1. ஆரோனின் ஆரோமலே!

5
(3)

அரோமா – 1

 

சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.

 

வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான். 

 

அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.

 

பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும் என்று எண்ணி பலர் காத்துக் கொண்டிருக்க,

 

சவாரியை அவசரமாக ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்களையும், வெகு வேகத்தில் இருசக்கர வாகனங்களை செலுத்தும் பயணிகளையும் தடுக்கும் விதமாக போக்குவரத்து சிக்கல் இருப்பதால், வேகமெடுத்து செல்ல இயலாமல் மெதுவாக ஊர்ந்தபடி நகர்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 

ஒரே நேரத்தில் பல்வேறு சத்தங்கள் – வண்டிகளின் ஹார்ன், போன் அழைப்புகள், வண்டிகளின் கார் கிளச்சின் சப்தம், ரேடியோ எஃப்எம் பேச்சுகள், சிக்னலின் ஓரத்தில் இருக்கும் நாயின் கத்தல், கடைத்தெருவில் இருக்கும் சிறு வியாபாரிகளின் குரல் என்று பற்பல!

 

அந்த சுறுசுறுப்பான மக்கள் கூட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை! ஒவ்வொரு ஓட்டம்! வெவ்வேறு சூழ்நிலை! பல்வேறு கவலைகள் மற்றும் வலிகள்!

 

ஆனால், அந்த பரபரப்புக்கு நடுவில், பலரும் யூடியூபில் ஒரு வீடியோவையே பார்த்தபடி இருந்தனர்.

 

அது ஏதோ ஒரு உண்மையான சம்பவம் பற்றிய செய்தியை விளக்கமாக கூறும் காணொளி. 

 

தற்பொழுது வலையொளியில், அதாவது யூடியூப்பில் உண்மை சம்பவங்களை பற்றிய செய்தியை, சாமானிய மக்களுக்கு விளக்கும் படி சொல்லும் மற்றும் பிறருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் மக்களை ஊக்குவிக்கும் போன்ற காணொளிகளை பதிவேற்றும் சேனல் அது.

 

“ஹெலோ எல்வி க்ரூஸ் (ELVI CREWS), இது உங்க எல்விபீடியா.

 

இப்ப நான் எதை பத்தி பேச போறேங்கிறது உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்…

 

எஸ் அஷ்வினி மர்டர் பத்தி தான்,

 

யாரும் ஷாக் ஆகிட வேணாம்… என்னடா இவன் மர்டர் அப்படின்னு சொல்றானே, அந்த பொண்ணு சூசைட் தானே பண்ணிக்கிச்சு, இவன் எந்த விஷயமும் தெரியாம உளறுறானோ ன்னு யோசிக்கலாம்,

 

ஆனா, ஒருத்தரை தற்கொலைக்கு தூண்டுகிற செயல் கூட கொலைக்கு தான் சமம் னு சொல்வேன், அப்போ அதுல இருந்த எல்லாருக்குமே இந்த கொலைக்கு சம்பந்தம் இருக்கு… இல்லையா?

 

என்றவன் அவள் ஏன்? எதனால் இறந்தால்? என்றெல்லாம் விவரித்து கூறியவன்,

 

மேலும்,

 

இந்த அஷ்வினியோட இறப்பு ஒன்னும் முதலாவது கிடையாது… இங்க பல பொண்ணுங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உடலளவிலும் மனதளவிலும் சிதைஞ்சி போய்ட்டு தான் இருக்காங்க… அதுல இந்த மாதிரியான நியூஸ் 0.1 சதவீதம் நம்மளோட கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு… தெரியாம எத்தனையோ இறப்புகள், எத்தனையோ கொடுமைகள் ன்னு எக்கச்சக்கமா நடக்க தானே செய்யுது…

 

ஏன் நாலு வருஷம் முன்னாடி கூட, கேரளாவில் ஒரு பொண்ணு செத்து போச்சு, அந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கணும், நியாயம் கிடைக்கணும்னு சோஷியல் மீடியாவில் கொந்தளிச்சோம், அதுக்கு அந்த பொண்ணோட புருஷன ஜெயிலில் போட்டாங்க, ஆனா, அவங்களே இப்ப ஜாமீனும் கொடுத்து வெளியே விட்டு இருக்காங்க… பலருக்கும் இந்த விஷயம் தெரியாது, 

 

நாமளும் அந்த பொண்ணோட இறப்பை மறந்துட்டு இந்த பொண்ணோட இழப்பை பத்தி பேச ஆரம்பிச்சிட்டோம்,   

 

இப்ப எல்லாம் யாரோட கண்ணீருக்கும், வலிக்கும், அவங்களோட இழப்புக்கும் நியாயம்னு கிடைக்கிறதே அரிதாகி போகுது…

 

நாம ஒரு விஷயத்தை பரபரப்பாக பேச ஆரம்பிக்கிறோம் அப்படின்னா அதோட ஆயுட்காலம் குறைஞ்சது ஒரு வாரம் தான், அதுக்கு பிறகு வேற ஒரு ஃப்ளாஷ் நியூ வரும், நாமளும் அதுக்கு ஜம்ப் ஆகி வேறொரு புது நியூஸ பேசிட்டு போய்ட்டே இருப்போம்,

 

இதுல கன்கிளுஷன் சொல்லவெல்லலாம் என் கிட்டயோ உங்க கிட்டயோ எதுமே இல்லங்க… உங்களோட பிரச்சினைக்கு உங்க கிட்ட மட்டும் தான் தீர்வு இருக்கு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கிவ் அப் மட்டும் பண்ணி தப்பான முடிவை எடுக்காதீங்க, அந்த முடிவினால் பாதிக்கப்பட போறது உங்களை சார்ந்தவங்க மட்டும் தான்.

 

சோ, ப்ளீஸ் யாருமே தப்பான முடிவை நோக்கி போகாதீங்க, ஏதோ ஒரு நிமிஷ தேவையில்லாத முடிவால் வாழ்க்கையை முடிக்கும் நிலைக்கு போய்டாதீங்க, 

 

தற்கொலை எந்த விதத்திலும் சரியான முடிவா ஆகிடாது, சோ பீ ஸ்ட்ராங், கீப் தின்க் பாஸிட்டிவ்.”

 

என்பதுடன் அவனுடைய உரையை முடித்துக் கொண்டான் வலையொளியில் (Youtube) பிரபலமான எல்விபீடியாவின் எல்வின் ஆரோன்.

 

அந்த கானொளி மூலம் அவன் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் கேட்கும் பொழுது… அந்த காலை பொழுதின் பரபரப்பையே ஒரு கணம் நிறுத்தி மௌனமாக்கத் தான் செய்தது.

 

மேலும், அந்த காணொளியின் கீழே அவனுடைய சந்தாதாரர்களும் (subscribers) அவர்களுடைய கருத்துக்களை நேர்மறை எதிர்மறை கருத்துகளை பகிர்ந்தபடி இருந்தனர்.

 

அங்கு அவனது பேச்சால் அனைவராலும் பேசப்பட்டவனோ, தாயின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தான்.

 

“என்னடா கண்ணா இன்னைக்கு வந்த வீடியோவில் ரொம்ப எமோஷனலா பேசிட்டு இருக்க?” என்று மகனின் தலையை கோதியபடி கேட்டார் ஆரோனின் தாயார் பார்வதி.

 

“ம்மா… நான் ஒன்னும் அப்படி எல்லா எமோஷனலா பேசல…” 

 

“என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா… எல்லா வீடியோவிலும் என்ன நடந்துச்சோ அத மட்டும் தான் பேசுவ… அதுக்கு மீற எதையும் பேசிட மாட்டீயே… ஆனா, இந்த பொண்ணோட சூசைட் கேஸ்ல நீ நிறைய அட்வைஸ் பண்ற போல தான் பேசிட்டு இருந்த.. என்னவாம் என் செல்லத்துக்கு?” என்று அன்னை கேட்கவும்,

 

“இப்படியான நியூஸ் எல்லாம் கேட்டு கேட்டு ரொம்ப சலிப்பா இருக்குமா… வேதனையாவும் இருக்கு… இந்த பொண்ணு செத்துப் போச்சு வெளியே தெரியுது… பட், ஃபேக்ட் என்னனா இதைவிடவும் பல கொடுமைகளை அனுபவிச்சிட்டு வெளியே சொல்லாம கஷ்டப்படும் பொண்ணுங்க எவ்வளவு பேர் இன்னும் இருக்கத்தான் செய்யறாங்க… 

 

இதையெல்லாம் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ம்மா… அதான் கொஞ்சம் நிறையவே பேசிட்டேன் ம்மா.. நான் இப்படி பேசுனதுல எந்த தப்பும் இருக்கல தானே ம்மா?” என்று அவரிடமே கேட்க,

 

“இல்லப்பா… எதுவும் இல்ல… நீ பேசினது நூத்துக்கு நூறு சதவீதம் சரி தான்… என்ன பண்றது பெண்களோட பிறப்பே இப்படி தான்… அதுல எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கணும் ன்னு எழுதி இருக்கு போல..” என்று கவலையாக பேச ஆரம்பிக்கவும்,

 

“அம்மா… தலையெழுத்து அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க… இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்க எந்த பொண்ணுக்கும் அவசியம் இல்ல… அதுல இருந்து வெளியே வந்து, அவங்க சுயமா சிந்திச்சு, சுதந்திரமா, சந்தோஷமா அவங்க வாழ்கையை வாழ எல்லாருக்குமே எல்லா உரிமையும் இருக்கு… இருக்கணும்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டு,

 

“ப்ச்… ம்மா… போதுமே… ஸ்கிப் த டாபிக்… எனக்கு ஒரு சுக்கு டீ வேணும்… கொஞ்சம் தலை வலிக்குது…” எனக் கூறி அமைதியாகி விட்டான் எல்வின்.

 

அவனை புரிந்துக் கொண்டு, “சரிடா போறேன்…” என சென்று விட்டார் பார்வதி.

 

எல்வினுக்கு இவற்றை எல்லாம் நினைத்து நினைத்து உண்மையாகவே தலைவலி வந்தது தான் மிச்சம். 

 

அதனை அகற்றும் விதமாக, பார்வதி போட்ட சுக்கு டீயை குடித்து விட்டு, அவனுடைய கணினியை உயிர்ப்பித்து வேலையை பார்க்க தொடங்கி விட்டான்.

 

எல்வின் ஆரோன், வயது 29 தொடங்கி பத்து நாட்கள் தான் சென்றிருந்தது. B.E. in Software Engineering படித்து முடித்து, தற்பொழுது ஒரு ஐடி கம்பெனியில் திட்ட மேலாளராக (Project manager) பணியாற்றிக் கொண்டிருக்கின்றான்.

 

அவனுடைய வேலை ஒருபுறம் இருந்தாலும் ஒரு யூடியூபர் ஆகவும் திறம்பட செயல்பட்டு வருகிறான். அவனுக்கென்று தற்பொழுது நான்கு மில்லியன் சந்தாதாரர்கள் (Subscribers) இருக்கிறார்கள். இது அவனுடைய 7 ஆண்டு உழைப்பிற்கான பலன் தான். 

 

அவனுடைய இருபத்து மூன்றாம் வயதில் எல்விபீடியாவை தொடங்கி, படிப்படியாக உயர்ந்தோங்கி வேரூன்றி நின்றிருக்கிறான். ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருந்தாலும், இப்பொழுது அனைவராலும் பாராட்டக்கூடிய இடத்தில் வந்திருக்கிறான். 

 

என்னதான் அவனுக்கு இதில் பெயர் புகழ் பணம் என்று கொட்டி கிடந்தாலும், அவன் வேலையை என்றுமே விட நினைத்தது இல்லை. 

 

ஆரோனுக்கு அவனது வேலையும் முக்கியம், அதேசமயம் அவனுடைய பேஷனும் முக்கியம், எதற்காகவும் எதையும் விட அவன் நினைக்கவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைத்து தான் பார்ப்பான். ஆகையால், அவ்விரண்டினலும் எந்த ஒரு தவறும் இன்றி சரியாகவே செய்து கொண்டிருந்தான்.

 

அவனுடைய யூடியூப் சேனலை எவ்வாறு வளர்த்து விட்டானோ, அதேபோல அவனுடைய வேலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருந்தான். 

 

அவனுடைய புகழையும் பாராட்டையும் தலைக்கு ஏற்றால் இருப்பதும், அவனுக்கு வரும் எதிர்மறை விமர்சனங்களை கடந்து வருவதும் தான் அவனுடைய வெற்றிக்கு முதன்மையான காரணம் எனலாம்.

 

சாமுவேல் மற்றும் பார்வதி தம்பதியரின் தலைப்பு புதல்வன் தான் எல்வின் ஆரோன், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள் பெயர் சஷ்விகா. 

 

சாமுவேலும் பார்வதியும் காதலித்து, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி, ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து, அவர்களின் காதல் வாழ்க்கையை ஆரம்பித்துக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களுக்கு உறவென்று யாரும் இல்லை. 

 

அதை எண்ணி பிள்ளைகளை பெரிதாக வருந்த விட்டதும் இல்லை, எந்தவித பாதிப்பும் இன்றி நன்முறையில் நல்ல பிள்ளையாக தான் வளர்த்தனர் பெற்றவர்கள்.

 

இளையவள் சஷ்விகா இப்பொழுது தான் பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சையை எழுத போகிறாள். எல்விக்கும் இவளுக்குமே பன்னிரெண்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கும். அந்த வீட்டின் செல்லக்குட்டி இவள். அண்ணனின் முதல் குழந்தை என்றே சொல்லலாம். அவனுக்கு இவள் மீது அவ்வளவு பிரியம்.

 

சாமுவேல் ஒரு நவீன பல்பொருள் அங்காடியை வைத்து நடத்திக் கொண்டிருக்க, பார்வதியோ அரசுக் கல்லுரியில் தமிழ் துறைத் தலைவராக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

 

அவர்களை பொறுத்தவரை வசதிக்கும் குறைவில்லை! மகிழ்ச்சிக்கும் குறைவில்லை! தெளிந்த நீரோடை போலவே ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!