25. சிறையிடாதே கருடா

4.5
(18)

கருடா 25

 

கதவைத் திறந்து வெளிவந்தவனைக் குடும்பம் மொத்தமும் வரவேற்றது. அவர்களைக் கண்டும் காணாமலும் கடக்க நினைத்தவனை, “ஹா ஹா…” என்ற சத்தம் வெறுப்பேற்றியது. ஆட்டோ சாவியைக் கையில் நுழைத்துச் சுற்றிக்கொண்டு,

 

“ஒன்னு கூடிக் கலாய்க்கிறீங்களா? என் பொண்டாட்டி மட்டும் சமாதானம் ஆகட்டும், இந்த வீட்டுப் பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்.” என்றான்.

 

“இந்த முடிவ அப்பவே எடுத்திருந்தா, இந்த நிலைமைல நின்னிருக்க மாட்ட.”

 

“என்னம்மா பண்ண? நீங்க எல்லாரும் இவ்ளோ விஷமா இருப்பீங்கன்னு தெரியலையே.”

 

மீண்டும் நால்வரும் சேர்ந்து சிரிக்க, நிற்க முடியவில்லை கருடனால். கடுப்போடு இரண்டு சவாரிகளை முடித்துவிட்டு, மாமியாரின் பயிலகத்திற்கு வந்தமர்ந்தவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்குக் கிளம்பினான். அங்குத் தாலி கட்டியவள் இல்லை என்பதை அறிந்தவன் மாமனாரை அழைத்து விபரத்தைக் கேட்க,

 

“வீட்லதான் இருக்கா…” தகவல் கொடுத்தார்.

 

“ஆபீஸ் வரலையா?”

 

“தெரியலப்பா, நீதான் வந்து கேட்டுப்பாரு!”

 

“கிண்டலா மாமா?”

 

“அட நிஜமாப்பா… எவ்ளோ நாள் தான், நீயும் இப்படிப் பின்னாடியே ஓடிக்கிட்டு இருப்ப. டக்குனு வந்து முடிச்சு விடு.”

 

“கோபம் குறையுற வரைக்கும் கிட்ட வர முடியாது மாமா…”

 

“என் பொண்ணு மேல அவ்ளோ பயமா?”

 

“இப்படி ஒரு பொண்ணை வளர்த்து வச்சிருக்கோம்னு கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சி இல்லாமல் கேக்குறீங்க பார்த்தீங்களா?”

 

“அடிக்கடி மாமனார் என்றதை மறந்துட்டுப் பேசுறீங்க மாப்பிள்ளை.”

 

“என்ன பண்றது மாமனாரே? என்னையும் மீறி வந்துடுது!”

 

“அது சரி, நீங்களாச்சு. என் பொண்ணாச்சு!” என வைத்து விட்டார்.

 

என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் நின்றிருந்தவனைத் தாண்டிச் சென்றார் பூ வியாபாரி. இன்றைக்குக் காதலர் தினம் என்பதால், வகை வகையான நிறத்தில் ரோஜாப் பூக்கள் குவிந்து இருந்தது. நின்று கொண்டிருந்தவன் கவனம் அதில் திரும்பியது. புத்தி நல்ல யோசனை கூறியது. மெல்லக் காதலோடு சிரித்தவன், கைகொள்ளா அளவிற்கு ரோஜாப் பூக்களை வாங்கிக் கொண்டு,

 

“ஆட்டோக்காரன் கம்மிங் முதலாளி…” சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

 

தன்னவன் முகத்தைப் பல மாதங்கள் கழித்துப் பார்க்கப் போவதை அறியாது, கடல் அலையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். எப்போதும் அவளுக்கு இந்த அமைதி சொந்தம். ஆனால், கருடன் வருவதற்கு முன்னால் அதில் ஒரு அழுத்தம் இருக்கும். இப்போது அது காதலாக மாறியிருக்கிறது. அவன் கொடுத்த காதலிலும், நிராகரிப்பிலும் அவளுக்குள் மட்டும் இருந்த அமைதி, அவளையே அமைதியாக மாற்றிவிட்டது.

 

மனத்தில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியவில்லை. அவனது நிராகரிப்பும், அதற்கான காரணமும் அவன் பக்கம் இருந்து பார்த்தால் சரி என்று உணர்ந்தவளால், தன் பக்கம் இருந்து சரி என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. தன் ஒருத்திக்காக அவனை வளைய வைப்பதற்குப் பதில், அவன் விருப்பப்படியே விலகி இருக்கலாம் என்ற முடிவில் தான் இத்தனை நாள்களும் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், மனம் அவனுக்கானது அல்லவா! ஓயாமல் அவன் நினைவுகளை ஞாபகப்படுத்தித் தொந்தரவு செய்கிறது.

 

அதிலும், இந்த அறை அவன் ஞாபகங்களை மட்டும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து தப்பிப்பதற்காக, வேலைக்கு ஓடுபவளைப் பின்னால் துரத்தி வருகிறான் கட்டியவன். வந்துவிட்டதால் ஓடிச் சென்று அணைக்கவும், வேண்டாம் என்ற முடிவில் உறுதியாகவும் இருக்க முடியாது தள்ளாடிக் கொண்டிருக்கிறாள்.

 

மனையாளின் நினைவில் வீட்டின் முன்பு நின்றவனுக்கு முதன்முதலாக நின்ற நினைவு. தனக்குள் சிரித்துக் கொண்டு கதவைத் திறந்தவனைக் கண்ட காவலாளி இன்பமாக அதிர, இவரே இப்படி என்றால் தன்னவள் முகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு உள்ளே நுழைந்தான். வழக்கம்போல் அறைக் கதவு சாற்றப்பட்டு இருந்தது. திறப்பதற்கு முன்னால், தன் அலங்காரங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டான். மனைவியைக் கவர்வதற்காக, அவளுக்குப் பிடித்த நிறத்தில் உடை அணிந்தவன் பளபளவென்று சிங்காரித்துக் கொண்டு வந்திருக்கிறான்.

 

மூச்சை இழுத்து விட்டுக் கதவைத் திறந்தான். கண்கள் அறையை வட்டமிட்டது. அலைபாய்ந்து வந்து கொண்டிருந்த கண்கள், பால்கனிப் பக்கம் சென்றதும் ஸ்தம்பித்து நின்றது. அடியெடுத்து வைத்தவன் கால்கள் அங்கேயே உறைந்தது. தன் கண்ணையே தன்னால் நம்ப முடியாது இன்பமாக அதிர்ந்தவன், தோள் வரை ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் அந்தக் கூந்தலை ரசித்துக் கொண்டே நடந்தான்.

 

அவள் மனத்தில், தன் மீதான எண்ணங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவளின் கூந்தலே பதில் சொல்லியது. பட்டு நூல்கள் கருப்பு நிறத்தில், காதைத் தாண்டி லேசாகத் தோளைத் தொட்டு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. திகட்டாத இன்பத்தேனை அள்ளி அள்ளிப் பருகியது போல் பின்னால் வந்து நின்றவன் முகத்தில் கடற்கரையின் காற்று தழுவிச் சென்றது. கண்மூடித் திறந்தவன் முன்னால் அந்தக் குட்டிக் கூந்தல்.

 

அவன் வந்ததை அறியாது, சிலை போல் நின்றிருந்தவள் கூந்தலுக்குள் நுனி மூக்கை நுழைத்தவன், அதன் வாசத்தை நுகர்ந்து மெய் மறந்து போனான். அந்த மூச்சுக்காற்றில் திரும்பினாள் ரிதுசதிகா. பின்னால் இருந்து கூந்தலை மட்டுமே ரசித்து மதி மயங்கிப் போனவன், அவள் மதி முகத்தில் தொலைந்து போனான். கண்கள் சொருகப் போதை தலைக்கேறிய ஆசாமி, தன்னையும் மீறி அவளோடு நெருங்கி நின்று முகத்தோடு முகம் உரசத் துணிந்தான்.

 

தூக்கத்தில் கனவு காண்பது போல், ஒரு நிமிடம் அவன் உருவத்தைக் கண்டு குழம்பியவள் தன்னை மோத வரும் அவன் முகத்தில் தெளிந்து நகர்ந்து நின்றாள். உறவாட வந்தவன் சுவரில் மோதி அதில், “உம்மா…” என்றான்.

 

சுவரிற்கு முத்தம் கொடுத்தவனைக் கட்டியவள் முறைக்க, கொடுக்க வைத்ததற்காக அவனும் முறைத்தான். இருவரின் முறைப்பும் பத்து நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவன் முகத்தைப் பார்க்கத் தைரியம் இன்றி ரிது திரும்பிக் கொள்ள, திரும்பும் முன் முத்தமிட்ட சுவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியதைக் கவனித்தவன் கோபம் ‘புஸ்’ என்றானது.

 

“ம்க்கும்! ம்க்கும்!” பலமாகத் தொண்டையைச் செருமிடத் திரும்பவில்லை அவள்.

 

“எப்படி இருக்க முதலாளி?” என்றதற்கும் பதில் இல்லாமல் போக, கைப்பிடித்தான்.

 

உடனே தட்டி விட்டவள் நகர, தடை விதித்துத் தன்பக்கம் திருப்பிக் கொண்டவன் சுவரோடு நிற்க வைத்து, “ரொம்ப அழகா இருக்க…” என்றான்‌.

 

“எதுக்கு வந்த?”

 

“இந்த அழகுல நான் மயங்கி விழுந்திடக் கூடாதுன்னு தான், ஹேர் கட் பண்ணி வச்சிருந்தியா?”

 

“எதுக்கு இங்க வந்தன்னு கேட்டேன்?”

 

“ப்ச்! எனக்காகவா?”

 

“உன்னை யாரு உள்ள விட்டது?”

 

“அவ்ளோ லவ்வா?”

 

“வெளிய போ…”

 

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

 

“நீயா போயிட்டினா மரியாதை!”

 

“சத்தியமா எதிர்பார்க்கல. பார்த்ததும் அப்படியே உடம்புக்குள்ள ஏதோ ஒன்னு புகுந்த மாதிரி ஆளைத் தள்ளுது.”

 

“வெளிய போ…”

 

“அணுஅணுவா பக்கத்துல இருந்து ரசிக்க வேண்டியவன்… பெரிய தப்புப் பண்ணிட்டேன்!”

 

“போ…”

 

“என்னால கண்ட்ரோலே பண்ண முடியல.”

 

“கைய விடுடா…” என உதறிய பின் தான் புத்தி தெளிந்தது.

 

பெருமூச்சோடு, “சாரி ரிது!” என்றிட, “முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். திரும்பவும் பிள்ளையார் சுழி போட நான் விரும்பல. ஆரம்பத்துல இருந்தே நீ ரொம்பத் தெளிவா தான் இருந்திருக்க. நான்தான் சொன்னது ஒன்னும், நடந்துக்கிட்டது ஒன்னாவும் இருந்திருக்கேன்.” என அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கட்டி அணைத்தான்.

 

“சத்தியமா உனக்காகத் தான்…” எனும் பொழுதே அவனைத் தள்ளி விட்டவள்,

 

“உன்னோட முடிவு சரியா இருந்ததால தான் நானும் விலகிட்டேன். திரும்ப எதுக்காக வர? என் மேல பாவப்பட்டு வரியா? உன்னோட பரிதாபம் எனக்குத் தேவையில்லை. ரிது அந்த அளவுக்கு வீக்கான பொண்ணு இல்ல. அவளால அவ நேசிச்சவங்க இல்லாம வாழ முடியும்.” என்றாள்.

 

“நான் இல்லாம?”

 

“ஏன்? இருக்க முடியாதுன்னு நினைக்கறியா?”

 

“ஆமா!” என்றவனை அழுத்தமாகப் பார்த்தவள், “முடியும்!” என்றாள்‌.

 

“அப்புறம் ஏன் கண்ணு கலங்குது?” என்றதும் திரும்பியவள், “முதல்ல இங்க இருந்து கிளம்பு…” கத்தினாள்.

 

அமைதியாக நின்றிருந்தவனுக்கு, அவள் முகம் தெரியவில்லை என்றாலும் உணர்வுகள் தெரிந்தது. அதில் மனம் கரைந்து போனவன், “திரும்பு!” என்றான்‌.

 

அவளோ விடாப்பிடியாக அப்படியே நின்றிருக்க, “நீ திரும்புனா, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போயிடுவேன்.” என்றதும் தனக்குள் ஆயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொண்டு திரும்பியவள், அவன் முகம் பார்க்காது தலைகுனிந்து கொள்ள பூங்கொத்தை அவள் முன்பு நீட்டினான்.

 

வண்ண நிறங்களில் பூத்துச் சிரிக்கும் ரோஜாக்களைப் பார்த்தவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு, “ஐ லவ் யூ பொண்டாட்டி!” என்றிட, அவள் விழிகள் சொந்தமானவன் விழிகளை நோக்கியது.

 

ஆழமாகப் பார்த்த கருடன், “ஐ லவ் யூ சொல்லி, கல்யாணம் பண்ணி, சண்டை போட்டு, வேண்டாம்டா சாமின்னு பிரியனும்… நம்ம எல்லாத்தையும் தலைகீழா பண்ணிட்டோம். இனியாவது சரியாப் பண்ணனும்னு நினைக்கிறேன்.” என்று விட்டு மண்டியிட்டான்.

 

“நம்ம லைஃப்ல நிறைய நடந்துருச்சு. அதுக்கு நான்தான் அதிகக் காரணம். இன்னைக்கு உனக்கு நான் ஒரு ப்ராமிஸ் பண்றேன். இனி எப்பவும் உன்னை விட்டுப் போக மாட்டேன். நீயே வேண்டாம்னு சொன்னாலும், இந்த ஆட்டோக்காரன் போக மாட்டான். என் பொண்டாட்டியக் கஷ்டப்படுத்துனதுக்காக இனி இந்த உடம்ப விட்டு உயிர் போற வரைக்கும், அவளுக்காக மட்டும் வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்த ஆட்டோக்காரனை ஏத்துக்க…” என மனதாரப் புன்னகைக்க, அவன் முகம் பார்ப்பதை மட்டுமே செய்து கொண்டிருந்தாள் ரிதுசதிகா.

 

மூளைக்கும், மனத்திற்கும் அவன் வார்த்தைகள் புரிந்தாலும், உடல் செயலற்றுப் போனதால் அப்படியே இருக்க, “ஐ லவ் யூ டி…” என்றான். உதடுகளைக் குவித்துப் பறக்கும் முத்தத்தை அவள் உதட்டிற்குத் தூது அனுப்பினான். அதன் கனம் தாங்க முடியாது அறையை விட்டுச் சென்று விட்டாள்.

 

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அவள் சென்ற பின்னும் சிரித்த முகத்தை மாற்றிக் கொள்ளாமல் பூங்கொத்தை மெத்தையில் வைத்து விட்டு வெளியேறினான். வெகு நேரம் கழித்து அறைக்குள் வந்தவளை அந்தப் பூங்கொத்து வரவேற்றது.

 

கண்ணீர் கரைய, மெத்தை அருகில் சென்றவள் அதைக் கையில் எடுக்கப் போக, “மிஸ் யூ முதலாளி!” என்று அவன் எழுதி வைத்து விட்டுச் சென்ற வாசகம் உயிர் நாடியைத் தொட்டு வந்தது.

 

இரண்டையும் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவள் அவன் நினைவில் கரைய, நேராக வீட்டிற்குச் சென்றவன் சரளாவின் காலில் தொப்பென்று விழுந்தான்.

 

தீவிரமாகச் சமைத்துக் கொண்டிருந்தவர் திடுக்கிட்டுக் கையில் பிடித்திருந்த கரண்டியை அவன் மீது போட்டார். கொதித்துக் கொண்டிருந்த குழம்பு மேலே பட்டும் சொரணை இல்லாது,

 

“என்னை என் பொண்டாட்டி கூடச் சேர்த்து வைம்மா…” என்றான் பாவமாக.

 

“ச்சீ! எந்திரிடா…”

 

“உன் மருமகளோடு சேர்த்து வைப்பேன்னு என் தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணு. அப்பத்தான் எந்திரிப்பேன்.”

 

“என் மருமகள் வாழ்க்கை இப்பத்தான் நல்லா இருக்கு. திரும்ப அதைக் கெடுக்க என்னால முடியாது.”

 

“தாயே…” என வெகுண்டு எழுந்தவனைக் கண்டு கொள்ளாது சமைக்கும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தவன், முடியாததால் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையிடம் கோரிக்கை வைக்க, “இவனை என்னன்னு கேளு சரளா…” அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவர் வேலையைக் கவனித்தார்.

 

“என்னடா?”

 

“ப்ளீஸ்மா…”

 

“என்னடா பண்ணச் சொல்ற?”

 

“எப்படியாவது ஒரு நாள் மட்டும் அவளை என்கூட இருக்க வச்சிடு. சமாதானம்‌ செஞ்சு என் வாழ்க்கையைக் காப்பாத்திக்கிறேன்.”

 

“உன் வீட்டுக்கு ஓட வேண்டியதுதான, இங்க உட்கார்ந்துட்டு எதுக்கு எங்க உசுர வாங்கிக்கிட்டு இருக்க…”

 

“எது?”

 

“ப்ச்! என்னால எதுவும் பண்ண முடியாது.”

 

“அங்கப் போறது பிரச்சினை இல்ல. அவ டக்குனு சமாதானம் ஆக மாட்டா. இந்த வீட்டுக்கு ஒரே ஒரு தடவை வந்துட்டால் போதும். உங்க எல்லாரையும் பார்த்துப் பேசினா அவ மனசு கொஞ்சம் லேசாகிடும். அதை வச்சே நான் சமாதானம் பண்ணிடுவேன்.”

 

“அண்ணன் தான் இவ்ளோ கேக்குதுல்லம்மா, ஏதாச்சும் பண்ணு.”

 

“நீ வேற சும்மா இருடி!”

 

“அண்ணன் பாவம்மா…” என்றான் மூர்த்தி.

 

“நாளைல இருந்து வேலைக்குப் போகணும். அதுக்கான வேலையைப் போய் பாரு.”

 

யார் சொல்லியும் கேட்காத அன்னையின் காலைப் பிடித்து வழிக்குக் கொண்டு வந்தவன், “இந்த வீட்டுக்குக் கூட வேண்டாம்மா, வேற எங்கயாவது நம்ம எல்லாரும் சேர்ந்து மீட் பண்றதுக்கு மட்டுமாவது ஏற்பாடு பண்ணு. அன்னைக்கு பீச்சுல அவ ரொம்பச் சந்தோஷமா இருந்தா. அந்த மாதிரி ஒரு இடமா இருந்தா அவ மனசு லேசாகிடும். நானும் ஈசியா சமாதானம் பண்ணிடுவேன்.” என்றவனைக் கேவலமாகப் பார்த்தவர் ஒரே ஒரு போன் காலில் மருமகள் சம்மதத்தை வாங்கி விட்டார்.

 

எட்டாவது அதிசயமாக வாய் பிளந்து பார்த்தவன் எப்படி என்று கேட்க, “நான் டெய்லி என் மருமகள் கிட்டப் பேசிட்டுத் தான்டா இருக்கேன்.” குண்டைத் தூக்கி அவன் தலை மீது போட்டார்.

 

“கேட்டீங்களாப்பா, அம்மா சொல்றதை…”

 

“அவரும் தான்டா பேசிட்டு இருக்காரு!”

 

“என்னை மட்டும் ஏன் மாட்டி விடுற சரளா…” என்றதும் அவன் பார்வை நதியா மீது செல்ல, “ஈஈஈ” என இளித்தாள். அவளை முறைத்தவன் பார்வை நம்பிக்கையோடு மூர்த்தி மீது திரும்ப, “இவன் நாளைல இருந்து வேலைக்குப் போறேன்னு சொன்னான்ல. அந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே அண்ணி தான். நேத்து அண்ணி கூட தான் போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வந்தான்.” என்றதும் நெஞ்சில் கை வைத்துத் தரையில் அமர்ந்தான் கருடேந்திரன்.

 

அவனை நால்வரும் பாவமாகப் பார்க்க, “நல்லா இருங்க போங்க.” என்றான்.

 

“தேங்க்யூ!” கோரஸாகக் குடும்பமே நன்றியுரைக்க, வாய்க்குள்ளே புலம்பிக் கொண்டு தன் அறைக்குச் சென்றவன், வேகமாக வெளியில் வந்து மூர்த்தியைப் போட்டு அடிக்க ஆரம்பித்தான்.

 

அவனைத் தடுத்துப் பிடித்த மூவரும் காரணம் கேட்க, “எல்லாம் இந்தப் பரதேசிப் பையனால வந்தது. பண்றதெல்லாம் பண்ணிட்டு அவ கூடவே போய் வேலை வாங்கிட்டு வந்திருக்கான்.” புலம்பியவன் மற்ற மூவரையும் அடிக்க முடியாததால், அவர்களுக்கும் சேர்த்து மூர்த்தி தலையிலேயே கட்டிவிட்டுச் சென்றான்.

 

***

 

சரளாவின் முடிவுப்படி குலதெய்வக் கோவிலுக்குப் போகிறார்கள். வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான் கருடன். குளிரூட்டி நிரம்பிய வேன் என்பதால் தொகை அதிகம் வர, “சாதாரண வண்டி எடுக்காம ஏன்டா ஏசி வச்சதை எடுத்திருக்க…” கேட்டார் சத்யராஜ்.

 

“என் பொண்டாட்டிக்காக!” முறுக்கிக் கொண்டு பதில் கொடுத்தான்.

 

அன்றைய மாலையே வீட்டிற்கு ஏசி வர, “என் பொண்டாட்டிக்கு!” பதில் வந்தது அவனிடமிருந்து.

 

போதாக்குறைக்கு கல், மணல், செங்கல் அனைத்தும் வந்திறங்க, “மேல எங்களுக்குன்னு தனியா ரூம் கட்டப் போறேன்.” என்றான்.

 

“அப்ப எதுக்குடா, கீழ் ரூம்ல ஏசி மாட்டுற?”

 

“என் பொண்டாட்டிக்காக!”

 

“திரும்ப மேல போனதும் மாத்துவியா?”

 

“ஆமா!”

 

“எதுக்குடா ஒன்னுக்கு ரெண்டு செலவு. கொஞ்ச நாள் வெயிட் பண்ணா மேலயே மாட்டிக்கலாம்ல.”

 

“உங்க பொண்டாட்டி ஏசி இல்லாம தூங்குவாங்க. என் பொண்டாட்டி தூங்க மாட்டா… இந்த இத்துப்போன வீட்டுக்கு அவ வரதே பெருசு. இதுல ஏசி இல்லாமல் தூங்கணுமா? எவ்ளோ செலவானாலும் அதை நான் பார்த்துக்குறேன்.”

 

“இவன் என்ன சரளா, இப்படிப் பேசிட்டுப் போறான்.”

 

“ஈவினிங், அவன் ரூமுக்குப் பெயிண்ட் அடிக்க ஆள் வேற வராங்களாம்.”

 

“இது வேறயா?”

 

“விடுங்க… எப்படியும் நம்ம மருமகள் இவனைச் சீண்டக் கூட மாட்டாள்.” என்றது அவன் காதில் தெளிவாக விழுந்தது.

 

திரும்பி அன்னையை ஒரு முறை முறைக்க, “நீ வரலன்னு சொன்னதால தான்டா, அவ எங்க கூட வரவே சம்மதிச்சா… எங்கடா, அதைச் சொன்னா உன் மனசு கஷ்டப்படும்னு சொல்லாம வச்சிருந்தேன்.” என்றவர் பேச்சைக் கேட்டு மொத்தக் குடும்பமும் சிரித்தது.

 

“உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? அவ என்னைப் பார்க்கத் தான் வரா…”

 

அவன் வார்த்தைக்கு மீண்டும் அனைவரும் சிரிக்க, “அவ வந்ததும் முதல்ல யாரைத் தேடுறான்னு மட்டும் பாருங்க.” சவால் விட்டுவிட்டுச் சென்றான்.

 

***

 

தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்றும் இருக்கும். அந்த முடிவை நோக்கி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கருடேந்திரன் காத்திருக்க, புகுந்த வீட்டு ஆள்களைக் கண்டு சிரித்த முகமாக இறங்கினாள் ரிது. மனைவியைக் கண்டதும் வெட்கத்தில் முகம் சிவந்தவன், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளக் கருப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு முதலாளாக நிற்க, வந்ததும் கண்கள் அவனைத் தேடியது.

 

அதை அவன் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரும் கவனித்தார்கள். அவையெல்லாம் தேடியவன் கிடைக்கும் வரை மட்டுமே! கண்டபின் நீயா! என முகத்தை மாற்றிக் கொண்டு அவனைக் கடக்க, பல்லைக் கடிக்கும் ஓசை தெளிவாகக் கேட்டது அவளுக்கு.

 

“வாம்மா…” என்ற மாமியாரிடம், “உங்க பையன் வரமாட்டான்னு தான சொன்னீங்க.” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

 

“நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டேன்னு வந்து நிக்கிறான். எங்களை என்னம்மா பண்ணச் சொல்ற? நீயே மூஞ்சில அடிச்ச மாதிரி வராதடான்னு சொல்லிட்டு வாம்மா…”

 

“நான் எதுக்குச் சொல்லணும்? உங்க பையனுக்கும், எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?”

 

“கேட்டியாடா. என் மருமகள் என்கூட வரது பிடிக்கலையா உனக்கு? ஒழுங்கா உள்ள போடா…”

 

“இந்தாம்மா, புது மாமியார் சரளா… நான் உங்ககூட வரேன்னு எப்பச் சொன்னேன்?” என்றதும் ஒரு நொடி அவள் முகம் மாறியது.

 

அதைக் கண்டதும் கண்ணாடியை விலக்கிக் கண்களைச் சுருக்கிப் பார்த்தவன், “என்னோட புது கேர்ள் ஃபிரண்ட பார்க்கப் போறேன்.” என்றான்.

 

“அந்தப் பொண்ணு கூடயாவது ஒழுங்கா வாழுடா…” என்ற சத்யராஜ் பேச்சுக்கு அங்குச் சிரிப்பலைகள் எழுந்தது.

 

வெளிப்படையாகத் திட்ட முடியாததால், வாயிற்குள் திட்டிக் கொண்டவன் தூரம் சென்று நின்று கொண்டான். அனைவரும் வண்டியில் ஏறினார்கள். கடைசியாக ஏற நின்றவள் தூரமாக நிற்கும் அவனைப் பார்த்துவிட்டு ஏற, ‘இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை.’ உள்ளுக்குள் புலம்பிக் கொண்டான்.

 

வண்டி புறப்பட்டது. உண்மையாகவே அவன் வரவில்லை என நினைத்த வீட்டு ஆள்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ரிதுவைப் பார்க்க, அவளது சிந்தனை மொத்தமும் அவனைச் சுற்றியே இருந்தது. வண்டி நகர ஆரம்பித்ததும், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவளைக் கண்டு கண்ணடித்தவன் வேகமாக உள்ளே வந்து ஏற, ‘இதுவா திருந்தும்?’ என அவளும் புலம்பிக் கொண்டாள்.

 

“சாரி Guys! என் கேர்ள் ஃப்ரெண்டப் பார்க்க டைம் ஆயிடுச்சு. போற வழியில விட்டுட்டுப் போயிடுங்க.”

 

முறைத்துக் கொண்டிருக்கும் தன்னவளை உரசிக் கொண்டே அமர்ந்தவன், “சாரில செமையா இருக்க… பார்த்ததும் பத்து குலாப் ஜாமூனை அள்ளி வாயில போட்ட மாதிரி இருந்துச்சு.” எனத் தோளை இடித்தவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

 

ஜன்னல் கம்பியோடு ஒடுங்கிப் போகும் அளவிற்கு நெருங்கி அமர்ந்தவன், “சும்மா சொல்லக் கூடாது, செம கட்ட நீ…” என்றிட, அவளின் முறைப்பு அதிகமானது.

 

“ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கிட்டா…”

 

நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டும் கேட்காதவன், முத்தம் கொடுப்பதில் குறியாக இருக்க,

 

“அத்தை!” கத்தி அனைவரையும் தங்கள் பக்கம் திருப்பினாள்.

 

“உங்க பையன் என்கிட்டத் தப்பா பிகேவ் பண்றாரு. இதுக்குத்தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். தேவை இல்லாம வர வச்சு எதுக்கு டென்ஷன் பண்றீங்க?”

 

“உங்க மருமகள் இப்படித்தான் ஏதாச்சும் சொல்லிட்டு இருப்பாம்மா. நீங்க கண்டுக்காதீங்க…”

 

“வண்டியை நிறுத்தச் சொல்லுங்க அத்தை. நான் வீட்டுக்குக் கிளம்புறேன்.”

 

“ஏன்டா, அவகிட்டப் பிரச்சினை பண்ற?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா, அவ சும்மா நடிக்கிறா…”

 

“இப்ப வண்டிய நிறுத்தச் சொல்றீங்களா இல்லையா?”

 

“ஏய்! எதுக்கு ஓவரா சீன் போடுற. இப்ப என்ன நடந்து போச்சு? சும்மா பேசிட்டுத் தான இருந்தேன்.”

 

“நீ யாரு என்கிட்டப் பேச… உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? நீ வர மாதிரி இருந்தா நான் வரல, வண்டியை நிறுத்தச் சொல்லு, அவ்ளோதான்!”

 

“என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு ரிது. சும்மா, எல்லாம் நான்தான் பண்ணேன் என்ற மாதிரிப் பேசாத. எவ்ளோ நாள் தான் சாரி கேட்கிறது? உன் ஒருத்திக்காகத் தான் இவ்ளோ செலவு. நீ பாட்டுக்குப் போறன்னு சொல்ற…”

 

“நானா செலவு பண்ணச் சொன்னேன்? நீ சாரி கேட்டதும், நான் சரின்னு தலையாட்டனுமா? நீ என்கூட வரது எனக்குப் புடிக்கல. ஒன்னு நீ இவங்களோட போ… இல்ல நான் போறேன்!”

 

அதுவரை வராத கோபம் அவன் உச்சந்தலையில் நின்று அவனை ஆட்கொள்ள, “நீயே போ… திரும்பி நீ வரும்போது நான் இருக்க மாட்டேன்.” என்று விட்டு வண்டியை விட்டு இறங்கினான். யார் பேச்சையும் கேட்காமல் நடை போட, அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தையோடு உறைந்து விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!