுக்கும் இரவே20. விடிய மறுக்கும் இரவே 🥀

20. விடிய மறுக்கும் இரவே 🥀

by ஸ்ரீ வினிதா
4.8
(96)

விடியல் – 20

யுகேஷ் வர்மா கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் நந்தினிக்கோ தூக்கி வாரிப் போட்டது.

சட்டென தலை குனிந்து தன்னைப் பார்த்தவள் “நான் ஒண்ணும் நீங்க சொன்ன மாதிரி ட்ரஸ் பண்ணல..” என்றாள் சீறலாக.

“பாக்குற எனக்கு அப்படித் தெரியலையே..” என்றான் அவன்.

“உங்க பார்வை சரி இல்ல போல..” என முறைத்தவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“ஓகே.. அப்போ இந்த ட்ரஸ்ஸோட வெளிய வருவியா..?” எனக் கேட்டான் அவன்.

“அது எப்படி இப்படியே வெளிய வர முடியும்..? எங்க வீட்ல மட்டும்தான் இப்படி எல்லாம் போடுவேன்.. வெளியே எல்லாம் போட முடியாது..” என்றாள் அவள் அவசரமாக.

“இதுல எல்லாம் தெளிவுதான்..” என்றவன் நந்தினியின் தந்தை கொடுத்த ஆடையை மாற்றத் தொடங்க, சட்டென திரும்பிக் கொண்டாள் அவள்.

அவனோ அனைத்தையும் இயல்பாகப் பேசுகின்றான், இயல்பாக அவள் முன்பு ஆடை மாற்றுகின்றான்.

அவளுக்குத்தான் அனைத்தும் சிரமமாக இருந்தது.

சற்று நேரத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் நந்தினி.

அவனோ சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அவனுடைய ஒற்றைக் கரம் அவன் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தது.

“என்னாச்சுங்க..”

“ரொம்ப தலைவலி.. இன்னைக்கு நடந்த பஸ் ஆக்ஸிடென்ட்ல நிறைய பேர் இறந்துட்டாங்க.. முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணி டிராஃபிக் எல்லாம் கிளியர் பண்ணி முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.. மறுபடியும் ஹாஸ்பிடல் போகணும்.. பட் தலை வெடிக்கிற மாதிரி இருக்கு..” என்றான் அவன்.

அவனுடைய குரலிலேயே அவளுக்கு அவனுடைய சோர்வு புரிந்தது.

பாவமாகவும் இருந்தது.

“நான் வேணும்னா தைலம் தேச்சு விடவா..” எனக் கேட்டாள் நந்தினி.

“நான் இதுவரைக்கும் தைலம் எல்லாம் தேச்சது இல்ல.. எனக்கு செட் ஆகுமான்னு தெரியல..”

“என்னது.. நீங்க தைலம் தேச்சதே இல்லையா.. நானெல்லாம் தல வலி வந்தா தைலம் தேய்க்காம தூங்கவே மாட்டேன்.. என்னோட ஹேண்ட் பேக்ல எப்பவுமே ஒரு தைலம் இருக்கும்.. இதோ என் பெட்ல கூட இருக்கு.. அதுவும் இந்த கிரீன் கலர் அமிர்தாஞ்சன் டப்பா.. இல்லன்னா அவ்வளவுதான்..” என்றாள் அவள்.

“சரி.. அப்போ எனக்கு கொஞ்சம் போட்டு விடு.. சரியாகுதானு பார்க்கலாம்..” என்றான் அவன்.

“சரி..” என்றவள் கொஞ்சம் தைலத்தை தன்னுடைய விரல்களில் எடுத்து அவனுடைய நெற்றியில் பூசி இதமாக மசாஜ் செய்யத் தொடங்க, அவனுக்கோ அது இதமாகத்தான் இருந்தது.

மெல்ல விழிகளை மூடிக் கொண்டான் அவன்.

அவளுடைய கரங்களின் மென்மையா இல்லை நிஜமாகவே அந்த தைலத்தில் ஏதேனும் மாயாஜாலம் உள்ளதா என்னவென்று தெரியவில்லை அவனுடைய தலைவலி நன்றாகவே குறைந்திருந்தது.

அவளுடைய மெல்லிய வெண்டைப் பிஞ்சு விரல்களின் அழுத்தத்தில் தன்னை மறந்து சோபாவில் சாய்ந்தவாறே உறங்கிப் போனான் அவன்.

அவன் உறங்கியதை உணர்ந்ததும் அவளுக்கோ உள்ளம் உருகிப் போனது.

மெல்ல அவனை விட்டு விலகி, அவன் முன்பு வந்து நின்றவள் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.

அழகன் தான்.

கம்பீரம் கூட டன் கணக்கில் வழிகின்றதே.

என்ன குணம்தான் சரியில்லை.

கல்லுளி மங்கன் என அவனை மனதிற்குள் திட்டியவள் இப்போது அவனை எழுப்புவதா வேண்டாமா என்ற சிந்தனையில் மூழ்கிப் போனாள்.

சோர்வில் அசந்து தூங்குபவனை எழுப்புவதில் அவளுக்கு கிஞ்சித்தும் விருப்பமில்லை.

கொஞ்ச நேரமாவது தூங்கட்டும், இப்போது எழுப்ப வேண்டாம் என எண்ணியவள் சற்று நேரம் அங்கேயே இருந்தாள்.

இவன் மட்டும் மென்மையான குணம் கொண்டவனாக இருந்திருந்தால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றிருக்குமே.

பெருமூச்சு வந்தது.

சற்று நேரத்தில் கீழே இறங்கிச் சென்றவள் மீண்டும் தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கிவிட, அவளை நெருங்கி வந்த நிர்மலாவோ

“மாப்பிள்ளைய அங்க தனியா விட்டுட்டு நீ இங்க இருந்து என்னடி பண்ற..” என அதட்டலாகக் கேட்டார்.

“ஐயோ அம்மா.. உங்க மாப்பிள்ளை என்ன பச்சைக் குழந்தையா.. ஏன் தனியா இருக்க மாட்டாரா..”

“அடியே ட்யூப் லைட்.. உனக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு.. என்ன சொல்லணும்.. போய் மாப்பிள்ளைய கவனி..”

“அவர் நல்லா அசந்து தூங்கிட்டு இருக்காரு மா..”

“சரி.. எழுந்தா உன்னைத் தேடுவாரு.. நீ அவர் கூடயே இரு..”

“இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா..”

“இப்போ நீ போறியா இல்ல டிவிய தூக்கி உடைக்கட்டுமா..”

“இதோ கிளம்பிட்டேன்..”

என்றவள் தன் அன்னையை முறைத்து விட்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் வந்தாள்.

அங்கே வர்மாவின் போன் வைப்ரேட் ஆகிக் கொண்டிருந்தது.

யாரோ அழைப்பு எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவள் வேகமாக அந்த அலைபேசியைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

அழைப்பை ஏற்க தயக்கமாக இருந்தது.

ஒருமுறை தூங்குபவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனை எழுப்பவும் மனம் வரவில்லை.

ஏதாவது முக்கியமான வேலையாக இருந்தால் என்ன செய்வது என்ற பதற்றம் வேறு வந்துவிட, தன் தயக்கத்தை உதறிவிட்டு அந்த அழைப்பை ஏற்றவள் “ஹலோ..” என்றாள் மெல்லிய குரலில்.

மறுமுனையில் இருந்த மதனோ பெண்ணின் குரல் கேட்டதும் திகைத்துப் போனான்.

“ஹலோ.. ஏசிபி சார் இல்லையா..” என அவன் கேட்க, “அவர் தூங்கிட்டு இருக்காரு.. ஏதாவது முக்கியமான விஷயமா.. அவரை எழுப்பி போனைக் கொடுக்கட்டுமா..” என நந்தினி தயக்கத்துடன் பேச,

“ஓ.. நந்தினி சிஸ்டரா பேசுறீங்க..” எனக் கேட்டான் அவன்.

“ஆமா..” என்றாள் அவள்.

“ஓகே மா.. வேலையெல்லாம் நாங்களே முடிச்சிட்டோம்.. சார் தூங்கட்டும்.. அவர் எழுந்ததுக்கு அப்புறமா மதன் கால் பண்ணான்னு சொல்லிடுங்க..”

“ஓகே மதன் அண்ணா..”

“சரிமா.. வச்சிடுறேன்..” எனக் கூறிவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்து விட, அவனுடைய போனை இருந்த இடத்தில் வைத்தவள் இப்போது அவனைத் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்.

அவனோ விழிகளைத் திறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ.. இந்த சிடு மூஞ்சி எப்போ எந்திரிச்சாரு.. ஒருவேளை நான் அவரோட போனை அட்டென்ட் பண்ணி பேசினதுக்கு கோபப்படுவாரோ..’ என எண்ணி பயந்து போனவளாய் அவள் அவனுடைய முகத்தைப் பார்க்க,

“போன்ல யாரு..?” என இறுக்கமான குரலில் கேட்டான் அவன்.

‘இவனுக்கு நார்மலா பேசவே வராதா..?

எப்போ பார்த்தாலும் அக்கியூஸ்டு கிட்ட பேசுறது போலவே டெரரா பேசுறான்..’ என மனதிற்குள் நினைத்தவள், வெளியே அதைக் கூற முடியாமல் “மதன் அண்ணா..” என்றாள்.

“என்னவாம்…?” என அடுத்த கேள்வி அவனிடமிருந்து வந்தது.

“எல்லா வேலையும் அவங்க முடிச்சுட்டாங்களாம்.. உங்களை எழுப்ப வேண்டாம்னு சொன்னாரு..”

“இடியட்.. அவன் யாரு இதை என்கிட்ட சொல்றதுக்கு..” என உறுமியவன் நேரத்தைப் பார்த்தான்.

இரவு எட்டு எனக் காட்டியது கடிகாரம்.

“வாட்.. நைட் ஆயிடுச்சா..” என அதிர்ந்தவன் “இடியட்.. எதுக்கு என்னை எழுப்பல..” என அவளிடம் சீற,

“நீங்க எழுப்புன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே.. அசந்து தூங்கிட்டு இருந்தீங்க.. எழுப்ப எப்படி மனசு வரும்..?” என்றாள் அவள் சற்றே கோபமாக.

இடியட் என்று திட்டிவிட்டானே.

‘நீதான்டா இடியட்..’ என மனதுக்குள் அவனை வறுத்தெடுக்க ஆர்வம் பிறந்தது.

அவன் உற்றுப் பார்க்கும் பார்வையில் எங்கே அவள் மனதில் நினைப்பதையும் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில் தன் மனதின் ஆர்வத்தை அடக்கிக் கொண்டாள் அவள்.

கடந்த இரண்டு நாட்களாக அவனுக்கு வேலைகள் அதிகமாகத்தான் இருந்தன.

ஏற்கனவே சிசிடிவி கேமராவில் ஃபுட்டேஜ்கள் எல்லாம் ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடித்தவன், கிட்டத்தட்ட கடந்த சில நாட்களாக நிம்மதியாக உறங்கவே இல்லை.

இன்று வேறு அதிக சோர்வில் இருந்தான்.

அதுவும் மனைவி இதமாக தலையைப் பிடித்து விட்டதும் அவனுக்கு உறக்கம் சொக்கிவிட்டது.

தன் தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவனைப் பார்த்து பதறியவள்,

“என்னாச்சுங்க.. திரும்ப தலை வலிக்குதா..?” எனக் கேட்டாள் நந்தினி.

“நோ.. தலைவலி சரியாயிடுச்சு.. தேங்க்யூ..” என்றான் அவன்.

“ம்ம்..”

“சரி.. நான் கிளம்புறேன்..”

“ஒரு நிமிஷம்.. அம்மா உங்களுக்காக டின்னர் பண்ணிட்டு இருக்காங்க.. சாப்பிடலாமே..” என்றாள் அவள்.

அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் “என்ன மேடம் புதுசா அக்கறை..? என்னைப் பிடிக்கலன்னு சொல்லிட்டுதானே இங்க வந்த.. இப்போ இதுக்கு சாப்பிடக் கேக்குற..”

“நான் ஒன்னும் டிவோர்ஸ் பண்ணிட்டு வரலையே..” என்றாள் அவள் அழுத்தமாக.

“அடடா.. டிவோர்ஸ் பண்ற ஐடியா எல்லாம் இருக்கா..” எனக் கேட்டவனை முறைத்து விட்டு அவள் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற முயன்ற கணம், அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பிடித்து தன்னருகே இழுத்தான் யுகேஷ் வர்மா.

அவன் இழுத்த வேகத்தில் அவனுக்கு மிக அருகில் வந்தவளின் தேகமோ படபடத்து விட்டது.

“அன்னைக்கு எல்லாத்தையும் உங்க அப்பாக்கிட்ட சொல்லுவேன்னு சொன்னியே.. நான் கிஸ் பண்ணதையும் உங்க அப்பாக்கிட்ட சொன்னியா..?” என அவளுடைய விழிகளுக்குள் பார்த்தவாறு அவன் கேட்க, அவளுக்கோ முகம் நொடியில் சிவந்து போனது.

அவனுடைய விழிகளை நேரடியாகச் சந்திக்க முடியாமல் அவள் தன் பார்வையைத் தாழ்த்திக்கொள்ள,

அவளுடைய நாடியில் தன் கரத்தைப் பதித்து அவளுடைய முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தியவன் “என்னைப் பார்த்து பேசு..” என்றான்.

அவளிடமோ அமைதி.

“சொல்லுடி.. நான் கிஸ் பண்ணதையும் உங்க அப்பாக்கிட்ட சொன்னியா..”

“ஸ்ஸ்.. எ.. என் கை…ய விடுங்க..”

“விட முடியாது.. என்ன பண்ணுவ.. உங்க அப்பாவைக் கூப்பிடுவியா..”

“ஐயோ.. இல்ல..” என்றாள் அவள்.

“அப்போ..?”

“நா.. நான் கீழ போகணும்..”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டுப் போ..”

“அதெல்லாம் எப்படி எங்க அப்பாக்கிட்ட சொல்ல முடியும்.. நான் எதுவுமே சொல்லல.. போதுமா..” என்றாள் அவள் படபடப்புடன்.

“அது..”

என்றவாறு அவளை விடுவித்தான் அவன்.

விலகி நின்றவளுக்கோ கை விரல்கள் யாவும் நடுங்க ஆரம்பித்து விட்டன.

“ஓகே.. நான் கிளம்புறேன்..” என்றான் அவன்.

“ஐயோ.. அம்மா உங்களுக்காக டின்னர் செய்றாங்கன்னு சொன்னேனே..”

“பட் நான் அதை சாப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே..”

“ப்ளீஸ்.. சாப்பிட்டு போங்க.. இல்லனா அம்மா வருத்தப்படுவாங்க..” என்றாள் அவள் நலிந்த குரலில்.

“ப்ச்..”

என அவன் சலித்துக்கொள்ள, அவளுடைய முகமோ வாடிப் போனது.

“இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க..”

“மறு வீட்டுக்கும் வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க.. இப்போதான் கல்யாணத்துக்கு அப்புறமா முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. எதுவுமே சாப்பிடாம போனா கண்டிப்பா அம்மாவும் அப்பாவும் வருத்தப்படுவாங்க.. அவங்களுக்காக இல்லனாலும் எனக்காக சாப்பிட்டு போகலாமே..”

“உனக்காக நான் எதுக்கு என்னை மாத்திக்கணும்..?”

“உங்களுக்காக நான் தைலம் தேச்சு விட்டேன்ல..” என்றாள் அவள் சற்று கோபமாக.

“அதுக்காக எல்லாம் என்னால என்னை மாத்திக்க முடியாது.. வேணும்னா நான் ஒரு டீல் போடுறேன்.. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா நான் உங்க வீட்ல சாப்பிடுறேன்.. இதுவரைக்கும் நான் வெளியே எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது..” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்

“என்ன டீல்..” என தயக்கத்துடன் கேட்டாள்.

“அன்னைக்கு நான் உனக்கு கிஸ் பண்ணினேன்ல.. இன்னைக்கு நீ எனக்கு கிஸ் கொடு.. அந்த கிஸ் ரொம்ப டீப்பா இருக்கணும்.. இதுதான் டீல்.. டீல் உனக்கு ஓகேன்னா இன்னைக்கு டின்னர் இங்கேயே சாப்பிடுறேன்..” என்றான் அவன்.

“என்னது.. மு.. மு.. முத்தம் கொடுக்கணுமாஆஆ..?” எனக் கேட்டவளுக்கு மயக்கம் வந்துவிடும் போல இருந்தது.

அவனுடைய கூர் விழிகளோ அவளுடைய சிவந்த உதடுகளில் ஆழ்ந்து பதிந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 96

No votes so far! Be the first to rate this post.

You may also like

2 comments

Nirmala Devi October 7, 2025 - 2:25 pm

Super super super super super super super super super super super super super super super

Reply
Iniya Nila October 8, 2025 - 12:48 am

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 ஸ்ரீமா சூப்பர் டா 💜💜💜💜💜💜💜💜

Reply

Leave a Reply to Nirmala Devi Cancel Reply

Best Tamil Novels

error: Content is protected !!