தஞ்சாவூரின் விடியற்காலை இன்னும் முழுமையாக விழித்தெழாமல் இருந்தது. பெரிய வீட்டு திண்ணையில் இரவு முழுக்க படிந்திருந்த பனித்துளிகள் இன்னும் மிதமான குளிர்ச்சியை தேங்கி வைத்திருந்தன.
வானம் பசுமையும், வெண்மையும் கலந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆலமரத்தின் இலைகள், காற்றின் மெதுவான அசைவில் சலசலக்க, அதில் ஊடுருவிய வெண்மையான மங்கலான ஒளி வீட்டு முன் விரிந்த பளிங்கு தரையில் பட்டு மினுக்கியது.
முன் கதவின் அருகே பழைய பித்தளை அண்டாவில் நிரம்பிய தண்ணீர் — அதன் மேல் ஜன்னல் வழியே புகுந்த ஒரு செறிந்த சூரியக்கதிர் விழ, அது பொன்னிற மேகத்தில் விளங்கும் குளம் போல பளபளத்து ஜொலித்தது.
அதன் பக்கத்தில், அன்வி நட்டு வைத்த ஜாதி மல்லி பூ பந்தல் வீடு முழுவதிலும் சுகந்தமாய் மணம் வீசிக்கொண்டிருந்தது.
சமையலறையில் இருந்து வரும் மிதமான பில்டர் காஃபி வாசனையும், ஆவி பறக்க இறக்கிய ராகி இடியாப்பமும், அதோடு கருப்பட்டி தேங்காய் பாலும், அந்த வீட்டு காலையினை வழக்கம்போல அன்போடு துவக்கியிருந்தது.
ஷிவாஷினி விடிந்த உடனே, முதல் வேலையாக குளித்து முடித்து நேராக அன்வியின் வீட்டிற்கு வந்து விட்டாள்.
அவளைக் கண்டதும் மலர்ந்த புன்னகையுடன், “ஷிவா ம்மா… சாப்டாச்சா டா…” என்று அன்வியின் தந்தை மாறன் அக்கறையாக கேட்க,
“இல்லப்பா… இனி தான் உங்க மக செஞ்சதை சாப்பிடணும்…” என்று புன்னகையுடன் கூற,
அவரும் தலையசைத்து, “சரிடா…” என்க,
“நீங்க கடைக்கு கிளம்பியாச்சா ப்பா…”
“ஆமாம்மா… இப்ப கோடை விடுமுறை ஆஃபர் போட்டு இருக்கோமே… அதான், கொஞ்சம் கூட்டம் அதிகமா வரவும் சீக்கிரமே கடை திறக்க கிளம்பிட்டேன்… சரி நீ சாப்பிடு… நான் வரேன்டா…”
அதற்குள் சமையலறையில் இருந்து சிறு புயல் போல வந்த அன்விதா, “அப்பா கதிர் அண்ணனை வரச் சொல்லுங்க… மதியத்துக்கு உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விடறேன்…” என்று மூச்சுவிடாமல சொல்ல,
“இல்ல கண்ணு, அப்பா வெளியே பார்த்துக்கறனே…”
“ம்ஹூம், நான் சொல்றேன் தானே ப்பா…”
மகளின் அக்கறையில் எப்போதும் போல பூரித்து நின்றவர், “சரிடா அன்வி தங்கம்… கதிரை அனுப்பி வைக்கிறேன் நீ குடுத்து அனுப்பு…” எனக் கூறி கிளம்பி விட்டார் மாறன்.
மாறன் வைத்திருக்கும் “ராஜி ஜவுளிக்கடை” தஞ்சாவூரில் மிகப் பிரபலமானது. அவரது தந்தையார் காலத்தில் இருந்து வழிவழியாக நடத்தி வருவதால், அவர்களது கடைக்கு என்று ஒரு நல்ல பெயர் எப்போதும் உண்டு.
அங்கு திருமண பட்டு புடவைகள் முதல், கோவிலில் அம்மனுக்கு சாற்றும் புடவைகள் வரை — தரம் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த சுற்றுவட்டாரத்தில் அங்கிருக்கும் பட்டு புடவைகள் தான் மிகவும் பிரசித்தி பெற்றவை. அனைத்து உடைகளும் தரமாகவும் அழகாகவும் இருக்கும்.
அந்த பட்டின் தரம், புதிய புடவைகளின் மென்மை, பல்வேறு ரகங்கள், அவனுடைய வேலைப்பாட்டின் நுணுக்கம், அதோடு வாங்குபவரின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி — எல்லாமே அந்தக் கடைக்கு இன்னுமின்னும் நற்பெயரைக் கொடுத்திருந்தது.
அதன் பின்னர் சாப்பிட்டு முடித்ததும், அன்வி வரவேற்பறையில் அமர்ந்து கீரை உருவிக் கொண்டிருந்தாள்.
அவளது விரல்கள் மெதுவாக இலைகளை பறித்து, சின்ன சின்ன குவியலாக வைக்க, அவளது முகத்தில் கவனமான அமைதி.
ஷிவாஷினி அருகில் வந்து, “ஹே அம்மு, இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் இயர் ரிசல்ட் ன்னு காலேஜ் குரூப்பில் மெசேஜ் வந்திருக்கு பார்த்தியா?” என்று கேட்க,
“ம்ம்… பார்த்தேன் ஷிவு… ரிசல்ட் எப்படி இருக்கும்னு பயமா இருக்குடி…” என்று பேசிய தோழியை தீயாக முறைத்து வைத்தாள் ஷிவு.
“ஏன் எனக்கெல்லாம் பயம் வரக் கூடாதா என்ன?” என்று அன்வி கண்ணை சிமிட்டி கேட்டபோது, இருவரும் சிரித்துவிட்டனர்.
அந்த சமயத்தில் ஆதித்ய கரிகாலனும், வந்தியத்தேவனும் உள்ளே நுழைந்தனர்.
இருவரும் ஒரு கல்யாண வீடியோ, புகைப்பட வேலையை முடித்து விட்டு வந்திருந்தனர்; ஆடைகள் கிட்டத்தட்ட வியர்வையால் நனைந்திருந்தது.
“ஓய், என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டபடி வந்தியத்தேவன் வர,
அதற்கு ஆதித்யனோ சிரிப்புடன், “வேற என்ன பண்ணிட்டு இருக்கும் அந்த சுண்டெலி, அம்முவ தான் தொல்லை பண்ணிட்டு இருப்பா… சரியான இம்சை…” என்று விளையாட்டாக சொன்னான்.
ஆனால் அந்தச் சிரிப்பில் கொஞ்சம் அதிகமான கிண்டலும் இருந்தது
அதில் ஷிவாஷினியின் புருவம் உயர்ந்து, கண்களில் சின்ன கோபத்தினைத் துளிர்க்கச் செய்தது.
“நான் உன் கிட்ட பேசவே இல்ல, நீ எதுக்கு என் கிட்ட பேசற, நான் பாட்டுக்கு சினேன்னு சும்மா தானே இருந்தேன்… அப்பறம் என்ன தான் உன்னோட பிரச்சனை…” என்று கத்தி விட்டு அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்.
வந்தியன், “டேய், அவளை ஏன் டா அப்படி பேசினா, பாரு கோச்சிக்கிட்டு போற…” என்று பரிந்து பேச,
ஆதி அலட்சியமாக தோளை உயர்த்தி, “நான் எப்பவும் போல தானே ஜாலியா பேசினேன்… அதுக்கு கத்திட்டு போனா, நான் என்ன பண்றதாம்…” என்று விட்டேத்தியாக கூறவும்,
அதில் கடுமையாக நோக்கியவள், “ஆதி, என்ன பேச்சு இது… நீங்க ரெண்டு பேரும் எப்ப பார்த்தாலும் சண்டை போடுறது எல்லாம் சரிதான்… ஆனா, இப்பலாம் நீ ஷிவுவ ரொம்ப பேசறடா… சிலநேரம் நீ பேசறது அவளுக்கு ஹர்ட் ஆகுது… ஆனாலும், அவ அதை வெளியே சொல்லாம கடந்து போய்டுவா… இனியும் இப்படியே பண்ணிட்டு இருக்காத… அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று அன்விதாவும் காட்டமாக பேசி விட்டாள்.
ஆதித்யனின் முகம் ஒரு நொடி கவலையில் வாடி போனது. அவனுக்கு ஷிவாஷினி கோபித்துக் கொண்டதிலும், அன்விதா திட்டி விட்டதிலும், அங்கிருக்க பிடிக்காமல், “சரி… நான் போறேன்…” எனக் கூறி உடனடியாக சென்று விட்டான் ஆதித்ய கரிகாலன்.
“என்னதான் பிரச்சனையாம் ரெண்டு பிசாசுகளுக்கும்?”
“தெரியல ண்ணா, ஆனா, ஆதி பண்றது எல்லாம் கொஞ்சம் புதுசா தான் இருக்கு…”
“எனக்கும் தோணுது அம்மு…”
“விடு ண்ணா பார்த்துக்கலாம்…”
“பாட்டிக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” என்று வந்தியன் கேட்டதும், அன்விதாவின் முகத்தில் சின்ன சோக நிழல் விழுந்தது.
“காய்ச்சல் குறைஞ்சு போச்சு… ஆனா, சளியும் இருமலும் தான் போகல, இருமல் நிக்காம வந்துட்டே இருக்கு…” என்று மிகுந்த கவலையுடன் கூறினாள். அவளது குரலில் மென்மையான நடுக்கம் இழையோடியது.
“சீக்கிரம் சரியா போய்டும் டா” என்று நம்பிக்கையுடன் சொன்னான்.
அன்விதா மெதுவாக புன்னகைத்தாலும், அது முழுமையாக மனதில் பதியவில்லை.
“ம்ம்… நீங்க சாப்பிடுங்களேன்…”
“இல்ல… கல்யாணத்துல சாப்பிட்டு தான் வந்தோம்… சரி அம்மு வேலை இருக்கு… போய்ட்டு அப்பறமா வரேன்…”
“சரி… கொஞ்சம் சித்திய வரச் சொல்லுங்க ண்ணா…” என்று பெண்ணவள் கூறவும்,
வந்தியத்தேவன் சரியென தலை அசைத்து, வீட்டின் வாசலைத் தாண்டி புறப்பட்டான்.
*******
மாலை நேரம்.
மழை வருவது போல் வானம் மேகமூட்டமாக இருந்தது. சூரியன் மறைந்து கொண்டிருந்தாலும், வெண்ணிற மேகங்களின் ஓரங்களில் செந்நிற கதிர்கள் பளிச்சிட, ஆகாயம் செவ்வானமாய் ஜொலித்திருந்தது.
அந்த நேரத்தில் ஆரோன் வாசல் கதவைத் தள்ளி உள்ளே வந்தான். அவனுடைய முகத்தில் வழக்கமான சிரிப்பும், கண்களில் கொஞ்சம் உற்சாகமும் தோன்றியிருந்தது.
“அம்மா…” என்று அவன் அழைத்தவுடனே, சாமுவேல் பத்திரிகையிலிருந்து தலை தூக்கினார்.
“என்னடா கண்ணா, இவ்வளவு காலையிலேயே இப்படி சிரிச்சுக்கிட்டு வர?” என்று சாமுவேல் கேள்வியாக வினவ,
“இந்த சண்டே நம்ம வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வரப் போறாங்க ப்பா…” என்று அவன் சற்றே மர்மமாகச் சொன்னான்.
அதில் பார்வதியின் புருவம் உயர, “ஸ்பெஷல் கெஸ்ட்…அஅ? யாருடா கண்ணா?”
“ம்ஹூம்… அதான் ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் அப்படின்னு சொல்லிட்டனே, அத ரீவில் பண்ணிட்டா சர்ப்ரைஸ் இல்லாம போய்டும் ம்மா” என்று ஆரோன் சிரித்தான்.
அந்த சமயம் அறையின் கதவருகே நின்றிருந்த சஷ்விகா, ஆரோனை நோக்கி ஓடிவந்து, “அண்ணா… யார் அது? இப்ப சொல்றீங்களா இல்லையா?” என்று துள்ளிக் கொண்டே கேட்டாள்.
“நோ, இப்ப சொல்லவே முடியாது,” என்று சீரியஸாகச் சொல்லிக்கொண்டே அவன் அறைக்குள் போக முயன்றான்.
“சொல்ல மாட்டீங்களா? அப்போ அந்த ஸ்பெஷல் கெஸ்ட்ட உள்ளயே சேர்க்காம வெளியவே நிறுத்திட்டு திருப்பி அனுப்பிடுவேன் பார்த்துக்கோங்க…” என்று சஷ்விகா முகம் சுருக்கி மிரட்டினாள்.
சாமுவேல் சிரித்து, “சச்சு மா, விடுடா நாளைக்கு அவனே சொல்லிடுவான்…”
“ம்ஹூம்… இல்லையே.. இது ஏதோ பெரிய மேட்டர் மாதிரி இருக்கு ப்பா…” என்று சஷ்விகா கண்களை சுருக்கி அண்ணனை பார்த்தாள்.
எல்வின் அவளை கேலியுடன் பார்த்து, “வாண்டு… நாளைக்கு வரைக்கும் காத்துட்டு இருந்தா தான் தெரியும்,” என்று சற்று உறுதியான குரலில் சொல்லி அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
சஷ்விகா தாயை நோக்கி கிசுகிசுத்தாள், “அம்மா… நம்ம அண்ணன் ரொம்ப ரொம்ப ரகசியமா வச்சிருக்குறாரு… இந்த ஸ்பெஷல் கெஸ்ட் யாருன்னு எனக்கே தெரியாம போச்சே! ஒருவேளை அந்த அக்காவா இருக்குமோ ம்மா…” என்கவும்,
“இருந்தாலும் இருக்கும் சச்சு… உன் அண்ணன் தான் எதையும் வாயை திறந்து சொல்லலையே…” என்று புலம்பி அவரது வேலையை பார்க்க சென்று விட்டார் பார்வதி.
ஆரோனுக்கு அவனது கைபேசியில் இருந்து ஒருவருக்கு அழைப்பு விடுக்க,
அதில் எடுத்ததும், மறுமுனையில் இருந்து என்ன சொல்லப்பட்டதோ,
“சரி ஓகே துவா, நீ மார்னிங் பஸ் ஏறிட்டு சொல்லு, நான் உன்ன பிக்கப் பண்ணிக்க பஸ் ஸ்டாண்டர்ட் வரேன் மா…”
“…..”
“நத்திங்… நீ ஒன்னும் டென்ஷன் ஆக வேணாம்… நான் தான் உன் கூட இருக்கேன்ல… அப்பறம் என்னவாம்… நீ வேணா பாரு துவா, நாளைக்கு உனக்கு மறக்க முடியாத நாளா அமைய போகுது…”
“…..”
ஆரோனோ சிரித்து விட்டு, “சரி ஓகே, நீ நல்லா தூங்கும்மா… நாளைக்கு பஸ் ஏறிட்டு அப்டேட் பண்ணு… பை துவா..” என்று மென்மையாக பேசி வைத்து விட்டான்.