என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.
அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.
காலம்பர எழுந்து குளித்து விட்டு வந்ததும், நேராக தோட்டத்திற்கு சென்று பச்சை பசேலென இருந்த மருதாணிகளை ஒடித்து வந்து, அதன் இலைகளை மட்டும் பறித்து, அம்மியில் இட்டு அதில் கொஞ்சம் சர்க்கரை, இரண்டு கிராம்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சில துளி எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, சதக் சதக் என்று அரைக்கும் சத்தத்தில்,
வேக வேகமாக குளித்து விட்டு வந்து, “ஈசு… உனக்கு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா… எனக்கு தேவையானதா நானே பண்ணிக்க மாட்டேனா… குடு அத… கொஞ்சம் அப்படி தள்ளி உட்காரு…” என்று சிடுசிடு குரலில் சொல்லி அவரது பக்கத்தில் அமர்ந்த பேத்தியை கண்டு,
“ப்ச், அம்மு நீ ஏண்டி எந்திரிச்சு வந்த, அதுக்குள்ள குளிச்சும் முடிச்சு இருக்க… இன்னைக்கு ஞாயிற்று கிழமை தானே… கொஞ்சம் தூங்க வேண்டியது தானே…” என்று சொல்லவும் அவரை முறைத்து பார்த்தாள் அன்விதா.
அவளது கைகளோ அம்மியில் இருக்கும் மருதாணியை அரைத்த படி இருந்தாலும், “உனக்கு என்ன இளமை ஊஞ்சல் ஆடுதா ஈசு… வயசான காலத்துல இப்படி வந்து ஜங்கு ஜங்கு னு அம்மியில அரைச்சிட்டு இருக்க…” என்று கிண்டலாக கூறவும்,
“யாருக்கு டி வயசு ஆச்சுன்னு சொல்ற, உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சி, நீ பெக்குற பிள்ளைக்கு பிள்ளை பொறக்கும் வரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது… ஆமா…” என்று ராஜேஸ்வரி சொல்ல, புன்னகை செய்தாள் பெண்.
“அதுக்கு நீ உன் உடம்பை ஒழுங்கா பார்த்துக்கணுமாக்கும்…” என்று உதட்டை சுழித்து சொல்லிய அன்வி, அரைத்த மருதாணியை ஒரு கிண்ணத்தில் வழித்து வைத்தவளை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
அன்விதா, பத்தொன்பது வயதில் துள்ளி விளையாடும் பூஞ்சிட்டு இவள். மாறன் மற்றும் ரோஷினி ஜோடியின் ஓரே ஒரு மரிக்கொழுந்து.
அவளுடைய ஐந்தாம் வயதில் ரோஷினிக்கு மஞ்சள் காமாலை வந்து, அது மிகவும் முற்றிப் போய் இறைவடி சேர்ந்து விட்டார், அன்றில் இருந்து மாறனே அவளுக்கு தாயுமானவராகி போனார்.
ரோஷினியின் மறைவுக்கு பின்னர் மாறனின் ஒரே ஒரு பற்றுக்கோல் அன்விதா தான். அன்வி அப்பாவின் செல்ல பெண், அவர் சொன்னது தான் வேதம் என்பவள், மாறனும் மகளை எதற்கும் ஏங்க விட்டதே இல்லை.
மாறனின் தாய் தான் ராஜேஸ்வரி. மாறன் பார்த்துக் கொண்டாலுமே அன்விதாவை அன்னையாக இருந்து வளர்ப்பவர், அன்வி தந்தையின் இளவரசியாக இருந்தாலும், பாட்டியின் தேவதையும் அவள் தான். தாய்க்கும் மேலாக இருந்து, அவளின் சிரிப்பில் மகிழ்பவர் அவர்.
அன்விதா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் என்பதை விட பாட்டிஸ் லிட்டில் பிரின்சஸ் என்றே சொல்லலாம்.
ராஜேஸ்வரியின் கணவர் முத்துவேல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்தார். அவருக்கும் பேத்தி என்றால் உயிர். சில விஷயங்களில் மாறனும் ராஜேஸ்வரியும் கண்டிப்பு காட்டினால் கூட, தாத்தா எதற்கும் கண்டிப்பு காட்டியதில்லை. அவருக்கு பேத்தி சொல்லே வேதவாக்கு.
அவருடைய இழப்பு சிறு பெண்ணை மிகவும் பாதித்து இருந்தாலும், பாட்டிக்காக தன்னை தேற்றி அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றினாள்.
அன்விதாவின் வட்டம் என்பது சிறிது தான், அதில் இவர்கள் மட்டுமன்றி இன்னும் சிலரும் உடன் இருந்தனர், அவர்கள் வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் மற்றும் ஷிவாஷினி.
இவர்கள் மூவரும் தான் அவளுடைய அறுந்த வாலு கூட்டத்தின் உறுப்பினர்கள், அந்த கூட்டத்தின் அமைதியான தலைவி இவளே!
அன்விதாவிற்கு கொஞ்சம் குறும்பு தனம் இருந்தாலும், பொறுப்பான அமைதியான பெண்ணே! வீட்டில் மட்டுமே அவள் கலகலப்பான பெண், வெளியே அவள் எல்லோரிடமும் அளந்து அளந்தே பேசுபவள். அவளுக்கு உரியோரிடமே அவள் குழந்தை தனம் வெளிப்படும்.
அன்விதா இப்பொழுது B.sc. Nutrition and dietetics பிரிவில் கல்லூரி முதலாம் ஆண்டை முடித்து விட்டு இரண்டாம் ஆண்டில் பயின்று கொண்டு இருக்கிறாள்.
அவளுடன் ஷிவாஷினியும் படித்து வருகிறாள். உயிர் தோழி, இருவருக்கும் ஒரே வயது, பக்கத்து பக்கத்து வீடு என்பதால், சிறு வயதிலிருந்தே ஒன்றாக தான் உள்ளனர். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து, தற்பொழுது ஒரே துறையில் ஒன்றாக கல்லூரியும் சென்று வருகின்றனர்.
“என்னடி அம்மு மருதாணி வாசம் மூக்கை தொலைக்குது…” என்று முகர்ந்த படி வீட்டில் நுழைந்தாள் ஷிவாஷினி.
ராஜியோ, “என் பேத்தி இன்னும் அடுப்பை கூட பத்த வைக்கல டி… நீ என்னனா மருதாணி வாசத்துக்கே மோப்பம் புடிச்சிட்டு வந்துட்ட…” என்க,
அவளோ, “என்ன ஈசு…” என்று பேச ஆரம்பிப்பதற்கு முன்பே,
‘நமக்கு எதுக்கு வம்பு…’ என்று எண்ணியவள் ஈஈஈ என பல்லைக் காட்டினாள்.
அன்வியோ, “ஈசு… அவ கிட்ட சண்டைக்கு போகாம சும்மா இருங்களேன்…” எனவும்,
“நீ என்னையே சொல்லு, அவளை ஒன்னும் கேட்டுடாத…” என்று முறுக்கிக் கொள்ளவும்,
“ஷிவு… எதுக்கு டி அவங்களை கத்த வைக்குற… கொஞ்சம் சும்மா தான் இரேன்… வா நம்ம உள்ள போகலாம்… நேத்து நான் புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன்…” என்று இருவருக்கும் சமாதான கொடியை பறக்க விட,
ஷிவாவும் அவரை முறைத்து கொண்டே சென்றவள், “உங்க ஆயா எப்ப பார்த்தாலும் என்னைய திட்டிக்கிட்டே இருக்கு டி…” என்று சலித்துக் கொள்ள,
“மொதல்ல நீ அவங்களை வம்பு இழுக்காம இருக்கீயா…”
“அப்படி இருந்தா தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதே டி…”
“ம்ம்… அதே போல என் ஈசுக்கும்…” என்று சொல்லி சிரித்தாள் அன்விதா.
ராஜியும் ஷிவாவும் இப்படி தான் வம்பு சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும், அவளை சொந்த பேத்தி போல தான் பார்த்துக் கொள்வார். இவளுக்குமே பாட்டி இல்லை, அந்த குறையை தீர்த்து வைப்பவராக இருந்தாலும், அவரிடம் ஏதாவது சண்டை போட்டு திட்டு வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். இவர்களின் பாவமான தூது புறா என்னவோ அன்விதா தான்.
சமையல் அறையில் இருந்தே தேங்காயை கடித்து கொண்டே, “என்ன வானரமும் கருங்குரங்கும் இன்னும் இங்க ஆஜர் ஆகாம இருக்காங்க… அதிசயமா இருக்கே அம்மு…” என்று கேட்கவும்,
“ஷிவு… ஈசு போய் இப்ப அவங்க ரெண்டு பேருமா… எல்லார் கிட்டயும் சண்டைக்கு போகாம உன் வாய் சும்மாவே இருக்காதா டி… இப்ப நீ கம்முனு இல்ல நானே உன் லொடலொட வாய்க்கு டேப் போட்டு ஒட்டி விட்ருவேன்…” என்ற நண்பியை கண்டு திருதிருவென விழிக்க,
“இனி நீ திங்க மட்டும் தான் வாயை திறக்கணும்… சரியா…” என்றதற்கு தலையை மட்டும் ஆட்டினாள் ஷிவா.
அன்வியோ நேரத்தை பார்க்க ஏழரை ஆகி இருந்தது.
“அண்ணாவும் ஆதியும் இன்னும் காணும்… இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ஏழு மணிக்கெல்லாம் வாங்கன்னு நேத்தே சொல்லி தான் அனுப்பனேன்… ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இன்னும் வராம இருக்காணுங்க பாரு ஷிவு…” என்று புலம்ப,
“அம்மு நான் வேணா கால் பண்ணட்டா?”
“ஒன்னும் வேணா தாயே… நானே பண்ணிக்கறேன்…” என்று விட்டு அவளே அவளது அண்ணனான வந்தியத்தேவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை அழைத்தும் ஏற்காமல் இருக்க, நண்பனான ஆதித்ய கரிகாலனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவனுமே எடுக்காமல் இருந்தான்.
“பாரு ஷிவு… ரெண்டும் ஃபோன் எடுக்கல… லேட் ஆகும்னு அட்டென்ட் பண்ணியாச்சு சொல்லணும் தானே… அது கூட சொல்லாம உன் ஃபோனையே எடுக்காம இருக்கானுங்க பாரேன் டி…” என்று தோழியிடம் புகார் செய்தாள் அன்விதா.
“ஹ்ம்ம்…”
“ஹிஹி… அம்மு… நீ வேணுன்னா பாரு அவனுங்க ரெண்டு பேரும் இப்போ ஒன்னா தான் இருப்பானுங்க… அதான் நீ ஃபோன் அடிச்சும் எடுக்கவே இல்ல…” எனக் கூறி நண்பியின் கோபத்தில் மண்ணெண்ணெய்யை தாராளப் பிரபுவாக ஊற்றிக் கொண்டிருந்தாள் ஷிவாஷினி.