“அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள்.
“அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க,
“உன் அண்ணன், சாமியா உன் கூட தான் இருப்பாரு.” என்றான்.
நம்பாது அவனை விட்டு விலகி நின்றாள். அவ்வளவு எளிதாகத் தன்னவள் மனத்தில் நம்பிக்கையை விதைத்து விட முடியாது என்பதை உணர்ந்து அலுத்துக் கொள்ளாமல்,
“நீ ஏன் இப்படித் தனிமையில இருக்கணும்னு ஆசைப்படுற?” கேட்டான்.
வாயிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்க, கை உயர்த்தி நிலவைக் காட்டினாள். ஒன்றும் புரியவில்லை கருடேந்திரனுக்கு. ஆள்காட்டி விரல் நிலவை நோக்கி இருக்க, அவள் முகமும் அதை நோக்கியே இருந்தது. கை இரண்டையும் கட்டிக்கொண்டு அவள் பேசப் போகும் வார்த்தையைக் கேட்கத் தயாராகினான்.
“அந்த நிலா பார்க்க ரொம்ப அழகா இருக்கும். பூமியில இருக்கற எல்லாருக்கும் அதைப் பிடிக்கும். அந்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா, அதோட மறுபக்கம் யாருக்கும் தெரியாது. கரடு முரடான தோற்றத்தை வெளிக்காட்டிக்காம சாமர்த்தியமா தான் அழகுன்னு காட்டிகிட்டு இருக்கு. பல கோடி மக்கள் அதைப் பார்த்தாலும், அது பார்க்க யாரும் இல்லை. பரந்த இந்த ஆகாசத்துல தனி ஆளாய் தேஞ்சி, தன்னைத் தானே தேத்தி வாழ்ந்துட்டு இருக்கு. உண்மை என்னன்னா, அது ஒரு அனாதை! அதோட அசிங்கத்தைப் பார்த்தா யாரும் அதை ரசிக்க மாட்டாங்க. தேயும் போது அதுக்கு இருக்குற வலியும், வளரும்போது அதுக்கு இருக்குற துடிப்பும் தெரிஞ்சா கேலி செய்வாங்க. தெரியாத வரை அதிசயம்! தெரிஞ்சிடுச்சுன்னா அனாதை!”
இன்னும் விரலைச் சுருக்காமல், பார்வையை மாற்றாமல் அந்த நிலவின் மீது தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை, இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் கருடேந்திரன். இந்த ரிது, புதிதாகத் தெரிந்தாள் அவனுக்கு. இப்படியான ஒரு பிம்பத்தை அவளிடம் இருந்து எதிர்பார்க்காதவன், விழியோரம் விண்மீன் போல் மின்னிக் கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டான்.
தாலி கட்டியவளின் பாரத்தை, அந்த ஒரு சொட்டு நீர் தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்தது. அழுத்தத்தின் பாரம் தாங்காது, இமையை விட்டுக் கீழ் இறங்கிய கண்ணீர், அவளின் வைரக் கம்மலோடு அடங்கிப் போக, பார்வையைக் கீழ் இறக்கிக் கொண்டாள்.
“சும்மா இருங்க முதலாளி. இந்தப் பட்டுக் காலு படிக்கட்டு இறங்குனா, இந்தப் பாவி மனசு தாங்காது.”
“என்ன பயங்கரமா பேசுற?”
“பயங்கரமா தூக்கக் கூடச் செய்வேன்.” என அவளைத் தூக்கிக் கொண்டவன்,
“பரவால்ல, பீல் பண்ணாலும் வெயிட் குறையல.” எனக் கண் சிமிட்டினான்.
“என்ன, எப்பப் பாரு இதையே சொல்ற… நான் என்ன அவ்ளோ வெயிட்டாவா இருக்கேன்.”
“எலும்பு உடையுற சத்தம் கேட்குது முதலாளி.”
“ச்சீ! ப்பே…”
“அசையாதீங்க முதலாளி. கை உடைஞ்சு நீங்க விழுந்திடப் போறீங்க.”
“ஹாஹா…”
“ப்ச்! நீங்க பீல் பண்றதைப் பார்த்து எனக்கும் பீலிங்ஸ் வந்துடுச்சு முதலாளி.”
“ஆஹான்! கதை அப்படிப் போகுதோ?”
“அப்படி எங்கயும் பாதை மாறிப் போயிடக் கூடாதுன்னு தான் தூக்கிட்டேன். என் முதலாளியைத் தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு, பழைய ஃபார்ம்க்கு கூட்டிட்டு வரப்போறேன்.”
“டேய்!”
“பரவால்லையே, சொன்னதுக்கே எஃபெக்ட் தெரியுது.”
“உன் கூடச் சண்டை போட சுத்தமா என்கிட்ட எனர்ஜி இல்லை. ஒழுங்கா கீழ இறக்கி விடு.”
“இந்த மாதிரி நேரத்துலதான், சண்டை போடப் பரபரன்னு மனசு துடிக்குது முதலாளி.”
அவனிடம் வம்பு வளர்க்க விரும்பாதவள் இறங்க முயற்சிக்க, சற்று மேல் தூக்கியவன் அவள் காதில் மீசை உரச, “இன்னைக்குச் சண்டை போடாமல் தூங்குறதா இல்ல.” ரகசியம் பேசினான்.
தாடி கன்னத்தில் உறவாட, மீசை காதுக்குள் கவி பாடியது. இரண்டும் இரண்டு விதமாக அவளைச் சோதிக்க, விலகியவன் முகம் பார்த்தவள் மெல்லக் கைகளைத் தோளுக்கு மாலையாக்கினாள். ரிதுவின் செயலில் கருடன் புருவம் உயர்த்த, தலையை லேசாக அசைத்துச் சிரித்தாள்.
வீட்டை விட்டு வெளியில் வந்தவன் நீச்சல் குளம் அருகில் நின்றான். ‘சொன்னது போல் போட்டு விடுவானோ?’ எனச் சிந்தித்தவள் எண்ணத்தை முகம் பார்த்துப் புரிந்து கொண்டவன் மீண்டும் அவள் காதுக்குள், “தள்ளி விடவா?” ரகசியம் பேசிக் கூச்சத்தை உண்டு செய்தான்.
“இந்த முறை உன்னையும் இழுத்துட்டுத் தான் விழுவேன்.”
அவள் வார்த்தைக்கு மூக்கைச் சுருக்கியவன், “லொள்! லொள்!” என ஓசை கொடுக்க, வானம் பார்க்கத் தலை உயர்த்தியவள் வாய் வலிக்கச் சிரித்தாள்.
இவ்வளவு சத்தமாக இவள் சிரிப்பதை முதல்முறையாகப் பார்க்கிறான் கருடேந்திரன். சின்ன அதரங்களுக்குள் மாதுளைப் பற்கள் பளபளத்தது. லேசாகப் பூசப்பட்டிருக்கும் அந்த உதட்டுச் சாயத்தை எப்படியாவது துடைத்துவிட்டு, ஒளிந்து கொண்டிருக்கும் அழகை ரசிக்க ஆர்வம் பிறந்தது. தன்னால் புன்னகை நிற்கும் வரை விடாமல் சிரித்துக் கொண்டிருந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் பார்வையில், முதல் முறையாகக் கூச்சம் எனும் உணர்வைச் சந்தித்தாள்.
இருவரின் விழிகளும் அவர்களைப் போல் மோதிக் கொண்டது. எப்போதும் சண்டையிட்டு எரித்துக் கொள்ளும் அந்தப் பார்வைக்குள் மிதமான தென்றல் வீசியது. அவள் மீதான பார்வையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாதவன், நீச்சல் குளத்தின் விளிம்பில் அமர வைத்துக் கால்களைத் தண்ணீருக்குள் விட்டான். ரிது அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கப் பக்கத்தில் அமர்ந்தவன், அவள் காலோடு தன் கால்களை உரசிக்கொண்டு நீரில் நுழைத்தான்.
“நிலா அனாதைனு யார் சொன்னது?”
கட்டியவளின் கவனத்தைத் திருப்பியவன், அவளுக்குப் பின்னால் சென்று அமர்ந்து கண்களை மூடினான். அவன் கூறியதன் பொருளை உணர்வதற்கு முன் விழிகள் மூடப்பட்டதால், கருடன் கைகளுக்கு மேல் கை வைத்து எடுக்க முயற்சித்தாள்.
“தலை குனிஞ்சு இருக்கிற வரைக்கும் தான் தனியா இருக்கோம்னு தோணும். கொஞ்சம் தலைய மேல உயர்த்திப் பாரு. உன்னச் சுத்தி எத்தனைப் பேர் இருக்காங்கன்னு தெரியும்.” என அவள் விழிகளைச் சிறைப் பிடித்திருந்த கைகளை எடுத்துத் தலையை உயர்த்தினான்.
“உன்னோட கரடு முரடான முகம் தெரிஞ்சும், வானம் உனக்குப் பின்னாடி இருக்கு. உன்ன மாதிரி எவ்ளோ கஷ்டப்பட்டாலும், வெளியவே தெரியாத பல நட்சத்திரங்கள் உனக்குத் துணையா இருக்கு. சுட்டெரிக்கிற சூரியன், உன் மேல இருக்குற பொறாமைல ஒளிஞ்சி இருக்கு. கண்ணுக்கே தெரியலனாலும், உன் கூட தான் இருப்பேன்னு அடம் பிடிச்சுக் காத்து சுத்திட்டு இருக்கு. நீ இருந்தா மட்டும்தான் நான் அழகா இருப்பேன்னு அந்த இருட்டு ஆசையாய் கொஞ்சிட்டு இருக்கு.
உன்னால மட்டும்தான் நிம்மதியான தூக்கத்தைத் தர முடியும்னு ஐந்தறிவுல இருந்து ஆறறிவு ஜீவன் வரைக்கும் பெருமை பேசிட்டு இருக்கு. அப்பப்போ எட்டிப் பார்க்குற மழையும், திடீர்னு அடிக்கிற இடியும், நீ இருக்கும் போது அழகா தெரியும். குழந்தைகளுக்குத் தாயால ஊட்ட முடியாத சோறைக் கூட நீ ஊட்டிடுவ. பல பேரோட காதலே நிலவை நம்பித்தான் இருக்கு. கவிதை தெரியாதவன் கூட உன்னைப் பார்த்தால் கவிதை எழுதுவான். இவ்ளோ சொந்தத்தையும், பாசத்தையும் சுத்தி வச்சுக்கிட்டு அனாதைன்னு சொல்றது முட்டாள்தனம் இல்லையா?”
நீண்ட வார்த்தையைப் பேசி முடித்தவன், அவள் முகத்தை அணுவணுவாகக் கவனித்துக் கொண்டிருந்தான். கருடன் பேசிய வார்த்தைகள் நங்கூரமாக அவள் இதயத்தில் சென்று தங்கியது. துயரத்தில் மட்டுமே நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள், முதல்முறையாக வேறு பக்கத்தைப் பார்க்கிறாள். அவன் சொன்னது போல் அனைத்தும் அவளுக்காக இயங்குவது போல் தெரிந்தது. உலகமே அவளுக்காக என்ற எண்ணம் பிறந்தது. கட்டிப் போட்டு வைத்திருந்த குற்ற உணர்வு, மாட்டிக் கொண்ட பயத்தில் அவளை விட்டு விலகியது.
கண் மூடியவள் முகத்தைக் காற்று உறவாடி விட்டுச் செல்ல, அவளை அவளே புதிதாகப் பார்த்தாள். மனைவியின் செய்கைகளைக் கண்ட பின் உள்ளம் மகிழ்ந்தவன், “உன் வார்த்தையைக் கேக்குறதுக்காகத் தவம் இருக்கிற அம்மா, என் பொண்ணுக்காகவாவது உயிர் வாழனும்னு நினைக்கிற அப்பா, காத்தா கரைஞ்சாலும் நீ நல்லா இருக்கணும்னு துடிக்கிற அண்ணன் இருக்கும்போது உனக்கு என்ன கவலை?” என்றவன் முகம் பார்த்தவள்,
“நீ…” எனக் கேட்க, அதுவரை சரளமாகப் பேசிக் கொண்டிருந்தவன், வார்த்தைகள் இன்றி ஊமை ஆகினான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? நீ வந்ததுக்கப்புறம் தான் நான் நிறையப் பேச ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பப் புடிச்சுது. அதனாலதான், உன்னை விடாமல் சீண்டிட்டு இருந்தேன். உன்ன மாதிரி இதுவரைக்கும் யாரும் என்கிட்டப் பேசுனது இல்லை. தனிமையில போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சந்திக்காத ஆண்களே இல்லை. ஒவ்வொருத்தனும், ஒவ்வொரு விதமா என் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கானுங்க. காலடியில இருக்கத் துடிக்கிறவனையும் பார்த்திருக்கேன், என்னைக் கட்டி ஆளணும்னு நினைக்கிற வெறியையும் பார்த்திருக்கேன். முதல் முறையா இது எதுவுமே இல்லாமல் ஒருத்தன், என்னை அடங்காப்பிடாரி, பிசாசு, பணப்பேய்னு திட்டுறதைப் பார்த்தேன்.”
பேசிக் கொண்டிருந்தவள் இடைவெளி விட்டுக் குளத்துக்குள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நிலவைக் கவனித்தாள். பேச்சு நிற்கும் நொடிவரை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளைப் போல் நீரின் மீது பார்வையைப் பதிக்க,
“இந்தத் தண்ணி மாதிரி நீ என்னைச் சலசலன்னு திட்டிட்டு இருந்தாலும், அதுல தெரியிற நிலா மாதிரி மெல்ல உனக்குள்ள நான் ஒட்டிக்கிட்டேன்.” என நீரில் நிழலாகத் தெரியும் நிலவைக் கை காட்டினாள்.
கருடேந்திரனின் பார்வை அதன் மேல் பதிய, புதிதாகத் தெரிந்தாள் ரிது சதிகா. இது நானா என்ற ஆச்சரியம் அவளுக்கு. அதே ஆச்சரியம் தான் அவனுக்கும். ஆச்சரியத்தில் அடுத்த வார்த்தைகளை இருவரும் பேச மறந்தார்கள்.
நேரம் கடக்க, ரிது அவன் கைப்பற்றினாள். சில நொடி யோசனைகளுக்குப் பிறகு அவளோடு தன் விரல்களை இணைத்துக் கொண்டான் கருடன்.