4. ஆரோனின் ஆரோமலே!

5
(4)

அரோமா – 4

 

“அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா.

“சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல,

“ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள்.

“எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு போட்ட, இன்னும் காணோம்?” என்று பார்வதி கேட்க,

“ஹான்… இதோ வராங்க ம்மா…” எனக் கூறி பூரியை விழுக்கினாள் சஷ்வி.

“என்னடா கண்ணா, வேலை அதிகமா?”

“எஸ் ம்மா… கொஞ்சம் லைட்டா ஹெவி தான்…”

“சரி மொதல்ல வந்து சாப்பிடு…” எனக் கூறியபடி அவனுக்கும் பூரியை தட்டில் வைக்க, அமைதியாக சாப்பிட்டான் எல்வின்.

“எங்க ம்மா அப்பா?”

“ரூம்ல இருக்கார் பா… வாங்க ன்னு கூப்பிட்டேன்… வரேன்னு சொல்லியே அரை மணி நேரம் ஆகிடுச்சு…”

“மணி ஒன்பது ஆகுது… இன்னமும் சாப்பிடாம என்ன பண்றார்?” எனக் கேட்கும் பொழுதே சாமுவேல் வந்துவிட்டார்.

“வந்துட்டேன் டா கத்தாத!” என்றபடி அவர் இருக்கையில் உட்கார,

“சுகர் டேப்லெட் போடணுமே ப்பா… அதுக்கு நீங்க சீக்கிரம் சாப்பிட்டா தானே…”

“சரிடா இனி டைமுக்கு சாப்பிடறேன் போதுமா…”

எல்வினோ, “ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்பறம் நம்பறேன்…” எனவும்,

பார்வதி கணவரிடம், “ஏங்க நீங்க பேசறீங்களா? இல்ல நானே கேட்கட்டுமா?” என்று கண்களால் மிரட்ட,

சாமுவேலோ பதிலுக்கு, “நீயே கேட்டுக்க…” என்று ஜாடை காட்ட, அதற்கு அவரை முறைத்தபடி இருக்க,

“அண்ணா… எனக்கு அண்ணி தேடுறது பத்தி தான் ரெண்டு பேரும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க…” என்று சஷ்விகா உடைத்து பேசிவிட,

“ஏது… உனக்கு அண்ணியா!”

“ஈஈஈ… உன் வருங்காலம் எனக்கு அண்ணி தானே ண்ணா… அத சொன்னேன்…”

அதில் ஆரோனும், “வாண்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ…” எனச் சொல்லி சிரிக்க,

“சொல்லுடா கண்ணா, உனக்கு ஏதாச்சும் பொண்ணை பிடிச்சி இருக்கா என்ன?” என்று பார்வதி கேட்க,

சாமுவேலும், “நீ லவ் பண்றதா இருந்தாலும் சொல்லு எல்வின், அப்பாவும் அம்மாவும் அந்த பொண்ணு வீட்ல போய் பேசிட்டு வரோம்…” என்று சொல்ல,

“அப்படி இருந்திருந்தா மொதல்ல உங்க கிட்ட தானே சொல்லி இருப்பேன் ப்பா…”

சஷ்வியோ இடையில் புகுந்து, “ப்பா… இதெல்லாம் என் கிட்டயும் கேட்கலாமில்ல… நானும் ஏதாவது சொல்லுவேன்ல….” என்று குறும்புடன் பேச,

“அடிக்கழுதை… ஸ்கூல் படிக்குற வயசுல என்னடி பேச்சு…” என்று பார்வதி அவளது காதை திருக,

“ம்மா… ம்மா… விடுங்க, நான் ஒன்னும் ஸ்கூல் படிக்குற பொண்ணு இல்ல… இந்த வருஷம் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்… ஹான்… அப்பறம்… நீயும் என் வயசுல தானே அப்பாவ லவ் பண்ணி… கல்யாணமும் பண்ணிக்கிட்ட, அப்பறம் என்னவாம்!” என்று காதை தேய்த்து கொண்டே கூற,

“பாரு… பிள்ளை மேல கை வைக்காத… நீ வாடா செல்லம், உனக்கு யாரை பிடிச்சி இருந்தாலும் சரி அப்பா சேர்த்து வைக்கறேன் ஓகேவா…” என்று தந்தை சொல்ல,

“அய்ய… அப்பா, இந்த லவ்ல எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா… நான் சும்மா அம்மா கூட விளையாடினேன் ப்பா…” என்றவள், “ப்பா… நீங்க அண்ணன கேளுங்க ப்பா…” என்றாள்.

சாமுவேல் மகளின் தலையை செல்லமாக தடவி விட்டு, மகனை பார்த்து, “சொல்லு எல்வின்…” என்றார்.

“எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் ப்பா… இப்போதைக்கு மேரேஜ் பண்ற தாட் வர மாட்டேங்குது…” என்று ஆரோன் சொல்லவும்,

“டேய்… இப்பவே உனக்கு வயசு 29 டா… கல்யாணம் வேணாம்னு சொல்ற, யாரையும் பிடிக்குது அப்படின்னு கூட சொல்ல மாட்ற… என்னதான் கண்ணா பிரச்சனை?” என்று பார்வதி ஆதங்கமும் கவலையுமாக கேட்க,

“ப்ச்… பாருங்க மம்மி… நான் ஒன்னும் பிரம்மச்சாரி ஆக போறேன்னு சொல்லல… இப்ப வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு மட்டும் தான் சொன்னேன்… அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்…”

“இருந்தாலும் கண்ணா…”

“ம்மா… இப்ப நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்ககறீங்க…”

“வேற என்ன அண்ணா… ஜஸ்ட் வன் வேர்ட், டூ லெட்டர்ஸ், O…K… அவ்வளவு தான்… அப்படி தானே மம்மி…” எனச் சொல்லி சிரித்தாள் சஷ்விகா.

“சச்சுசுசு….”

“நான் எதும் பேசல ம்மா… யூ கண்டியூ‌…” என்று வாயைப் பொத்தி கொண்டாள் சஷ்வி.

“சரி விடு கண்ணா… இது உன் வாழ்க்கை… உன் முடிவு… உன் இஷ்டம்… இதுல நான் ஆசையோ அபிப்பிராயமோ சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல பா… சீக்கிரம் சாப்பிட்டு போய் படு… உனக்கு நிறைய வேலை வேற இருக்கும்…” என்று ஏனோதானோவென்று பேசினார் பார்வதி.

சஷ்வியோ அடங்காமல், அண்ணனின் காதில், “அண்ணா, மம்மி உங்களை எமோஷனலா பேசி கவுக்க பார்க்கறாங்க… ஏமாந்து போய்டாதீங்க ப்ரதர்… உசார் அய்யா உசாருரு…” என்று குசு குசுவென்று பேச, 

அதில் சத்தமாக சிரித்து வைத்து பார்வதியிடம் இருந்து முறைப்பை பெற்றுக் கொண்டான் எல்வின் ஆரோன்.

சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதிகள் இருவரும் முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஊரை விட்டு ஓடிச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 

இதுநாள் வரையிலும் கூட அவர்களுடைய இரு வீட்டாரின் சொந்தங்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை! அந்த மனவருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அவற்றை கடந்து வந்து, இருவரும் இணைந்து இத்தனை வருடத்தில் அவர்களின் பிள்ளை செல்வங்களை நன்முறையில் வளர்த்து, கணவன் மனைவி இடையே எவ்வித சண்டை சச்சரவுகளும் இன்றி அன்னியோன்யமாக காதலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தாயின் முகம் பொலிவிழந்து வாடிப் போய் இருப்பதை காண பொறுக்காமல், “ம்மா… நான் இப்ப ஓகே தான சொல்லணும்… நீங்க பொண்ணு பார்க்குறது பாருங்க… எனக்கு பிடிச்சா மாதிரி இருந்தா ஓகே… கல்யாணம் மட்டும் ஒரு வருஷம் கழிச்சு பண்ற போல இருக்கட்டும்…” என்று விட்டான் எல்வின்.

“சரி சரி அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் டா கண்ணா… உனக்கு பொண்ணு இந்துவா இருக்கட்டுமா? இல்ல கிறிஸ்டியனில் பார்க்கட்டுமா?” என்று பார்வதி கேட்க,

அதில் மென்னகை புரிந்தவன், “ம்மா… உங்களை போல ஸ்வீட் அண்ட் சாஃப்ட்டா இருந்தா எந்த மதமா இருந்தாலும் சம்மதம் தான் போதுமா…” என்று சொல்லி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் எல்வின் ஆரோன்.

இரவு 11.45.

சென்னை நகரம் தூங்க தயாராகி விட்டிருந்தது. வீடுகளின் விளக்குகள் மெதுவாக அணைந்து கொண்டிருந்தன. ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் மட்டும், யாரோ இன்னும் விழித்திருக்கிறார்கள் என்பதை அடையாளம் விதமாக பளிச்சென்று இருந்தன.

ஆரோனின் அன்றைய நாளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. 

வீடியோ ஷூட்டிங், பிண்ணனி ஒலி சரிபார்ப்பு, வீடியோ எடிட்டிங், அலுவலக கால்கள், அவர்கள் உடனான ஜூம் மீட்டிங் கலந்துரையாடல்கள், நெருங்கிய வட்டத்தின் நட்பான விசாரணைகள், அவனது காணொளிக்கு வரும் கருத்துக்களை பார்வையிடுவது என்று அனைத்தும் முடிந்து, அவனது படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் ஆரோன்.

அவனது படுக்கையறையின் ஓரத்தில் ஒரு சிறிய வின்‌டேஜ் தேக்கட்டயில் ஆன மெத்தையும் டேபிளும் போடப்பட்டிருக்க, அதன் பக்கத்தில் ஒரு கிளாசிக் ஸ்டைல் வாசிப்பு விளக்கு, அதன் அருகே ஒரு மூடப்படாத புத்தகம், அவன் போடும் வீடியோவிற்கான குறிப்புகளை எழுத ஒரு அழகிய எழுதுகோல், ஒருசில ஓட்டும் குறிப்புகள் (sticky notes), அவன் நான்கு நாளாக எழுத ஆரம்பித்திருக்கும் புதிய காணொளிக்கான ஸ்கிரிப்ட் என்று அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக பொருந்தி இருந்தது.

அவனது தனிப்பட்ட கைப்பேசியை திறக்க, அதில் இருந்த அறிவிப்பை கண்டதும், அவனது இதழ்கள் தானாக மென்னகையில் விரிந்தன.

“தஞ்சாவூர் அரோமா சமையல் – Kulukku Roti | Healthy sweet recipe for kids”

அந்த நொடி அவனது கண்கள் அந்த அறிவிப்பையே ஆர்வமுடன் பார்க்க, கைகளோ அதை தொட்டு, உள்ளே செல்லவும் சிறிய விளம்பரம் ஒன்று வந்தது.

அவன் கண்ணை மூடி, தலையணியில் தலையை மிதமாக தள்ளி வைத்து, அந்த குரலை கேட்க ஆர்வமாக காத்திருந்தான்.

30 வினாடி காத்திருப்புக்கு பின், அவள் குரல் ஒலித்தது.

“ஹெலோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், நான் அரோமா, ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன், சில கமெண்ட்ஸ் என்ன வீடியோ வரலன்னு, கொஞ்சம் பெர்சனல் வொர்க்..”

அந்த சில வாக்கியங்கள் போதுமானதாய் இருந்தது. அவனது நெஞ்சினுள் ஒரு மெல்லிய வெறுமை – யாரும் நிரப்ப முடியாத அந்த இடம் – ஏதோ ஓரளவுக்கு நிரம்பியதைப் போல உணர்ந்தான் எல்வின் ஆரோன்.

“எனிவே, இப்போ ஒரு புது ரெசிபி உடன் வந்திருக்கேன், இது நம்ம குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நமக்கு பசங்க ஹெல்தி முக்கியம், ஆனா பிள்ளைகளுக்கு டேஸ்ட் முக்கியம், இது ரெண்டையும் பேலன்ஸ் பண்ற போல ஒரு ரெசிபி தான்,

குலுக்கு ரொட்டி, குழந்தைகளுக்கு சாக்கோ பால்ஸ் ன்னு சொல்லி குடுத்து பாருங்க, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அவங்களே உங்க கிட்ட வேணும்னு வந்து நிப்பாங்க…” என்று பெண்ணவள் தொடர்ந்து அதன் செய்முறை விளக்கங்களை விரிவாக சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் குரல் வரக்கூடிய அந்த காணொளியை பார்க்கும் பொழுது , அவனுடைய உள்ளத்தில் ஒரு பதட்டமா, காத்திருப்பா, மென்மையான துடிப்பா ஏதோ ஒன்று ஓடிச் சென்றது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாத ஓர் நிம்மதியை தந்தது.

அவள் குரல் அவனது மனதில் மெல்லிசை பாடல் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரல் அவனுக்கு அமைதியை இனிமையாய் கொடுத்தது எனலாம்.

அவனது மனமோ எப்போதும் போல, ‘சச் அ மெஸ்மெரிசிங் வாய்ஸ்… இட்ஸ் ஹெவன்லி ஏஸ்தெட்டிக் ஃபீல்…’ என்று வியந்து நினைக்க, அந்த சமையல் வீடியோவை முடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் இருப்பது யார் எவர் என்ற தெரியாமல் போனாலும், அதில் சமையலை தவிர்த்து எவ்வித உணர்வுகளை பற்றியும் கூறாத போதிலும், அந்த அரோமா பேசும் விதம், பக்குவமாக சமைப்பது, அந்த சமையலில் எடுத்துக்காட்டும் பழைய பாரம்பரியம், அதில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள், அவளது உள்ளங்கையில் போட்டிருக்கும் மருதாணியின் அடர் சிவப்பு நிறம், அவள் அணிந்திருக்கும் அந்த கண்ணாடி வளையிலின் மெல்லிய சினுங்கல்… என்று அனைத்தும் ஒரு அழகிய கவிச் சிந்தனையை போல இருந்தது.

இவை அனைத்துமே அவனுக்கு ஒரு அழகியல் தோற்றத்தை கொடுத்தது. அவளது சமையலின் ஒவ்வொரு அசைவும் அவனது பார்வையில் கவிதையாகவே பட்டது.

எல்வின் மனமோ, “காட், இந்த வாய்ஸ்யை கேட்டுடவே கூடாதுன்னு நினைச்சாலும் கூட, கேட்காமல் இருக்க முடிய மாட்டேங்குது… இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாருன்னே தெரியல… இது ஒரு பெண்ணா, ஆன்டியா ன்னு கூட எனக்கு சரியா தெரியல, அப்படி இருந்தாலும் கூட இந்த குரலை கேட்ட அடுத்த நிமிஷம் மயங்கி போய் தான் கேட்டுட்டு இருக்கேன்… என்ன நினைச்சா எனக்கே கோபம் தான் வருது..‌.” என்று வெளிப்படையாகவே திட்டிக் கொண்டான்.

அவனது புத்திக்கு எல்லாமே புரிந்து இருந்தாலும் கூட, மனமோ அவனது பேச்சை துளியும் கேட்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததில் நொந்து போய் விட்டான் எல்வின் ஆரோன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!