24. சிறையிடாதே கருடா

4.9
(14)

கருடா 24

 

 

சத்யராஜ் வழியாக அவ்விஷயத்தைக் கேட்டு அனைவரும் அதிர, அறைக்குள் படுத்திருந்தவன் அலறியடித்து வெளியே ஓடி வந்தான். மகன் கன்னத்தில் அறைந்த சரளா, “கேட்டியாடா… எல்லாம் உன்னால தான்.” மீண்டும் போட்டு அடிக்க, “ரி… ரி…” என்றதற்கு மேல் அவன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை.

 

அடித்து ஓய்ந்த சரளா மருமகளைக் காண அழுது கொண்டே ஓட, அவரைத் தாண்டி ஓடினான். அதிவேகத்தையும் தாண்டி அசுர வேகத்தில் வந்தடைந்தவனை வாசலில் தடுத்துப் பிடித்த பொன்வண்ணன், “எதுக்குடா இங்க வந்த? என் பொண்ணு இருக்காளா, செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா…” அவ சாவுக்கு நீ தான்டா காரணம்! உன்னையும், உன் குடும்பத்தையும் என்ன பண்றேன்னு பாரு.” கத்திக் கொண்டிருந்தார்.

 

“ஐயோ மாமா, அவள் அங்க என்ன நிலைமைல இருக்கா… லூசு மாதிரிப் பேசிட்டு இருக்கீங்க. ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகணும், தள்ளுங்க!” என்றவனை உள்ளே அனுமதிக்காதவர் கதவை மூட முயன்றார்.

 

அதற்கு இடம் தராது, திடமான தேக்குக் கதவை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மனைவியைப் பார்க்க ஓடினான். பின்னால் வந்த பொன்வண்ணன் அவன் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளிவிட, அவன் வீட்டு ஆள்கள் அனைவரும் வந்துவிட்டனர்.

 

“முதல்ல அவளைக் காப்பாத்தணும் மாமா…”

 

“டேய்! என் பொண்ணைக் காப்பாத்த நீ யாருடா? இவ்ளோ பெரிய வசதியை விட்டுட்டு, உனக்காக வந்தவளை மனசாட்சியே இல்லாம துரத்தி விட்டுட்டு இப்ப என்னடா நடிக்கிற? ரிது அப்பவே உன்னைப் பத்திச் சொன்னா… நான் தான் முட்டாள் மாதிரி உன்னை நம்பி இப்படி ஒரு நிலைக்குத் தள்ளிட்டேன். என் பொண்ணு சொன்ன மாதிரி, குடும்பத்தோட சேர்ந்து என் சொத்தை அபகரிக்கத்தான இப்படி ஒரு நாடகத்தைப் போட்டிருக்கீங்க.”

 

“என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கோங்க மாமா. முதல்ல அவளை நான் பார்க்கணும், போக விடுங்க.”

 

“மரியாதையா வெளிய போடா. இனிப் பார்க்கக் கூடாத எந்த வேலையும் பார்க்க நான் தயாரா இல்லை.” என்றதும் கையெடுத்துக் கும்பிட்டவன், “நான் பேசுனதெல்லாம் தப்புதான் மாமா… தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. வேணாம்னு சொன்னது அவளோட நல்லதுக்காகத்தான்! அவ நல்லா இருக்கணும்னு தான் அப்படி ஒரு வேலையைச் செஞ்சேன். என்ன ஏதுன்னு தெரியாம வார்த்தையை விடாதீங்க. அவளைக் காப்பாத்தணும்… ப்ளீஸ்!”

 

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்ளோதான்! என் பெண்ணை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்குத் தெரியும். முதல்ல உன் வீட்டு ஆளுங்களைக் கூப்பிட்டுகிட்டுக் கிளம்புடா.” என மருமகனைப் பிடித்துத் தள்ளி விட்டார்.

 

விழுந்த வேகத்தில் எழுந்து நின்றவன், “யோவ்! அறிவில்ல உனக்கு. பொண்ணு சாகுற நிலைமைல இருக்கா, புத்தி கெட்ட தனமாப் பேசிட்டு இருக்க. நான்தான் சொல்றேன்ல, உன் பொண்ணு நல்லதுக்காகத்தான் அப்படிப் பண்ணேன்னு.” கத்தினான்.

 

அதைவிட அதிகக் கூச்சலோடு, “அப்படி என்னடா, என் பொண்ணு நல்லதுக்காகப் பண்ண… உன்ன மாதிரி ஒரு தரம் கெட்டவன் வார்த்தையை இன்னும் நம்புவேன்னு நினைச்சியா?” கேட்டார்.

 

“ஆமாய்யா! நான் தரம் கெட்டவன் தான்… தரமே இல்லாதவன் தான்! இந்தத் தரம் இல்லாதவனுக்கு, உன் பொண்ணு கூட வாழத் தகுதி இல்லன்னு தான்யா மனசக் கல்லாக்கிட்டு, அவ மனச உடைச்சு அனுப்பினேன். இப்படி ஒரு வசதிய என்னால கொடுக்க முடியுமா? காத்து படாம, கஷ்டம் தெரியாம வளர்த்த உன்ன மாதிரி என்னால வச்சிருக்க முடியுமா?

 

உன் பொண்ணு, அந்தக் குப்பை வீட்டுல வந்து சந்தோஷமா வாழ்வாளா? இந்த ஆட்டோக்காரனைப் புருஷன்னு சொல்லிக்க முடியுமா? தப்பே பண்ணாதவளை, எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்ளோ அசிங்கப்படுத்திட்டேன். அந்தக் குற்ற உணர்ச்சியைத் தொடச்சிப் போட்டுட்டு, சந்தோசமா இருக்க முடியுமா? உண்மை தெரிஞ்ச நாள்ல இருந்து உள்ளம் குத்துதுய்யா! அவளுக்குச் செஞ்ச பாவத்துக்கு எப்படிப் பிராயச்சித்தம் தேடுறதுன்னு தெரியல.” ஆக்ரோஷமாகத் தன் மனத்தை உடைத்துக் காட்டியவன் அவரை நெருங்கி நின்று,

 

“உங்க பொண்ண நான் எவ்ளோ லவ் பண்றன்னு தெரியுமா? அவள் என்னை விரும்புறதை விட ஆயிரம் மடங்கு அதிகமா விரும்புறேன். ஏன் எப்படின்னு காரணம் தெரியல. ஆனா, அந்தப் பணப்பிசாசை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எல்லாத்தையும் மறந்துட்டு, அவளுக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கணும்னு முடிவெடுத்துத் தான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். அவ முகத்துல வேர்வை சிந்திச்சு… ராத்திரி எல்லாம் தூக்கம் வராமல் தவிச்சா… பாத்ரூம் போக சங்கடப்பட்டா…

 

அதையெல்லாம் ஒரு புருஷனா என்னால பார்க்க முடியல. நீங்க சொல்லலாம், அவளை வசதியா வச்சிக்கலாமேன்னு. எத்தனை வசதியை என்னால தர முடியும்? ஏணி வச்சாலும், எட்ட முடியாத உசரம் உன் பொண்ணு! அந்த உசரத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத் தகுதி இல்லாதவன் நான்… எந்த ரெண்டு சேரக் கூடாதோ, அந்த ரெண்டைக் கடவுள் சேர்த்துட்டான். சேர்த்ததுக்காக, உன் பொண்ணைக் கஷ்டப்படுத்தி வாழச் சொல்றியா? இல்ல, என் குடும்பம் மொத்தத்தையும் விட்டுட்டு வந்து இந்த வீட்ல என்னை வாழச் சொல்றியா? இந்த ரெண்டுத்துல எது நடந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல சலிப்பு வந்துடும். உன்னால தான் நான் இப்படி இருக்கேன்னு வெறுப்பு வரும். ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த காதல் அர்த்தமில்லாமல் போகும்.” என்றவன் கண்ணில் இருந்து கண்ணீர் படை எடுத்தது.

 

பொன்வண்ணன் உட்படக் கேட்ட அனைவருக்கும் கருடன் எண்ணம் புரிந்தது. மாமனாரின் கருணைப் பார்வையை உணர்ந்து, “இது எல்லாத்தையும் தாண்டி, என் பொண்டாட்டிய என்னால கஷ்டப்படுத்த முடியாது. அவளோட கம்பீரத்தையும், மிடுக்கையும் பார்த்தவன் நான். அவ பார்க்குற பார்வைல இருந்து, கால் மேல கால் போட்டு ஆணவமா உட்காருற வரைக்கும் அணு அணுவா ரசிச்சு இருக்கேன். அது எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு, எனக்குப் பொண்டாட்டியா கட்டுப்பட்டு வாழுன்னு சொல்ல என்னால முடியாது. அவளுக்கு நான் செஞ்ச எல்லாமே போதும். நான் வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ, அப்படியே இருக்கணும்னு தான்…”

 

அதற்கு மேல் பேச அவனிடம் வார்த்தைகள் இல்லை. மாமனார் முன்பு தலை குனிந்து கண்ணீர் சிந்தினான். அவனது கண்ணீர், அனைவரையும் அழ வைத்தது.

 

கருடன் செய்தது, ‘சரி தவறு’ என்ற நிலையைத் தாண்டி அவன் நிலையை எண்ணிக் கவலை கொண்டனர். எதிர்த்து நின்ற பொன்வண்ணனுக்குக் கூட மனம் இரங்கி விட்டது. மெதுவாக அவனது தோள் தட்ட, தலை நிமிர்ந்து பார்த்தான் மாமனாரை.

 

“போ…” என அவர் விலகிக் கொள்ள, ஓட்டம் பிடித்தான் தன்னவளைப் பார்க்க.

 

“ரிது… ஏய் கதவத் திறடி! ஏன்டி இப்படிப் பண்ண? ஏய் திறம்மா…”

 

எத்தனை முறை தட்டியும் அந்தக் கதவு திறக்கப்படவில்லை. அவசரத்தின் நிலை உணர்ந்து, வேகமாக நான்கு இடி இடித்து அந்தக் கதவைத் திறந்தவன் உள்ளே ஓடி வர, கால்கள் தட்டுப்பட்டது. தடுத்த இடத்தில் அப்படியே நின்றவனுக்கு இதயம் எக்குத்தப்பாக எகிறியது. கண்கள் விரிந்து, வாய் அகண்ட நிலையில் நின்று கொண்டிருந்தவன் முன்பு, கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் ரிதுசதிகா.

 

“அடடடா…” கை தட்டினாள்.

 

பின், “வெல்கம், மிஸ்டர் கருடேந்திரன்! உங்களுக்காகத் தான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” எனக் காலைத் தோரணையாக ஆட்டினாள்.

 

“நல்லா இருக்கீங்களா?” கேட்க, பதட்டம் குறைந்து முறைப்பு அதிகரித்தது அவனுக்கு.

 

“அச்சச்சோ… கண்ணெல்லாம் கலங்கி இருக்கற மாதிரி இருக்கு. உடம்புக்கு எதுவும் முடியலையா? காசு வாங்க வந்தியா… ப்ச்! முன்ன மாதிரி எல்லாம் நீ என் ரூம் வரைக்கும் வரக்கூடாது. அந்த டீலிங் அன்னையோட முடிஞ்சு போச்சு. பிச்சை கேட்கிற மாதிரி இருந்தா, வாசல்ல நின்னு அம்மா, தாயே! உடம்பு முடியல. பிச்சை போடுங்கமான்னு சொல்லணும். ஓகே!”

 

“அறிவு இருக்காடி உனக்கு!” என அடிக்கப் பாயும் அவனைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவள், “அப்புறம்… பர்பாமன்ஸ் எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. நீதான் ஸ்கிரிப்ட் எழுதுனியா?” கேலி செய்ய, அடிக்க வந்தவன் கைகள் அப்படியே நின்றது.

 

“ரிது, செத்த பாம்பா இருந்தாலும், விஷம் உள்ள பாம்பு! சாதாரண மனுஷன் உன்னால ஒன்னும் பண்ண முடியாது.”

 

“அசிங்கமா இல்லயாடி உனக்கு?”

 

“ப்ச்! இருந்துச்சு. அன்னைக்கு நீ எல்லாரு முன்னாடியும் என்னை அப்படிப் பேசும்போது.”

 

“அதுக்குத்தான் இப்படிப் பழி வாங்குறியா?”

 

“ச்ச! ச்ச!” என இதழ் வளைத்தவள், “நான் ஏமாந்துட்டனா, இல்லையான்னு தெரிஞ்சுக்கப் பண்ணேன்.” என இரு கண்களையும் சிமிட்டினாள்.

 

கருடேந்திரன் முறைத்தபடி நின்றிருக்க, “உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்திருக்கேன்.” எழுந்து வந்து அவன் முன்பு நின்று ஏளனத்தோடு கூறியவள், “என்ன சொன்னடா கருடா? தொட்டாலே அருவருப்பா இருக்கற உன்ன ரசிச்சுத் தொட்டேன்னா…” என்று அவனைச் சுற்றி வந்தாள்.

 

“இங்கதான் நீ தோத்துப் போன… நீ பொய் சொல்லலாம், உன் உணர்வு பொய் சொல்லுமா? எந்த நோக்கத்துக்காக என்னைத் தொடுறேன்னு தெரியாம கூடவா இருந்திருப்பேன். எந்தக் காரணத்துக்காக நீ அப்படிப் பேசி இருந்தாலும் தப்பு தப்புதான்! அந்தத் தப்புக்கான தண்டனையை நான்தான உனக்குக் கொடுக்கணும். அதனாலதான் இப்படி ஒரு டிராமா… ரொம்பப் பழைய டிராமாவா இருந்தாலும் செம்மையா ஒர்க் அவுட் ஆச்சுல்ல…” என்றவள் முன்பு, அவள் நின்றது போல் நிராயுதபாணியாக நின்றான் கருடேந்திரன்.

 

“நீதான் தாலி கட்டுன… நீதான் அன்பு காட்டுன… நீதான் நெருங்கி வந்த… நீதான் வேணாம்னு சொன்ன…” என அவனுக்கு நேராக நின்று கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டவள்,

 

“இவ்ளோ பண்ண உனக்கு நான் ஏதாச்சும் பண்ணனும்ல.” என்றுவிட்டு அமைதியாகினாள்.

 

நிசப்தமான அமைதி அங்கு நிலவியது. போதும் என்ற வரை அந்த அமைதியை அவனுக்குக் கொடுத்தவள், “உன்ன மாதிரிக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுனாதான் போவியா?” என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் அவளின் மனத்தைப் படித்தவன் கால்கள் அமைதியாக வெளியேறத் திரும்பியது.

 

அவன் செல்லும் வரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள் சட்டென்று திரும்பிட, ஒளித்து வைத்த கண்ணீர் உருண்டு திரண்டு விழியின் ஓரம் நின்றது.

***

பலம் பொருந்திய இருவரும் இருவரையும் தாக்கிக் கொண்டார்கள். இதில், இருவரின் காதலும் சேதப்படும் என்பதை உணர்ந்தும். ரிது, அந்தச் சம்பவத்தை நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. சுனாமிக்குப் பின்னான சேதாரங்களைச் சரி செய்ய இந்த ஒரு மாதம் போதவில்லை மூத்தவர்களுக்கு.

 

ஒரு வாரம் அமைதியாக இருந்தவள், பழையபடி தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். முன்னர் இருந்ததை விட, இன்னும் கடுமை கூடியிருந்தது அவளிடம்.‌ பெற்ற மகளைச் சமாதானம் செய்ய முடியாது தினமும் தோற்றுப் போனவர் இன்றைக்கும் பேசுவதற்காக வந்தார். அவர் வரும் வரை ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள் உடனே மடிக்கணியைக் கையில் எடுத்துக் கொள்ள,

 

“இன்னும் எவ்ளோ நாள் இப்படி இருக்கப் போற?” பேச்சை ஆரம்பித்தார்.

 

வார்த்தைகளை வெளியிடத் தயாராக இல்லை அவரின் மகள். அவரது நினைவு, அன்றைய சம்பவத்திற்குத் திரும்பியது.

 

மனம் நோக உள்ளே வந்தவர் மருமகனைக் கண்டபடி திட்ட, “அவன் நடிக்கிறான் அப்பா…” என்றாள்.

 

குழப்பத்தோடு நிற்கும் தந்தையை ஏறெடுத்துப் பார்க்காது, “அவன் பண்ணதும், பேசினதும் உண்மை இல்ல. எதுக்காக இப்படிப் பண்றான்னு தெரியல. ஆனா, உண்மை இல்லன்னு மட்டும் தெரியும். அவன் மனசுல நான் இருக்கேன்.” என்றது வரை அமைதியாகப் பேசியவள்,

 

“இந்த அடங்காப் பிடாரியோட, கடைசி வரை வாழ முடியாதுன்னு இப்படிப் பண்ணிட்டான் போல.” எனக் கண் கலங்கினாள்.

 

பொன்வண்ணனுக்கு மருமகன் மீது நம்பிக்கை இருந்தாலும், நேரடியாகப் பேசிய பின் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மகளுக்கும், மருமகனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரிடம், “நான் சொல்லற மாதிரிப் பண்ணுங்கப்பா.” எனத் தன் திட்டத்தைக் கூறினாள்.

 

அவர் வேண்டாம் என்று மறுக்க, “அவன் காதலுக்கு, நான் தகுதியானவள் இல்லயோன்னு வலிச்சுக்கிட்டே இருக்குப்பா. எனக்கு அதுக்கான விடை கிடைக்கும்! அதுக்கப்புறம் அவன நான் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள்.

 

“ரெண்டு பேரும் சண்டை போடும்போது ஒன்னா இருந்துட்டு, லவ் பண்ணும் போது இப்படிப் பிரிஞ்சு இருக்கீங்களே. மனச விட்டுப் பேசுனா எல்லாம் சரியாகிடும்னு தோணுது. ஒரே ஒரு தடவை கருடன்கிட்ட பேசிப் பாரு ரிது.”

 

“அவன் சொன்ன மாதிரி இந்த வாழ்க்கை ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. இது இப்படி இருக்குறதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று விட்டாள் முடிவாக.

 

***

 

அவன் வாழ்க்கையில், தாலி என்ற ஒன்று நுழைவதற்கு முன் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இருந்தது. அதைத் திருப்பிக் கொடுத்தவள் தான் இல்லை. ஆசையோடு வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவள் படும் அவஸ்தையில் மனம் நொந்து போனான். இப்படியான கஷ்டங்களை, மனதார நேசித்தவளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஒரு முடிவை எடுக்க, அந்த முடிவே இவன் வாழ்க்கையை அஸ்தமனம் ஆக்கிவிட்டது.

 

வெறுமையாக இருந்தது வாழ்வு. மூன்று இரவுகள் என்றாலும், ஒன்றாகப் படுத்திருந்தவள் ஓயாது இம்சை செய்தாள். அவளின் தொந்தரவு தாங்காது, அதிக நேரம் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். பெற்றவர்களுக்குப் பிள்ளையின் வலி புரிந்தது. அவனாகச் சரியாகட்டும் என்று காத்திருந்து இரு மாதத்தைக் கடந்து விட்டார்கள்.

 

சோர்வாக வந்தமர்ந்த மகனை மடிமீது சாய்த்துக் கொண்ட சரளா, தலைகோதி விட்டார். அன்னையின் அரவணைப்பில் சுகமாகக் கண் மூடியவன் எண்ணத்தில் அவள். இந்த இரு மாதத்தில், எந்தத் தொடர்பும் இல்லை இவர்களிடம். அவன் ஆசை கொண்டது போல், அனைத்தும் முடிந்து விட்டாலும் வலி மட்டும் குறையவில்லை. நடுத்தர வர்க்கத்தில் பிறந்த தனக்கு, மேல்தட்டு வர்க்கத்திலிருந்து மனைவியைக் கொடுத்த கடவுளை வெறுத்தான்.

 

“கருடா…” என்றழைத்தார் சத்யராஜ்.

 

அமைதியாக எழுந்தமர்ந்த மகன் பக்கத்தில் அமர்ந்தவர், “ஏன்டா இப்படி இருக்க, நீதான இந்த முடிவை எடுத்த… அப்புறம் எதுக்காக உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டு இருக்க?” பேச்சைத் தொடங்க தலை குனிந்து அமர்ந்தான்.

 

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதுக்கு, வசதி தான் பிரச்சினைனு தப்பா நினைச்சிட்டு இருக்க… ஆக்சுவலா மனசுதான் பிரச்சினை!” என்றதும் அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.

 

“உன் பொண்டாட்டி சந்தோஷத்துக்கு என்ன தேவையோ, அதை நீ தான் பண்ணனும். கட்டுனவளுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டாலும் தப்பு இல்ல. திமிரா பார்த்த பொண்ணு உனக்காக இந்த வீட்ல வந்து வாழ்ந்தாளே, அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிற? நீ அவளுக்கு வேணும்! உன் கூட வாழுற வாழ்க்கை வேணும். ஏணி வச்சாலும் எட்ட முடியாத தூரம்னு சொல்றியே, அப்படிப்பட்டவள் கடைசிப் படிக்கட்டு வரைக்கும் இறங்கி வந்துட்டா… அவளுக்காக, நீ ஒரு பத்துப் படி ஏன் ஏறக்கூடாது? உன் பக்கம் வந்தா கஷ்டப்படுவான்னு நினைச்சா அவ பக்கம் நீ போயிடு.” என்றதும் கருடேந்திரன் எதிர்த்துப் பேச வர,

 

“பொண்ணுங்க மட்டும் தான் குடும்பத்தை விட்டுட்டு வாழ வரணுமா?” கேட்டு அவன் வாயை அடைத்தார்.

 

“நீ அவளை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கறியோ, அதைவிட அதிகமா அவ இந்தக் குடும்பத்தைப் பார்த்துப்பா… அவ மட்டும் இல்ல, எல்லாப் பொண்ணுங்களும் பார்த்துப்பாங்க. உனக்குள்ள ஆம்பளைன்ற எண்ணம் ஒளிஞ்சிருக்கு. அதுதான், அவள் கூடப் போய் அடிமையா வாழ மாட்டேன்னு தப்பா யோசிக்க வச்சிருக்கு… பொண்டாட்டிக்காக இறங்கிப் போனவன் தோற்க மாட்டான்.

 

அவளுக்காக அஞ்சு நாள் இரு. அவ உனக்காக ரெண்டு நாள் இந்த வீட்ல இருக்கட்டும். உங்களுக்குன்னு குழந்தை குட்டி வந்ததுக்கு அப்புறம் எங்க எல்லாரையும் மறந்திடுவீங்க. உங்க குடும்பத்துக்கு என்ன வேணும், உங்க குழந்தைங்களுக்கு என்ன வேணும்னு மட்டும் தான் யோசிப்பீங்க. அப்படி ஒரு தருணம் வர வரைக்கும் ரெண்டு பேரும் ஒத்துமையா ஒரு சேர முடிவு பண்ணி வாழ ஆரம்பிங்க.”

 

இரவெல்லாம் தூங்காமல், மொட்டை மாடியில் நடையாக நடந்து கொண்டிருந்தான் கருடேந்திரன். பெற்றவர்கள் பேசிய அனைத்தும் மனத்தைப் போட்டுக் குடைந்தது. ரிதுவைப் பிரிந்திருந்த இந்த இரு மாதமே, அவள் மீதான பிரியத்தைப் புரிய வைத்துவிட்டது. இனியும், இந்தப் பிரிவை வளர்க்க விரும்பவில்லை கருடேந்திரன். கடைசியாக ஒரு முடிவெடுத்து, மணியைப் பார்த்தவன் விடியற்காலை என்றும் நினைக்காது மாமனாரை அழைத்தான்.

 

***

 

“ரிது…” உற்சாகமாக அழைத்தார் மகளை.

 

தயாராகிக் கொண்டிருந்தவள், தந்தையின் குரலில் இருக்கும் குதூகலத்தை உணர்ந்து தலை உயர்த்த, “இன்ஸ்டிடியூட்டுக்குத் திரும்ப வரதா போன் பண்ணான்.” என்றார்.

 

“யாரு?” எனத் தெரியாதது போல் கேட்கும் மகளைக் கண்டு சிரித்தவர், “உன் புருஷன்!” என முறைப்பை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

 

அவனால் உருவாக்கப்பட்ட புது நிர்வாகத்தை, நேற்று வரை கட்டியவள் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். இன்று காதில் விழுந்த செய்தியால், அந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க விரும்பாது வேறு பக்கம் சென்று விட்டாள். விடிந்ததும், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்தவன் உற்சாகத்தோடு கிளம்பினான்.

 

அந்த உற்சாகம் சிறிதும் குறையாது பயிலகம் வந்தவனை வரவேற்றார் பொன்வண்ணன். மாமனாரைக் கண்டு புன்னகைத்தவன் மனதார நலம் விசாரிக்க, தோள் மீது கை போட்டு அரவணைத்தவர், “ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்.” ஒரே வார்த்தையில் தன் மனத்தைத் தெரிவித்தார்.

 

தன்னறைக்கு வந்தவனுக்கு யோசனை எல்லாம் ரிதுவே. இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும். இன்னும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருப்பதில் சோர்ந்து போனவன், விடாது முயற்சிக்க முடிவெடுத்தான். அதன்படி நாளும் பொழுதுகளும் ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஆட்டோ ஓட்டி முடித்த கையோடு பயிலகம் வந்து விடுவான்.

 

மாமனாரிடம், மனைவியைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவன் இனியும் வேலைக்கு ஆகாது என்று, “என்ன மாமா, உங்க பொண்ணு மசியவே மாட்டேங்குறா…” என முகத்தைப் பாவமாக வைத்தான்.

 

“தன் வினை தன்னைச் சுடும் மாப்பிள்ளை.”

 

சட்டென்று முறைத்தவன், “நேரம் பார்த்துக் குத்திக் காட்டுறீங்களா?” கேட்டான்.

 

“முன்ன விட, இப்ப டபுள் ஸ்ட்ராங்கா இருக்கா… எனக்குத் தெரிஞ்சு ரொம்பக் கஷ்டம்! யானை தன் தலையில மண் அள்ளிப் போட்ட மாதிரி, நல்லா அள்ளிப் போட்டுக்கிட்டு இப்பப் புலம்பி என்ன ஆகுறது?”

 

“என்னை ஒரே ஒரு தடவை பார்த்தா அவ மனசு மாறிடும் மாமா.”

 

“அப்போ வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை…”

 

“மரியாதை ரொம்பப் பலமா இருக்கே மாமா…”

 

“எல்லாம் அன்னைக்கு, யோவ்! அப்படின்னு பேசின மாயம்தான் மாப்பிள்ளை!”

 

“சாரி மாமா…”

 

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மாப்பிள்ளை… வீட்டுக்கு வந்து அவகிட்டப் பேசிப் பாருங்க.”

 

“அது சரி வராது மாமா, முதல்ல அவ என்னை மன்னிக்கணும்!”

 

“என்னதான் இதுக்கு முடிவு?”

 

பதில் சொல்லாமல், உதட்டைப் பிதுக்கிய கருடேந்திரன் தீவிரமாக யோசித்தான். அதன் பலனாக, மூன்று சக்கர வாகனம் ஃபேக்டரியை நோக்கி நகர்ந்தது. தினம் அவள் வரும் நேரம், போகும் நேரம் எல்லாம் வாசலில் நிற்க ஆரம்பித்தான். கட்டியவளின் தரிசனம் சிறிதும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று சாமர்த்தியமாக ஒவ்வொரு நாளையும் கடத்தினாள்.

 

நாளுக்கு நாள் நொந்து போனான் கருடேந்திரன். என்ன செய்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அவன் நிலை கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கட்டியளோடு கைகோர்த்த பின்பு தான், இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டான். அவன் வைராக்கியத்தை உடைக்க வந்தாள் நதியா.

 

“என்னண்ணா, செலபரேஷன பத்தி யோசிச்சிட்டு இருக்க போல…”

 

“செலபரேஷனா?”

 

“என்ன அண்ணா இப்படிக் கேக்குற? வீட்ல இருக்கற எல்லாரும் நீ எப்படிக் கொண்டாடப் போறன்னு பார்க்க ஆர்வமா இருக்காங்க.”

 

“என்னன்னு சொல்லு?” என எரிந்து விழுந்தான்.

 

“ரொம்ப நல்ல மூட்ல இருக்க போல!”

 

“வெறுப்பேத்தாத நதியா. நானே உங்க அண்ணி திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்குறான்னு கடுப்புல இருக்கேன்.”

 

“அப்போ லவ்வர்ஸ் டேக்கு ஒன்னும் இல்லையா?”

 

“மண்டைய ஒடச்சிடுவேன், மரியாதையாப் போயிடு.”

 

“கூல் பிரதர்!” என அவனது தோள் தட்டிய நதியா, “வாழ்க்கை, உன்ன வச்சு விளையாடுதா? இல்லை நீ வாழ்க்கையோட விளையாடுறியான்னே புரியல!” தீவிரமாக விட்டத்தைப் பார்த்துப் பேசினாள்‌.

 

“இதுவரைக்கும் என்கிட்டக் கேவலமா திட்டு வாங்கினது இல்லையே.”

 

“இனித் திட்டி என்ன ஆகப்போகுது? போன வருஷம் லவ்வர்ஸ் டேக்கு என்ன பேச்சுப் பேசின, ஞாபகம் இருக்கா…” என்றவளோடு அந்த நாளிற்குச் சென்றான் கருடேந்திரன்.

 

சென்ற ஆண்டு காதலர் தினத்திற்கு, மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்தார் சத்யராஜ். அதைப் பார்த்தவன் செய்த கேலியில் வாங்கிக் கொடுத்த பூவைத் தலையில் கூட வைக்கவில்லை சரளா. பெற்ற மகனுக்கு, “உன் வாழ்க்கைல லவ்வர்ஸ் டேவே வராதுடா.” சாபம் கொடுத்தார் சத்யராஜ்.

 

தந்தை முன் நெஞ்சை நிமிர்த்து நின்றவன், “வருஷத்தில் ஒருமுறை தான் காதலர் தினம் வருது. அட, உங்க மருமகளுக்கும் எனக்கும் தான் வருஷம் முழுக்க வருது.” எதிர்காலம் தெரியாமல் ஆடிப்பாடி வெறுப்பேற்றியவன்,

 

“அடுத்த வருஷம் லவ்வர்ஸ் டேக்குப் பாருங்க நைனா, என் பொண்டாட்டியும் நானும் சும்மா ஜிகுஜிகுஜிகுன்னு செலப்ரேட் பண்ணப் போறதை…” என்றிருந்தான்.

 

அதை ஞாபகப்படுத்திய நதியா, “போன வருஷம் ஆள் இல்லாம சபதம் போட்ட, இந்த வருஷம் ஆள் இருந்தும்… ம்ஹூம்!” என்ற விட்டுச் செல்ல ரத்த நாளங்கள் கொதித்தது இவனுக்கு.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!