கருடா 23
இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.
அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால் விசிறியை எடுத்து வீசுவது, ஓயாது சாப்பிட எதையாவது கொடுப்பது என்று அமர்க்களம் செய்து விட்டார். ஒரு கட்டத்திற்கு மேல், அங்கிருந்தவர்கள் வயிற்றெரிச்சலை உணர்ந்தவள் அவரைச் சமாளித்துவிட்டு,
“நான் உங்களுக்கு குக் பண்ணித் தரேன் அத்தை.” என்றாள்.
“அய்யய்யோ! அதெல்லாம் வேண்டாம்மா. நீ அவனோட டிவி பார்த்துட்டு இரு. சாப்பாட்டு வேலைய நான் பார்த்துக்கிறேன்.”
“உங்க பர்த்டேக்கு என்னோட ட்ரீட்.”
மொத்தமாக மாமியார் வாயை அடைத்தவள், பிரியாணி செய்வதற்காக அனைத்தையும் வாங்கி வரக் கட்டியவனோடு கிளம்ப, “அவன் மட்டும் போகட்டும் மா.” தடுத்தார்.
ஏன் என்று மூத்த மகன் காரணம் கேட்க, “ஊருக் கண்ணு பொல்லாத கண்ணுடா. என் வீட்டு மருமகள் இப்படிச் செவசெவன்னு இருக்கிறதைப் பார்த்தா வயித்தெரிச்சல்ல புலம்புவாங்க… யாரு கண்ணும் என் மருமகள் மேல படக்கூடாது.” என்றதைக் கேட்டதும் மாமியாரைக் கட்டிக் கொண்டு ரிது சிரிக்க,
“எங்க போய் முடியப் போகுதோ…” கருடேந்திரனின் உடன்பிறப்புகள் புலம்பினார்கள்.
அவர்கள் புலம்பலுக்கு நடுவில், சமைக்க அடுப்பங்கரைக்குச் சென்றவளுக்கு எது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு இருவர் மட்டுமே நிற்கும் இடம் என்பதால், விசாலமாக நடந்தவளுக்கு எதுவும் ஒத்துப்பட்டு வரவில்லை. அவள் நிலையறிந்து உதவிக்கு வந்தான் கட்டியவன். அவனோடு சேர்ந்து நதியாவும், மூர்த்தியும் வந்து உதவி செய்தார்கள்.
ஜன்னல் வழியாக வரும் காற்றுப் போதவில்லை அவளுக்கு. சமையலின் வெப்பம் வேறு பாடாய் படுத்தியது. அங்கு வளர்ந்தவர்களுக்கு அது சகஜமாக இருக்க, கழிவறையில் கூட குளிரூட்டியை வைத்திருந்தவளுக்கு இது நரகமாக இருந்தது. அதிலும், அந்தக் குளிரூட்டியை அதிகபட்சக் குளிர்ச்சியில் வைத்து வளர்ந்த உடம்பு அது. குபுகுபுவென்று வேர்த்ததில் மயக்கம் வருவது போல் இருந்தது. வேகமாக நடுக்கூடத்திற்கு ஓடி வந்தவள் மின்விசிறியின் முன்பு நின்று கொள்ள,
“இதுக்குத் தான்மா நான் சொன்னேன்.” குறைப்பட்டுக் கொண்டார் சரளா.
“நீ உட்கார்ந்து டிவி பாருமா, அத்தையே சமைப்பா…”
“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்.”
“பரவால்லம்மா, எல்லாத்தையும் அவ பார்த்துப்பா. உனக்கு என்ன படம் பிடிக்கும்னு சொல்லு, போட்டு விடச் சொல்றேன்.”
மாமனாரின் வார்த்தையை மீற முடியாது அவரோடு தொலைக்காட்சி முன்பு அமர்ந்தாள். இருவரும் கதை பேசிக்கொண்டே நேரத்தைக் கடந்தனர். மதிய உணவை வெற்றிகரமாகச் சமைத்து முடித்த சரளா, அதைச் சிறு கிண்ணத்தில் போட்டுவந்து மருமகளிடம் கொடுத்து ருசி பார்க்கச் சொன்னார்.
அள்ளிப் பருகியவளுக்கு தேவாமிர்தமாக இருந்தது. கண்களை விரித்துத் தலையாட்டும் அவள் அழகில், திருஷ்டி கழித்துப் போட்டவர் சாப்பிட அனைவரையும் அழைத்தார். தனியாகச் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவள் குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டாள். எல்லாம் புது அனுபவமாக இருந்தது. சிரித்துப் பேசி மதிய உணவை முடித்த அனைவரும் மாலை எங்காவது சென்று வரத் திட்டமிட்டனர். அவர்கள் பேசுவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மனதாக முடிவு செய்து மெரினா கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இவை அவளுக்குச் சாதாரண ஒன்று. அறையில் இருந்து பார்த்தாலே கடல் அலை துள்ளிக் குதிக்கும். அப்படியான ஒன்றிற்கு, ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் திட்டமிடும் அவர்களை மனமகிழ்வாகப் பார்த்தவள், அதிசயித்துப் போனாள். எப்படிச் செல்வது என்று தனியாகத் திட்டமிடுவதில். கடைசியாக ஒரு முடிவை எடுக்க, நெஞ்சில் கை வைத்தாள் கருடனின் மனைவி.
முன்னிருக்கையில் கருடனோடு சத்யராஜ் அமர்ந்து வர, பெண்கள் மூவரும் பின்னால் அமர்ந்து கொண்டனர். மூர்த்தி நின்றிருப்பதைக் கண்டு, “நீங்க எப்படி வருவீங்க?” கேட்க, “கம்பில உட்கார்ந்துட்டு வருவேன் அண்ணி.” என ஓடி வந்து அமர்ந்தான்.
அமளி துமளியாக, மெரினாவைச் சென்றடைந்தவர்கள் ஆசை தீரப் பொழுதைக் கழித்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் கைகாட்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தான் கருடேந்திரன். இவையும், ரிதுவின் வாழ்வில் மிகவும் புதிது. இதுபோன்ற அனுபவத்தை ஒரு நாள் கூட இதற்கு முன் சந்தித்தது இல்லை. எல்லாம் அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும். இவளாகத் தேடிச்செல்லும் பொருளும், இவளைப் போன்று மினுமினுப்பாக உயர்ந்த இடத்தில் தான் இருக்கும். அங்கெல்லாம் பணம் மட்டுமே அனைத்துமாகத் தெரிந்திருக்கிறது. அவை அனைத்தையும் ஓரம் கட்டியது இந்தக் குடும்பம்.
“உனக்கு ஏதாச்சும் வேணுமா?”
“ம்ஹூம்!”
“சும்மா எதையாவது கேளு.”
பார்வையைச் சுழற்றியவள், “அது!” ஒன்றைக் கை காட்ட, “ஹா ஹா… வா.” அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தான்.
நெருப்பு மூட்டிச் சுட்டுத் தரும் சோளத்தைத் தான் கேட்டாள். ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொடுத்தான். ஆசைப்பட்டுக் கேட்டவளுக்கு நான்கு வாய் கூட உண்ண முடியவில்லை.
“ஊ… ஆ…” ஓசை கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.
குடும்பத்தோடு அமர்ந்திருந்தவன் பார்வையில் அவை விழுந்தது. படபடக்கும் கண்களும், உப்பு மிளகாய்த்தூள் சுவையில் நிறம் மாறிப்போன அந்த அதரங்களும் ரசிக்கத் தூண்டியது. அடிக்கடி வலது கையால் உதட்டைத் துடைத்து, அதை ஆடையில் துடைத்துக் கொள்பவள் அவஸ்தை அழகாகத் தெரிந்தது. சுற்றி இருக்கும் குடும்பத்தாரை மறந்தவன் அவள் பின்னே அலைய ஆரம்பித்தான்.
பேசிக் கொண்டிருந்ததால், இவன் நிலையை யாரும் அறியவில்லை. தீவிரமாகச் சோளத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளும் இவனைக் கவனிக்கவில்லை. தலைமுடி முதல், மணலில் புதைந்திருந்த பாதம் வரை எல்லாம் அவனுக்காக என்ற எண்ணம் மெய்சிலிர்க்க வைத்தது. முதல்முறையாக இவளைப் பார்க்கும் பொழுது, இப்படியான தருணத்தில் இருப்போம் என்பதை எதிர்பார்த்திடாதவனுக்கு, இந்தத் தருணம் பொக்கிஷமாக அமைந்தது.
“ஊஃப்!” என்றவள் நுனி நாக்கால் இதழை எச்சில் செய்து, “வேண்டாப்பா!” அவனை நோக்கி நீட்ட, அவள் செய்த செயலோடு அவன் இதயம் தொப்பென்று கடற்கரை மணலில் விழுந்தது.
நீட்டிய கையோடு அவனையே ரிது பார்த்திருக்க, அவனது பார்வை அந்த அதரத்தை மொய்த்தது. குடும்ப ஆள்களை எண்ணிக் கண்ணால் கண்டிக்கும் மனைவியைக் கண்ணடித்துக் கவர்ந்தவன், யாரும் அறியா வண்ணம் பறக்கும் முத்தத்தைத் தூதுவிட, அந்தி மறையும் சூரியன் இவள் வெட்கத்தைப் பார்த்து விட்டது.
***
சரளாவின் பிறந்தநாள் அன்றைய இரவை எட்டியது. நேற்று இரவு சரியாக உறங்காதவள், இன்றைய இரவையும் உறங்கா இரவாகக் கழித்தாள். காலை கண் விழித்ததும், கடவுளைத் தேடி ஓடாமல் மருமகளைத் தேடி வந்த சரளாவோடு, சகஜமாகப் பழக ஆரம்பித்தவள் அன்றைய வேலைகள் அனைத்தையும் அவளே செய்ய ஆரம்பித்தாள். அவர் வேண்டாம் என்றதையும் ஏற்காமல் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள்.
கருடன் எழுவதற்கு முன்னால், காலை உணவை முடித்துவிட்டுத் தயாராகி வந்தவள் அழகை அங்கிருந்த அனைவரும் ரசித்தார்கள். நீல நிறப் பட்டுடுத்தி, மிதமான அலங்காரத்தில் நின்றவளுக்குச் சிகை மட்டுமே குறையாகத் தெரிந்தது. அதை வாய் விட்டுச் சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வாளோ என அங்கிருந்த அனைவரும் மனதிற்குள் வைத்துக் கொள்ள, கண்ணாடியைப் பார்த்தவளுக்கு அந்த எண்ணம் சிறிதாக எட்டிப் பார்த்தது.
அதற்குக் காரணம் அன்று அவன் சொன்னதுதான். எப்படியான பெண் பிடிக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக நிற்கிறாள் ரிது. அன்று பூ வாங்கித் தர ஆசையாக இருக்கிறது என்றவனுக்காக, முடியின் மீது ஆசை பிறந்தது. எப்படியாவது அதையும் வளர்த்து அவனுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்தவள் மெல்லத் தட்டி எழுப்பி இன்பத்தில் ஆழ்த்தினாள்.
கதவு திறந்து இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால். அவன் அவஸ்தை கண்டு ஏளனம் செய்தவள், காலை உணவைப் படையல் இட்டு பாராட்டையும் வாங்கினாள். அத்தோடு நிற்காமல், அந்தக் குடும்பத்தோடு சேர என்னென்ன வேண்டுமோ அவை அனைத்தையும் அவளாக ஓடிச் சென்று செய்ய,
“எதுக்கு இவ்ளோ கஷ்டப்படுற?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“உனக்கு இப்படி இருந்தால் புடிக்கும்ல.”
“உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்துறன்னு தோணுது.”
“ப்ச்!” என அவன் சட்டை பட்டனைத் திருகியவள், “நீ என் கூட இருக்கிறது தான் எனக்குச் சந்தோஷம்! அது இந்த வீட்ல கிடைக்கும்னா இப்படி எல்லாம் இருக்க நான் ரெடி!” என்றவளை நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தமிட்டான். அனைத்தும் சுகம் என்ற மகிழ்வில் சிரித்தபடி அவள் இருக்க, முத்தமிட்டவன் முகம் தான் நிறம் மாறியது.
அடுத்த நாளும் அழகாகப் பிறக்க அவளின் வாழ்வு இனிதே தொடங்கியது. இரவானால், தூக்கம் தான் வசப்படவில்லை. காலை எழுந்ததிலிருந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவள் மீது தான் அவன் பார்வை இருந்தது. அதை அறிந்தவள் காதலோடு கண்ணடிக்க, இதழ் அசைத்துச் சிரித்தான் குரோதத்தோடு.
வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்தவளிடம், “இந்த டிரஸ்ஸை மட்டும் கொஞ்சம் வாஷ் பண்ணித் தரியா.” கொடுக்க, மொட்டை மாடிக்குச் சென்றாள். சமையல் தெரியும் என்பதால் அதில் கடினப்படாதவள், துணி துவைத்து முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிட்டாள். பின் இடுப்பு வலியில் நகர மறுத்தது. அதை முடித்த கையோடு,
“காஃபி போடுறியா?” கெஞ்சலோடு கேட்டான்.
“இந்தாப்பா.” என்றதை வாங்கிக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.
“என்கிட்டக் கேட்டு இருந்தா நான் போட்டுக் கொடுத்திருப்பேன்ல டா.”
“அவ எதுக்கு இருக்கா?” என்று விட்டான் வெடுக்கென்று.
ஒரு நொடி அங்கிருந்த அனைவருக்கும் முகம் வாட, “இப்படி எல்லாம் இருப்பன்னு எதிர்பார்க்கவே இல்லம்மா… சரளா சொன்ன மாதிரி நீ ரொம்ப நல்ல பொண்ணு. நாங்கதான் உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டோம்.” என்றார் சத்யராஜ்.
“ஆமா அண்ணி. நாங்களும் இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அண்ணனை நீங்க கவனிக்கிற விதத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.” நதியா.
“உங்களை மரியாதை இல்லாமல் பேசிட்டேன் அண்ணி. மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.” மூர்த்தி.
“ஹா ஹா… ஹி ஹி…”
கருடேந்திரன் போட்ட கூச்சலில் அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்ப, “யாரு! இவ நல்லவளா?” என்று விட்டு அண்ணாந்து சிரித்தான்.
தன்னவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், சிரிப்பை நிறுத்தி முறைப்பை வீசினான். வானிலை மாற்றம் போல் மாறும் அவன் முக பாவனைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புருவம் சுருக்கினாள். அதில் ஏளனத்தைக் கொட்டியவன்,
“இப்படி எல்லாம் பண்ற ஆளா இவ… உங்க பாராட்டெல்லாம் எனக்கு வர வேண்டியது. இந்தப் பணக்காரிக்கு மருமகள் வேஷம் போட்டு மூணு நாளா கூத்தாட வச்சது நான்தான்.” என்றதும் இடியே இடித்தது அவள் இதயத்தில்.
மெல்ல எழுந்து அவள் முன்பு நின்றான். தந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டவள் காதலித்தவனை இன்னும் நம்பிக் கொண்டிருக்க, நின்றவனுக்கோ மலையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற மகிழ்வு. தோல்வியின் பக்கமே செல்லாதவளைக் குண்டுக் கட்டாகத் தூக்கிப் போட்ட மகிழ்வில் மிதப்பாகச் சிரித்தவன்,
“பரவாயில்லையே…” என மேலும் கீழும் பார்த்தான்.
“நான் கூட உன்னை ஜெயிக்கவே முடியாதுன்னு நம்பிட்டேன். அட மடையா, நீ ஜெயிப்படான்னு நம்பிக்கை கொடுத்து அதை நிறைவேத்தி வெச்சிட்டியே!”
“கருடா…”
“எஸ்! கருடனே தான். எப்படி இருக்கு நம்ம ஆட்டம்? பெரிய பணக்காரி! சொடக்குப் போட்டா நாலு பேர் கும்பிடு போட்டு ரெடியா நிப்பாங்க. நடை, உடை, பாவனை எல்லாத்துலயும் பணத்தோட வாசம் தூக்கலா இருக்கும். மரியாதை எல்லாம் என்னன்னே தெரியாது. குடிச்ச டம்ளரை எடுத்து வைக்கக் கூட காலிங் பெல் அடிச்சு ஆளக் கூப்பிடுவ… இந்தப் பட்டுக் கால் மண்ல பட்டதே இல்ல. அப்படி இருந்த உன்னை எப்படி நிக்க வெச்சிருக்கேன் பார்த்தியா?
உன்கிட்ட இப்பவும் காசு இருக்கு. ஆனா, நீ ஒரு செல்லாக்காசு! மரியாதை இல்லாமள் பேசுன என் பெத்தவங்ககிட்ட உன்னை நிக்க வச்சுருக்கேன். என் வீட்ல ஒரு வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய வச்சிருக்கேன். என்னைத் தூங்க விடாம டார்ச்சர் பண்ண உன்னை, மூணு நாளா இம்சை குடுக்காமலே தூங்க விடாமல் செஞ்சிருக்கேன். ரோட்டுல நடக்க வச்சிருக்கேன். என் வீட்டுச் சாப்பாட்டுக்கு, மூணு வேளையும் உட்கார வச்சிருக்கேன்.” என்ற வார்த்தைகள் அனைத்தும் சாட்டை அடியாக அவள் உடலை வதைத்தது.
அவன் குடும்பத்தார்கள் அனைவரும் நம்ப முடியாத திகைப்பில் நின்றிருக்க, “அது எல்லாத்தையும் விட, நாயி, நாயின்னு சொன்ன ஒருத்தனுக்காக உன்ன நாயா அலைய வச்சிருக்கேன் பார்த்தியா…” என்றதும் அவள் விழிகள் அழுத்தமாகப் பார்த்தது அவனை.
“எப்படி எப்படி? உனக்காகத் தான் எல்லாம் பண்ணேன். உண்மை தெரிஞ்சா உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சு போயிடும், நீ எனக்கு வேணும்! ஹா ஹா…”
அழுத்தமான விழிகளுக்குள் தோல்வி ஊடுருவியது. மெல்ல அவள் மனத்திற்கும், புத்திக்கும் அவன் நடத்திய நாடகம் புரிந்தது. தன்னை நேரில் நின்று அடிக்க முடியாததால், அன்பெனும் ஆயுதத்தை நேராக இதயத்தில் குத்தி ரத்தத்தைப் பார்த்திருக்கிறான் என்பதைத் தாமதமாக உணர்ந்தவளால், ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் முன்பு நிராயுதபாணியாக நின்றாள். அதை முழுதாக ரசித்தவன் தாவி அவள் கழுத்தைப் பிடித்து, “என் அம்மாவை வச்சு அடக்கப் பார்த்த உன்னை, உன் அம்மாவ வச்சு அடக்கிட்டேன் பார்த்தியா…” என்று பின்னால் தள்ளி விட்டான்.
பிடிக்க வந்த சரளாவையும், தன்னிடம் பேச வந்த குடும்பத்து ஆள்களையும் ஒரே பார்வையில் அடக்கியவன், “இப்படி ஒரு நாளுக்காகத் தான்டி கனவுலயும் பிடிக்காத உன்னைப் பிடிச்ச மாதிரி நடிச்சேன். என் வீட்ல வந்து இப்படி நீ உட்காரனும்னு தான்டி ஒவ்வொன்னத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சேன்… கருடா கருடான்னு பைத்தியம் பிடிச்சு அலையத் தான்டி தொட்டாலே அருவருப்பா இருக்க உன்ன, ரசிச்சுத் தொடுற மாதிரி நடிச்சேன்.” என்றதும் அவளது கண்கள் இறுக்கமாக மூடிக்கொண்டது.
“சும்மா சொல்லக் கூடாது. என்ன அருமையா என்னை லவ் பண்ற… அப்படியே உருகி ஊத்திடுச்சு உன் அன்பு. உனக்குள்ள இப்படி ஒரு காதலா!” என்றவன் கைகள் இரண்டையும் நீட்டி, “சொல்லும்போதே எப்படிச் சிலிர்க்குது பாரு!” சிரித்தான்.
அவளோ கண்களைத் திறக்காமல் அதே நிலையில் இருக்க, அழுத்தமாகக் கன்னத்தைப் பிடித்து, “கண்ணத் திறடி! நீ தோத்துப் போய் நிற்கிறதை நான் பார்க்கணும். ஆணவத்துல எவ்ளோ ஆட்டம் போட்ட… எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சு, என் காலுக்குக் கீழே நிக்க வச்சுட்டேன் பார்த்தியா?” என்றவனை அந்நிலையிலும் பார்க்கத் தயாராக இல்லை ரிதுசதிகா.
“ம்ம்… நீ செத்துப்போன பாம்பு! இனி உன்ன அடிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. இந்த அசிங்கத்தைத் தாங்கிக்க முடியாம ஏதாச்சும் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா, சீக்கிரம் பண்ணிக்க… கோர்ட், டைவர்ஸ்னு அலையுற வேலை மிச்சம்!” என்றவன் சிறிதும் இரக்கம் பார்க்காமல் அவள் பின்னங்கழுத்தில் கை வைத்து, “வெளிய போடி!” தள்ளி விட்டான்.
“என்னடா பண்ற?” என அவசரமாக ஓடிவரும் அன்னையைத் தடுத்துக் கதவைச் சாற்றியவன், “நீங்க என்ன கேட்டீங்களோ, அதை நான் செஞ்சிட்டேன். இதுக்கு மேலயும் இந்த விஷயத்துக்குள்ள வராதீங்க. அவளுக்கும், எனக்குமான உறவு இந்த நிமிஷத்தோட முடிஞ்சு போச்சு.” என்றதையும் மீறி அவர் கதவைத் திறக்கப் போக,
“அந்தக் கதவு திறந்துச்சுன்னா, உங்க புள்ள செத்துடுவான்.” என்றான் அழுத்தமாக.
பிள்ளையின் வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாதவர் அழுகையோடு நிற்க, மற்ற மூவருக்கும் அங்கிருப்பது கருடனாகத் தெரியவில்லை. இதுபோன்று பேசிக் கூடக் கேட்டதில்லை. அப்படிப்பட்டவனா, இப்படி அரக்கனாக நடந்து கொண்டது என்ற பெரும் அதிர்வில் அப்படியே இருந்தார்கள். குடும்பத்தார்கள் பார்வையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
***
எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்பதைக் கூட அறியாதவள், பிரம்மை பிடித்தவள் போல் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தாள். மகளைக் கவனித்தவர், “என்னடா, அதுக்குள்ள வந்துட்ட. கருடன் வரல…” சிரித்த முகமாக விசாரித்தார்.
புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற மகளை அன்போடு விசாரிக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லாதவள் தாயின் அறை முன்பு நின்றாள். அதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் விழிகளில் இல்லை. அவ்வளவு அழுத்தமாக வீடு வந்து சேர்ந்தவள், அன்னையைப் பார்த்ததும் உடைந்து விட்டாள்.
ஓடிச்சென்று ராதாவின் மீது சரிந்தவள் சத்தமிட்டு அழுதாள். அங்கிருந்த பொன்வண்ணனுக்கு உடல் நடுங்கியது. ராதாவிற்காகவும், மூத்த மகனுக்காகவும் அவள் இப்படி அழுது பார்த்திருக்கிறார். அதன்பின் இப்போது தான் பார்க்கிறார். நன்றாகப் புகுந்த வீட்டிற்கு வாழச் சென்ற பெண், இப்படி அழுவதைப் பார்க்க எந்தத் தந்தைக்குத் தான் துணிவிருக்கும்.
பாய்ந்தோடி மகளை அரவணைத்தவர் பயத்தோடு என்னவென்று கேட்க, அப்போதும் எதுவும் சொல்லாமல் அழ மட்டுமே செய்தாள். நேரம் கடந்தும் அவள் அழுகைக்கான காரணம் தெரியவில்லை. எவ்வளவு சமாதானங்கள் சொல்லியும் ரிதுவைச் சரிப்படுத்த முடியவில்லை.
பயத்தில், மருமகனைத் தொடர்பு கொண்டவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சத்யராஜைத் தொடர்பு கொண்டு மகளது அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். சங்கடத்தோடு நடந்த அனைத்தையும் தெரிவிக்க, இதயம் துடிப்பதை நிறுத்தியது. நம்ப மறுத்தவர் இரண்டு மூன்று தடவை, “நிஜமாவா?” கேட்டார்.
இவ்விருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று முதலில் ஆசை கொண்டது இவர் தான். இவரின் அந்த ஆசைதான் பெற்ற மகளின் நிலைக்குக் காரணம். பிள்ளையின் அழுகையைச் சகித்துக் கொள்ள முடியாத தந்தை ஆதரவாக அரவணைத்து, “நான் பேசிப் பார்க்கிறேன்டா” என்றவரைப் பார்த்தாள்.
அப்பார்வையில் இருக்கும் குற்றத்தை உணர்ந்து, தலை குனிந்தவரை முடிந்த வரை முறைத்து விட்டு அறைக்குச் சென்று விட்டாள். பெரிய சுனாமியே இரு வீட்டையும் சுற்றி அடித்தது போல் இருந்தது நிலவரம். இரு வீடும் பலத்த சேதாரங்களைச் சந்தித்து, எப்படித் தலையெடுப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த பெரியவர்கள் பேசிக் கொண்டனர். அதன்படி மகனைச் சமாதானம் செய்ய சரளாவும், சத்யராஜும் போராடிக் கொண்டிருக்க, அந்த வாய்ப்பையே தந்தைக்குக் கொடுக்கவில்லை ரிது. தன் முடிவில் மாற்றம் இல்லை என்று விட்டான் கருடன். நடந்ததைப் பற்றிப் பேசத் தயாராக இல்லை ரிது. இவர்களின் இந்த முடிவோடு இரண்டு வாரங்கள் கடந்தது.
மிடுக்காகச் சுற்றித் திரியும், மகள் முகத்தில் தெரியும் வேதனையைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானவர், சொல்லிக் கொள்ளாமல் மருமகனைப் பார்க்கச் சென்றார். வழக்கம்போல் ஆட்டோ ஓட்டிவிட்டுக் காலை உணவிற்கு வந்தவன் இவரைச் சிறிதும் மதிக்காது டீவி பார்த்துக் கொண்டிருக்க, “உன் மேல நிறையக் கோபம் இருந்தாலும், அதைக் காட்ட முடியல. காரணம் என் பொண்ணு…
ஒரு பொண்ணப் பெத்தவனா மட்டும்தான் உன்கிட்டப் பேச வந்திருக்கேன். ரிது அன்புக்கு அடங்கற குழந்தை! எதை அவகிட்டக் காட்டக் கூடாதோ அதைக் காட்டித் தோற்கடிச்சிருக்க. என் பொண்ணு ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா, ஏற்கெனவே அவள் நிறைய இழப்பைப் பார்த்திருக்கா… உன்னோடதை நிச்சயம் தாங்க மாட்டா. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு…” என அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கருடனின் குரல் ஒலித்தது.
“மரியாதையா வெளிய போயிடுங்க.” என்று.
“என்னடா ஆச்சு உனக்கு? அந்தப் பொண்ணு தான் எந்தத் தப்பும் பண்ணலன்னு தெரிஞ்சிருச்சே. அப்புறம் எதுக்காகடா இப்படி நடந்துக்கிற? எங்களைத் தான அவ தப்பா பேசினா. அதை நாங்களே மறந்துட்டோம். உனக்கு என்னடா? தப்பே பண்ணாதவளுக்குத் தாலி கட்டி நீ தான் பெரிய தப்புப் பண்ணிருக்க. இதுல பேச வந்தவரை மரியாதை இல்லாமல் பேசுற. நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல கருடா…”
திட்டிக் கொண்டிருக்கும் தந்தையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாது, “பொண்ண ஒழுக்கமா வளர்க்கத் துப்பில்லை. இதுல நியாயம் பேச வந்துட்டீங்க. நான் அவ கழுத்துல கட்டினது தாலியே இல்ல. உங்க பொண்ணும் அதை ஒருநாளும் மதிச்சதும் இல்ல. இந்நேரம் கழற்றித் தூக்கிப் போட்டு இருப்பா. வேற எந்த இளிச்சவாயனாவது கிடைச்சா கட்டி வையுங்க.” என்றவனை நம்ப முடியாது பார்த்தார் பொன்வண்ணன்.
சொல்லியும் நகராமல் அமர்ந்திருப்பவரைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன், “எந்த வேலையப் பார்க்கக் கூடாதோ, அந்த வேலையைப் பார்க்குறீங்க.” எனத் தன்னால் எழுந்து செல்ல வைத்தான்.
***
மனம் நொந்து தனியாக அழுது புலம்பியவர் மகளைப் பார்க்க வந்தார். மெத்தையில் கவிழ்ந்து படுத்திருந்தவள் அருகில் வந்தவர், “ரிது…” என அந்த ஏழு அடுக்கு மாடி இடிந்து விடும் அளவிற்குக் கத்தினார். மெத்தை முழுவதும் மாத்திரைகள் சிதறி இருந்தது. அரை மயக்கத்தில் தந்தையின் குரலைக் கேட்டபடி படுத்திருந்தாள். அலறித் துடித்த பொன்வண்ணன், மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயல, திறக்க முடியாத கண்களைக் கடினப்பட்டுத் திறந்து,
“என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் முதல் காரணம்!” என அவரைத் தள்ளி விட்டாள்.
தலையில் அடித்துக் கொண்டு, செய்த தவறைச் சொல்லிப் புலம்பியவர் கெஞ்சி மருத்துவமனைக்கு அழைக்க, அவரை விரட்டி அடித்துக் கதவைச் சாற்றிக் கொண்டாள்.
கதவைத் தட்டித் தோற்றுப் போனவர் ஆத்திரமடங்காது சத்யராஜை அழைத்து, “என் பொண்ணுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, அவனை நான் சும்மா விடமாட்டேன். பாவிப் பையன, நம்பிக் கட்டிக் கொடுத்ததுக்கு என் பொண்ணை இப்படிப் பண்ணிட்டானே!” பேரிடியை இறக்கினார்.