அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.
அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.
அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷிவாஷினி.
“ஏலே! நீ ஒரு ஆர்டிஸ்ட்டுன்னு அடிக்கடி நிருபிக்குற புள்ள… நீ சமைக்கும் அழக பார்த்தாலே சாப்பிட நாக்குல எச்சி ஊருடி…” என்று புகழவும்,
“ஊரும்… ஊரும்…”
“இன்னுமும் அவங்களை காணல பாரேன்…”
“வரட்டும் இன்னைக்கு, சட்னியில நாலு கரண்டி உப்பை அள்ளி போட்டு தரேன்…” என்று அன்விதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஆதித்யனின் புல்லட் சத்தம் காதில் கேட்டது.
ஷிவாவோ, “வந்துட்டான் கரிச்சட்டி, அவனோட தங்க ரதத்துல…” என்று உதட்டை சுழித்துச் சொல்ல,
“க்கும்… நீயாச்சும் உன் ஆசை நண்பனாச்சு…” என்றவள், ‘என்னை விட இவளுக்கு அவன் தான் ரொம்ப முக்கியம்… வரான் பாரு காலன்… கரிச்சட்டி காலன்…’ என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தாள் ஷிவா.
“டேய் மச்சான், அந்த முட்டைகோஸ் வேற இன்னேரம் ஏதோதோ பத்த வச்சி இருப்பா… அதனாலேயே உன் தங்கச்சி செம காண்டுல இருக்கான்னு நினைக்கேன்…” என்று ஆதித்ய கரிகாலன் முழி பிதுங்கிட,
வந்தியத்தேவனோ, “விடுடா… நம்ம அம்மு தானே பார்த்துக்கலாம்… ஒரு அழகான வீடியோவ ஷூட் பண்ணி எடிட்டிங் பண்ணி தந்துட்டா கூல் ஆகிடுவா…” என்று அசட்டையாக கூறிச் சென்றான்.
வீட்டிற்குள் நுழையும் போதே, “தங்கச்சி…” என அன்போடு அழைக்க,
அவனது பாசமலரோ, “தங்கச்சி நொங்கச்சி ன்னு வந்த, கத்திய எடுத்து சொறுகிடுவேன்…” எனவும், ஷிவாவோ சத்தம் போட்டு சிரித்தாள்.
“சுண்டெலி கம்முனு இருந்துடு…” என்று ஆதி கத்திட,
“நான் ஒன்னும் உன் மூஞ்சிய பார்த்து சிரிக்கல… வந்திய பார்த்து தான் சிரிச்சேன்…”
“அம்மு, நாங்க சும்மா வாய்க்கால் பக்கம் போனோம்… அப்படியே கிணத்தை பார்க்கவும்…”
“விழுந்துறலாம்னு முடிவு பண்ணிட்டங்களோ?” அன்வி கேட்க,
“ச்சீ… ச்சீ… ஒரேயடியா குளிச்சு ஃப்ரெஷ் ஆகிட்டு… நேரா இங்க தான் வந்தோம்… பாரு என் மச்சான் கையில என்ன இருக்குன்னு… என் கையில் லேப்டாப் கூட வச்சி இருக்கேன் பாரு… முதல்ல நாம சுடச்சுட மல்லிப்பூ இட்லியை ஒரு கை பார்த்துட்டு, களத்துல இறங்கறோம்… இன்னைக்கு வேற லெவல் சம்பவம் பண்றோம்… ஓகேவா டி அம்மு…” என்று ஆதித்யா பேசவும், அப்படியே மலையிறங்கி விட்டாள் பெண்ணவள்.
“சரி சரி… அம்மு வா… இட்லி வச்சி எங்களுக்கு குடு… இல்லாட்டி இந்த வெட்டி பீஸே மொத்தத்தையும் முழுங்கிடுவா…” என்றபடி தட்டை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் வந்தியத்தேவன்.
‘அவன் பேச ஆரம்பிச்சாவே இவளுக்கு கோபம் எல்லாம் போயிடும்… இதுல என் மேல சத்தியம் பண்ணி நீ மட்டும் தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ன்னு சொல்லுவா… ஹ்ம்ம்… உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…’
ஆதித்யனோ ஷிவாவின் தலையில் தட்டி, “அடியே கிறுக்கி… அங்க மைண்ட் வாய்ஸ்ல புலம்பாம வந்து சேரு…” என்கவும்,
“ஆஹ்! நீ போடா, எனக்கு வரத் தெரியும்…”
“உனக்கு மரியாதை ன்னா என்னன்னே தெரியாதா டி…”
“இந்த அழகு மூஞ்சிக்கு இந்த மரியாதையே ஜாஸ்தி தான் கரிச்சட்டி…”
“அடிங்…”
“அம்மு என்ன காப்பாத்து டி…” என்றபடி ஓடி விட்டாள் ஷிவாஷினி.
“குட்டி சாத்தான்… உன்னைய நான் ஒன்னுமே பண்ணல…”
“அம்மு… அதையெல்லாம் கண்டுக்காத… நீ எனக்கு ரெண்டு இட்லி சேர்த்து வை… சட்னி சூப்பர்…” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டான் வந்தியத்தேவன்.
ஷிவாஷினியும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, “தீனி பண்டாரம்… யாரும் அந்த சுண்டெலிய எதுவும் கேட்டுடாதீங்க… அதுனால தான் ரொம்ப ஆடறா…” என்றதும் அவள் அன்வியை முறைக்க,
“ஆதி…” என்று சத்தம் போட்டதும் மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.
அன்வியும் இட்லியை விழுங்கிய படி, “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சா… தோட்டத்துக்கு கிளம்பலாம்… அங்க போய் இன்னைக்கு விடியோ ஷூட் எடுக்கலாம்… ஒரு சிம்பலான டிரெடிஷனல் ஸ்வீட் ரெசிபி பண்ணலாம்னு யோசிச்சு இருக்கேன்…” எனக் கூற,
வந்தியத்தேவனோ, “அப்படி என்ன செய்ய போற?”
“ஈசு சொல்லி குடுத்த குலுக்கு ரொட்டி தான்… பட் அதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமா சின்ன பிள்ளைங்க விருப்பி சாப்பிடற போல பண்ணலாம்னு இருக்கேன்… பாப்போம் இன்னைக்கு செய்யறது நல்லா இருந்தா வீடியோ அப்லோட் செய்யலாம், இல்லன்னா வேணாம்… வேற ஏதாவது ட்ரை பண்ணுவோம்…”
“நல்லா வராம போனாலும், வீடியோ அப்லோட் பண்ண சொன்னா பண்ணவே மாட்டீயே நீ..” என்று ஷிவு அலுத்துக் கொள்ள,
“அதெப்படி ஷிவு முடியும்… என்ன நம்பி எத்தனையோ பேர் என்னோட வீடியோ பார்த்து அவங்களோட நேரத்தை ஒதுக்கி சமையல் செய்றாங்க… அவங்களை எப்படி நம்ம ஏமாத்த நினைக்கலாம் சொல்லு… உன்னோட கம்பல்ஷனுக்காக தான் சொதப்புன ரெசிப்பி சிரீஸ் ன்னு தனியாவே வீடியோஸ் போடுறோமே… அப்பறம் என்ன… நம்ம கஷ்டபட்டு எடுக்கும் வீடியோ எல்லா வீணாகாம தானே இருக்கு…” அன்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
இடையில் புகுந்த ஆதியோ, “எல்லாரும் அவங்கவங்க செய்யும் வேலைக்கான ஒருசில எதிக்ஸ் வச்சி இருப்பாங்க… அப்படி சிலது அம்மு கிட்டயும் இருக்கு… அதுல நீ ஏன் குறுக்க போற சுண்டெலி…”
“எனக்கு எல்லாம் தெரியும்… யூ ஷட் யோர் மவுத்…” எனக் கூறி முகத்தை திருப்பி கொண்டாள் ஷிவு.
“அன்வி… உனக்கு தேவையான பொருள் எல்லாம் எடுத்து வை போ… இவங்க இந்த ஜென்மத்துல திருந்த மாட்டாங்க… நான் போய்ட்டு வீடியோ எடுக்க லொகேஷன் செக் பண்ணிட்டு வரேன்…” எனச் சொல்லி சென்றான் வந்தியன்.
அதன் பின்னரே நண்பர்கள் இருவரையும் முறைத்து கொண்டே, தேவையான பொருட்களை எடுக்க சென்று விட்டாள் அன்விதா.
“எல்லாம் உன்னால தான்டி… எப்பவும் சண்டை தான்…”
“ஆமா… எனக்கு அது மட்டும் தான் வேலை பாரு… மரியாதையா போய்டு கரிச்சட்டி…”
“சூனிய பொம்மை இப்ப வந்தேன்னு வச்சிக்க அவ்வளவு தான்…” என்றபடி ஆதித்யன் அவளை அடிக்க துரத்த,
ஷிவாஷினியோ அதற்குள், “போடா பொடலங்கா…” என கத்திக் கொண்டே ஓடி விட்டாள்.
அதன் பின்னர், நால்வரும் இணைந்து தோட்டத்திற்கு சென்று அன்வி சமைக்கவும், அதனை படம் பிடிக்கவும் ஏதுவாக அனைத்தையும் எந்த ஒரு அமர்க்களமும் ஆர்பாட்டமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் அரோமா சமையல்
அன்விதா அவளுடைய பதினைந்தாவது வயதின் தொடக்கத்தில் ஆரம்பித்த யூடியூப் சேனல், அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்து எடுத்த சமையல் வீடியோக்கள் தான் இன்று மூன்று மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இது முழுக்க முழுக்க அவளுடைய சமையல் செய்யும் திறனையும் அவளது குரலையும் வைத்து மட்டுமே கிடைத்த வெற்றி.
சிறு வயதிலிருந்தே அவளுடைய பாட்டி சமைக்கும் பொழுதெல்லாம் எல்லாவற்றையும் பார்த்து, அதனை ரசிக்க, அவளுக்கும் சமையல் மீது ஆர்வம் ஏற்பட, அவளாகவே சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவற்றில் கொஞ்சம் புதுமையையும் சேர்ந்து புதுப்புது வகைகளில் செய்து வீட்டினரை அசத்தினாள், அவளுக்கு சமையலின் மீதிருந்த அந்த ஆர்வமே இன்று இப்படி வளர்ச்சி அடைய வழிசெய்து இருந்தது.
அவளது சமையல் வீடியோவை காணும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் பசுமையாகவும் பாரம்பரிய முறையிலும் இருக்கும், அதுமட்டுமின்றி அவளது குரல் கேட்பவர்களை கவர்ந்திழுத்து மயங்க வைக்கும்.
இதுநாள் வரையிலும் அவள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது, உண்மையான பெயர் கூட என்னவென்று தெரியாது, அவளது முகத்தை கூட இத்தனை வருடத்தில் காட்டியதே கிடையாது.
இன்றளவும் அவளது பெயரை அரோமா என்று தான் காணொளிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இனிமையான குரலும், பக்குவமாக செய்யும் சமையலும் மட்டுமே தஞ்சாவூர் அரோமா சமையலின் ஆணிவேர்.
அதுமட்டுமின்றி அவள் தனித்துவமாக சமைக்கும் விதம்! பாட்டி ராஜேஸ்வரியின் செம்பு பித்தளை பாத்திரங்களிலும், மண்பாண்டங்களிலும் மட்டுமே சமைப்பாள். சில நேரங்களில் இயற்கை சூழலில் தோட்டத்திற்கு சென்று விறகு அடுப்பில் சமைத்தும் வீடியோ போடுவாள்.
அன்வி உடைய சமையல் காணோளிகளின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமே அவளது கையில் இருக்கும் செந்நிற மருதாணியும், அவள் அணிந்திருக்கும் வானவில் நிறத்திலான கண்ணாடி வளையல்களும் தான்! அதுவே அவளது காணொளிகளுக்கு தனி அழகினை சேர்த்திடும் விதமாக அமைந்திருந்தது.
இவை அனைத்தும் தான் மற்ற சமையல் காணொளிகளுக்கும் இவளது காணொளிக்கும் உள்ள வித்தியாசத்தினை அழகாக பிரித்துக் காட்டிடும் வகையில் இருந்திருப்பது கூட தஞ்சாவூர் அரோமா சமையலின் வளர்ச்சிக்கு காரணம் எனலாம்.
அன்விதா தன்னுடைய முகத்தினை எப்பொழுதும் காட்ட நினைத்தது கிடையாது, ஏனெனில், அவளுக்கு அதிலெல்லாம் துளியும் விருப்பமில்லை.
அவள் அவளது திறமையை வெளிக்கொண்டு வர நினைத்தாலே ஒழிய முகத்தினை அல்ல! ஏனோ, அவளுக்கு இந்த சமூக வலைத்தளங்களில் முகத்தை காட்ட துளியும் இஷ்டமில்லாது இருந்தது.
ஆரம்பத்தில் அவளது நண்பர்கள் கூட அவளிடம் கொஞ்சம் சொல்லி பார்த்தனர், ஆனால், பெண்ணவளோ திட்டவட்டமாக மறுத்து விட, கடைசியில் அவர்களும் அன்வியின் விருப்பப்படி விட்டுவிட்டனர்.
அன்விதா குலுக்கு ரொட்டி செய்ய ராகி மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் கொக்கோ பவுடரையும் பால் பவுடரையும் சேர்த்து, சிறிது உப்பையும் நெய்யையும் சேர்த்து சுடு தண்ணீரில் பிசைந்து விட்டு, அதனை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேக வைத்துக் கொண்டிருந்தாள்.
அன்வி செய்யும் அனைத்தையும் விதவிதமான கோணங்களில் அழகாக படம் பிடித்த படி இருந்தான் வந்தியத்தேவன், ஆதித்யனும் அவனுக்கு ஏதேனும் உதவிகளை செய்தபடி இருக்க, ஷிவாஷினியும் சமத்து பிள்ளையாக நண்பிக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
முதலில் அன்வியின் சமையல் வீடியோவிற்கு வந்தியத்தேவனும் ஆதித்ய கரிகாலனும் அவர்களுக்கு தெரிந்த அளவில் படம் பிடித்து, எடிட்டிங் செய்து கொண்டிருக்க, காலப்போக்கில் அதுவே அவர்களுக்கு பிடித்துப் போய் விட, இருவருமாக கல்லூரியில் காட்சி தொடர்பு (Visual communication) பிரிவையே தேர்ந்தெடுத்து படித்து முடித்தனர்.
ஆரம்பத்தில் அன்விதா தான் வருத்தமாக அவர்களிடம் பலமுறை உங்களுக்கு பிடித்து தானே படிக்கிறீர்கள் இல்லை எனக்கு உதவ வேண்டும் என்று இதை எடுத்தீர்களா என கேட்டபடியே இருப்பாள், அதன் பிறகு, அவர்களின் உண்மையான ஆர்வத்தை கண்டு அதுபற்றி கேட்பதை நிறுத்து விட்டு, அவளால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தாள்.
தற்பொழுது இருவருமாக சேர்ந்து ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் வைத்து, கல்யாணம், பிறந்தாள், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு பிரத்தியேகமாக புகைப்படங்கள் வீடியோக்கள் என்று எடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து நான்கு குறும்படங்களையும் எடுத்து இருக்கின்றனர். அவர்களது கனவு தாங்கள் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது தான்.
கடைசியாக, ஒரு செம்பு பாத்திரத்தில் கருப்பட்டியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, சிறிது ஏலக்காயை தட்டிப் போட்டு, வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து துருவிய தேங்காயை கொட்டி இறக்கி விட்டாள் அன்விதா.
ஷிவாஷினி அதனை ருசி பார்க்க, அதன் சுவை நாக்கில் நாட்டியம் ஆட, “அம்மு வேற லெவல் போ… செம டேஸ்டா இருக்கு டி… அப்படியே சாக்லேட் சாப்பிடற போலவே இருக்கு…” என சப்புக் கொட்டி சாப்பிட்டாள்.
ஆதித்ய கரிகாலனோ ஷிவுயை ஒரு கேவலமான பார்வை பார்த்துவிட்டு, வந்தியத்தேவன் எடுத்த வீடியோவை எடிட்டிங் செய்ய அமர்ந்து விட்டான்.
அதன் பின்னர், அனைத்தையும் ஒழுங்கு படுத்தி விட்டு, நால்வருமாக வீட்டிற்கு சென்று ராஜேஸ்வரி பாட்டி சமைத்திருந்த மட்டன் குழம்பை ஒரு பிடி பிடித்ததும் தான் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
அன்விதாவும் அவர்களை அனுப்பி விட்டு, ஆதி எடிட்டிங் செய்த காணொளிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து விட்டு, அதனை வலையொளியில் பதிவேற்றிய பிறகு, அவளுமே ஒரு குட்டி தூக்கத்தை போட்டாள்.